நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 17 மே, 2018

துயிலாத நினைவுகள் | கவிதை | அன்னையர் தினம்


துயிலாத நினைவுகள்




தேனாய் ! தெளிந்தேனா !

தமிழ்த்தேனாய் இனித்தேனா !

 

இருந்தேனா எனத் தெரியவில்லை

உயிர்ப்பிழைத்தேனா என்பதறியவில்லை...

 

காதிருந்தும் கேட்கவில்லை,

வாயிருந்தும் உண்ணவில்லை...

 

என் புவியில் நான் மட்டும்

கால் எடுத்து வைத்தால் வான்முட்டும்

 

கால்நீட்டிச் சண்டையிட்டால்

காதிரண்டும் கேடயமாம்

 

பேசக்கூட யாருமில்லை; பேச கூட யாருமில்லை

பேசத்தடை ஏதுமில்லை

 

உடுத்த ஆடை ஒன்றுமில்லை

படுத்து றங்க பாயுமில்லை

 

இருட்டிலே கழிந்தன பகல்கள்

எப்படியோ கடத்தினேன் போங்கள்

 

இரைப் பையடக்கி தலைப்பை யடக்கி

என்னுயிரும் இருந்தது

 

கையடக்கி காலடக்கி பல

நாளடங்கிச் சென்றது

 

விழியிரண்டும் விரதம்தான்

விழிதிறக்கையில் உலகம்தான்

 

 

அழுதுகொண்டே பிறந்தேனாம்

ஆளநானும் அவதரித்தேனாம்

 

கருவறைச் சிறைவாசம்தான்

கடுகளவும் நினைவில்லை

 

ம்ஹூம்இவை

அம்மா சொன்னதாய் நினைவுகள்

அவள் கண்ணுறக்கம் கலைத்த பொழுதுகள்

 

அவள் துயிலாத பொழுதுகளே

என் துயிலாத நினைவுகள்....


<3 p="">
<3 p="">-த.க.தமிழ் பாரதன்
<3 p="">(அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் பரிசு வென்ற கவிதை ) நாள் : 25.02.2018 | இடம் : அதிராம்பட்டினம் 


வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…


வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…

சாகப் பிறக்கும் மனிதன் -
செத்துக் கொண்டிருக்கும் மொழி.

ஊமையாய் இருந்திருக்கலாம் மொழி
பேசிக்கொண்டேயிருப்பதால்,

அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது
அறிவிப்பின்றி…
இது ஓரதிசியம்
நோயாளி ஒரு மருத்துவர்.

அவருருவாக்கிய நோய்த் தாக்குதலுக்கு
அறுவை சிகிச்சை செய்பவர் அவரே..,

மொழிகளெத்தனை
பண்பாடுகள் அத்தனை.

மொழிகள் நிறைந்த உலகில்
முகவரி யற்றவை மொழிகள்

நிறத்திற்கு, நிலப்பரப்பிற்கு,
நீயா நானா வெல்வதற்கென மொழிகள்.

எழுத்துகள் நிறைந்த தொன்று.
எழுத்தே இல்லாத தொன்று

எப்போதோ பிறந்தது ஒன்று – இவை
எப்படித்தான் பிறந்திருக்குமோ இன்று

சாகப் பிறந்தவன் வாழத் தொடங்குகையில்
வாயிலூற்றெடுத்த நாற்ற மொழியெல்லாம்
வாழுமொழியிலிருந்து சாகத் தொடங்குமோ…!

குருதிக்கு நிறம் ஒன்று
வகைகள் வேறு.,

மொழிக்கு முகங்கள் வேறு
மூலம் ஒன்று.

யாமறிந்த மொழிகளெலாம்
ஏதுமில்லை ஒன்றைத்தவிர.

அதையே கவிஞர் சொன்னார் நெஞ்சம் நிமிர,

அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனுடை வழியாகும்.


த.க.தமிழ் பாரதன்
06.03.2018