நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஔவையார் பாரதியார் ஆத்திச்சூடி ஒப்பீடு

தமிழுக்குத் தொண்டு செய்த பாரதிக்குப் பிடித்த செந்தமிழ்ப் புலவர்கள் வள்ளுவர்கம்பன்இளங்கோவடிகள்ஔவையார் ஆவர். இவர்களில் பெண்பாற்புலவராகியஇடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரே அவருக்கு  மிகவும் பிடித்தவர். "தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமாஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமாஎன்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின்மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. 

ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப்பெருஞ்செல்வம் என்று மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். என்னும் பாரதியார் கூற்று அவர் ஔவைமீது கொண்ட பேரன்பைக் காட்டும். (பாரதியார் கட்டுரைகள் பக்-.161).

       பாரதிஔவைமீது வைத்திருந்த மதிப்பே அவரை ஔவையின் ஆத்திசூடியைப் பின்பற்றி புதிய ஆத்திசூடியை எழுதத் தூண்டியது. ஔவையின் ஆத்திடிசூடியைத் தழுவிச் செய்தாலும் அதிலிருந்து தன்னுடையது பாடுபொருளில் மாறுபட்டது என்பதற்காகவே அதற்குப் புதிய ஆத்திசூடி எனப் பெயரிட்டார் பாரதி.

ஔவை- பாரதியார் காலம்:

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை, "கொன்றை வேந்தன்' எனும் ஔவையின் கடவுள் வாழ்த்தை செந்துறை வெள்ளைப்பா (சூத் 63) என எடுத்துக்காட்டுகிறது. தமிழண்ணல். ஔவையார். (பக்-56, 57)

இதனால் ஔவையின் காலம் கி.பி.10 -ஆம் நூற்றாண்டு (பிற்காலச் சோழர் காலம்) எனலாம்.

பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்தார். அப்போது புதிய ஆத்திசூடி எழுதப்பட்டு 1914-ல் அச்சாகி வெளிவந்தாகத் தெரிகிறது. (பன்முகப் பார்வையில் பாரதி. தொகுப்பு மு.சாயபு மரைக்காயர். பக்-367). 

அமைப்பு முறை:

செழுமை நிறை நம் மொழி இலக்கண வளமும் இலக்கியப் பெருக்கமும் உடையது. இவ்வளவு இலக்கியக் குவியல்கள் இருந்தும் சோழர் காலத்தில் இருந்த ஔவையார் ஒருவர் தான் தமிழ்க்கல்வியையும்சிறார்க்கு அகர வரிசையில் கற்பித்தலையும்இலக்காகக் கொண்டு ஆத்திசூடி   நூலைச் செய்துள்ளார்.

ஔவைஆத்திசூடியை உயிர் எழுத்தில் பன்னிரண்டும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் பதினெட்டும் உயிர்மெய்யில் ககர வரிசையில் பன்னிரண்டும் சவ ஆகிய வரிசையில் ஔகாரம் நீக்கிப் பதினொன்றுமாக 109 வரிகளில் பாடியுள்ளார்.

ய ஆகிய மூன்று உயிர்மெய்யும் சில இடங்களில் மட்டுமே மொழிக்கு முதலில் வருவதால் அவற்றை விட்டுவிட்டார்.

ஏனைய உயிர்மெய் மொழிக்கு முதலில் வாரா.

ஔவை பாடிய ஆத்திசூடி பெரும்பாலான பதிப்புகளின் 109 என எண்ணிக்கை இருக்கவும் முனைவர் தமிழண்ணல் 108 எனக் கொள்கிறார். அவர் அங்ஙனம் கொள்வதற்குரிய காரணமும் விளங்கவில்லை. (ஔவையார்பக்- 60)

பாரதியார் செய்த புதிய ஆத்திசூடி எண்ணிக்கையிலும் கருத்துகளிலும் வேறுபடுகிறது.

பாரதி தம் நூலில் உயிர் எழுத்தில் பன்னிரண்டும் உயிர் மெய்யில் கத வரிசையில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டும் "ஞகரத்தில் ஐந்தும் நகரத்தில் பதினொன்றும் "ப'கரத்தில் பத்தும் மகரத்தில் பதினொன்றும் "ய'கரத்தில் மூன்றும் "ர'கரத்தில் எட்டும் "ல'கரத்தில் ஆறும் வகரத்தில் எட்டும் என 110 வரிகளை எழுதியுள்ளார்.

உயிர் ஏறிய மெய்யெழுத்திலும் ஆய்த எழுத்திலும் பாரதி எழுதவில்லை. ஆனால் ஔவை ஒதுக்கிய "ர'கரத்திலும் "ல'கரத்திலும் கூடுதலாகவே எழுதியுள்ளார்.

ஔவை அகரம் ஏறிய பதினெட்டு மெய்யெழுத்தில் ஆத்திசூடி செய்தது அவருக்கே எழுதிய பிறகு பிடிக்கவில்லை போலும்! பின்னர் எழுதிய கொன்றை வேந்தனில் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் அவர் எழுதவில்லை.

ஒற்றுமையும் வேற்றுமையும்

தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த குறுநில அரசுகள் மங்கி சோழப் பேரரசு தோன்றிய காலத்தில் ஔவை வாழ்ந்தார்.

விடுதலை தவறிகெட்டு பாரத நாடு பரங்கியரிடம் பாழ்பட்டு நின்றபோது நாட்டு மக்களுக்கு "நாமிருக்கும் நாடு நமதென்றுஉணர்த்தி விடுதலை வேட்கையை ஊட்ட வந்தவர் பாரதியார்.

ஆகவே இவர்கள் கருத்துகளில் ஒற்றுமையைவிட வேற்றுமைகளே மிகுந்திருப்பது இயற்கை.

கால இடைவெளி இருப்பினும் இருவர் கருத்துகளிலும் காணப்படும் ஒத்த கருத்துகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

முடியரசு காலத்தில் வாழ்ந்த ஔவை,
    
கைவினை கரவேல்
    
பொருள்தனைப் போற்றிவாழ்
    
பூமி திருத்தி உண்'

என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் உழுதுண்டு வாழ்பவரின் உயர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அடிமைக் காலத்தில் வாழ்ந்த பாரதியாரும்

    
கைத்தொழில் போற்று
    
பணத்தினைப் பெருக்கு
    
மேழி போற்று

என ஔவை கூறியதையே வேறுசொற்களில் அறிவுறுத்தி யிருப்பதை நோக்கும்போது சான்றோர்கள் இடம் வேறுபட் டாலும் காலம் வேறுபட்டாலும் ஒத்த கருத்தையே கொண்டிருப்பர் எனும் கருத்தே நினைவுக்கு வருகிறது.

இருவரும் முரண்பட்ட இடங்களும் உண்டு.

"தையல்சொல் கேளல்' என அவ்வையே கூறியுள்ளது நியாயம்தானாஅவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூகத்தில் பெண்ணடிமைத் தனம்  வேரூன்றி இருந்தது. பெண்ணுக்குக் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட காலம் அது. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும்பே தைமைத்தே.எனும் கருத்து கோலோச்சிய காலமாதலால் ஔவை இப்படிச் சொல்ல நேர்ந்தது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளைவடலூர் வள்ளலார் போன்ற பெருமக்கள் பெண்ணுரி மைக்குக் குரல்கொடுத்த பிறகு அவர்கள் வழியில் வந்தவர் பாரதியார். அதனால் தான் தெளிவோடும் துணிவோடும்"தையலை உயர்வுசெய்எனப் பாடினார்.

தமிழர்கள் எப்பொழுதும் போரையும் காதலையும் இருகண் எனப் போற்றியவர்கள்.

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து. (குறள்-776)

என்பது தான் சங்ககால மக்கள் கடைப் பிடித்த போர் நெறி.

அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ் வுலகத் தியற்கை (புறம்-76)

எனும் குரலே அன்று வீரர்கள் எழுப்பிய குரல்.

"
பழந்தமிழ்ப் புலவர்களில் பெரும்பான்மையாஅரசனுக்காகப் போரிடும் படி வீரர்கள் நடுவிலும் அரசனுக்கு இணங்கித் திறை செலுத்தும்படியாக எதிரி மன்னர்களிடத்தும் அரசனைத் தெய்வத்துக்கு இணையாகப் புகழ்ந்து மக்கள் நடுவிலும் பிரசாரம் செய்தவர்கள்என்கிறார் பேராசிரியர் கோ. கேசவன் (மண்ணும் மனித உயிர்களும் பக்-80)

சோழப் பேரரசு காலத்திலும் இரவலர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இக்காலத்தில் ஔவையார் நடைமுறையில் இருந்த கருத்துக்கு மாறான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

    போர்த்தொழில் புரியேல்
    
முனைமுகத்து நில்லேல் என்பன ஔவை போருக்கும் அரசர்க்கும் வீரர்க்கும் எதிராகக் கூறும் கருத்துகள்.

ஏன் இங்ஙனம் கூறினார்போர் மலிந்திருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கைம்பெண்களும் குழந்தைகளும் குடும்பத் தலைவனைப் போரிலே இழந்துபட்ட பாட்டை நேரிலே கண்டுகசிந்து கண்ணீர் மல்கிபோரே வேண்டாஎங்கும் அமைதி நிலவவேண்டும் என நினைத்து இப்படி எழுதினாரா?

நாடுபிடிச் சண்டையில் நேரிடும் ஊர் அழிவுவிளை நிலங்கள் பாழ்படல்வீடுகள் எரிப்புமக்கள் சொத்தை வீரர்கள் கொள்ளையிடல் போன்ற பேரழிவு களைக் கண்டு நைந்துருகிப் போருக்கு எதிராக இப்படி எழுதியிருப்பாரோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

"களிறு எறிதல் காளைக்குக் கடனே-(புறம் 312) என்று பொன்முடியார் பாடிய பாடலுக்கும் "போர்த்தொழில் புரியேல்எனும் ஔவையின் கருத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வேறுபாடு தெரிகிறது.

ஆனால் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாகிய பாரதி தமிழரின் வீரத்தைக் காட்டும் மரபிலே நின்று,

    போர்த்தொழில் பழகு
    
முனையிலே முகத்து நில் என்றே எழுதினார்.

இப்படி எழுதிய பாரதிக்கு வன்முறைகுண்டு எறிதல்ஆயுதந்தாங்கிப் போரிடல் ஆகியவை உடன்பாடன்று. அவரே எழுதுவதைப் பார்ப்போம்.

"
இந்த முறைமை (ருஷ்யாவில் லெனின் தலைமையில் ஏற்பட்ட சோசலிஸ்ட் முறை) போர்கொலைபலாத் காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக் குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து?' (பாரதியார் கட்டுரைகள். பக்- 383)

28-11-1917-
ல் சுதேசமித்திரன் இதழில் இப்படி எழுதிய பாரதி, 1914-ல் வெளியான புதிய ஆத்திசூடியில் "முனைமுகத்து நில்என எழுதியது முரண்பாடு போலத் தோன்றுகிறது. பாரதிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஒருபக்கப் பார்வை ஆகும். அவருக்கே இன்னொரு பக்கமும் உண்டு. அதனையும் பார்ப்போம்.

"
ஆங்கிலேயரிடம் சமாதான வழியில் விடுதலை கேட்கும் பிச்சைக்காரத்தனத்தை விட்டுவிட்டு சரீரப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்நாட்டிலே விருத்தியடையுமாறு பிரயத்தனப் படுவோமாக'. (இந்தியா- 13-10-1906) மேற்கோள். தொ.மு.சி.ரகுநாதன். பாரதி காலமும் கருத்தும் பக்-329) என்றும் எழுதியவர் பாரதி.

அதனால் புதிய ஆத்திசூடியில் பாரதி கூறியவை அவருக்கு உடன்பாடானவையே என உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெரியக்காணலாம்.

ஔவையும் பாரதியும்:

ஔவை தன் நூலில் ஞய எனும் உயிரிமெய் எழுத்துகளை விட்டமை சரியெனப்படவில்லை.
எனினும் வுவூவொவோ எனும் மொழி முதலாகா நான்கெழுத்தையும் உயிரைச் சேர்த்து

    
உத்தமனாய் இரு
    
ஊருடன் கூடிவாழ்
    
ஒன்னாரைத் தேறேல்
    
ஓரம் சொல்லேல் எனக் கூறியிருப்பது அவரது மொழிப்புலமையைக் காட்டுகிறது.

ஔவை ஏற்ற ஆய்த எழுத்தை பாரதி ஒதுக்கிவிட்டார். அவர் ஏற்காத "ஞ'கரத்தையும் "ய'கரத்தையும் பாரதி சேர்த்துக்கொண்டார். ஆனால் பாரதி மொழி முதலாகா ரகரத்திலும் "ல'கரத்திலும் புதுவதாகப் பதினான்கு வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுகூட தமிழ்ச்சொல் இல்லை. இவற்றை அவர் எழுதாமலே இருந்திருக்கலாம்.

ஔவையைப் போலவே பாரதியும் மொழிமுதலாகச் சொற்களோடு உயிர் எழுத்தைச் சேர்த்தும் எழுதியுள்ளார்.

(உ) லுத்தரை இகழ்
(
உ) லோகநூல் கற்றுணர் எனும் தொடர்களே சான்று.

பாரதியின் தனிச்சிறப்பு:

பாரதி வாழ்ந்த காலம் தொழிற்புரட்சி ஏற்பட்டு பல்தொழில்களும் நவீனக் கல்விமுறையும் வளர்ந்த காலம். அதனால் ஔவை சொல்ல நினைக்காத புதுமைக் கருத்துகளையும் பாரதி கூறியுள்ளார்.

"சரித்திரத் தேர்ச்சிகொள்என நாட்டு வரலாறுமக்கள் வரலாறு போன்றவற்றை ஊன்றிக் கற்கவேண்டியதன் நிலையையும்


"ரேகையில் களிகொள்எனப் புவியியல் பாடம் படிக்கவேண்டிய தேவையையும்

"வானநூற் பயிற்சிகொள்என வானியலில் உள்ள அனைத்துக் கூறுகளையும் அறியவேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளமை பாரதியின் தொலைநோக்கைக் காட்டுவன ஆகும்.

ஆத்திசூடிபுதிய ஆத்திசூடி இரண்டையும் தமிழ்க் குழந்தைகளுக்குக் கசடறக் கற்பித்தால் அவர்கள் எதிர்காலத்தில் நாட்டையும் மொழியையும் காக்கும் நல்ல குடிகளாக உருவெடுப்பர் என்பது உறுதி.

த.க.தமிழ்பாரதன்
(தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதல் பருவத் தேர்வின் அகமதிப்பீட்டுத் தேர்விற்காகத் தொகுத்தெழுதப்பட்டது)

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

காற்று வெளியிடைக் கண்ணம்மா...




காற்று வெளியிடை வந்த புதிது எல்லாரும் தூக்கிக் கொண்டாடினார்கள். வரும் முன்னரே பலரும் சிலாகித்திருந்தார்கள். அப்படித்தான் எல்லாரின் கவனக்குவியலுக்கேற்ப படத்தை ஒரு முறை பார்த்திட வேண்டுமென்று ஒரு பின்னரவில் படம் பார்க்கத் தொடங்கினேன். அரை மணி நேரம் உள்ளாகவே ஐந்தாறு முறை கண்ணின் கதவுகளை தாழிட்டுச் சென்றது உறக்கம்.  அதற்குப் பின் காற்று வெளியிடைக்கு இடைவெளி விட்டுவிட்டேன்.

இது புதிதல்ல இரவு 11 மணிக்கு மேல் பார்க்கத் தொடங்கிய நான் அறியாத மலையாள மொழிப் படமான பிரேமம் முதல் 45 நிமிடத்தில் தூக்கத்தின் விலாசத்துக்கு அழையா விருந்தாளியாய் அழைத்துச் சென்றாலும், அதுக்கப்புறம் வந்த சில காட்சிகளின் வீரியத்தால் மழையிடைப் பருகிய தேநீராய் உயிர்ப்பித்துச் சென்றது. அந்த இரவைத் தூக்கமின்றி வைத்தது வேறுகதை. அடுத்த பல மாதங்களுக்குக் தூக்கத்தில் காலிங்பெல் அடித்த காட்சிகள் பிரேமத்தினுடையது.  தூக்கத்தை  வரவைத்த படத்தை மீண்டும் பார்ப்பது கடினம்.

படத்தின் உயர்தர ஒளிப்பேழை கையில் கிடைத்து கிட்டத்தட்ட முப்பது நாட்கள் ஆகிய பின்னரும் அந்தப் படம் பார்க்கப்படாமலே இருந்தது.  ஏனோ, நெருக்கடியாக ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு ஊரில் இருந்திட வீட்டில் இருப்பதே அருகிப் போய்விட்டது. இன்னொரு முக்கியமான விசயம் திறன் பேசியில் பார்ப்பதற்கு வகை இயலாத காரணத்தால் கணினியில் தான் பார்க்க வேண்டிய சூழல் நிலவியது.

இந்நிலையில், காற்று வெளியிடை பற்றிய பேச்சுகள் ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் மீண்டும் காற்று வெளியிடையை சமூகவலைதளங்களில் உயர்த்திப் பிடிக்கத் துவங்கியிருந்தனர் இரு சக்திகள்.  தனா சக்தி & சக்தி நற்பவி. இவர்களிருவர் பதிவிட்டதின் தொடர்ச்சியில் இன்று தான் படம் பார்த்தேன்.
தற்போது படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவிற்கெல்லாம் மனம் இல்லையென்பதால் சுருக்கமாகவே கூறுகிறேன். காற்று வெளியிடை படம் பார்த்தேன்., படம் ஓகே, அலைபாயுதே, ரோஜா அளவிற்கு என்னில் இஃது இல்லையென்றாலும் – சிறப்பு. கால வெள்ளத்தில் கரைந்து போகாத தமிழ் நிலத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத தொலை தூரத்து வேற்று நிலப்பரப்பில் நிகழும் உயர் நவீன காதலை ஸ்கிரீனிங் செய்திருக்கிறார். அசால்ட்டான காதல் வசனங்களும் அருமையான ஒளிப்பதிவும் சிறப்பு.
கூட்டத்தில் பெண்ணை பேச வைத்து அதன் மூலம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் பாணி அலைபாயுதே டெக்னிக். ஆனால், அதே இடத்தில் பேசிய பெண்ணைஅடக்கி ஆளும் தன்மையை கதாநாயகனிடத்தில்  கொடுத்து நோஸ்கட்டிங் பண்ணுபவர் மணிரத்னம் ஜி. எனக்குத் தெரிந்து பேச்சாளர்கள் சில இடங்களில் பேசும் போது,  நிறைய நேரம் இருக்கையில் தாங்கள் ஏற்கெனவே பேசிப் பேசி ஃபில்டரில் தங்கி இருக்கும் காபிதூள் போல வடிந்து வடிந்து இன்னும் சுவை குன்றாதிருக்கும் சில தகவல்களை மீட்டுருவாக்கிக் கூறுவர். அதே தான் இந்தப் படத்திலும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளுக்காக வருடக் கணக்கில் அனுபவிக்கும் துன்பங்களையும்  இயல்புலகிலிருந்து டேக் ஆப் ஆகி அந்நிய உலகில் லேண்டிங் செய்யப்பட்ட விமானம் போல காட்சிப்படுத்தியிருப்பது உலகசினிமாவின் நீட்சி. அது காதலியை தவிக்கவிட்ட தவிப்பிற்காகத் தான் தவிப்பது என்பது நம் சராசரி உளவியலின் வே ஆப் ஆங்கில் படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாகும்.  
முதல் காட்சியில் மிகத்துல்லியமாக அமைந்த இராணுவக் காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. அவதார் படத்திற்கு பின் ஒரு எச்டி படம் இப்படித் தன்னை என்னுள் நிலைநிறுத்தி இருக்கிறது. கடைசியில் அவ்வளவு துல்லியமாக இராணுவக் காட்சிகளையும் வான்வெளிக்காட்சிகளையும் பதிவு செய்துள்ளவர்., ஒரு குற்றவாளியாக பாவிக்கப்படுபவன் செல்லும் வண்டியின் சக்கரத்தில் தோட்டாவைத் தொடுத்து வண்டியின் இதயத்தை நிறுத்தும் சிங்கம் 1 பட டெக்நிக்கை மறந்தது தான் சோகமாக இருக்கிறது.
படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி வசனம், கடைசியில் அந்தக் குழந்தை உன்ன எங்கேயோ ? பார்த்திருக்கேன்னு வருனைப் பார்த்து சொல்றப்போ, உங்கள என தாய்க்காரி லீலா கூறுவது உச்சம். வசனத்தின் வீரியத்திலும் – உளவியலின் தாக்கத்திலும் – இன்றைய தமிழ்ச் சமூக சூழலிலும் சரி இந்த ஒரு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனெனில், தமிழ்ப் பேராசிரியர்களின் பெரும்பிள்ளைகளுக்குத் தற்போது தமிழ் என்பது தன்வாய்க்குள் வர காலம் – சூழல் – பொருளாதாரம் – உலகமயம் என பல டோல்கேட்டுகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.  தில்லி தமிழ்ப் பேராசிரியராகக் காட்சிப்படுத்தப்பட்ட  பாட்டியின் பெரும் பிள்ளை தமிழ் பேசுவதை மருத்துவம் படித்த தாய்க்காரி திருத்துவது தான் உச்சம்.




சரி, படத்தின்  தலைப்பு பற்றிய விவாத்ததிற்கு பச்சை விளக்குக் காட்டுகிறேன்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று

சரி.. இதில் உள்ள காற்று வெளியிடைக்கு என்ன அர்த்தம்?
கவிஞர் மகுடேசுவரன், இப்போது முகநூல் விளக்கத்தை இங்கே அளிக்கிறேன். 
எடுத்த எடுப்பில் இத்தொடருக்குப் பொருள்காண முயன்றால் காற்று வெளி இடுப்புஎன்று கொள்ள நேரும். ஆனால், இது முற்றுத் தொடரன்று.
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்கின்றார் பாரதியார். இடை என்பது இங்கே இடுப்பு இல்லை. இடையில் (நடுவில்) என்னும் பொருளிலும் பயிலவில்லை. ஏனென்றால் வெளியிடைக் கண்ணம்மாஎன்று பாரதியார் வலிமிகுவித்து எழுதியிருக்கிறார். அவ்வாறு வலிமிகுவித்து எழுதியமையால் இடைஎன்பது இங்கே ஏழாம் வேற்றுமை உருபு எனக்கொள்ளல் வேண்டும். ஏழாம் வேற்றுமை உருபென்று கண் என்பதை மட்டுமே கருதியிருக்கிறோம். ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள் உள்ளன. அவற்றுள் இடை என்பதும் ஒன்று.

இங்கே இடை என்பதற்குக் கண்என்ற உருபின் பொருளையே கருதலாம். காற்றுவெளிக்கண் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கண்ணம்மா என்றே பாரதியார் பாடியதன் பொருளை உணரலாம். கண்ணம்மாவின் காதலை எண்ணியபடி காற்றுவெளியில் மிதப்பதுபோன்ற எடையறு நிலையை, மெய்ம்மறந்த நிலையை அடைந்து மகிழ்கின்றேன். இங்கே காற்றுவெளி என்பது தரையில் கால்படாத மிதப்பு நிலையைக் குறிக்கிறது. வான்வெளி எனலாம். அதனால் காற்று வெளியிடைஎன்னும் தொடர்க்கு வானத்திலேஎன்று பொருள் கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு : இன்னும் இயக்குநர் மணிரத்னத்தின் கடல், ஓகே கண்மணி போன்ற படங்களை பார்க்கவில்லை., அதை பார்ப்பதற்கான ஆவலை யாராவது பதிவுகள் இட்டுத் தூண்டுவீர்களாக.
-த.க.தமிழ்பாரதன்
15.08.2017
(முகநூலில் மீண்டும் தென்றலாக பரவிய காற்றுவெளியிடை படத்தின் வீச்சை உணரவேண்டி மதியம் படம் பார்த்து மாலையில் எழுதிய பதிவு )


புதன், 9 ஆகஸ்ட், 2017

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்தேர்வு செய்யப்பட்ட இளம் படைப்பாளர்களுக்கான மாநிலம் தழுவிய பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் தேர்வுற்றவர்களில் நானும் ஒருவன். மொத்தம் மூன்று நாள். முதல் நாள் துவக்க விழா, இறுதிநாள் நிறைவு விழா. இடைப்பட்ட ஒருநாள் தான் நான் பங்குகொண்ட நாள். பல முற்போக்கு சிந்தனையாளர்களால் நிறைந்திருந்தது அந்த உலகம். அதிகாலை நான்கு மணியளவில் சிங்காநல்லூர் பேருந்துநிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தின் இறுதியில் தான் பயிற்சி முகாம் நடக்கும் மலையடிவாரத்தின் இயற்கை வனப்புப் பகுதிக்குள் சென்றிருந்தேன்.

muthukumar - rasul - tamil bharathan
 காலை வேளைகள் முடித்த பின், வயிற்றுக்கு உணவிட்டு பின் செவிக்கு உணவிடத் தொடங்கினார்கள். சிந்தையில் பாழ்பட்டுக்கிடந்த சீழ்பட்டபழைய கருத்துருக்களை சீர்திருத்தி சிகரம் ஏற்ற வந்திருந்தார்கள் அவர்கள். உண்மையில் அப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா எனுமளவிற்கு முதன்முதலில் கேள்விகளால் திணறடிக்கப்பட்ட பதில்களையும், பதில்களால் பந்தாடப்பட்ட கேள்விகளையும் அந்த இடத்தில் தான் கற்கத் தொடங்கினேன். ஆடம்பரமின்றி எளிமையாக புல்வெளியிலும் மணல்வெளியிலும் சென்று கொண்டிருந்தது ஒவ்வொரு அமர்வும்.
me and thiruvarur district friends
தமிழகத்தின் முக்கிய முன்னணி ஆளுமைகள் பங்கு கொண்டிருந்தனர் அந்த பயிற்சி முகாமில். பல நபர்களை அப்போது தான் நான் முதல்முறையாக சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் சல்மா என இன்னும் ஏராளமான பல படைப்பாளர்கள் பங்குகொண்டு பயிற்சியளித்துக் கொண்டிருந்தனர். பலரது பெயர்கள் முன்னமே பரிச்சயம் என்றாலும், சிலரது எழுத்துகள் முன்னமே பரிச்சயம் என்றாலும் அவர்களை அப்போது தான் காண்கிறேன். அப்படி மதியம் 12 மணிக்கு மேல் ஒரு அமர்வு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெயரை அப்போது வரை நான் கேட்டது கிடையாது.
அவரது கவிதை அரங்கேறும் நேரம் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சியும் மேனாட்டு கோட்பாட்டு வடிவங்களும் சொல் வளங்களை கையாளும் விதமும் சிந்திக்கும் திராணியை வளர்க்க வேண்டிய கவிதைகளை கருவாக்குவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். அவர் பேசி முடித்த பின்னர் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். பலர் பேசுவார்கள் ஆனால், செயல்பட மாட்டார்கள். சிலர் மட்டும் தான் பேசுவது படி செயல்படுவார்கள். அப்படி அன்று அறிமுகம் செய்யப்பட்டவர் தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் எச்.ஜி.ரசூல்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர். அரசுப்பணியில் இருந்த அவர் அண்மையில்தான்  ஓய்வு பெற்றார். இவர் ஜனகனமன, என் சிறகுகள், மைலாஞ்சி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் . பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். இஸ்லாம் மதத்தில் பெண்களின் நிலையை பற்றி அதிக புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளவர் இவர். மேலும், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
'ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ..
ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி '
என்ற தனது கவிதைக்காக தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது ஜமாஅத் தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவர். பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர். என அறிமுகம் செய்த பிறகு அவர் மீதான வியப்பு எங்களைச் சூழ்ந்தது.  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தான் எழுதியவற்றிற்காக எவ்வளவு தான் போராட முடியும்.
கவிஞர் ரசூல் அவரைப் பற்றி,
2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது. என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன். நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர். எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன? இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.
-       எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்
      (எழுத்தாளர் ஜெயமோகன் பக்கத்திலிருந்து)

அன்றைய மதிய உணவுக்குப் பின்னும் அவர் எங்களோடு தான் இருந்தார். பின்னிரவு வரை நீண்ட படைப்பாளர்களின் பயிற்சி முகாம் நிறைவில் கண்கள் கனவு காண தூக்கத்தை அழைக்க பயணச்சீட்டு ஏதுமின்றி பயணப்பட்டன கண்கள் உறங்கூருக்கு. அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து முதன்முறையாக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை பேச்சுப் போட்டிக்கு கிளம்பிச் சென்றேன் என்பது தனிக்குறும்படம்.

சமீபத்தில் 05.08.2017 அன்று மாலை ஒலிபரப்பட்ட வானொலி செய்திகளில் எச்.ஜி.ரசூல் மறைவுச் செய்தி என்னை நினைவுகளில் நீந்த வைத்தது. சிலரது எழுத்து நிலைக்கும், சிலரது கருத்து நிலைக்கும், சிலரது வாழ்வு நிலைக்கும், ஆனால், சிலர் மட்டுமே நிலைப்பார்கள்.

மனதில்பட்டதைச் சொன்ன எழுத்தை ஆண்ட வாழ்வை ஆண்ட கவிஞர் ரசூல் அவர்களுக்கு என்றென்றும் நீங்கா நினைவுகளுடன், தங்களால் சிறு மாற்றத்தை  கவிதை நடையில் மாற்றிக்கொண்ட வீர வணக்கங்கள் !

த.க.தமிழ் பாரதன்
05.08.2017
(கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மரணத்திற்குப் பின் எழுதியது))