நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

எம்ஜிஆர்-இன் கதாகலாட்சேபம் ! சந்திர மண்டல விஜயம் #அன்று

அண்மையில் அறிவியல் தமிழ் குறித்த கருத்தரங்கிற்கு கட்டுரை தயாரிக்க வேண்டியிருந்தது. நெறியாளரிடம் ஆலோசனை கேட்கையில் அறிவியல் புனைவு குறித்த பல விவாதங்களை முன்வைத்தார். அறிவியல் புனைவு கற்பனையாக இருக்கும். கருத்தாக்கமாக இருக்குமா? தொழில்நுட்பத் தரவுகள் இடம்பெறுமா? கற்பனைக்கும் கருத்துருவாக்கத்திற்கும் இடைப்பட்ட வெளியில் அறிவியல் புனைவு இருக்கிறது. ஆதலால், அறிவியல் புனைவு அறிவியலைப் பேசுவதை விட புனைவையே அதிகம் பேசுகிறது எனும் முடிவிற்கு வந்தேன்.
இந்தியப் புராணத் தொன்மங்களில் கற்பனை வளம் அதிகம். வளவன் ஏவா வானூர்தி என்பதில் கற்பனை நயம் வெளிப்பட்டுள்ளதே தவிர, அதற்கான தொழில்நுட்பத் தரவுகள் இடம்பெறவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்து இடம்பெற்றிருந்தால் அறாத் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ந்து இந்தியத்தை மையமிட்டதாக உலக அறிவியல் வளர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை.

இப்புனைவையே அறிவியல் என்று பகுத்தறிவற்றவர்களும், இலக்கியங்களைக் கொண்ட மத நம்பிக்கையாளர்களும் பரப்பி வருகின்றனர். இதன் நீட்சியே இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் புராணத் தொன்மங்களுக்கு உயிர்ப்பு கொடுப்பது.
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் தமிழகத்தில் எழுந்த சிந்தனை மாற்றம் அளப்பரியது.

அண்மையில் சந்திராயன் 2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு அறிவியல் தன்மையற்ற அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதில் பல சாதிய, வைதீக, புராணத்தின் தயவோடு கழிவிறக்கம் கொண்டவையாக இருந்தன. அறிவியலின் ஆழங்கால் அறியாத வலைதளப்போராளிகளுக்கு 1970இல் வெளியான எங்கள் தங்கம் படத்தின் பாட்டு அறிவு தரும் என்றெண்ணுகிறேன்.

கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், முரசொலிமாறன் திரைக்கதையில் எம்ஜிஆர் நடிப்பில் உருவான படம் எங்கள் தங்கம். இதில் கதாகலாட்சேபம் செய்பவராக எம்ஜிஆர் வருகிறார். பல க்ளோஸ்அப் ஷாட்களில் எம்ஜிஆரின் நடிப்புத்திறன் அப்பட்டமாக அப்லாஸ் பெறுகிறது. வாலியின் வரிகளில் போகிறபோக்கில் இந்தியத்தின் அதன் வைதீகப் போர்வையிலான மூடப் பழக்கங்களால் நிலவுக்கு அனுப்பும் விண்கலத்தைக்கருவாகக் கொண்டு எள்ளி நகையாடியிருக்கிறது.

அவசியம் பார்க்கவும்!
-தக|08.09.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக