நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 9 ஆகஸ்ட், 2017

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்தேர்வு செய்யப்பட்ட இளம் படைப்பாளர்களுக்கான மாநிலம் தழுவிய பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் தேர்வுற்றவர்களில் நானும் ஒருவன். மொத்தம் மூன்று நாள். முதல் நாள் துவக்க விழா, இறுதிநாள் நிறைவு விழா. இடைப்பட்ட ஒருநாள் தான் நான் பங்குகொண்ட நாள். பல முற்போக்கு சிந்தனையாளர்களால் நிறைந்திருந்தது அந்த உலகம். அதிகாலை நான்கு மணியளவில் சிங்காநல்லூர் பேருந்துநிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தின் இறுதியில் தான் பயிற்சி முகாம் நடக்கும் மலையடிவாரத்தின் இயற்கை வனப்புப் பகுதிக்குள் சென்றிருந்தேன்.

muthukumar - rasul - tamil bharathan
 காலை வேளைகள் முடித்த பின், வயிற்றுக்கு உணவிட்டு பின் செவிக்கு உணவிடத் தொடங்கினார்கள். சிந்தையில் பாழ்பட்டுக்கிடந்த சீழ்பட்டபழைய கருத்துருக்களை சீர்திருத்தி சிகரம் ஏற்ற வந்திருந்தார்கள் அவர்கள். உண்மையில் அப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா எனுமளவிற்கு முதன்முதலில் கேள்விகளால் திணறடிக்கப்பட்ட பதில்களையும், பதில்களால் பந்தாடப்பட்ட கேள்விகளையும் அந்த இடத்தில் தான் கற்கத் தொடங்கினேன். ஆடம்பரமின்றி எளிமையாக புல்வெளியிலும் மணல்வெளியிலும் சென்று கொண்டிருந்தது ஒவ்வொரு அமர்வும்.
me and thiruvarur district friends
தமிழகத்தின் முக்கிய முன்னணி ஆளுமைகள் பங்கு கொண்டிருந்தனர் அந்த பயிற்சி முகாமில். பல நபர்களை அப்போது தான் நான் முதல்முறையாக சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் சல்மா என இன்னும் ஏராளமான பல படைப்பாளர்கள் பங்குகொண்டு பயிற்சியளித்துக் கொண்டிருந்தனர். பலரது பெயர்கள் முன்னமே பரிச்சயம் என்றாலும், சிலரது எழுத்துகள் முன்னமே பரிச்சயம் என்றாலும் அவர்களை அப்போது தான் காண்கிறேன். அப்படி மதியம் 12 மணிக்கு மேல் ஒரு அமர்வு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெயரை அப்போது வரை நான் கேட்டது கிடையாது.
அவரது கவிதை அரங்கேறும் நேரம் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சியும் மேனாட்டு கோட்பாட்டு வடிவங்களும் சொல் வளங்களை கையாளும் விதமும் சிந்திக்கும் திராணியை வளர்க்க வேண்டிய கவிதைகளை கருவாக்குவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். அவர் பேசி முடித்த பின்னர் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். பலர் பேசுவார்கள் ஆனால், செயல்பட மாட்டார்கள். சிலர் மட்டும் தான் பேசுவது படி செயல்படுவார்கள். அப்படி அன்று அறிமுகம் செய்யப்பட்டவர் தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் எச்.ஜி.ரசூல்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர். அரசுப்பணியில் இருந்த அவர் அண்மையில்தான்  ஓய்வு பெற்றார். இவர் ஜனகனமன, என் சிறகுகள், மைலாஞ்சி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் . பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். இஸ்லாம் மதத்தில் பெண்களின் நிலையை பற்றி அதிக புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளவர் இவர். மேலும், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
'ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ..
ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி '
என்ற தனது கவிதைக்காக தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது ஜமாஅத் தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவர். பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர். என அறிமுகம் செய்த பிறகு அவர் மீதான வியப்பு எங்களைச் சூழ்ந்தது.  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தான் எழுதியவற்றிற்காக எவ்வளவு தான் போராட முடியும்.
கவிஞர் ரசூல் அவரைப் பற்றி,
2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது. என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன். நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர். எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன? இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.
-       எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்
      (எழுத்தாளர் ஜெயமோகன் பக்கத்திலிருந்து)

அன்றைய மதிய உணவுக்குப் பின்னும் அவர் எங்களோடு தான் இருந்தார். பின்னிரவு வரை நீண்ட படைப்பாளர்களின் பயிற்சி முகாம் நிறைவில் கண்கள் கனவு காண தூக்கத்தை அழைக்க பயணச்சீட்டு ஏதுமின்றி பயணப்பட்டன கண்கள் உறங்கூருக்கு. அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து முதன்முறையாக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை பேச்சுப் போட்டிக்கு கிளம்பிச் சென்றேன் என்பது தனிக்குறும்படம்.

சமீபத்தில் 05.08.2017 அன்று மாலை ஒலிபரப்பட்ட வானொலி செய்திகளில் எச்.ஜி.ரசூல் மறைவுச் செய்தி என்னை நினைவுகளில் நீந்த வைத்தது. சிலரது எழுத்து நிலைக்கும், சிலரது கருத்து நிலைக்கும், சிலரது வாழ்வு நிலைக்கும், ஆனால், சிலர் மட்டுமே நிலைப்பார்கள்.

மனதில்பட்டதைச் சொன்ன எழுத்தை ஆண்ட வாழ்வை ஆண்ட கவிஞர் ரசூல் அவர்களுக்கு என்றென்றும் நீங்கா நினைவுகளுடன், தங்களால் சிறு மாற்றத்தை  கவிதை நடையில் மாற்றிக்கொண்ட வீர வணக்கங்கள் !

த.க.தமிழ் பாரதன்
05.08.2017
(கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மரணத்திற்குப் பின் எழுதியது))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக