நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 23 டிசம்பர், 2017

கரையமறுக்கும் மண்சுவர்...!

உங்கள் வகுப்பிலே அமைதியான யாருடைய கவனத்தையும் ஈர்த்திடாத ஒரு நண்பர் இருக்கிறாரா ..! அவரை என்றைக்காவது கவனித்தது உண்டா..! அவரது செயல்களுக்குக் காரணம் கண்டதுண்டா..! அவரைப் பற்றி அவர் மனத்தைப் பற்றிய முழுப் புரிதலை அறிந்ததுண்டா.! 

முடிந்தால் நீங்கள் அந்த அமைதியான நண்பரைப் பற்றி முதலில் அறிந்துகொள்ளுங்கள்., அறிந்துகொள்ள முயற்சியாவது செய்யுங்கள்...

அந்த ஆண்டு இறுதி டிசம்பர் தொடக்கமாக இருந்ததை நீங்கள் அறிவீர்களேயானால், அப்போது நாங்கள் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் B.Sc இயற்பியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தோம் என்பதையும் அறிவீர்கள். முதற்பருவம் படித்து முடித்து பல்கலைக்கழகத் தேர்வுகள் முடிந்து விடுமுறையும் முடிகிற தருவாய் அது.  

பருவத்தேர்வும் பருவமழையும் சற்றே தணிந்திருந்த ஞாயிற்றுக்கிழமையில் படித்து தேர்வெழுதி இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்கிற இறுதிப்பருவத்திற்காக தயார் செய்துகொண்டிருந்தாள் செல்வராணி. 

வீட்டின் மூத்த மகள், அப்பா அம்மா, தென் ஓடாச்சேரி கிராமத்திற்கு என எல்லாருக்கும் செல்லராணி. எங்கள் வகுப்பின் அதிகம் பேசாத ஒரே ஆகாசவாணி. எல்லாவற்றிற்கும் சினேகச்சிரிப்பை மட்டும் பதிலாகத் தரும் நல்லவள். தானுண்டு தன்வேலையுண்டு என்றிருக்கும் தனிப்பிறவி அவள். 

அன்றைக்கும் அப்படித்தான்.

அடுத்தநாள் கல்லூரி செல்லவேண்டி, மழைபெய்தோய்ந்த அந்த கார்த்திகைக் கார்முகில் மேகக்கூட்டத்தின் கீழ் தலைஉலர்த்திக்கொண்டிருந்த செல்வராணியின் ஒரு கூக்குரல் அலறல் சத்தம் இருவீட்டைத் தாண்டிக்கேட்டிருந்தது. 

பெய்த மழையில் ஈரத்தை உள்வாங்கிய சுவர்கள் ஈரமற்று, தன் வீரத்தை ஒரு  சிறுபிள்ளையிடம் காட்டிவிட்டது. தான் வளர்த்துவந்த மாட்டிற்கு தன் கூரை வீட்டுக்குள் இடம்கொடுத்த செல்வராணியின் தந்தை பெயர்ந்த சுவர்களை எடுப்பதற்கு அவளது உயிர் பெயர்ந்துவிட்டதை உடனிருந்தவர்கள் அறிவர்.

எங்களுக்குத் தகவல் தெரிந்து சென்று பார்ப்பதற்குள், கூரை வேயப்பட்டு குடும்பம் வாழும் வீட்டுக்குள் அதே உவகைபூத்த உதட்டுடன் வெற்றுடலாகிக் கிடக்கிறாள் அவள். அதிகம் பேசாத ஆகாசவாணியான அவளின் இறப்புச் செய்தி, அன்று அனைத்துச் செய்திச்சேனல்களிலும் ஒளிபரப்பானது.

உள்ளூர் பிரமுகர்கள், அரசியல்கட்சியினர், நண்பர்களாகிய நாங்கள், படித்துக்கொண்டிருக்கக் கூடிய நீங்கள் இன்னும் வியாபித்திருக்கக்கூடிய எல்லாமும் சேர்ந்து அவளை இறக்கவிட்டுவிட்டோம். 

இன்னும், 
  • அப்புறப்படுத்தப்படாத இடிபாடான சுவர்கள்,
  • களிமண் குதம்பிய வாசல்வெளி, 
  • மாடு கட்டி இருந்த சமையலறை, 
  • தூரத்தில் இருந்த சிறு கழிவறை,

இன்னும் எக்கச்சக்கமாய் அந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியாவிற்குத் துளியும் தொடர்பற்ற பொருண்மையில் இருந்த வீட்டில் அவளது இறுதி நாள் அன்றோடு முடிந்திருந்தது. ஆனால், இன்னும் எத்தனை செல்வராணிக்கள் நமக்குத் தெரியாமலே இருந்து, இறந்துவிடுகின்றனர் என்பதை நினைக்கையிலே 

நெஞ்சு பதைக்கும்,
சாற்ற வாய்பதைக்கும்...! என்ற பாரதிதாசனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

குடிசை மாற்று வாரியத்திற்கு குடிமைப்பணித் தேர்வெழுதி பொறுப்பிற்கு வருபவர் ஒரு குடிசையிலிருந்து வந்தவராக இருப்பின் அல்லது குடிசைக்காரனின் நண்பனாக இருப்பின் அவ்வாரியத்தின் தேவை அடுத்த ஐந்தாண்டுகளில் இல்லாமலே போய் விடும். 


செல்வராணி எங்களுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு குழுப்படம் (சமத்துவப் பொங்கல் - 2015)


அவளது இறப்பின் பின்னெழுதி முகநூலில் ஏற்றியது


கரைய மறுக்கும் மண் சுவரும் ;
காகத்திற்கு சாதம் வைக்கும்
குடிசை மற்று வாரியமும்

காலத்தின் ஓட்டத்தில் ஓட
மறுத்த மக்களின் மடமைக்கும்,

கெஞ்சி கேட்ட மக்களுக்காக
பெஞ்சி கெடுத்த மழைக்கும்,

இன்னும் மறையாத அந்த கால
மண் சுவருக்கும்,

எப்போது அழைத்துச் செல்லலாம்
என்றிருந்த காலனுக்கும்,

ஆடு மாடுகளுக்கு இடம் தந்து
வெளியே சென்ற தன் மனதிற்கும்,

மழைக் குளிரிலும், கல்லூரி செல்ல
முடியை காயவைத்த கடமைக்கும்,

கிடைத்த அருமைப் பரிசாக
உடலிருந்தும் உயிர் இல்லாத
வெற்று உடலாக கிடக்கிறாள்
அங்கே ஒரு தோழி.

குணத்திலே பொறுமையும்,
நிறத்திலே பெருமையும்,
மனத்திலே வெறுமையும்,
முகத்திலே மகிழ்வையும்
உதட்டிலே தெளிவையும்
அகத்திலே ஒளியையும்
கொண்டிருந்த அந்த
“செல்வராணி”

தான், தான் முதல் பிள்ளை,
செல்வம் சேர்ப்பாள்,
ராணியாய் வாழ்வாள்,
என்பதற்காய் வைத்த
பேரு என தந்தை
கூறியதற்காக
பிறந்த பின்னரும்
செல்வம் சேர்த்தாள் சிறுக...
இறந்த பின்னரும்
செல்வம் சேர்த்தாள் பெருக...

சுவர் இடிந்து
உயிர் பிரிந்த
பழைய வலத்து
புதிய நாயகி...

தாக்கத்தோடு,
உம் தோழர்கள்....

முகைய்தீன் இப்னு அரபி, விபவகுமார், கமலநாதன், தேவநேசன், ஆனந்த் மற்றும் பலர்

06.12.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக