நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 31 மார்ச், 2023

செம்மொழியாம் எம் தமிழ்மொழி

 05.11.2022

 

அயலகம்வாழ் தமிழ்க்குழந்தை மேடையில் பேசுவதற்காக எழுதி அளித்தது

 

செம்மொழியாம் எம் தமிழ்மொழி

 

 

கலையென்ற கடலுக்கு

            கரைகண்ட புணையாம்

நிலைகொண்ட அறிவுக்கு

            நிகரற்ற துணையாம்

அலைபட்ட மனத்திற்கு

            அமைதிக்கு வழியாம்

மலையுச்சி ஒளியன்ன

            மறைவற்ற மொழியாம்

 

செம்மொழியாம் எம் தமிழ்மொழியை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். 

 

 

A for apple

B for ball

C for cat

D for donkey

 

என எழுத்துகளுக்கெல்லாம் பொருள்களை உதாராணமாகச் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டத்தில் 

 

அ அறம்செய விரும்பு

ஆ ஆறுவது சினம்

இ இயல்வது கரவேல்

ஈ ஈவது விலக்கேல்

 

என எழுத்துகளுக்கெல்லாம் குணங்களை உதாரணமாகச் சொன்னமொழி தமிழ்மொழி. 

 

என்ன இல்லை தமிழில், எதுவும் முடியும் தமிழால் “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்றார் நம் தேவநேயப் பாவாணர்.

 

4000 திவ்ய பிரபந்தங்கள்

1330 குறட்பாக்கள்

133 அதிகாரங்கள்

96 சிற்றிலக்கியங்கள்

64 ஆயகலைகள்

63 நாயன்மார்கள்

பதினெண் மேல்கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பன்னிரு திருமுறைகள்

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

ஏழு அகத்திணைகள்

ஆறு பொழுதுகள்

ஐம்பெருங்காப்பியங்கள்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

நான்குதிணைகள்

மூன்றுவேந்தர்கள்

இரட்டைக் காப்பியங்கள்

ஒற்றைக்கடவுள்

ஒருவனேதேவன்

 எனப் பண்பட்டுவந்த மொழி செம்மொழியாம் நம் தமிழ்மொழி. இலக்கியங்கள் செறிந்த மொழி. அதற்கான இலக்கணங்கள் கொண்டமொழி தமிழ்மொழி. தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட நம் தமிழ்மொழி காலம்தோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்துள்ளது. ஓலைச்சுவடியிலும் தமிழ் இருந்துள்ளது. காகிதத்திலும் தமிழ் வாழ்ந்துள்ளது, தற்போது கணினியிலும் தமிழ் வளர்ந்துவருகிறது. அதனால்தானே நம் தமிழ்த்தாயை ‘உன் சீரிளமைத் திறன்வியந்து செயல்மறந்து’ வாழ்த்துகிறோம்.  

 

தமிழால் என்ன முடியும்? சீக்கிரமே அது வழக்கொழிந்துவிடும் என்று பலர் பகல்கனவு காண்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.

 

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் 

மெத்த வளருது மேற்கே - அந்த 

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

 

சொல்லவும் கூடுவதில்லை - அவை 

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த 

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 

 

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! 

இந்த வசை எனக்கெய்திடலாமோ? 

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் 

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 

 என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கவே நாமெல்லாம் கத்தார் வரை வந்துள்ளோம்.  தமிழ்த்தாயைக் காப்பாற்ற எங்களைப்போல் ஆயிரமாயிரம் பிள்ளைகள் காலம்தோறும் தோன்றிக்கொண்டே இருப்பர். சிறுபிள்ளைதானே என்று எங்களை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒன்றுதான்

 

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கொரு காட்டிலோர் 

பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக