கிரந்த எழுத்துகள் தேவையா? தேவையில்லை
தமிழில் வடமொழி ஒலிகளை எழுத உருவாக்கப்பட்டவையே கிரந்த எழுத்துகள். ஜ ஷ ஸ ஹ ஸ்ரீ முதலானவை கிரந்த எழுத்துகளே. இந்த எழுத்துகளை எழுதி வடமொழிக்காரர்களிடம் காட்டினால், அவர்களால் படிப்பது இயலாது. ஏனெனில், இது தமிழுக்காக உருவாக்கப்பட்டவையே.
ஆக, கிரந்த எழுத்துகள் என்பவை தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வடமொழி ஒலிப்புடைய எழுத்து. பிறமொழி (ஒலி)உச்சரிப்புக்கு ஏற்பத் தமிழில் ஏன் புதிய எழுத்துகளை உருவாக்க வேண்டும். தமிழின் ழ எழுத்தை வடமொழியில் ல என்றே விளிப்பார்கள். அதன் உச்சரிப்புக்கு ஏற்ப புதிய எழுத்துகளை உருவாக்கவில்லையே. Thamizh அல்லது tamil எப்படி எழுதி வாசத்தாலும் தமிழ் என்ற ஒலிப்பு வருவதில்லையே. அதனால், ஆங்கிலத்தில் ழ ஒலிப்புக்கு இணையாக ஓர் எழுத்தை உருவாக்கினார்களா. இல்லையே. பிறகு, ஏன் தமிழில் மட்டும்.
சரி, உருவாக்கி விட்டார்கள், சில தலைமுறை பயன்படுத்திவிட்டது. இனி, அவற்றை மறுத்துத் தற்சார்புத் தமிழை மீட்டுருவாக்குவதே சரியானதாக இருக்கும்.
தொல்காப்பியர் காலத்தில் தமிழாக்கம் செய்து எழுதப்பட்ட ‘ஒலி’கள். பிற்காலத்தில் அவ்வொலிகளுக்கு ஏற்ப எழுத்துகளை உருவாக்கும் அளவுக்கு நிலைமாறிப்போனது. தனித்தமிழியக்க வளர்ச்சியினால், தற்சார்புத் தமிழில் மீட்டுருவாக்கத்திலும் இந்த கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
1. தற்போது கிரந்த எழுத்துப் பயன்பாடு பெயர்ச்சொற்களில்தான் இடம்பெறுகிறது.
பெயர்ச்சொற்களிலிருந்து முதலில் கிரந்த எழுத்தை நீக்கல் வேண்டும்.
2. அடிமை மனோபாவத்தை ஒழித்தல். தன் பிள்ளைக்கு வடமொழி ஒலிப்பில் பெயர் வைத்தால்
(சான்று : மோனிஷ், மஹிஷா) பெரிய மேதமை போன்ற போலிப் புகழ் உணர்வு அடையும் பெற்றோர்கள்
தங்கள் மனப்பிறழ்வைச் சரிசெய்துகொள்ளுதல் வேண்டும்.
3. இது எதிர்காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு உருவாகாமல் இருக்க உதவும்.
ஸ்ரீநிவாசன் என்ற பெயர் தற்போது சீனிவாசன் என்று தமிழில் பெருவழக்காக மாறியிருக்கிறது
அல்லவா.
4. இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் அனைத்தும் கணினிமயம் ஆதலால், உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் ஒருங்குறியிலிருந்து ஸ, ஸ்ரீ, ஹ, ஜ, ஷ எழுத்துக்களை நீக்கம் செய்துவிட்டால், அவற்றைப் பயன்படுத்த இயலாமல், மக்கள் இயல்பாகவே தனித்தமிழுக்கு வந்துவிடுவார்கள்.
இப்போது, தமிழில் மொழிபெயர்க்கும்போது, அந்நியப் பெயர்களை எவ்வாறு உச்சரிப்பது
என்ற ஐயம் வரும். அமெரிக்க மேனாள் அதிபர் George Walker Bush என்பதை ஜார்ஜ் வால்க்கர் புஷ் என்று எழுதுவதற்குப்
பதிலாக சார்ச் வால்க்கர் புச் என்று எழுதலாம். இதைப் படிக்கும்போது, George Walker Bush என்ற ஒலிப்பில் சொல்ல வேண்டியதான்.
ஜார்ஜ் வால்கர் புஷ் – பொதுமக்கள் மனநிலை
சார்ச்சு வால்க்கர் புசு – தனித்தமிழ் பெயர்ப்பு
சார்ச் வால்கர் புச் – தேவையான பெயர்ப்பாக கருதுவது.
நாவலாசிரியர், எழுத்தாளர், மெய்யியலாளர் Dostoevsky பெயரைத் தமிழில் தாஸ்தோவ்ஸ்கி /தஸ்தாயெவ்ஸ்கி என்று சொல்வார்கள். இது ஆங்கில உச்சரிப்போடு நெருக்கமாக இருக்கிறாதா என்ன? இல்லையே. பிறகு, தச்தோவ்ச்கி என்று எழுதி படிக்கும் போது, Dostoevsky என்ற ஒலிப்பில் சொன்னால் என்ன? இன்னும் சொல்லப்போனால், அவர் இரசிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பெயரை அதன் மூலமொழியின் ஒலிப்புக்கு இணையாகத்தானே உச்சரிக்க வேண்டும்.
சரி, கிரந்த எழுத்துகளுக்கு தமிழில் உச்சரிக்கத்தக்க ஒலி இல்லை என்று கருதுகின்றீர்களா!
ஜ |
Ja |
மஞ்சள் – இதில் உள்ள ச எழுத்து ஜ என்றே உச்சரிக்கப்படுகிறது. |
ஷ |
Sha |
பக்ஷி – பட்சி இதில் உள்ள ட்+ச் என்பது ஷ என்றே கொள்ளலாம். |
ஸ |
Sa |
சக்கரம் – இதில் உள்ள ச எழுத்து ஸ என்றே உச்சரிக்கப்படுகிறது |
ஹ |
Ha |
பகல் – இதில் உள்ள க என்ற எழுத்து ஹ என்றே உச்சரிக்கப்படுகிறது |
ஸ்ரீ |
sri |
திரு. (தமிழின் திரு = வடமொழியின் ஸ்ரீ) |
ஆதலால், எழுத்துகளில் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதுவதும் ஒலிப்பில் உரியனவற்றை உச்சரிப்பதும் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க உதவும்.
மனது வைத்தால் முடியாதது ஏதேனும் உண்டா?
இதன்பின்னரும் பிறமொழி எழுத்துகளை/அதன் உச்சரிப்பிலேயே தமிழில் ஒலிக்க கிரந்த எழுத்துகளை ஆதரிக்கும் நபர்கள் இருப்பின் ஒரு வேண்டுகோள்.
ல/ழ/ள, ண/ந/ன, ர/ற, ங/ஞ உச்சரிப்புகளை வேறுபடுத்த பிறமொழிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் அம்மொழிகளில் தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துகள் குறித்தும் தெரியப்படுத்துங்கள். தமிழில் கிரந்த எழுத்துகள் இருக்கலாமா என்பது குறித்து அதன்பின்னர் விவாதிப்போம்.
த.க.தமிழ் பாரதன் | 30.09.2020
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
பதிலளிநீக்குநீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள: https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.--------