நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 24 ஜூலை, 2019

அபாயச் சங்கிலியும் அபயமும் ! (பயணக் கட்டுரை)

22 ஜூலை 2013

கல்லூரி சேர்க்கை போட்டு., கல்லூரி செல்லத் தொடங்காத 17 வயது நிரம்பிய மீசைக்கு ஆசைப்பட்ட இளைஞன்.

மைக்ரோமேக்ஸ் ஆண்டெனா வச்ச போன்,
அதுல மொத்தம் 60-80 தொடர்பு எண்கள்
கழுத்துல என்சிசி ஐடி கார்டு
சின்ன டைரி அதுல ஒரு 16 போன் நம்பர்
ஒரு பை அதுல ரெண்டு செட் துணிகள்
500
ரூ கிட்டத்தட்ட கையிருப்பு

இவற்றோடு அன்றைய பயணம் துவங்கிற்று. சோழன் விரைவு வண்டியை மயிலாடுதுறையில் பிடித்த போது, இரயில் கூட்டத்தால் உள்ளீடதிகம் இருந்தது. ஒரு வழியாக சிதம்பரம் தாண்டுவதற்குள், சராசரி இந்தியக் குடிமகனின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் சிம்மாசனமான Luggages onlyஇல் அமர்ந்து கொண்டதும் பெருவேகமெடுத்தது இரயில்.

ஒரு கான்ஸ்டபிள் உட்பட என்னோடு சேர்த்து மூவர் மேலே அமர்ந்திருந்தோம் பைகளோடு. கடலூர் தாண்டிய பின்னர் கான்ஸ்டபிளின் போனில் சார்ஜ் இல்லை என்பதால் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசினார்  எல்லா இரயில் பயணம் போலவே இயல்பாகத் தான் இருந்தது. அது நடக்கும் வரை....

விழுப்புரம் கடந்து திண்டிவனம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பேரணி எனும் நிலையத்தை தாண்டி 100மீ தொலைவு சென்றிருக்கும். இரயில் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்கியது. எதிரிலிருப்பவருக்காகக் காலை ஒடுக்கி உட்கார்ந்ததில் காதில் மாட்டியிருந்த இயர்போன் கையிலிருக்க, வாலிபாலை விட மோசமாக அங்கிங்கு மாறி ஜன்னலின் வழியே வெளியே விழுந்திட்டது மைக்ரோமேக்ஸ் ஆண்டனா போன்.

ஏதோன்றும் செய்வதறியா நிலையில்,  அபாயச் சங்கிலியை இழுக்க கைகள் நீண்டன. சக பயணிகளான பொதுமக்கள் எல்லாம் ஏதொன்றும் அறியாது பதறிப்போய், அபாயசங்கிலியைப் பிடித்து, நிறுத்துவதற்குள் எனைத் தடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பைப் புறக்கணித்து அபாயச்சங்கிலி இழுத்தபின், செருப்புகூட போடாமல், வேகமாக இரயிலில் இருந்து குதித்தன கால்கள்.(எப்பாஆ எம்மாம் உயரம், நடைபாதையில ஏறி ஏறி, முதல் முறையா நேரடியா தரையில இறங்குனப்ப அம்மாம் உயரம்).

கடைசியில் உள்ள பொதுப்பெட்டியில்(Unreserved) ஏறியதால், உடனே செல்போனை எடுத்துவிடலாம் என்ற எண்ணம். இரயில் கார்டு "என்னப்பா, எங்க ஓடுறே" எனக் கேட்க,"இதோ வந்துடறேன்" என திரும்ப கூட பார்க்காமல் வேகமாக ஓடினேன். இரயில் வந்த பாதையில் போனைத் தேடிய போது, இரயில் செல்லட்டும் பிறகு கடக்கலாம் என, கிடாரிகளை நிப்பாட்டி வைத்திருந்தவர், "தம்பி என்ன தேடுறே.... இரயிலு அந்த டிராக்குலருந்து வந்துச்சி"ன்னு சொல்ல உடனே அங்க ஓடுனேன்.

கீழ பார்த்தா செல்போன் மேல்பாகம், கீழ்பாகம், பேட்டரி எல்லாம் தனித்தனியா கொஞ்சம் எட்டி எட்டி கிடந்தது (ஓடுற இரயிலில் இருந்து விழுந்ததால்). எல்லாத்தையும் கையில எடுத்துட்டு திரும்பிப்பார்த்தால், நான் வந்த இரயில் இரண்டு கி.மீ தாண்டி சென்றுகொண்டிருந்தது. அப்போது தான் தமிழ்த்திரையுலகின் தொட்டுதொடரும் மோசமான அறிவிலி காட்சிப்படுத்தலை மனதார திட்டித் தீர்த்தேன். படங்கள் வழியே பெரும்பாலான வாழ்க்கைப் பாடங்களை கற்க நேர்கிறது. பொதுவாக படங்களில் யாராவது அபாயச்சங்கிலி பிடித்திழுத்தால் இரயில் கார்டு வந்து அபராதம் வசூலிப்பார். பின் வண்டி செல்லும் என்பதே மனதில் பதிந்தது. அந்நிகழ்விற்கு பின் படத்தை பார்ப்பதோடு இரசித்து மட்டும் விடுவதென முடிவு செய்துவிட்டேன். 

எப்போதோ பேசியில் சேமிக்கப்பட்டிருந்த இரயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு "அபாயச்சங்கிலி இழுத்துவிட்டேன், உடைமைகள் யாவும் இரயில் செல்கின்றன" என சொன்னால், அது கேரளா எண்ணாம், அவர்கள் தந்த தமிழக எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக பேரணி இரயில் நிலைய அதிகாரியைச் சந்திக்கச் சொன்னார்கள்.


அங்கு செல்வதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு. துண்டித்தேன். மீண்டும் அழைப்பு
"என்னம்மா(கடும் அமத்தலுடன்)".,
"எங்கே போயிட்டுருக்கே"
"ஏன், திண்டிவணம் போகப்போகுது வண்டி"
"சரி சரிபா"
அழைப்பு துண்டித்தேன்., இரயில் நிலைய அதிகாரியைச் சந்திப்பதற்குள் அடுத்த அழைப்பு அம்மாவிடம்,

"ஒண்ணுமில்லே, நீ இரயில்ல இருந்து கீழ குதிச்சுட்டன்னு சொன்னாங்க, அதான்"
"ஓஓ! தெரிஞ்சிட்டா, கவலைப்படாதே நான் பாத்துக்கறேன், பத்துரமா வந்துடறேன்" என பலவாறு தேற்றி போனை வைத்தேன்.

பேரணி இரயில் நிலைய அதிகாரி பின், இரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். திண்டிவனத்திலிருந்து வந்த அவர்கள், பேரணியிலிருந்து அழைத்துச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் எனக்கு முன்னும் பின்னும் காவலர்கள் அமர திண்டிவனம் சென்றோம். இரண்டு நாட்களில் திண்டிவனம் இரயில் நிலையத்திற்கு.மீண்டும் வரவேண்டும். விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அபராதம் ரூ.500 செலுத்த வேண்டும் என்றனர். ஜாமீன் கையெழுத்து இட்டதும் விடுவித்தனர். (நான் திண்டிவனம் அடைவதற்கு முன்பே கல்லூரி மாணவர்கள் சிலர் குழுமியிருந்தனர். அவர்கள் எனக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள். கல்லூரியில் பணியாற்றும் யாரோ தகவல் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த யாரோ-வுக்குத் தகவல் சொன்னது அம்மா, அப்பா. அந்த இளைஞர்கள் கையெழுத்திட்டதும் காவலர்கள் விடுவித்தனர்)

(குறிப்பு: 
உயிர் பிரச்சினை என்றாலோ, ஆபத்து என்றாலோ, ஐந்திலக்க ரூபாய் மதிப்பிலான பொருட்களாக இருந்தாலோ, அபாயச்சங்கிலி இழுத்தமைக்கு அபராதம் கிடையாது . இது இரயில்வே பாதுகாப்புப் படையினர் சொன்ன தகவல். மற்றபடி தனிப்பயன்பாட்டிற்காக அபாயச்சங்கிலியை இழுப்பது இந்திய இரயில்வே சட்டத்தின் 141வது பிரிவின் படி  குற்றமாகும். இதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். உரிய காரணங்களிருப்பின் ரூ.500யாகக் குறைக்கப்படும். 

பேரணி நிலையத்தை மெதுவாகக் கடந்து வேகமெடுக்கையில் அபயாச்சங்கிலியை இழுத்ததால் இரயிலுக்கு ஏதும் சேதமில்லை. இதே இரயில் பெருவேகமெடுத்துச் செல்லுகையில் அபாயச்சங்கிலி இழுக்கப்படின் இரயில் தண்டவாளத்தை விட்டே வெளியேறிவிடும் சூழலுள்ளது.  இரயில் சக்கரம் - தண்டவாளம் இரண்டுமே ஒரே தனிமம் ஆதலின் ஓரினக்கவர்ச்சி விசையின் காரணமாக  Break அடித்தவுடன் உடனடியாக நிற்காது. சற்று நேரமாகும். 110 கி.மீ வேகத்தில் செல்லும் வண்டி அபாயச்சங்கிலி இழுத்தவுடன் நிற்க 3-4 நிமிடங்களாகலாம். 

மேலும், தனிப்பட்ட ஒருவரின் அபாயச்சங்கிலி இழுப்பால் உடன் பயணிக்கும் மொத்த பயணிகளுக்கும் நேரத்தாழ்ச்சி ஏற்படுகிறது. அதோடு இந்த இரயில் சென்றால் தான் செல்லமுடியும் எனவுள்ள Connection இரயில்களின் பயணமும் பாதிப்புக்குள்ளாகும். இது அழகிய வலைப்பின்னலில் சிக்கலை ஏற்படுத்தும், ஆதலின் பெரும்பாலும் அபாயச்சங்கிலி இழுக்காமல் சூழலை கைக்கொள்வது நல்லது)

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பின், சென்னை வந்தேன். சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அலுவலக அதிகாரியிடம் என் செருப்பு முதற்கொண்டு எல்லா உடைமைகளையும் ஒப்படைத்துச் சென்றார் இரயில் பயணத்தில் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசிய கான்ஸ்டபிள். அவர்தான் என்பையிலிருந்த சிறுடைரியிலிருந்து எண் எடுத்து எனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தவர். தன் வீட்டில் தொடர்பு கொண்டு என் எண்ணை அறிந்து என்னிடம் பேசியவர் (அவர் போனில் சார்ஜ் இல்லாததால் இவையாவும் பிறர் போனிலே செய்திருக்கிறார் என்றறிக. 2013இல் இரயிலில் எல்லா பெட்டிகளிலும் சார்ஜ் ஏற்றும் வசதி செய்துதரப்படவில்லை என்பதறிக)

எழும்பூர் வந்ததும் சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். உறவினரனைவரும் பதட்டத்தில் இருக்க, நான் ஏதும் ஏடாகூடமாய் முடிவெடுக்கக் கூடாதென பரிவாகவே நடந்தனர். ஏனெனில் சித்தப்பாவை அடுத்த நாள் காலை ராஜதானியில் வழியனுப்ப வந்தவன். என்னை பாதுகாக்க அவர்கள் ஆவடியிலிருந்நு எழும்பூர் வந்திட்டார்கள். இரவு 12 மணி அவர்களோடு ஆவடி செல்லும்போது. காலை 04.30க்குலாம் மீண்டும் கிளம்பி சென்ட்ரல் வந்தாச்சு.

அன்றைய அல்ட்ரா டீலக்ஸ் வண்டியில் ஊருக்கும் திரும்பியாயிற்று.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப்பின்,

25 ஜூலை 2018

கையில் பெட்டி, உணவு
ஸ்மார்ட்போன்
அதில் நான்கிலக்க எண்ணிக்கையில் தொடர்பு எண்கள் என 22 வயது கன்னத்து மயிர் முளைத்த இளைஞன் இப்போது! இந்த ஐந்தாண்டுகளில் தான் எவ்வளவு மாற்றங்கள்! ஐந்தாண்டுகளுக்குப் பின் இப்போது தான் சோழன் விரைவு வண்டியில் சென்னை செல்கிறேன்.

ஒரே ஒரு வேறுபாடு :
2013இல் டெல்லிக்கு வழியனுப்பும் பொருட்டு சோழனில் பயணம்.
2018
இல் டெல்லிக்குச் செல்லும் பொருட்டு சோழனில் பயணம்.

-தக
25.07.2018

(தனித்தமிழார்வலர்கள் பொறுத்தருள்க மீஆங்கிலப் பயன்பாட்டிற்காக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக