நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

சுதந்திர தின அன்பளிப்பு... கடிதம்

அன்புத் தோழிக்கு,

வணக்கம். தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை. தாங்கள் அனுப்பிவைத்த “சுதந்திர தின நாள் வாழ்த்து” கிடைத்தது.

தாங்கள் அனுப்பிய இரு புத்தகங்களுக்கும் நன்றி. நீங்கள் புத்தகம் வாங்கி அனுப்புவதற்கு முன்னதாகக் கேட்டிருந்தால் எனக்கு வேண்டியனவற்றைச் சொல்லியிருப்பேன் அல்லவா?. அடுத்தமுறை முன்கூட்டியே கேளுங்கள்.

இருபுத்தகங்களுக்கும் நடுவே நீங்கள் வைத்திருந்த cadbury dairymilk “Family Pack” என்னை வியப்பில் ஆழ்த்தியது. 90களின் குழந்தையாக வளர்ந்த நான், இந்த டைரிமில்க் சாக்லேட்டை விடுதலை நாளுக்கான பரிசாகவே எடுத்துக் கொள்கிறேன்.




இவற்றை அதிக செலவு செய்து விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். என்னிடம் முகவரி கேட்டிருந்தால், தெளிவாகச்  சொல்லியிருப்பேனே. நீங்கள் குறிப்பிட்டிருந்த தெருபெயர் தவறு. அஞ்சலகர் நன்கறிமுகமானவர் என்பதால், பெயரையும் ஊரையும் உறுதி செய்து என்னிடம் கொடுத்துச் சென்றார்.

அஞ்சலுறையில் உள்ள விவரங்கள் வாயிலாக உங்களை யாரென்று அறியமுடியவில்லை. அதன் உண்மைத்தன்மை குறித்தும் மெனக்கெட விரும்பவில்லை. விரைவில் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கிருந்தாவது இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதியுள்ளேன்.

இப்படிக்கு,

தங்களை யாரென்றறியாத

தக | 15.08.2021

பின்குறிப்பு : அன்பின் பொருட்டு, நூல்கள் அனுப்பும் தோழிகள் முன்கூட்டியே, எனக்குத் தேவைப்படும் நூல்களின் விவரங்களைக் கேட்டறியலாம். முகவரியை அனுப்பி வைக்கிறேன். விபிபி முறையில் அனுப்பப்படும் நூல்கள் ஏற்கப்படமாட்டாது. 

புதன், 30 செப்டம்பர், 2020

தமிழ் மொழிபெயர்ப்பு அறிமுகம் | மொழிபெயர்ப்புக் கருவிகள்

அகில இந்திய வானொலிக்காக மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கி, 2020 செப். 23ஆம் நாளோடு ஓராண்டு நிறைவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் NCERT, NPTEL முதலான நிறுவனங்களுக்கும் மொழிபெயர்ப்புக்காகப் பங்காற்றியிருக்கிறேன். இந்த ஓராண்டில் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்பாக நிறைய நுட்பங்கள் கற்றுக்கொண்டுள்ளேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். அவற்றுள் அடிப்படையானவற்றைப் பொதுவில் பகிர்வது ஏனையவர்களுக்கும் பயன்படும் என்பதாலும், மொழிபெயர்ப்புத் துறையில் நுழைய எண்ணுபவர்களுக்கு உதவும் என்பதாலும் இங்கு பகிர்கிறேன். நன்றி.

உலக மொழிபெயர்ப்பு நாள் வாழ்த்துகள்.

..தமிழ்பாரதன் | 30.09.2020

தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றின் தொடக்கம்

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 

என்றார் பாரதி. பிறமொழியில் அறிவைத் தமிழுக்குக் கொண்டுவருதல் வாயிலாகத் தமிழ் மக்கள் பிறமொழி அறிவைப் பெறுதல் எளிதாகிவிடும். இதற்கு மொழிபெயர்த்தல் அடிப்படையானதாகும். தற்காலத்தில் கணினியில் ஒரு மொழியை உள்ளீடு கொடுத்தால், அது இன்னொரு மொழியில் பெயர்க்கப்பட்டுவிடுகிறது. இது எந்திர மொழிபெயர்ப்பு.  மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும்.

தமிழின் மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலத்திலேயே இதற்கான விதிமுறைகள் இருந்திருக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த நெடிய மரபில் தற்கால எச்சம் நாம் என்பதை எண்ணிக்கொண்டுச் செயல்படுதல் தமிழுக்கு வளமை அளிக்கும்.

    வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியலில் 5ஆவதாக இடம்பெறும் இந்த நூற்பா மொழிபெயர்ப்புக்கான வரையறைகளைக் கொடுக்கின்றது. தற்காலத்தில்தான் ஆங்கிலம்-தமிழ் பயன்பாடு அதிகம் உள்ளது. அக்காலத்தில் வடமொழிகளுடனே அதிகப் பயன்பாடு தமிழுக்கு இருந்தது. வடமொழியில் உள்ள ஒரு சொல்லைத் தமிழில் தர வேண்டுமானால், தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்ற வேண்டும். இங்கு, கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு.

1.         தற்சமம் – ஒலி மாறுபாடின்றி வழங்குவது – कमल (kamal) – கமலம் (தாமரை)

2.         தற்பவம் – ஒலி மாறுபாட்டு அமைவதுతెలుగు (telugu) – தெலுங்கு (ங் சேர்க்கப்பட்டுள்ளது)

இதன்வழி ஒன்றை அறிந்துகொள்ளவியலும். பிறமொழியில் உள்ள உச்சரிப்பே தமிழில் உச்சரிக்க வேண்டியதில்லை. அதாவது, Hariharan என்ற உச்சரிப்பைத் தமிழில் தர ஹரிஹரன் என்று எழுதவேண்டியதில்லை. தமிழ் மொழிக்கு ஏற்ப அரிகரன் என்று வழங்குவதே உரியது. கம்பரின் காலம் வரை தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்றியமைக்கும் வழக்கு இருந்திருக்கிறது. விபீஷணன் என்பதை வீடணன் என்றும் ராமன் என்பதை இராமன் என்றும் சீதா என்பதை சீதை என்றே தமிழுக்கு ஏற்ப மாற்றி வழங்கினார்.

 பிற்காலத்தில், மணிப்பிரவாளநடை தோன்றியபோது, கிரந்த எழுத்துப் பயன்பாடு தலைதூக்கியது. தனித்தமிழ் இயக்கம் அதனைப் பாடுபட்டு ஒழித்தாலும் இன்றளவும் கிரந்த எழுத்துகளின் ஆதிக்கம் தமிழ்ப் பொதுமக்களிடையே தவிர்க்க இயலாததாக உள்ளது. தமிழ்+ஆங்கில கலப்பு நடையான தமிங்கிலம் மொழிப்பயன்பாட்டில் புரையோடிவிட்டது. இதுவும் ஒழிக்கப்படவேண்டியதே. (தமிழில்/தமிழாக்கத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்து வாசிக்க…)

சான்றாகச் சொல்லவேண்டுமானால், Translation என்பதையே எடுத்துக்கொள்ளுங்களேன். இதனுடைய நேரடிப் பொருள்வேறிடம் எடுத்துச் செல்லல்என்பதே. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்பு என்கிறோம். Translation என்பதில் Language என்றசொல் இடம்பெறாத போதும், அதன் பொருள் தமிழில்மொழிபெயர்ப்புஎன்பதே.

ஆதலால், ஒரு மொழியிலிருந்து சொற்றொடர் ஒன்றைத் தமிழில் கொண்டுவர சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்தல் கூடாது. அதன் பொருளை உள்வாங்கிக்கொண்டு தமிழுக்குத் தகுந்தாற்போல மொழிபெயர்ப்பு செய்தல் அடிப்படையானதாகும். waterfalls என்பதை நீர்வீழ்ச்சி என்று மொழிபெயர்த்தல் கூடாது. அதற்குத் தமிழில் அருவி என்ற சொல் இருக்கிறது, அதனைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்.

ஏற்கெனவே மொழியில் இருந்த/இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்தும்போது தமிழின் சொல்வளம் பாதுகாக்கப்படுகிறது. புதிய சொற்களைத் தேவையின் அடிப்படையில் உருவாக்குவது கலைச்சொல்லாக்கம் எனப்படுகிறது. “nano” என்ற தொழில்நுட்பம் வருகையில், இதனை “நுணம்” என்று மொழிபெயர்த்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த தமிழார்வலர் திருவளவன். இதன்படி, nano technology என்பது நுணவ நுட்பவியல், இதில் எந்தச் சிக்கலும் இல்லையே.

Biology என்பதை முன்னமே உயிரியல் என்று மொழிபெயர்த்து புழக்கத்தில் இருப்பதால் நமக்குப் பெரிய மாறுபாடு தெரிவதில்லை. தற்காலத்தில் புதிய சொற்களை உருவாக்கும்போது ஐயோ புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்!! என்று கத்துவது அபத்தமானது. பரிதாபத்திற்குரியது.


Translation       - மொழிபெயர்ப்பு (சான்று : flower – மலர், soil - மண்)

Transcreation     - மொழியாக்கம் (ஒன்றை உள்வாங்கிக் கொண்டு தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தல். சான்றாக Munnaa Bhai M.B.B.S என்ற படத்தைத் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்று உருவாக்கும் போது, தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப வசனங்களை நபர்களை மாற்றம் செய்துகொள்ளுதல். ‘ஆழ்வார் பேட்டை ஆண்டவா….’ வரிகளை இந்திப் படத்தில் தேடினால் கிடைக்காது. இதுவே இலக்கியப் பனுவலுக்கும் பொருந்தும்)

Transliteration    - ஒலிபெயர்ப்பு (பிறமொழி உச்சரிப்புகளைத் தமிழில் எழுதுதல். அதாவது, twitter – ட்விட்டர், whatsapp – வாட்சப். பெரும்பாலும் இது பெயர்ச்சொற்களுக்கே உதவும்)

 செய்யப்படும் மொழிபெயர்ப்பு யாரைச் சென்றடையப் போகிறது என்ற கேள்வி தலையாயது. தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகள் ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் அப்படியே மொழிபெயர்க்க மாட்டார்கள். தேவையானதைத் தேவையான அளவு தமிழில் தருவார்கள். மொழிபெயர்ப்புத் தூய்மை அங்கு தேவைப்படாது. ஆனால், ஒரு கவிதையோ, கட்டுரையோ தரம் மாறாமல் அப்படியே இன்னொரு மொழிக்குப் பெயர்க்கப்படுகையில் அங்கு கூடுதல் கவனம் தேவை. ஒரு பனுவலில் “மொழிபெயர்ப்பு” என்று குறிப்பிடப்படும் அனைத்துமே செறிவாகப் பொருள்தளம் மாறாமல் பெயர்க்கப்பட்டிருத்தல் அவசியம்.

மொழிபெயர்ப்புக் கலை - மொழிபெயர்ப்பு செய்வது குறித்து ஏராளமான நூல்கள் தமிழில் எழுந்துள்ளன. அவற்றைப் படித்துத் தெளிவு பெறலாம். எனினும், தொடர்சியாகச் செய்துபார்த்தலின்வழியே மொழிபெயர்ப்பில் மேன்மையடைய முடியும் என்பது அறிஞர் கருத்து.

மொழிபெயர்ப்புக் கருவிகள்:

1.         அனைத்தையும் மனிதனே மொழிபெயர்ப்பது நல்லதுதான். சில நேரங்களில் நெடிய சொற்றொடர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பின் உதவியை நாடலாம்.

2.         இயந்திர மொழிபெயர்ப்பு உதவியை நாடுவது அறிவுடைமையாகும். இருக்கின்ற இயந்திர மொழிபெயர்ப்புகளிலேயே https://translate.google.com/ என்பது ஓரளவு நன்றாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்யவேண்டியதை இதில் உள்ளீடு செய்து தமிழ் பெயர்ப்பைப் பெறலாம். இயந்திர மொழிபெயர்ப்புக்குப் பின், அதனை திருத்தம் செய்து, செம்மையாக்கம் செய்வது அவசியமானதாகும்.

3.         தமிழ் அகரமுதலி https://www.xn--vkc6a6bybjo5gn.com/ இந்தத் தளத்தில் உள்ளது. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒத்த பொருண்மையுடைய தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நம்பிக்கையான அகராதி. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழின் அனைத்து அர்த்தங்களையும் இங்குக் காணலாம். இதனால், தமிழின் சொல்வளம், சூழலுக்குத் தக்க அர்த்தம் தரும் சொற்களைப் பெறலாம்.

4.         மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி http://218.248.16.22/etytamildict/TamilDemo.aspx என்ற தளத்தில் உள்ளது. தமிழ்ச் சொல்லுக்கு இணையான வேறு சொற்களைப் பெற இதனைப் பயன்படுத்தலாம். 

5.         இதிலும் விளக்கம் கிட்டவில்லையெனில், https://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil என்ற தளத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, வின்சுலோ தொகுத்த அகராதி, சென்னைப் பல்கலை.யின் தமிழ் அகராதி முதலானவை உள்ளன. தேவைப்படும் சொல்லை உள்ளீடு செய்து தேடலாம். 

6.         நிறைவான மொழிபெயர்ப்பை http://vaani.neechalkaran.com/ என்ற தளத்தில் கட்டுரையை உள்ளீடு செய்து பிழைகளை நீக்கிக்கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தனங்களைத் தாண்டி மொழிபெயர்ப்புச் செய்யவுள்ள பனுவல் மீதான அறிவு, புரிதல், தெளிவு, தமிழ்ச்சூழல்-பண்பாடு, யார் பயனாளர்கள் என்ற அணுகுதலோடு செய்யப்பெறும் மொழிபெயர்ப்புகளே தனித்து நிற்கின்றன.


வெள்ளி, 18 செப்டம்பர், 2020

புது வெள்ளை மழையும் ஆகாய கங்கையும் எம்.ஜி. வல்லபனும்

கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் என்ன நடக்குமோ என்று அறியாத பதட்டம் எல்லாருக்கும் இருந்தது.

மார்ச் 18 புதன்கிழமை காலை அகில இந்திய வானொலியில் பணி. காலை 4 மணிக்கே தயாராயாச்சு. சிலநாள் முன்பு வாங்கிய டெட்டால் சுத்திகரிப்பானைப் பையில் எடுத்து வைத்திருந்தேன். முன்னிரவு தயாரித்துவைத்த சிற்றுணவு எடுத்துக்கொண்டு, வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலி வாகனம் அனுப்பும். அந்த வாகனத்தில் Location பார்க்கும் வசதி கிடையாது. வாகன ஓட்டிக்கு இந்திதான் தெரியும். அவருக்குப் புரியும் இந்தியில் பேசி, எனது இருப்பிடத்திற்கு வரவைத்துவிட்டால் வெற்றிபெற்ற உணர்வு இருக்கும். நல்லவேளை, அன்றைக்கு வாகனஓட்டி சொன்னதைப் புரிந்து வந்துவிட்டார்.

ஒருவார காலமாக வெளியே செல்லாமல் தப்பித்த எனக்கு, அன்றைக்குப் பணிக்குச் சென்றே ஆகவேண்டும். பெரும்பாலும் தில்லி வீதிகள் காலை 4 மணியளவில் வெறிச்சோடி இருக்கும். இப்போது, கொரோனா தொல்லை வேறு.  சிலபத்து நிமிடங்களில் ஆகாசவாணி பவன் வந்துவிட்டது. அங்கே, சானிடைசர் சுத்தம் செய்து அனுப்பினார்கள். ஒலிபரப்பு அறைக்குள் செல்லும்வரை அப்பாடா என்றிருந்தது.

இப்போது ஏன் இதெல்லாம் சொல்கிறேன் எனக் குழம்புவதைவிட பத்துப் பங்கு அதிகக் குழப்பங்களைக் கொரோனா ஏற்படுத்தியிருந்தது. கொரோனா நோய்தொற்று என்ற புரிதலெல்லாம் இல்லை. தொற்றுநோய் என்றே அஞ்சிக்கொண்டு மூளையைக் குழப்பும் செய்திகள்-பகிர்வுகள் நடந்துகொண்டிருந்தன. எல்லாமே அந்த அறைக்குள் போகும்வரை. எதுவும் ஒலிபரப்பைப் பாதிக்கக்கூடாதென உறுதிஎடுத்தாலும், சிலதடங்கல் வந்திருந்தது. இனி, இந்த அறைக்கு வருவோமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். உண்மைதான். ஆறுமாதம் ஆகிவிட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் ஒலிபரப்பு இன்னும் தொடங்கியதாயில்லை.

05.30 – 06.15 வரையிலான நிகழ்ச்சியை அடுக்கி வைக்க வேண்டும். 05.50 வரை உரிய அனைத்தும் இடம்பெற்றுவிட்டது. 05.50 க்கு வாசிக்க வேண்டிய ஆங்கில உரையின் தமிழாக்கம் தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய A Regional Response To COVID-19 Challenge ஆங்கில உரையின் தமிழாக்கம் கையில் இருந்தது. இதற்கடுத்து புதன்கிழமைக்கு என்றே ஒலிபரப்பாகும் ‘சந்திப்பில் இன்று’ நிகழ்வு 05.55 அளவில் தொடங்கும். அதில் அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களை கவிஞர் இரவி சுப்பிரமணியன் அவர்கள் கண்டிருந்த பேட்டியின் நிறைவுப் பகுதி இடம்பெற்றது. 06.06க்குப் பிறகு இரண்டு பாடல்களே இடம்பெற நேரமிருந்தது.

முதல்நாளே நேய(ர்!) விருப்பமாக, ஏஆர் ரகுமான் பாடல் கேட்டிருந்ததால் “புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது”  பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாகிவிட்டது.  அடுத்து, ஒரு பாடல் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்று பெருங்குழப்பம் நிரம்பியிருந்தது. இந்தக் குழப்பமான சூழலில் உற்சாகமான ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தேடினேன் தேடினேன் தேடினேன். இளையராஜா பாடல்களில் உற்சாகமான, காதலான, வானொலியில் ஒலிபரப்பத்தக்க, காலையில் கேட்கத்தக்க, கணினியில் இருப்பில் உள்ள பாடல்களில் தேடித் தெளிந்து ஒரு பாடல் எடுத்தேன். “ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி… பொன்மான் விழி தேடி…”.  புது வெள்ளை மழைக்கும் ஆகாய கங்கைக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றியது. ஒலிபரப்புக்குத் தயாரானேன்.

வானொலியில் ஒலிபரப்பு செய்யும் அனைத்துக்கும் சான்று/எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும். Que sheet என்று சொல்வார்கள். எக்காலத்திலோ பாடல் வெளியாகிருந்தாலும் இன்றைக்கு ஒலிபரப்பினாலும், பாடல் வெளியிட்ட நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட சதவீதத் தொகை ராயல்டியாகச் செல்லும்/செல்லவேண்டும் என்பது  வழக்கு. அப்படிக் குறிக்கும்போது வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் தவிர, பாடல் குறித்த இன்னபிற தகவல்களையும் அளிக்க வேண்டும்.

எந்தப் படம், யாருடைய குரல், யாருடைய இசை, என்பதுதான் அவை. இதோடு அது யாருடைய வரிகள் என்பதும் அத்தியாவசியம். பெரும்பாலும், இசைத் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் பெயர் விடுபட்டுப் போய்விடும். அறிந்தவரை, வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்தான், பாடாலாசிரியர் பெயர் தவறாமல் இடம்பெறும். வரிகள் இல்லையென்றால், அப்பாடல் வெறும் இசைக்கோவையாகத்தான் இருக்கும். வரிகளை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிடுதல் அடிப்படையானது. இணையத்தில் தேடினாலும், பாடலாசிரியரின் பெயரை பெரும்பாலான இணையதளங்கள் விட்டுவிடுகின்றன. தற்போது வெளியாகும் புதுப்படப் பாடல்களில் lyrics : என்று பாடலாசிரியர் பெயர் இடம்பெற்றாலும், பழைய பாடல்களில் இத்தெளிவு இருப்பதேயில்லை.

சரி விசயம் இதுதான். அன்றைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு பாடல்களும் வைரமுத்து எழுதியது என்று எண்ணியிருந்தேன். ஆனால், ஆகாய கங்கை பாடல் எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். பாடலாசிரியர் பெயர் அறிமுகமே இல்லை. அத்தனைமுறை இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட இவர் பெயரைச் சொன்னதாயில்லை. எம்.ஜி. வல்லபன் குறித்த நிகழ்வு முடிந்து தேடுவோம் என்று முடிதாயிற்று.

நோய்த்தொற்று சூழ் சூழலில் பாடல் ஒலிபரப்பும்முன் சொல்லும் பாடல் விளக்க/அறிமுகத்தில் கொஞ்சம் உற்சாகமான வரிகளை அள்ளித்தெளித்து எழுதிமுடிக்கையில் 05.30 வந்துவிட்டது.

·         வந்தேமாதரம், திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் தொடங்கி 

·         மங்கல இசை

·         தமிழ்ச்செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பு

·         நிகழ்ச்சிக் குறிப்புகள்

·         பக்தி இசை

·         குறளமுதம்

·         ஆய்வுரை

·         சந்திப்பில் இன்று முடித்து

பாடலுக்கு வந்தாயிற்று. பாடலை அறிமுகம் செய்து “ஆகாய கங்கை” ஒலிபரப்பாகையில் முழுதும் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருந்தன. ஆகாய – இந்த எழுத்துகளில் ஆ-3 அசையும் கா-2 அசையும் கொடுத்து பாடியிருப்பார் காந்தக்குரலோன் மலேசியா வாசுதேவன். எளிய சொற்சேர்க்கை கொண்ட அற்புதமான வரிகள், ஹம்மிங் சேர்த்து இளையராஜா அசத்தி இருப்பார். “பாடுதே மங்களம் – நாடுதே சங்கமம்”, “சீதா புகழ் ராமன்” சொற்களைச் சுருக்கி பொருண்மையைப் பெருக்கியிருந்தார் எம்.ஜி. வல்லபன்.

அடுத்த பாடல், நேய(ர்!) விருப்பமான புதுவெள்ளை மழை பாடல் சொல்லவே வேண்டாம். தற்காலத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயமான பாட்டு. முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த நாளில்,  நான்கைந்து வரிகள் அள்ளித்தெளித்து அந்தப் பாட்டை ஒலிபரப்பினேன். அதுதான் கடைசியாக ஒலிபரப்பிய பாட்டு. நிறைவான பாட்டு. அன்றைய ஒலிபரப்பை 06.15க்கு நிறைவு செய்ததோடு, வெளியே வந்து தமிழகத்திற்கு விமானச்சீட்டு பதிவு செய்தாயிற்று. ஆறுமாதம் ஓடியும் விட்டது.

*

இளையராஜாவோடு பல பாடல்கள் உருவாக்கியிருக்கும் எம்.ஜி.வல்லபன்,  “மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”, “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” முதலான வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். கேரள மாநிலத்தின் திருச்சூரில் பிறந்த எம்.ஜி. வல்லபன் பின்னாளில் தமிழ்த்திரையுலகில் காலடி வைக்கிறார். தமிழ் இதழியல் பயின்ற அவர், ஃபிலிமாலாயா இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்றறிய முடிகிறது. வெள்ளித்திரையில் பாடலாசிரியராக மட்டுமின்றி, கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். தைப்பொங்கல் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுபோல் எத்தனையோ கலைஞர்கள் மகத்தான பங்களிப்பு செய்திருந்தும், அவர்களது படைப்புகள் வெற்றியடைந்திருந்தும் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரை அடையாளப்படுத்தாமல் போவது வருதத்திற்குரியதே. பண்பலை ஒலிபரப்பிலும், இசைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

- தக | 18.09.2020

திங்கள், 4 மே, 2020

கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள் - இணையவழிப் பயிலரங்கு

கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள்.
கொரோனா பரவலால் வலசை சென்றிருந்த பறவைகள் வீடுதிரும்பச் சொல்லி கூடுகள் செய்தியனுப்பின. உரிய வாய்ப்பினால் ஊரடங்குக்கு முன்னமே கூடடைந்த பறவை நான். கொரோனா ஊரடங்கில் வீடடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்றே! என்று வருந்திக் கொண்டிருந்த நேரம். ஒரு பக்கம் ஆய்வேடு எழுத வேண்டியிருந்தது. மற்றொரு பக்கம் அதற்குரிய அடிப்படை நூல்கள் கைவசம் இல்லாமல் தூக்கமின்றி தூக்கத்தை நழுவி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இதற்கிடையே கொரோனாவின் தில்லி அரசியலால் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அழைத்துச் சென்றதுமருத்துவமனை வாசம், கொரோனா நோயாளிகள் அறை, மாத்திரை மருந்து எனக் கடினப்பட்டு கடத்திய 28 மணிநேர முடிவில் எதிர்மறை என முடிவு வந்ததால் மீண்டு(ம்வீடடைய முடிந்தது..
ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் எடுத்த முடிவு செயலாக்கம் பெற்றது. பன்மொழிப் படங்களும் சமூகவலைதளங்களும் தூசுதட்டாமல் இருந்த நூல்களும் நாட்களை பொருண்மையுள்ளதாக்கின. மாதத்தின் நிறைவு வார நாளொன்றில் சமூகவலைதளத்தில் நகர்வலம் வந்துகொண்டிருக்கையில், பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் முகநூல் பதிவு கண்ணில் பட்டது.
கணினித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள். பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்., தமிழ் அநிதம்(அமெரிக்கா), உலகத் தமிழ் மென்பொருள் குடும்பம் (உலக மென் கும்) இணைந்து நடத்தும் கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள் குறித்த ஏழுநாள் இணையவழிப் பயிலரங்கம் அது. பார்த்தவுடன், பரபரத்த மூளையின் தூண்டல் படிவத்தை நிரப்பச் செய்துவிட்டது. ஆனால், அது பேராசிரியர்களுக்கான பயிலரங்கு. குணசீலன் ஐயாவுக்கு தனிக்கணக்கில் விவரம் தெரிவித்ததில் பரிசீலனை செய்கிறோம் என்றிருந்தார்.

ஏப்ரல் 29ஆம் நாள் நிகழ்ந்த பயிலரங்கு நிகழ்வைப் பற்றிய தகவல்களை சமூகவலை தளங்களில் கண்ணுற்றுதும் விருப்பம்(Like) இட்டு கடப்பதைத் தவிர வேறேதும் தோன்றவில்லை. கதிரவனுறங்கத் தொடங்கும் மாலையில் திறந்த மின்னஞ்சலில் வகுப்பிற்கான அழைப்பு வந்திருந்தது. அதுதான் முதல் முறை,கூகுள் வகுப்பறையில் பங்கெடுப்பது; பயன்படுத்துவது; பயனடைவது எல்லாவற்றுக்கும். வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார்கள், Scratch செயலியில் 30 நொடிகளுக்கு அனிமேசன் காட்சிகளை உருவாக்க வேண்டும். நவீன கற்பித்தல் கருவிகள் எனும் தலைப்பில் இராஜபாளையத்தைச் சேர்ந்த நிரலாளர் செந்தில் முருகன் அன்றைய வகுப்பை எடுத்திருந்தார்.      
ஏப்ரல் 30ஆம் நாள் காலை 09.30க்கு வகுப்பு தொடங்கியது. இணையவழி கற்பித்தலில் முதன்மை & முதன்மைப் பாடம் உருவாக்கும் முறை குறித்து சிவகாசி, தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் பா. பொன்னி வகுப்பு நடத்தினார். பவர் பாய்ண்ட் வழங்குதல்தமிழ் பயிற்றல் குறித்ததாக அமைந்தது வகுப்பு. சில விடயங்கள் புதியதாக இருந்தன. உலகமே கல்வியில் எங்கோ சென்று கொண்டிருக்கபவர் பாயிண்ட் வழங்கல் இந்தியச் சூழலில் பெரும் வெற்றியாகக் கருதிப்படுகிறது. பவர் பாயிண்ட் வழங்குவதை அறிவின் வெளிப்பாடாகக் கருதும் போக்கு அதனை வழங்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலேதான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பவர் பாயிண்ட் உருவாக்கினாலும், அதனைக் காட்சிப்படுத்த உகந்த வகுப்பறைகள் இருப்பதில்லை. அதற்குரிய உதவியாளர்கள், பராமரிப்புச் செலவு போன்றவற்றை கல்வி நிறுவனங்கள் சரிவர செய்வதில்லை. ஆதலின், மின்கோப்பாக அவை பகிரப்படுவதே இன்றைய எதார்த்தமாக உள்ளது குறித்தும் விவாதங்கள் நிகழ்ந்தன.

மே 1ஆம் நாள் இணையப் பாதுகாப்பு தலைப்பு. உரையாளர் வழக்கறிஞர் சரவணன். இணையத்திருட்டுகள் நடக்கும் முறைமைகள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படைச் சட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலான, இணையப் பாதுகாப்பு குறித்து விளக்க <ஒருமணிநேரம் போதாதுதான். அடுத்த அமர்வாக தமிழ் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து வழக்கறிஞர் சரவணராஜ் குறிப்பிட்டிருந்தார். அத்தகவல் பொதுவாகத் தான் இருந்தது. இது படித்தால் இந்த வேலைவாய்ப்பு என்ற வரையறைத் தெளிவு இல்லை. வளரும் மாணவர்களிடம் அதுதான் மொழியை பட்டமாகப் படிப்பதில் சிக்கலாக கருதப்படுகிறது. இன்றைய இணைய உலகில் கூடுதல் திறன் அத்தியாவசியமாகிறது. மொழி படிப்பவர்களுக்கும் இது முதன்மையானது. கூடுதல் மொழி அறிதல், இலக்கணம் தெளிதல், மொழிபெயர்ப்புத் திறன், கணினி அறிவு, உலக அறிவு போன்றவை தமிழ் படிப்பவர்கள் வேலை வாய்ப்பிற்காக வளர்த்துக்கொள்ள வேண்டியவை.

மே 2ஆம் நாள் தரவு அறிவியல் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நிரலாளர் டேவிட் இராஜாமணி பேசினார். பல தகவல்கள் வெளிப்பட்டன. நிறைய செய்திகள் குறிப்பேட்டை நிரப்பின. திறந்த வெளி மென்பொருட்கள், நுகர்வு மென்பொருட்கள், தொழில்நுட்ப வீச்சு வளர்ச்சி குறித்து தெளிந்த பார்வை வழங்கினார். உரையினிடையே Focus, HER, Snowden படங்களைக் குறிப்பிட்டிருந்தார், இனிதான் பார்க்க வேண்டும்.

மே 3ஆம் நாள் பிறிதொரு பணியினால் காலை 09.30க்கு வகுப்பிற்கு வரத் தாமதமாகிவிட்டது. இணையமும் இலக்கணமும் & மொழிபெயர்ப்புக் கருவிகள் குறித்து அண்ணாமலை பல்கலை. மேனாள் மொழியியல் பேராசிரியர் காமாட்சி வகுப்பெடுக்க இருந்தார். சிலநிமிடங்கள் காத்திருந்து, பலமுறை முயற்சித்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அழைப்பை யாரும் ஏற்காததால் வெளியேறநேர்ந்தது.. காலத்தாழ்ச்சியில் வரும் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே ஆசிரியர் நிற்கவைப்பதைப் போல இருந்தது. ஆனால், அவ்வாறு நோக்கம் ஏதுமில்லை. சரியான நேரத்தில் வகுப்பைத் தொடங்கியதால் சி(ப)லர் வெளியே காத்திருந்தனர் என்பதை சில மணிநேரங்களில் வலையொளிப் பக்கத்தில் பகிரப்பட்ட வகுப்பின் திரைப்பதிவு வழி அறியமுடிந்தது.

மே 4ஆம் நாள் முனைவர். இரா. குணசீலன் மின்னூல் உருவாக்கம் குறித்தும், மின் உள்ளடக்க உருவாக்க வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். அடிப்படை தெரிந்தவை என்றாலும், வாழ்வியல் சார் விருப்ப நெறிகளைக் கற்றுக்கொடுத்தது. ஒன்றை அணுகுவது குறித்த பார்வையை தெளிவுபடுத்தியது. ஆட் சென்ஸ் குறித்த சில ஐயங்கள் தெளிவடைந்தன. எழுதியதை கொண்டு சேர்ப்பதன் முதன்மையை அறியமுடிந்தது. தமிழில் இணையத்திரட்டிகள் குறித்து அறிமுகம் செய்தார். அண்மையில் இயக்கத்திற்கு வந்த www.tamilcharam.com அதில் புதுமையுடன் இருந்தது.
மே 5ஆம் நாள். பயிலரங்கின் நிறைவு நாள். பயனுள்ள கூகுள் வகுப்பறை & நுண் கற்றல் குறித்து, தமிழ் அநிதத்தின் தலைவர் சுகந்தி பேச இருக்கிறார். அவ்வகுப்பும் பயன்தரும்.
மொழி கற்றல் கற்பித்தல் குறித்த தெளிவுக்கு இப்பயிலரங்கம் பயன்படும் என்றெண்ணி இணைந்ததில் அதைத்தாண்டிய பல திறப்புகள் கிட்டின. பயிற்சியாளர் ஒவ்வொருவரிடமிருந்து தலைப்புசார் செய்திகளுடன் பல்துறை செய்திகளை அறியமுடிந்தது. இணையவழியில் இது தான் முதன்முறை பயிலரங்கில் பங்கேற்பது. முனைவர் பட்டம் தெளிந்த தலைப்பில் மேற்கொள்ள வேண்டுமென்பதை மேலுமொருமுறை தெளிவுபடுத்தியது.
அன்றாடம் வீட்டுப்பாடம் வழங்கினார்கள். பள்ளிக்கூட வழக்கத்தில் இன்னும் வீட்டுப்பாடம் ஏதும் நிறைவுசெய்யவில்லை. முடித்தனுப்ப வேண்டும். அப்புறம் ஒரு குறிப்பு, இந்தப் பதிவு ஆறாம் நாள் வகுப்பிற்கான வீட்டுப்பாடம் தான்.

தக | 04.05.2020 | திருவாரூர்

திங்கள், 11 டிசம்பர், 2017

மீன் உண்ணா மீனவ நண்பன் !

நேற்றைய முன் தினம் காரைக்கால் பண்பலை 100.03 இல் சூரியன் தின்று மீதமிருந்த பிற்பகலில் மீனவ நண்பனின் நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


  • எப்படி மீன் பிடிப்பார்கள் ?
  • என்னென்ன கருவிகள் கொண்டு செல்வார்கள் ?
  • மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன ?
  • மீன்பிடிப்பில் கையாளும் தொழில்நுட்பம் என்ன ?
  • மீன்களை எப்படி சந்தைப்படுத்துவது ?
  • அதன் பொருளாதார மீட்டுருவாக்கம் எப்படி ?
  • திமிங்கலம் கிடைக்குமா ?
  • அரிய வகை உயிரினங்களை என்ன செய்வீர்கள் ?


என மீனவ நண்பனின் அன்றாடப் பணிகளை வானொலி நிலையத்தார் கேட்க, ஒவ்வொன்றையும் கண் முன் விரியும் கடல்பரப்பில் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தான் அந்த மீனவ நண்பன்.

கேட்கப்பட்ட கேள்விகளினூடே ஒரு கேள்வி சற்றே நிதானித்தது..

நீங்கள் விரும்பி உண்ணும் மீன்வகை எது என வினா எழுப்பினார் நேர்காணல் செய்தவர்.

“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ, எங்க அப்பா, அம்மா எனக்கு சோறு போட்டாங்க, என்னுடைய சாமிங்க அவங்க.

நான் வளர்ந்து தொழிலுக்கு வந்ததுக்கு அப்புறம், இந்த மீனு தான் எனக்கு சோறு போடுது, என்னுடைய சாமிங்க அது”.

என்று பதிலளித்து அடுத்த கேள்விக்கு ஆயத்தமானான் செய்யும் தொழிலை தெய்வம்  என்றெண்ணிய அம்மீனவ நண்பன்.

இதைப் பதிவேற்ற இணையம் திறக்கையிலே,  கடலில் மேற்பரப்பில் படகின்றி மிதந்து கொண்டிருந்தான் மீனவ நண்பன் 😭😓😓😓


- த.க.தமிழ்பாரதன்
11.12.2017