நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 4 மார்ச், 2023

காவு வாங்கும் சாலைகள் - காவு கொடுக்கும் அரசாங்கம்

#காவு_வாங்கும்_சாலைகள் #காவு_கொடுக்கும்_அரசாங்கம் 

திரு ஸ்டாலின் ஜேக்கப் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தத்திற்குரியது. ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து வாடுவோரின் உடனிற்போம். 

அவரது மறைவையொட்டிய இரங்கற் பதிவுகள் முகநூல் முழுதும் நீண்டிருக்கின்றன. நல்ல வாழ்க்கை வாழ்ந்து நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார். 

இப்படிப்பட்ட இளவயது மனிதரின் இறப்பின் பின்னணி குறித்து முதல் தகவல் அறிக்கை வந்ததும் தெரியவரும் -  எங்கு தவறு நிகழ்ந்தது, விபத்திற்குக் காரணம் எது என்று. சாலைவிபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முற்போக்காளர்களால் அவருக்கென எழுதப்பட்ட இரங்கற்பதிவுகள் சில அபத்தமாகவும் மரணத்தை 'நார்மலைஸ்' செய்யும் விதத்திலும் அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

"அப்படி என்னய்யா அவசரம்?"
அவர் என்ன வேண்டுமென்றேவா இறந்தார். 

"வாழ்க்கை நிரந்தரமற்றது" யார் வேணும்னாலும் எப்ப வேணாலும் சாவலாம். அது உன்னிடமோ என்னிடமோ இல்லை. எதிரில் வருபவன் முட்டாள் தனமாக வண்டியேற்றி நம்மைக் கொன்றாலும் இதே வசனத்தைப் பேசி இரங்கற்பதிவு போட்டுட்டா வேலை முடிஞ்சிடுச்சு 😤 அதானே

"கலைஞரிடமே சென்றுவிட்டான்" இப்படியான கூற்றுகள் வழி மரணத்தைப் புனிதப்படுத்தி ஆசுவாசம் செய்துகொள்வது. சராசரிக் குடும்பங்களில் வழக்கமாகப் பாட்டிமார்கள் தான் இத்தகைய வேலையைச் செய்வர்.

இதெல்லாம் ஒரு விபத்தின் வீரியத்தை உணர முடியாமல் அதை ஏற்றுக்கொண்டுப் பழகிய மனதின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். ஆம்பள-ன்னா அப்படித்தான்  எனும் ஆணாதிக்கச் சிந்தனை போல, சாலைன்னா முன்ன பின்னதான் இருக்கும் - விபத்து நடக்கும் - நாமதான் கவனமா இருக்கணும் என்று பழக்கப்படுத்திவிட்டார்கள். 

கை கால் முறிவு - இயல்பு வாழ்க்கையையே புரட்டிவிடும். மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். விபத்து குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்  எல்லாநாளும் இடம்பெற்றிடுகிறது. இது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல; அவமானத்திற்குரியது.

சென்னையின் முதன்மைச் சாலைகள், புறவழிச்சாலைகள் தேவலாம். ஆனால், உள்பக்கச் சாலைகளின் தரம் கேள்விக்குறியே. வடபழனிக்கு உள்பக்கம் மிக மிக மோசமான சாலைகள்.  மாநிலத்தின் எத்தனை ஊர்களில் இதே நிலை எனத் தெரியவில்லை. மோசமான சாலைகளால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன.

எனக்குத் தெரிந்து/த திருவாரூரின் பெரும்பாலான சாலைகள்   மோசமானவை. கடந்த சனவரி மாதத்தில் புழுதிக்காடாக இருந்தது திருவாரூர். திருவாரூரில் கை உடைந்து கால் உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் ஏராளம். சாலை விபத்துகளில் மரணித்த நபர்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகம்.

 திருவாரூரைச் சேர்ந்த செல்வாக்குமிக்க முக்கியமான ஒருவரிடம், ஏன் இந்தச் சாலை இப்படி இருக்கிறது. நல்ல சாலை போட்டால் என்ன? நீங்க சொல்லக்கூடாதா என்று கேட்டதற்கு, "நீங்க வேற தம்பி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரே அவரோட அலுவலகத்துக்கு இந்தச் சாலைல தான் வர்றார். அவருக்குத் தெரியாதா? நா வேற சொல்லணுமா" என்றார்.

அரசாங்கத்தினர், அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வளவு மந்தமாக இயங்குவதும் இதான் தலைவிதி என்று மக்கள் மூக்கைப் பொத்திக் கடந்து செல்வது நார்மலைஸ் ஆக்கப்பட்டுவிட்டது.

சாலைகள் காவு வாங்குகின்றன. சாலை வரி செலுத்தியும் தரமான சாலை அமைக்கமால் காலம்தாழ்த்தும் அரசாங்கத்தால் மக்கள் சாகடிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நடத்தும் மது பானக் கடைகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களால் எதிரில் வருபவர்கள் சாகடிக்கப்படுகின்றனர். முறையான ஓட்டுநர் பயிற்சி அளிக்காமல், உரிய சாலை விதிகளைப் பயிற்றுவிக்காமல்,  தற்காலத்திற்கேற்ப நவீன முறையில் Test ஏதும் வைக்காமல் அரசாங்கம் வழங்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர்களால்  மக்கள் சாகடிக்கப்படுகின்றனர்.

இதை நீட்டித்துக் கொண்டே சென்றால், அந்நியன் படத்தில் அந்தக் குழந்தை  இறப்புக்குக் காரணமாக அத்தனை பேரையும் குற்றஞ்சாட்டியதுபோல் நீளும். உண்மையில் அத்தனை பேரும் குற்றவாளிகள் தான். உரிய சாலைகளை உடனடியாக அமைத்துத்தர இயலாத அரசாங்கத்தைக் கேள்வி கேட்காமல், எப்போதும் துதிபாடி துதிபாடி நம்மைச் சேர்ந்தவர்கள் இறந்தால்கூட இரங்கற்பதிவு எழுதி கடந்து செல்வதே வழக்கமாகிவிட்டது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் மாமனார், மருமகன் ஒரே நேரத்தில் மோசமான சாலையில் அரசுப் பேருந்து நடத்திய விபத்தில் சாகடிக்கப்பட்டனர். அந்த குடும்பம் இன்னும் மீளவில்லை. அந்தச்சாலையும் நான்காண்டுகளாகியும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதுபோல் எத்தனை குடும்பங்கள் சிதைந்துள்ளன. 

இதுவெல்லாமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணங்களாகாதா?

சாலையில் நிகழும் விபத்துகள் யாருடைய குறை/தவறு எங்கே இருக்கிறது.?

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் இல்லாத நாளே, குடிமக்களைக் காக்கும் நல்ல அரசாங்கத்தின் அடையாள நாளாம். இது கனவாக மட்டுமின்றி நனவாக முதலமைச்சர் ஆவண செய்யவேண்டும்.

தக | 04.03.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக