நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

புது வெள்ளை மழையும் ஆகாய கங்கையும் எம்.ஜி. வல்லபனும்

கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் என்ன நடக்குமோ என்று அறியாத பதட்டம் எல்லாருக்கும் இருந்தது.

மார்ச் 18 புதன்கிழமை காலை அகில இந்திய வானொலியில் பணி. காலை 4 மணிக்கே தயாராயாச்சு. சிலநாள் முன்பு வாங்கிய டெட்டால் சுத்திகரிப்பானைப் பையில் எடுத்து வைத்திருந்தேன். முன்னிரவு தயாரித்துவைத்த சிற்றுணவு எடுத்துக்கொண்டு, வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலி வாகனம் அனுப்பும். அந்த வாகனத்தில் Location பார்க்கும் வசதி கிடையாது. வாகன ஓட்டிக்கு இந்திதான் தெரியும். அவருக்குப் புரியும் இந்தியில் பேசி, எனது இருப்பிடத்திற்கு வரவைத்துவிட்டால் வெற்றிபெற்ற உணர்வு இருக்கும். நல்லவேளை, அன்றைக்கு வாகனஓட்டி சொன்னதைப் புரிந்து வந்துவிட்டார்.

ஒருவார காலமாக வெளியே செல்லாமல் தப்பித்த எனக்கு, அன்றைக்குப் பணிக்குச் சென்றே ஆகவேண்டும். பெரும்பாலும் தில்லி வீதிகள் காலை 4 மணியளவில் வெறிச்சோடி இருக்கும். இப்போது, கொரோனா தொல்லை வேறு.  சிலபத்து நிமிடங்களில் ஆகாசவாணி பவன் வந்துவிட்டது. அங்கே, சானிடைசர் சுத்தம் செய்து அனுப்பினார்கள். ஒலிபரப்பு அறைக்குள் செல்லும்வரை அப்பாடா என்றிருந்தது.

இப்போது ஏன் இதெல்லாம் சொல்கிறேன் எனக் குழம்புவதைவிட பத்துப் பங்கு அதிகக் குழப்பங்களைக் கொரோனா ஏற்படுத்தியிருந்தது. கொரோனா நோய்தொற்று என்ற புரிதலெல்லாம் இல்லை. தொற்றுநோய் என்றே அஞ்சிக்கொண்டு மூளையைக் குழப்பும் செய்திகள்-பகிர்வுகள் நடந்துகொண்டிருந்தன. எல்லாமே அந்த அறைக்குள் போகும்வரை. எதுவும் ஒலிபரப்பைப் பாதிக்கக்கூடாதென உறுதிஎடுத்தாலும், சிலதடங்கல் வந்திருந்தது. இனி, இந்த அறைக்கு வருவோமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். உண்மைதான். ஆறுமாதம் ஆகிவிட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் ஒலிபரப்பு இன்னும் தொடங்கியதாயில்லை.

05.30 – 06.15 வரையிலான நிகழ்ச்சியை அடுக்கி வைக்க வேண்டும். 05.50 வரை உரிய அனைத்தும் இடம்பெற்றுவிட்டது. 05.50 க்கு வாசிக்க வேண்டிய ஆங்கில உரையின் தமிழாக்கம் தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய A Regional Response To COVID-19 Challenge ஆங்கில உரையின் தமிழாக்கம் கையில் இருந்தது. இதற்கடுத்து புதன்கிழமைக்கு என்றே ஒலிபரப்பாகும் ‘சந்திப்பில் இன்று’ நிகழ்வு 05.55 அளவில் தொடங்கும். அதில் அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களை கவிஞர் இரவி சுப்பிரமணியன் அவர்கள் கண்டிருந்த பேட்டியின் நிறைவுப் பகுதி இடம்பெற்றது. 06.06க்குப் பிறகு இரண்டு பாடல்களே இடம்பெற நேரமிருந்தது.

முதல்நாளே நேய(ர்!) விருப்பமாக, ஏஆர் ரகுமான் பாடல் கேட்டிருந்ததால் “புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது”  பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாகிவிட்டது.  அடுத்து, ஒரு பாடல் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்று பெருங்குழப்பம் நிரம்பியிருந்தது. இந்தக் குழப்பமான சூழலில் உற்சாகமான ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தேடினேன் தேடினேன் தேடினேன். இளையராஜா பாடல்களில் உற்சாகமான, காதலான, வானொலியில் ஒலிபரப்பத்தக்க, காலையில் கேட்கத்தக்க, கணினியில் இருப்பில் உள்ள பாடல்களில் தேடித் தெளிந்து ஒரு பாடல் எடுத்தேன். “ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி… பொன்மான் விழி தேடி…”.  புது வெள்ளை மழைக்கும் ஆகாய கங்கைக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றியது. ஒலிபரப்புக்குத் தயாரானேன்.

வானொலியில் ஒலிபரப்பு செய்யும் அனைத்துக்கும் சான்று/எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும். Que sheet என்று சொல்வார்கள். எக்காலத்திலோ பாடல் வெளியாகிருந்தாலும் இன்றைக்கு ஒலிபரப்பினாலும், பாடல் வெளியிட்ட நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட சதவீதத் தொகை ராயல்டியாகச் செல்லும்/செல்லவேண்டும் என்பது  வழக்கு. அப்படிக் குறிக்கும்போது வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் தவிர, பாடல் குறித்த இன்னபிற தகவல்களையும் அளிக்க வேண்டும்.

எந்தப் படம், யாருடைய குரல், யாருடைய இசை, என்பதுதான் அவை. இதோடு அது யாருடைய வரிகள் என்பதும் அத்தியாவசியம். பெரும்பாலும், இசைத் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் பெயர் விடுபட்டுப் போய்விடும். அறிந்தவரை, வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்தான், பாடாலாசிரியர் பெயர் தவறாமல் இடம்பெறும். வரிகள் இல்லையென்றால், அப்பாடல் வெறும் இசைக்கோவையாகத்தான் இருக்கும். வரிகளை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிடுதல் அடிப்படையானது. இணையத்தில் தேடினாலும், பாடலாசிரியரின் பெயரை பெரும்பாலான இணையதளங்கள் விட்டுவிடுகின்றன. தற்போது வெளியாகும் புதுப்படப் பாடல்களில் lyrics : என்று பாடலாசிரியர் பெயர் இடம்பெற்றாலும், பழைய பாடல்களில் இத்தெளிவு இருப்பதேயில்லை.

சரி விசயம் இதுதான். அன்றைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு பாடல்களும் வைரமுத்து எழுதியது என்று எண்ணியிருந்தேன். ஆனால், ஆகாய கங்கை பாடல் எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். பாடலாசிரியர் பெயர் அறிமுகமே இல்லை. அத்தனைமுறை இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட இவர் பெயரைச் சொன்னதாயில்லை. எம்.ஜி. வல்லபன் குறித்த நிகழ்வு முடிந்து தேடுவோம் என்று முடிதாயிற்று.

நோய்த்தொற்று சூழ் சூழலில் பாடல் ஒலிபரப்பும்முன் சொல்லும் பாடல் விளக்க/அறிமுகத்தில் கொஞ்சம் உற்சாகமான வரிகளை அள்ளித்தெளித்து எழுதிமுடிக்கையில் 05.30 வந்துவிட்டது.

·         வந்தேமாதரம், திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் தொடங்கி 

·         மங்கல இசை

·         தமிழ்ச்செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பு

·         நிகழ்ச்சிக் குறிப்புகள்

·         பக்தி இசை

·         குறளமுதம்

·         ஆய்வுரை

·         சந்திப்பில் இன்று முடித்து

பாடலுக்கு வந்தாயிற்று. பாடலை அறிமுகம் செய்து “ஆகாய கங்கை” ஒலிபரப்பாகையில் முழுதும் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருந்தன. ஆகாய – இந்த எழுத்துகளில் ஆ-3 அசையும் கா-2 அசையும் கொடுத்து பாடியிருப்பார் காந்தக்குரலோன் மலேசியா வாசுதேவன். எளிய சொற்சேர்க்கை கொண்ட அற்புதமான வரிகள், ஹம்மிங் சேர்த்து இளையராஜா அசத்தி இருப்பார். “பாடுதே மங்களம் – நாடுதே சங்கமம்”, “சீதா புகழ் ராமன்” சொற்களைச் சுருக்கி பொருண்மையைப் பெருக்கியிருந்தார் எம்.ஜி. வல்லபன்.

அடுத்த பாடல், நேய(ர்!) விருப்பமான புதுவெள்ளை மழை பாடல் சொல்லவே வேண்டாம். தற்காலத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயமான பாட்டு. முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த நாளில்,  நான்கைந்து வரிகள் அள்ளித்தெளித்து அந்தப் பாட்டை ஒலிபரப்பினேன். அதுதான் கடைசியாக ஒலிபரப்பிய பாட்டு. நிறைவான பாட்டு. அன்றைய ஒலிபரப்பை 06.15க்கு நிறைவு செய்ததோடு, வெளியே வந்து தமிழகத்திற்கு விமானச்சீட்டு பதிவு செய்தாயிற்று. ஆறுமாதம் ஓடியும் விட்டது.

*

இளையராஜாவோடு பல பாடல்கள் உருவாக்கியிருக்கும் எம்.ஜி.வல்லபன்,  “மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”, “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” முதலான வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். கேரள மாநிலத்தின் திருச்சூரில் பிறந்த எம்.ஜி. வல்லபன் பின்னாளில் தமிழ்த்திரையுலகில் காலடி வைக்கிறார். தமிழ் இதழியல் பயின்ற அவர், ஃபிலிமாலாயா இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்றறிய முடிகிறது. வெள்ளித்திரையில் பாடலாசிரியராக மட்டுமின்றி, கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். தைப்பொங்கல் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுபோல் எத்தனையோ கலைஞர்கள் மகத்தான பங்களிப்பு செய்திருந்தும், அவர்களது படைப்புகள் வெற்றியடைந்திருந்தும் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரை அடையாளப்படுத்தாமல் போவது வருதத்திற்குரியதே. பண்பலை ஒலிபரப்பிலும், இசைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

- தக | 18.09.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக