05.11.2022
அயலகம்வாழ் தமிழ்க்குழந்தை மேடையில் பேசுவதற்காக எழுதி அளித்தது
செம்மொழியாம் எம் தமிழ்மொழி
கலையென்ற கடலுக்கு
கரைகண்ட புணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு
நிகரற்ற துணையாம்
அலைபட்ட மனத்திற்கு
அமைதிக்கு வழியாம்
மலையுச்சி ஒளியன்ன
மறைவற்ற மொழியாம்
செம்மொழியாம் எம் தமிழ்மொழியை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.
A for apple
B for ball
C for cat
D for donkey
என எழுத்துகளுக்கெல்லாம் பொருள்களை உதாராணமாகச் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டத்தில்
அ அறம்செய விரும்பு
ஆ ஆறுவது சினம்
இ இயல்வது கரவேல்
ஈ ஈவது விலக்கேல்
என எழுத்துகளுக்கெல்லாம் குணங்களை உதாரணமாகச் சொன்னமொழி தமிழ்மொழி.
என்ன இல்லை தமிழில், எதுவும் முடியும் தமிழால் “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்றார் நம் தேவநேயப் பாவாணர்.
4000 திவ்ய பிரபந்தங்கள்
1330 குறட்பாக்கள்
133 அதிகாரங்கள்
96 சிற்றிலக்கியங்கள்
64 ஆயகலைகள்
63 நாயன்மார்கள்
பதினெண் மேல்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பன்னிரு திருமுறைகள்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
ஏழு அகத்திணைகள்
ஆறு பொழுதுகள்
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
நான்குதிணைகள்
மூன்றுவேந்தர்கள்
இரட்டைக் காப்பியங்கள்
ஒற்றைக்கடவுள்
ஒருவனேதேவன்
எனப் பண்பட்டுவந்த மொழி செம்மொழியாம் நம் தமிழ்மொழி. இலக்கியங்கள் செறிந்த மொழி. அதற்கான இலக்கணங்கள் கொண்டமொழி தமிழ்மொழி. தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட நம் தமிழ்மொழி காலம்தோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்துள்ளது. ஓலைச்சுவடியிலும் தமிழ் இருந்துள்ளது. காகிதத்திலும் தமிழ் வாழ்ந்துள்ளது, தற்போது கணினியிலும் தமிழ் வளர்ந்துவருகிறது. அதனால்தானே நம் தமிழ்த்தாயை ‘உன் சீரிளமைத் திறன்வியந்து செயல்மறந்து’ வாழ்த்துகிறோம்.
தமிழால் என்ன முடியும்? சீக்கிரமே அது வழக்கொழிந்துவிடும் என்று பலர் பகல்கனவு காண்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கவே நாமெல்லாம் கத்தார் வரை வந்துள்ளோம். தமிழ்த்தாயைக் காப்பாற்ற எங்களைப்போல் ஆயிரமாயிரம் பிள்ளைகள் காலம்தோறும் தோன்றிக்கொண்டே இருப்பர். சிறுபிள்ளைதானே என்று எங்களை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒன்றுதான்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்