நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 30 ஜூலை, 2019

பல்லவ வாரிசு | சிறுகதை


கரு & கதை - பு.கி.ஸ்வேதா & ..தமிழ்பாரதன்

பல்லவ வாரிசு

புது வருடம் பிறந்தது. என் பெற்றோர்க்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் தான் 2018 வரட்டும் எனச் சொல்லிருந்தேன். ஏனெனில் கல்லூரிப் படிப்பை முடித்த மகளுக்கு மண முடித்து தன் கடமையை முடிக்க வரைவுத் திட்டம் தயாரித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பெண்ணை மணம் செய்து கொடுப்பதே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பங்களில் ஒன்றே என்னுடையதும்.

என்ன தான் வீரத்தமிழச்சி,  கண்ணகி,  கொற்றவைன்னு பேசிட்டிருந்தாலும் பெண் என்பவள் உடைமைப் பொருளாகவே பார்க்கப்படும் இன்றைய காலகட்டத்தில் நான் ஒரு விதிவிலக்கல்ல. எனக்குன்னு சில கொள்கை, கோட்பாடு, மண்ணாங்கட்டினு சிலது இருக்கு. ஆனா., எனக்குக் காரணமாக இருந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும், என்னுடைய திருமணம் தான் கனவே.

கனவுக்குப் பின், கணவனை ஏற்கலாம் என நானும், கணவனுக்குப் பின் கனவை ஏற்கலாமே என பெற்றோரும் பட்டிமன்றமே நடத்தியதுண்டு. அப்போதெல்லாம் அண்ணன் தான் தீர்ப்பு சொல்வான். அவன் எப்போதுமே என் பக்கம் தான். கல்யாணத்துக்கப்புறம் சந்தோசமா இருக்கலான்றது, இப்ப சந்தோசமா இல்லாதவங்களுக்கு வேணா ஓகே.  இவ தான் இப்பவே சந்தோசமா இருக்காளே அப்றம் எதுக்கு கல்யாணம்னு தங்கச்சிக்காக வக்காலத்து வாங்கும் அவனால் தான் 2018 வரைக்குமே தள்ளி போட முடிஞ்சிது.

என்    வாழ்க்கைப் பயணத்திற்கே அவன்தான் முன்னோடி. எனக்கு முன்னாடி பிறந்ததால் அவன் சோதித்ததன் வெற்றிப் பக்கங்களை மட்டுமே படித்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியவள்தான் நான்’. சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டப்ப, எனக்கான தழும்புகளையும் அவனே ஏந்தியிருக்கிறான். அவன் தோல்விகளின் கணிசமான பங்கு எனக்கும் இருக்கிறது.

அதையெல்லாம், நான் முடியும் சிண்டுகளிலும், நெற்றியில் தூங்கும்முன் வைக்கும் துன்னூறிலும், முன்பு தின்ற கூட்டாஞ்சோற்றிலும், இப்போது நான் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கும் சபர்மாவிலும் அவன் மறந்துபோய் விடுவான்.

ஆமா, ‘அவன் தானே எல்லாத்துலயும் முன்னாடி. அப்புறமென்ன திருமணம் மட்டும் எனக்கு முதல்ல., அதையும் அவனே பண்ணிக்கட்டுமே என்ற தாராள மனப்பான்மை எனக்குண்டு. திருமணம் செய்து, அவன் வாழ்க்கையில் அடிபட்டால் அது கூட எனக்குப் பாடம்தானே எனும் சுயநலம் இல்லாவிட்டாலும் கூட, அவனுக்குத் திருமணம் நடத்திவைப்பதில் எனக்குக் கொள்ளைப் பிரியம். இவ்வளவு நாள் அவனோடு மட்டும் சண்டையிட்டு போரடிக்குது. அண்ணியும் வந்துட்டா நல்லா இருக்கும்ல என நினைக்கும்போதெல்லாம், இந்தக் கதை அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா செல்கிறதோ என நீங்கள் நினைப்பதைப் போல, நானும் நினைப்பதுண்டு என் வாழ்க்கைக் கதையை.

Art : Anu Akka



எனக்கு அண்ணி யாருண்ணு தெரியாமலாம் இல்ல. அண்ணியையும் தெரியும். அண்ணனுக்குக்கூட ஒரு காதல் இருக்கு, அதுக்கு ஆயுசு எவ்ளோனு தெரியல. ஆனா வயசு அஞ்சு இருக்கும். அந்தக் காதலை சீக்கிரம் கல்யாணமாக்கிக்கோன்னு சொன்னேன்னா  பாவமாகிடும் அவன் முகம். தந்தையின் குட்டி இளவரசியான எனக்கு இருக்கும் உரிமைகளை விட, மூத்த மகனான அவனுக்கு இருக்கும் கடமைகளே அதிகம். தங்கைத் திருமணத்திற்கு பின்னரே, தமையன் திருமணம் என இன்னிக்கு சமூக வழக்காறாகுமளவுக்கு எவன் சொன்னானோ, அவனத் தான் அவனும் தேடிட்டு இருக்கான், ஏன் நான் கூட அவனத்தான் தேடிட்டு இருக்கேன்.

பாவம். முன்மண்டை முடிகளெல்லாம், முதிர்ச்சியடைய, ஞானப்பல் முளைத்து நான்காண்டுகளாக, மேலணிந்த சட்டைக்கு முன்பாக எட்டிப் பார்க்கும் குட்டித் தொப்பை, கண்ணாடி போட்டால் அங்கிள் என அழைக்கத் தோன்றும் இரண்டு பிள்ளைகள் பெற்ற தோற்றம் அவனுக்கு வந்து சில மாதங்களாகிவிட்டன. இனி காதல் அண்ணியைத் தவிர இவனைத் திருமணம் செய்ய எந்த அழகுத் தேவதையும் தயாராக இருக்கமாட்டாளென அவனுக்குத் தெரியும். அது எனக்கும் தெரியும். அதனால் தான் எனக்கு நானே விதித்துக் கொண்ட கெடு 2018.

அவனுக்குக் கிடைத்ததைப் போல எனக்கொரு காதல் கிடைச்சிருந்தா நானும் இந்நேரம் செட்டில் தான். எனக்குப் பிடித்த-பிடிக்குமளவு யாரையும் இன்னும் பார்க்கலை. அம்மா கோயிலுக்குப் போயிருக்கும் சமயங்களில், “காதல்னு எதாச்சும் இருந்தா சொல்லும்மா, தைரியமா கல்யாணம் பண்ணி வச்சிடுறோம் என அப்பா கூட ஒரு சிலமுறை கேட்டிருக்கிறார். லூசாப்பா நீ, உண்ட்ட சொல்ல என்ன தயக்கம் அப்டிலாம் ஏதும் இல்லை”. அப்பாக்கு காதல் பத்தின புரிதல் இல்லாமல்லாம் இல்ல. சொல்லப்போன அத்தைப் பொண்ணே மனைவியே வந்ததாலே அப்பா அம்மாவோட ஆயுசுக்குமான காதலுக்கு வயசு 40.

போட்டித் தேர்வில் வெல்வது தான் என் நோக்கம். ஆனால், என்னை வெல்ல போட்டி போட்டுக் கொண்டு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்துவைத்திருந்தனர்.  ஜனவரி முதல் வாரத்திலே பெண் பார்க்க வந்தனர். இன்னும் பெயரிடப்படாத ஏதோ ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வழக்கமான பெண்பார்க்கும் காட்சி தான் அன்றும் கூட. சோழ மண்டலத்திலிருந்து பல்லவ தேசத்திற்கு வந்திருந்தனர் அவர்கள்.

பில்டர் காபி நிரம்பிய டம்ளரை அவர்களனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் அவர்களூடே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். ஏதேச்சையாக நானும் அவரும் ஒரே நீலநிற ஆடை உடுத்தி இருந்தோம். குடித்த காபிக்கும், கொரித்த மிக்சருக்கும் நன்றியாக மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் எப்படிப் பொருத்தமா இருக்கு பாத்தீங்களா என ஆடைப் பொருத்தமே வாழ்க்கைப் பொருத்தமென தொலைக்காட்சி தொடர்களில் எதார்த்தத்தைத் தொலைத்த சுற்றத்தார் கூறிச் சிரித்தனர்.

வரதட்சணைலாம் எதும் கேட்கலை. எனக்குக் கூட அவரை பிடிச்சிடுற மாதிரி தான் இருந்தது. வீட்டுக்குப் போய்ட்டுப் பேசிட்டு சொல்றோம்னு சொன்னாங்க. நான் நம்பர் கொடுங்கனு எழுதிக் கொடுத்த பேப்பர்ல ஸ்மைலி வரைந்து, பக்கத்து குட்டீஸ்கிட்ட கொடுத்துட்டு போய்ட்டார். கொஞ்ச நாளில் அந்த நல்ல செய்தியும் வந்தது.

**********

மறுபடியும் புது வருடம் பிறந்தது. என் பெற்றோர்க்கு அளவு கடந்த மகிழ்ச்சி. இந்த முறை மருத்துவர் தான் 2019 வரட்டும் எனச் சொல்லிருந்தார். ஜனவரி 9. பிரசவம் முடிந்தது. மகப்பேறு சுகப்பிரசவமாகவே இருந்ததால் பேராண்டி, ரொம்ப போஷாக்கா இருக்கப்போறான்னு புதிய தாத்தாக்கு குத்திட்ட மயிர்க்கால்கள் இன்னும் உயிர்ப்புடனே இருந்தன. பாட்டியாய்ப் போன அம்மாதான் குழந்தையைக் கையிலேந்தி உலோலாஅய்க்கு உலோலாஅய்க்கு என முகமெல்லாம் ஒளியாகிப் பரவியிருந்த மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

இங்க பாரேன், என் கையில் குழந்தையைக் கொடுத்த பின்னர் தான் நினைவுக்கே வந்தேன்ன்ன்… “பனிக்குடத்தில் பாதுகாப்பாய் இருந்த அவன். ஏன் வெளியே வந்தான்., பாவம் இந்த உலகில் என்ன பாடு படப்போகிறானோ எனவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த எனக்கு நீ ஒன்னும் கவலப் படாதே, இருட்டுல இவ்ளோ நாள் வாழ்ந்த எனக்கு, இந்த வெளிச்சத்துல வாழ்றது பெரிய விசயமில்லைன்னு சொல்லி கண் மூடிக்கொண்டே உதட்டுக்குள்ளிருந்து பல்முளைக்காத அவன் சொன்ன சொற்கள் என் மனதை நிரப்பியிருந்தன.

இந்தப் பிரபஞ்ச மொழிகள் எல்லாவற்றிலும் முகிழ்த்தெடுக்கப்பட்ட  சொற்களைக் கொண்டு அவனுக்கொரு பிள்ளைத் தமிழ் பாட வேண்டும் என்பது போலிருந்தது. இன்னும் பெயரிடப்படாத அவனுக்கு ஆழப்பதியாமல் நெற்றியில் ஒரு முத்தமிட்டு அம்மாவிடமே கொடுத்துவிட்டேன்.

எதுவாயிருந்தாலும் என்னை அத்தைன்னு உரிமையாய் கூப்பிட ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்குறப்பவே மகிழ்ச்சியாக இருக்கு.  ஆம். அண்ணிக்கும் அண்ணனுக்குமான இயற்கைக் கொடுத்த காதற்பரிசே இந்தப் பல்லவ வாரிசு. போட்டித் தேர்வுகளில் வென்ற நான் இந்திய ஆட்சிப் பணிக்காக இப்போது டேராடூனில் பயிற்சி பெற்று வருகிறேன். வேலைக்குப் (போகப்)போற பொண்ணு ஒத்துவராதுண்ணு சொல்லிட்டுப் போன அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் ஏதோ ஒரு பெண்ணோட வீடுகளில் ஏறியிறங்கி காபி குடிச்சிட்டு இருக்காங்க போல.

கெட்டியான ஆயுசுள்ள அண்ணனுடைய காதலை வீட்டில் சொல்லி மார்ச்சில் அண்ணன் அண்ணிக்கு திருமணம் செஞ்சு வைத்த பின்னர்தான், டேராடூனுக்கே சென்றிருந்தேன். இப்போ மருமகனைப் பார்க்க வந்தாச்சு. அப்றம் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டனே.

என் காதலுக்கு வயது நான்கு மாதம்.

_சுபம்_


(இது பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி, ப்ரதிலிபியின் மகளிர் தின இறைவி போட்டியில் பங்கேற்றது, பரிசுபெறவில்லை)

1 கருத்து: