பெரும்பாணன்!
2015
திருவாரூர் தெற்கு வீதியில் இலக்கிய வளர்ச்சிக் கழகக் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் (இனி இங்குத் தமப எனக் கொள்க) சேர்ந்த ஊடகவியல் பேரா. ஆதி ராமானுஜம் பேசிக் கொண்டிருந்தார். நிறைவுற்றதும் அவரது எண்ணைப் பெற்றுக் கொண்டேன்.
பேரா. ஆதி ராமானுஜம் உதவினார். அப்போது துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த Thangappa Sengadir செங்கதிர் அவர்களிடம் அழைத்துச் சென்றார். சிறிதுநேர உரையாடலின் வழி அனுமதி பெற்றோம். பல்கலைக்கழக மகிழுந்திலேயே எல்லாத் துறைகளுக்கும் இடங்களுக்கும் அழைத்துச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் உரையாடவைத்து, இஃது எப்படிப்பட்ட கல்வி நிறுவனம் என்பதை அறியச் செய்தார் பேரா. ஆதி இராமனுஜம்.
எங்களுக்கு நான்கு மாணவர்களது பேட்டி தேவைப்பட்டது. தேடிப்பிடித்து நான்கு பேரிடமும் எடுத்து விட்டோம். ஆனால், எடுத்த பிறகு தமிழ்நாட்டு மாணவி ஒருவர் வேண்டாம் எனது பேட்டியை நீக்கி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனால் மீண்டுமொரு தமிழ்நாட்டு மாணவரைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்டவர்தான் அருண்குமார்.
அதுதான் அவருடனான முதல் சந்திப்பு. அவர் முன்னமே விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்துள்ளார், ஆதலின் உவப்புடன் ஒப்புதல் நல்கினார். இளங்கலை இதழியல் சென்னையில் படித்துவிட்டுத் திருவாரூரில் முதுகலை செவ்வியல் தமிழ் படிக்கிறார்(அதாவது cross major). இந்தப் போக்கே வியப்பளித்தது. அவரிடம் எண் பெற்றுக்கொண்டேன். பேட்டி : https://www.vikatan.com/government-and.../politics/46059
அவர் பேட்டியின் போது, ‘இதை முடிச்சுட்டுத் தில்லியில் மேற்கொண்டு படிக்கப் போவேன்’ என்றார். சொன்ன மாதிரியே முதுகலைக்குப் பிறகு அவர் தில்லி ஜேஎன்யு-வில் ஆய்வு மாணவராக இணைந்தார். ஓஓ! இங்க தமிழ்ப் படித்தால், தில்லிக்குப் போகலாம் என்பது எளிய சூத்திரமாக மனதில் நிலைபெற்றது. (அப்போதெல்லாம், ஜேஎன்யு பற்றி எள்ளளவும் எனக்குத் தெரியாது.)
2016.
என் இளநிலை இயற்பியல் படிப்பு நிறைவடைந்தது. முதுநிலை இயற்பியல் சென்னையில்தான் படிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். அம்மாவின் கட்டாயத்தினால் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அஃதொரு பெருங்கதை. அதை 2017இல் பதிவாக எழுதியிருந்தேன். இணைப்பு : https://tamilbharathan.blogspot.com/2017/06/blog-post.html (அக்காலத்திலேயே இதை வாசித்துவிட்டு நடை நன்றாக இருந்தது என்றாரவர்)
மாணவர் சேர்க்கை நிகழும் நாளுக்கு முன்னதாக அருண்குமாருக்கு அழைத்தேன். கிட்டத்தட்ட 22 நிமிடங்களுக்கு மேல் ஆற்றுப்படுத்தினார். ‘பேராசியரியப் பணியையோ அரசுப் பணியையோ பற்றுக்கோடாகக் கொண்டிராதே, அப்படிப் பணிவாய்ப்பை எதிர்நோக்கி cross major படித்தால் ஒவ்வோர் அடியும் கடினமாக இருக்கும்’ என உள்வாங்கிக் கொண்டேன். அப்போது முகநூலில் இட்ட பதிவில் cross major வேண்டாம் என்றே பலரும் எச்சரித்தனர். ஆனால், அருண்குமார் தேர்ந்த நம்பிக்கையை அளித்தார். அதற்கு சாட்சியாக அவருமே இருந்தார்.
ஒரு வழியாக முதுகலை செவ்வியல் தமிழ் சேர்ந்தேன். சென்னையில் இயற்பியல் படிக்க எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களால் நழுவிப் போயின. மாதங்கள் கடந்தன. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை செவ்வியல் தமிழ் நிறைவு செய்ய ஒரு பருவம் மீதமிருந்தது. ஜேஎன்யு-வில் ஒருங்கிணைந்த முனைவர் பட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன்.
2017 இறுதி என்று நினைவு. மீண்டும் அழைப்பு. அதே அருண்குமார். அதே 22+ நிமிட ஆற்றுப்படுத்தல். நுழைவுத் தேர்வு சென்னை ஐஐடியில் எழுதினேன். முடிவுகள் நேர்மறையாய் வந்தன. நேர்காணல் தில்லியில் நடந்தது.
2018
தில்லி வந்தாயிற்று. ஜேஎன்யுவில் நுழைந்தாயிற்று. அருண்குமார் அறையில்தான் முதல் வாசம். அடுத்தநாள் முனைவர் பட்ட ஆய்வுக்கான நேர்காணல். அந்த இரவில் மீண்டும் அவரது ஆற்றுப்படுத்தம். நேர்காணல் நிறைவுற்றது. தமிழ்நாடு திரும்பியாயிற்று. நான்கு மாதங்களாக முடிவுகளே வெளியிடப்படவில்லை.
2018 சூலை. மதுரையில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் பங்கேற்றிருந்தேன். முடிவுகள் வெளியாகின. சேர்க்கை உறுதியானது. தில்லி வந்தேன். சேர்க்கை முடிந்தது. JNUite ஆனேன்.
அன்றைய ஜேஎன்யுவில் எனக்கு நன்கறிமுகமான நபர் அருண்குமார் தான். (இணையத்திலும்) பரபரப்பாக இருக்கும் அவரது ஓய்வு நேரத்தை அவ்வப்போது இடையூறு செய்திருக்கிறேன். எண்ணற்ற ஐயங்கள், சந்தேகங்கள், பயங்கள் முதுகலை முடித்தவனுக்கு. தில்லியில் பலவற்றை அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் அவர் வாயிலாகத்தான் பலரது அறிமுகமும் கிடைத்தது. உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்களின் இருப்புகளை அறியத்தந்தார். தில்லியில் முதல்முறை திரையரங்குக்குச்(96 படம்) சென்றது அவருடன்தான். தில்லித் திரைப்பட விழாவுக்குச் சென்றதும் அவருடன்தான். சாகித்திய அகாடமிக்கு விருது விழாவுக்குச் சென்றதும் அவருடன்தான்.
அப்போதெல்லாம் அன்றாடம் பூப்பந்து விளையாடுவதுண்டு. பலருடன் கூட்டணி அமைத்த நான், அவருடன் ஓரணி என்றால் அவ்வளவு தான். திடீர் வெற்றிகளும் திடுக்கிடும் தோல்விகளும் இருக்கும். களத்தில் இருவருக்கும் ஒத்த மனப்பாங்கு குறைவு. அதனால் முட்டிக்கொண்டதுண்டு. அவரது விலையுயர்ந்த பேட்மிட்டன் ராக்கெட்டை ஒருநாள் உடைத்துவிட்டேன். இன்றளவும் வாங்கித்தரவில்லை.
பெரியார் பிறந்தநாள், எம்எஸ்எஸ் பாண்டியன் நினைவு உரையரங்குகளை அவரும் நண்பர்களும் இணைந்து Tamil Conscience எனும் பெயரில் ஜேஎன்யு பல்கலை.யில் ஒருங்கிணைத்து வந்தனர். தமிழ்நாட்டிலிருந்தும் பல்வேறு ஆளுமைகள் அவற்றில் உரையாற்றியுள்ளனர். 2018 நவம்பரில் கஜா புயல். Tamil Conscience ஒருங்கிணைத்த நிகழ்வொன்றில் கஜா புயலுக்கு நிவாரணநிதி சேகரிக்க முனைந்தேன். அனுமதி நல்கினர். அவர்கள் நிகழ்வுக்குச் சேர்த்த தொகையிலும் கணிசமான அளவு அளித்தனர்.
தில்லித் தமிழ் மாணவர்கள் படிப்பு வட்டம்(DTSSC) என்ற பெயரில் அவர்கள் விவாதங்கள் நிகழ்த்தி வந்தனர். அவ்வப்போது நிகழும் அதன் கூடுகைகளில் எப்போதாவது தலைகாட்டியதுண்டு. சமூகம்-அரசியல் குறித்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வாசித்துவந்து விரிவாக விவாதிப்பர். இதுபோன்றவற்றைக் கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தாமல் தன்னெழுச்சியாக நடத்துவது சவாலானது. அதை நிகழ்த்திக் காட்டினர்.
ஜேஎன்யு விடுதிகளில் தமிழ் மாணவர்கள் எப்போதேனும் புலால் உணவு சமைப்பர். இருவர் உறையும் அறையில் பத்து+பேர் கூடி உண்பர். அப்போதெல்லாம் என்னைத் தவறாது அழைத்து, புலால் தவிர்த்த உணவை வழங்கியுள்ளனர். அந்நாட்களில் இரவு தூங்க விடிந்துவிடும். அதுவரையில் சீட்டுகட்டு-கதையாடல்-விவாதங்கள் என நீளும். ஓதற்பொருட்டு நிலப்பரப்பு கடந்து தனிமையில் தவித்த தொடக்ககால என் ஜேஎன்யு வாழ்வில் அவையெல்லாம் ஆதுரங்கள்.
அரசுப் பள்ளியில் படித்திருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் அவருக்கு நன்கு வரும். தமிழுணர்வுள்ள தமிழ் மாணவர். 2019 வாக்கில் தஞ்சாவூர் பெரியகோயிலைப் படம்பிடித்து ‘பிரகதீஸ்வரா டெம்பிள்’ என்ற கூகுள் லோகேசனுடன் பதிவேற்றியிருந்தேன் இன்சுடாகிராமில். அதெப்படி வடமொழிப் பெயரை இடலாம் என்று கேட்டார். பிறகு, கூகுள் மேப்சில் அதன் பெயரைத் திருத்தமிட்டுத் தமிழில் பெயர் இடப் பரிந்துரைத்தேன். (ஆனால், கூகுளில் இன்றளவும் ‘Brihadeeswara Temple’ என்றுதான் உள்ளது தனிக்கதை) இப்படிப் வெவ்வேறு வேளைகளில் பல கேள்விகளைக் போகிற போக்கில் எழுப்பியுள்ளார். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கிய பிறகுதான் “அட ஆமால்ல...” என்ற விழிப்பு கிட்டியுள்ளது. பிழையற்ற தமிழில் எழுதுவதோடு சிறந்த editing திறனும் கொண்டவர். (இந்தப் பதிவிலேயும் சிலவற்றை உரிய திருத்தமென்று அவர் சுட்டக்கூடும். பொறுத்துக்கங்க).
எனது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுச் சுருக்கத்தின்போது அரிஸ்டாட்டில் கருத்துகளைத் தமிழாக்கம் செய்து அளிக்க வேண்டியிருந்தது. அவர் ஆங்கிலம்<->தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்தமையால், அவருதவியை நாடினேன். எனக்கு அதுதான் முதல் மொழிபெயர்ப்பு. ஏதுசெய்வதென்றறியாத காலத்தில் அவர் தொடங்கி வைத்த மொழிபெயர்ப்புதான் 2023இல் இத்தாலியின் வெனீசில் வெளியிடப்பெற்ற அரிஸ்டாட்டில் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் நூல்.
இன்னும் ஏராளம்....
எனது அவசியத் தேவைகளான அறிவுரைகள் ஆற்றுப்படுத்தல்கள் பலவும் அவரிடத்திருந்தன. அவருடைய தேவைகள் ஏதும் என்னிடம் இருந்ததில்லை. எனினும், அவர் அணுகுதற்கு எளிய இயல்புடனே பழகிவந்தார்.
இப்படியெல்லாம் இருந்தாலும் தொடர்ந்து நல்லுறவு இருந்ததில்லை. அவ்வப்போது முரணிய காலங்கள் வாய்த்தன. யார் திட்டினாலும் செவிப்பறைக்குள்ளே செல்ல நான் அனுமதித்ததில்லை. அதைத் தாண்டிய ஒரே திட்டு அவருடையதுதான். போலவே, என் எழுத்துக்கோ, செயலுக்கோ எப்போதாவது அவர் வழங்கும் பாராட்டுகளும் மனதை நிறைவு செய்துள்ளன.
மூத்த பிள்ளை என்பதோடு பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் இருந்துள்ளமையால் பொது நிகழ்வுகளில் முடிவெடுத்தலோ செயலாற்றலோ எனக்குச் சிக்கலாக இருந்ததில்லை. எனினும், கொரோனா காலத்தில் தனிவாழ்வில் சில முடிவுகள் எடுக்கத் தடுமாறினேன். சிக்கல்கள் வந்தன. அவரிடம் பேசினால் ஏதும் தெளிவு கிடைக்கும் என்றிருந்தது. பேசவில்லை. விளைவு இடர்கள் மாதக் கணக்கில் நீடித்தன. நீர் வழிப் படூஉம் புணைபோல்’ முடிவெடுக்கலானேன். ஓரளவு சமாளித்தேன்.
கடந்த நான்காண்டுகளாக அருண்குமாருடன் பெரிதளவில் தொடர்பில் இல்லை. இருந்திருந்தால் தமிழ் கடந்து கூடுதலாகப் பலவற்றை அறிந்திருக்க முடியும். தனிவாழ்வில் இன்று நானிருக்கும் நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குச் சென்றிருக்க முடியும் என எப்போதாவது தோன்றும். அந்தளவு நம்பிக்கையை விதைத்தவர். என் வாழ்வில் Trail and Errorஇல் முட்டி மோதி ஒவ்வொன்றாகத் தெளிவு பெறுவதில் பேரனுபவம் ஈவு காலவிரயம் மீதி.
அறிவுரைத்தனமும் ஆசிரியத்தனமும் நட்புத்தனமும் இல்லாத ஒருவரிடம் ஆற்றுப்படுதல் அருண்குமாரிடம் எனக்கு வாய்த்தது. இடைக் காலங்களில் அவரை அண்ணா என்று அழைத்ததில்லை. ஜேஎன்யு பண்பாடு காரணியாக இருக்கலாம். எனினும், அவர் அவ்விளிக்குரியவர்.
எடுக்கும் முடிவுகளைச் சரிப்படுத்த வேண்டிய கட்டாயமுள்ள நடுத்தர வாழ்க்கை எனது. தமிழைப் படிப்பது என்னால் முடியுமா? முடியாதா? அதில் ஆய்வாளாராக வர-நிலைக்க இயலுமா என்பதையெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால், அங்கே ஒருவர் உள்ளார், அவரைக் கைக்காட்டிவிட்டு முன்னே நகரலாம் என்று துணிந்து தொடங்கியதுதான் தமிழில் பட்டப் பயணம்.
ஒருவேளை அருண்குமாரைப் பார்த்திராவிட்டால் இந்நேரம் குடிமைப்பணித் தேர்வில் வென்று அரசு அதிகாரியாகவோ, ஊடக நபராகவோ நானாகியிருக்கக்கூடும். என்செய்வது! இப்போது முன்மண்டை முடிகள் கொட்ட முனைவர் பட்டத்தை நிறைவு செய்ய உள்ளேன்.
என் முனைவர் பட்ட ஆய்வையொட்டி அண்மையில் இத்தாலி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டடைய இயன்றது. (அதன் மொழி லமூலிக் அன்று, தமூலிக் என்று ஆய்வாளர் ஒருவர் வழி எடுத்துக்காட்டினார்). ஓலைச்சுவடி கண்டறிந்ததை அங்கீகரித்து ஜேஎன்யு பல்கலை. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தது. அந்த ஓலைச்சுவடி செய்தி அண்மையில் UPSC பயிற்சி மையங்களின் தளங்களிலெல்லாம் வெளியானது. செய்தி : https://youtu.be/HP59Z175ZgI
இவை போன்றே தமிழைப் பட்டமாகப் படித்ததால் நானடையும் அத்தனை வளர்ச்சியிலும் முதற்படி அருண்குமாருடையது. தமிழைப் பட்டமாகப் பயில ஆற்றுப்படுத்தியதோடு புதிய திறப்புகளையும் அறிமுகப்படுத்திய அருண்குமார் செய்யாறு அவர்களுக்கு... அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் நூல் உரித்து.
அவரை அறிமுகப்படுத்திய பேரா. ஆதி இராமானுஜம் அவர்களுக்கும் அதற்குக் காரணமாய் அமைந்த விகடன் குழும மாணவப் பத்திரிக்கையாளத் திட்டத்திற்கும் இலக்கிய வளர்ச்சிக் கழகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தக | 05.09.2023 | தில்லி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக