நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 30 செப்டம்பர், 2023

மொழிபெயர்ப்பு ஆளர் ! ஆன கதை

மொழிபெயர்ப்பு ஆளர் ! - தமிழ்பாரதன்

ஜேஎன்யுவில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தபோது (2018) மாதம் 5,000 ₹ ரூபாய் உதவித்தொகை. தில்லி வாழ்வை அதனுள் நகர்த்த வேண்டிய சூழல். செலவு போக ஆயிரம் ₹ சேமிப்பில் இருக்கும்.
முதலாண்டு முழுமையும் ஆய்வு நெறிமுறைகளுக்கான வகுப்புகள்-ஒப்படைவுகள் இதிலேயே போயிற்று. இரண்டாமாண்டு வகுப்பறையிலிருந்து விடுபட்டேன். வாய்ப்புகளை எதிர்நோக்கினேன். அப்போதுதான் மொழிபெயர்ப்பைச் சந்தித்தேன்.
புதுதில்லி அகில இந்திய வானொலியில் Casual Translator cum Announcer பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். மொழிபெயர்ப்பாளருக்கான எழுத்துத் தேர்வு முதலில் நடைபெற்றது. அறையில் இருந்த அனைவரும் AIRஇல் முன்அனுபவம் உள்ளவர்கள். பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள். நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் (மொழிபெயர்ப்புப்) பணியில் இருப்பவர்கள். 2 மணிநேர எழுத்துத் தேர்வை ஒரு மணிநேரத்தில் எழுதி முடித்துக் கிளம்பிவிட்டனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நான் பொடியன். அத்தேர்வு என் மொழி வளமைக்கு அறைகூவல் விடுத்தது. அன்றுதான் முதல்முறையாக எதன் துணையின்றியும் மொழிபெயர்த்தேன். முதல் வெற்றி.
அடுத்ததாக, குரல்தேர்வு & நேர்காணலுக்கு அழைத்தனர். பொது அறிவு & குரல்வளத்தால் இரண்டாம் வெற்றி உறுதியானது. பழம்பெருமை வாய்ந்த புதுதில்லி அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் இணைந்தேன். முதல் நாள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டும். அது AIR தளத்தில் வெளியாகும். அடுத்த நாள் அதை அறிவிப்பின் இடையே வாசிக்க வேண்டும். இது கொரோனா காலம் வரை தொடர்ந்தது. பிறகு, கொரோனா காலத்தில் அறிவிப்பாளர் பணி இல்லை. மொழிபெயர்ப்பாளர் பணி மட்டும் தொடர்ந்தது. வெளியுறவு, உள்துறை, பன்னாட்டு அரசியல் தொடர்பான கட்டுரைகள் வாயிலாகத் தமிழில் பல சொற்களின் பயன்பாடுகளை அறிந்துகொண்டேன். சான்றாக : மூலோபாயம், உச்சிமாநாடு. இந்த மொழிபெயர்ப்பு மற்றும் அறிவிப்புப் பயிற்சி நேரத்தோடு நேரடித் தொடர்புடையது. ஆதலின், பிற்காலத்தில் பல செயல்களில் துணிவாற்ற! எனக்கு நன்குதவியது. (ஒரு முறை பணிக்கான மதிப்பூதியம் 1800₹)
கொரோனா காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு சார்ந்து வெவ்வேறு வகைமைகளில் மேற்கொள்ளத் தொடங்கினேன். குறிப்பாக, பாடங்களை மொழிபெயர்த்தல் வேறுபட்ட களமாக இருந்தது. ஐஐடி மெட்ராஸ் ஒருங்கிணைப்பில் NPTEL பாடங்களை மொழியாக்கும் பணியைச் செய்தேன். மென்நுட்பங்கள் பலவற்றை அங்குக் கற்கலானேன். பத்து மணிநேரப் பாடங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். தமிழ் மாணவராக இருப்பதால் 70%தான் எனக்கே சரியெனப்பட்டது. பல ஐயங்கள். எனக்குத் தரப்படுத்தநராக நியமிக்கப்பட்டவரிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கிறது. தேவையற்ற குழப்பங்கள்' வேண்டாம் என்றார். என்னளவில் நிறைவளிக்காத மொழிபெயர்ப்பு அது. (மதிப்பூதியம் ஒரு மணிநேரப் பாட மொழிபெயர்ப்புக்கு 2000 ₹)
NCERTஇல் தமிழுக்கான கருத்தாளராக அழைத்தனர். தமிழைப் பிறமொழி மாணவர்களுக்குப் பழக்கப்படுத்தும் / அறிமுகப்படுத்தும் 108 அடிப்படைச் சொற்றொடர்களை உருவாக்கும் பணி. தமிழ்ச் சொற்றொடர் - ஆங்கில மொழிபெயர்ப்பு – இந்தி மொழிபெயர்ப்பு - ரோமன் ஒலிபெயர்ப்பு – தேவநாகரி ஒலிபெயர்ப்பு எனும் அமைப்பில் இருக்கும். பலரது இடையீடும் இருந்தது. இந்தப் பணி கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முன் தொடங்கி, கொரோனாவுக்குப் பின் நிறைவடைந்தது. அச்சு, இணையம், ஒலி-ஒளி, செய்கை மொழி ஆகிய வடிவங்களில் இது வெளியாகியுள்ளது. (மதிப்பூதியம் ஒரு நாளுக்கு 2500₹)
மொழிபெயர்க்கத் தொடங்கிய ஓராண்டுக்குப் பிறகு தெளிவு பிறக்கத் தொடங்கியது. செய்திக் கட்டுரைகள், பாடங்களைத் தாண்டி புதியன முயன்றேன். அக்காலத்தில் மொழிபெயர்ப்புக்கான தொகையை ஒரு சொல்லுக்கு 1 ₹ ரூபாய் எனும் அளவிற்கு உயர்த்தினேன். கொரோனா காலத்தில் Bynge செயலி தமிழ் இலக்கிய உலகில் சக்க போடு போட்டது. இது Notion Press நிறுவனத்தது. இந்த இரண்டு தளங்களையும்(website&app) தமிழாக்கும் பொறுப்பை என்னை நம்பி M Priyadharshini அவர்கள் வழங்கினார். இதோடு, பயனர் பயன்பாடு, எழுத்தாளருக்கான ஒப்பந்தங்கள் முதலானவற்றையும் செய்தளித்தேன். என்னளவில் செவ்வனே செய்த பணிகளுள் அதுவும் ஒன்று. (மதிப்பூதியம் ஒரு சொல்லுக்கு 1₹)
அன்பு, நட்பு, மரியாதையின் அடிப்படையில் சிலருக்கு மொழிபெயர்ப்பு செய்தளித்துள்ளேன். கடிதம் எழுதுதல், கண்டனம் தெரிவித்தல், சிறு பேச்சைத் தமிழில் தருதல், கட்டுரை வனைதல் எனவாறு இவை நீளும். இந்த B to C (business to customer) மொழிபெயர்ப்பு கடும் அயர்ச்சியைத் தந்தது. தனிமனிதர்களுக்காக மொழிபெயர்ப்பது மலைப்பான செயல். ஒவ்வொருவரிடமும் விளக்கமளித்தும் திருப்திப்படுத்தியும் நிறைவு செய்ய வேண்டியிருந்தது. தொகையைப் பெறுவதிலும் சங்கடங்கள் இருந்தன.
“கூகுள்ல போட்டா வரப்போகுது அதற்கு எதற்கு இவ்வளவு தொகை” என்பார்கள். “அன்பிற்கினிய ஐயா, அதைத் தாங்களே செய்துகொள்ளுங்களேன்” என்று கூறத்தோன்றும். ஒரு சொல்லுக்கு 1 ₹ ரூபாய் அளிப்பது பலருக்கு உவப்பாக இல்லை. எல்லாம் பேசிவிட்டு, தொகையில் குறைப்பார்கள். சிலர் மொழிபெயர்ப்பு செய்தளித்த பின்னும் தரமாட்டார்கள். இரண்டு முறைக்குமேல் நினைவூட்ட விருப்பம் இருந்ததில்லை. தெளிந்து முடிவு எடுத்தனன்: இனி மேல் B to B மட்டுமே.
2022இல் கடும் பணிச்சூழல். முனைவர் பட்ட ஆய்வு , தில்லி பல்கலை.யில் கௌரவ விரிவுரைப்பணி எனக் காலம் கால்களைக் கட்டங்களுக்குள் பழக்கியது. மொழிபெயர்ப்புப் பணிகளை ஏற்பதில்லை என முடிவெடுத்தேன். அப்போது ‘லின்க்டு இன்’ வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டார். தமிழ்நாடு அரசுக்காக மொழிபெயர்ப்பு செய்யும் பணி. மாதிரி கோப்பு அனுப்புங்கள் என்றேன். அது இயல்பான மொழிபெயர்ப்பன்று. கடினமாக இருந்தது. எனக்குக் காலமும் இல்லை. என்னால் இயலாது என்றேன். (வேறு சிலருக்குப் பரிந்துரைத்தேன். தன்மை கருதி அவர்களும் ஏற்கவில்லை.) பிறகு, நான் தொகை உயர்த்திக் கேட்டேன். அப்போது என்னை விட்டுவிடுவார்கள் என்று எண்ணினேன். பரிசீலனைக்குப் பிறகு கேட்ட தொகையை ஏற்றுக்கொண்டனர்.
அரசு நிறுவனங்களில் பணி ஆணை அல்லது ஒப்பந்தமின்றிப் பணியில் ஈடுபடமாட்டேன். முன்அனுபவம் அப்படி. ஆதலால், அவரிடம் கேட்டேன். அந்தத் துறையின் நிர்வாக இயக்குநர் அதாவது IAS அவர்களிடமிருந்து நான்கு பக்க ஒப்பந்தப் பணிஆணை கிடைக்கப்பெற்றேன். ஓராண்டு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டேன். வருவாய் : லட்ச ரூபாய்க்குச் சில ஆயிரங்கள் குறைவு.
எனினும், தொழில்துறைசார் கலைச்சொற்களை-எழுத்து விரிவுகளைப் பட்டியலிட இயன்றது. புதிதாகச் சிலவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. திரு ஹரிஷ்தா என்பவர் பொறுமையோடு செயலடிப்படையில் பலவற்றை விளக்கித் தமிழ்ப்படுத்த உதவினார். எனது மொழிபெயர்ப்பில் உருவான கையேடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் வெளியிட்டிருந்தார்கள். தமிழ் மக்களுக்குப் பெரும்பயன் நல்கும் என்ற நிறைவு அந்தக் கையேடுகள் வாயிலாகக் கிட்டியது. (மதிப்பூதியம் ஒரு சொல்லுக்கு 3.5 ₹. பிறரது பணியை நான் தரப்படுத்துகையில் ஒரு சொல்லுக்கு 1 ₹)
புதுதில்லியில் உள்ள தூதரகங்களில் Interpreterஆக (உரைபெயர்ப்பு) இருந்துள்ளேன். இலங்கைத் தமிழர்கள் சில அயல்நாடுகளில் வேலைக்குச் செல்ல, இங்குள்ள தூதரகங்களில் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருப்பர். ஆங்கிலம் அறியாதவர்களுக்கு உதவுவதற்காக இப்பணி. தூதரக அதிகாரி ஆங்கிலத்தில் கூறுவதைத் இலங்கைத் தமிழருக்குத் தமிழிலும் - இலங்கைத் தமிழர் கூறுவதை ஆங்கிலத்திலும் உரைபெயர்த்து உடனடியாகச் சொல்லவேண்டும். எழுத்துநிலை மொழிபெயர்ப்பைத் தொழில்நுட்பம், கூகுள்-அகராதி உதவியுடன் மேம்படுத்திச் செய்யலாம். இங்கு அப்படியில்லை. கையில் எந்த மின்சாதனப் பொருட்களும் கொண்டுபோக முடியாது. மேலும், வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளின் ஆங்கில ஒலிப்பைப் புரிந்து செயலாற்ற வேண்டும்.
ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் பணி இது. முதல் முறை சென்றபோது அங்குள்ள சூழலை உள்வாங்கிக்கொண்டேன். அடுத்தடுத்த முறை இயல்பாகிப் போனது. வெவ்வேறு நாடுகளின் விசா நடைமுறை அங்குக் கேட்கும் கேள்விகள், எதையெல்லாம் கேட்கின்றனர், எதையெல்லாம் குறிப்பு எடுக்கின்றனர் என்பதைக் கொண்டே நாடுகளின் தன்மையை அறிந்துகொள்ளவியலும். அங்கு நடப்பது எதுவும் வெளியே சொல்லக்கூடாது என்பதால் மேற்கொண்டு இங்கு விவரம் பகிரவில்லை.
மொழித்திறனை மிகுந்து சோதிக்கும் பணி இது. ஆர்வமுடன் தொடர்ந்து பங்களிக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால், எனது interpretation பணிக்கான தொகையை விசாவிற்காக வரும் இலங்கைத் தமிழர்தான் தரவேண்டும் எனத் தெரிந்தபோது தயக்கம் வந்தது. விசா - கேள்வி பதிலூடாக அவர்களது வாழ்க்கைச் சூழலை அறியும்போது அனுதாபம் ஏற்பட்டதுண்டு. பொருளாதார நெருக்கடியினால் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் அவரிடம் நானும் தொகை பெற்றுக்கொள்வது எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வேறு சிலரை அறிமுகம் செய்துவிட்டு, அதிலிருந்து விலகிக்கொண்டேன். (ஒரு முறைக்கான உரைபெயர்ப்பு மதிப்பூதியம் 3,000 ₹ ரூபாய்)
மொழிபெயர்ப்பில் உருவான முதல்நூல், அரிஸ்டாட்டிலின் இயற்பியல். முதல் முயற்சி. பெருநேரத்தை உறிஞ்சியது. தனியே செய்ய ஐயங்கொண்டு துணைக்கு நண்பர் ஜெயபாரதியுடன் நிறைவு செய்தேன். ஆனால் வரிக்கு வரியின்றி கருத்துநிலையில் உருப்பெற்றது. அஃது அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துநிலைத் தமிழாக்கம் எனும் அச்சு நூலாக 2023 சூலை 28 அன்று இத்தாலியின் வெனிசு நகரத்தில் வெளியிடப்பெற்றது. (மதிப்பூதியம் அறிவுத்தேடல், முதல்முயற்சி என்பதால் அயர்ச்சி).
இன்னும் சில நூல்கள் வெளியீட்டுக்கு அணியமாகி வருகின்றன.
‘லின்க்டு இன்’ தளம் வாயிலாக அவ்வப்போது மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் வரும்போது, தேர்ந்தெடுத்துச் செயலாற்றுவதுண்டு. அண்மையில் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முன்பு மொழிபெயர்ப்புக்காக அணுகியவர்கள் இப்போது தரப்படுத்தத்துக்காக அணுகியுள்ளனர். இம்முறை புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகமாகும் என நம்புகிறேன். NonDisclosure Aggrementஇல் ஒப்பமிட்டிருப்பதால் மேற்கொண்டு எதுவும் பகிர இயலாது. (மதிப்பூதியம் ஒரு மணிநேரத்துக்கு 30 அமெரிக்க டாலர்கள்)
முதன்மைக்குரிய சில மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட முடிந்தது. சான்றாக, பேரா. அண்ணாமலை அவர்களுடன் ஆங்கிலத்தில் சிகாகோ பல்கலை. பேரா. நகாசிஸ் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நிகழ்ந்த நேர்காணல் அது. மேலும், சிலவற்றில் தன்னார்வமாகப் பங்களித்தது காலம் தந்த வாய்ப்பு. UNESCO அமைப்பிற்கும் இன்ன சில மருத்துவ நிறுவனங்களுக்கும் கொரோனா காலத்தில் விழிப்புணர்வு அறிவிப்புகள், அறிக்கைகள் செய்தமை, மக்கள் நலனை முன்னிறுத்தி அரசு நிறுவனங்கள் சிலவற்றில் அவசர அவசரமாகக் கேட்கப்படுவனவற்றுக்கு உதவியமை தமிழ்-மக்களுக்கானவை. (மதிப்பூதியம் : மனநிறைவு)
தொடக்கத்தில் எனக்கு மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லை. விபத்தாகத்தான் மொழிபெயர்ப்பைச் சந்தித்தேன். மொழியும் கைகூடியது. மொழிபெயர்ப்பாளர் என அடையாளம் பெற்றிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். மொழிபெயர்ப்பின் வெவ்வேறு களங்களான மேற்சொன்னவற்றில் ஈடுபட்டதை நான் சொல்லவில்லையென்றால் யாருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. தமிழ்ச்சூழலில் மொழிபெயர்ப்பு என்றாலே நூலாக்கம் எனும் பொதுமனநிலையே இருந்து வருகிறது. அடையாளம் தரும் வகையில் எந்த (நூலாக்க) மொழிபெயர்ப்பிலும் ஈடுபடவில்லை. கொரோனா காலத்தில் சில இதழ்களில் நல்ல மதிப்பூதியத்தில் மொழிபெயர்ப்புத் தொடர் எழுதக் கேட்டனர். 300-600 சொற்கள் = 500 ₹ ரூபாய் வரை பேசிப் பார்த்தனர். புத்தகமாக ஆக்கி அளிக்கிறோம் என்றனர். எனினும், அவற்றில் ஈடுபடவில்லை. (புத்தகம்-னு சொன்னா மட்டும் சூனா பனா மயங்கிடுவானா?)
காசே குறி எனல் கூடாது என்று சிலர் சொல்லக் கேட்டுள்ளேன். அவர்களிடம் அருள்கூர்ந்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத் தாருங்கள் என்று கூறிவிடுவதுண்டு. மொழிபெயர்ப்பானது சேவைத்துறையில் இடம்பெறும். அது இலவசமன்று. குறிப்பு : நான் மொழிபெயர்ப்பாளன் அல்லன். மொழிபெயர்ப்பாளனாகவும் இயங்க முடியாது. இப்போது எனது நேரத்தின் மதிப்பு மிகுந்துவிட்டது. ஒரு சொல்லுக்கு 5 ₹ ரூபாய். இதற்குக் குறைந்து பணியாற்றுவதில்லை. இது பணிகளை வடிகட்ட வைத்துள்ள எல்லைக்கோடு.


*
செய்த அனைத்தையும் இங்குக் குறிப்பிடவில்லை. விடுபட்டவை உண்டு. இந்த நான்காண்டு காலத்தில் எனது மொழி வளம் மேம்பட்டுள்ளதை அறிவேன். ஆங்கில அறிவு இன்னும் பன்மடங்கு வேண்டும். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பினும் தரப்படுத்தப் பணிகளே அதிகம் வருகின்றன. தேர்ந்து செயலாற்றுகிறேன். அரசு நிறுவனங்கள் மரியாதையுடன் அழைக்கின்றன. தனியார் நிறுவனங்கள் மரியாதையுடன் நல்ல தொகையும் அளித்து அழைக்கின்றன. மொழிபெயர்ப்பு வாழ்வில் பொடியன் இப்போது சிறுவன் ஆகிவிட்டான். அதாவது இரண்டாம் எட்டு. இன்னும் ஆறு எட்டுகள் உள்ளன. அப்போது மேம்பட்ட நூலாக்கங்களை எதிர்நோக்கலாம்.
இப்போது பொருளாதாரம் போதுமென்ற அளவு கிட்டுகிறது. நல்ல உதவித்தொகையும். ஆய்வு, இலக்கியம், இலக்கணம் எனத் தொடவேண்டியவை மொழிபெயர்ப்பில் ஏராளம் உள்ளன. தக்கன செய்ய ஆவன செய்க காலமே.
உலக மொழிபெயர்ப்பு நாள் வாழ்த்துகள்
தக | புதுதில்லி | 30.09.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக