நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 31 டிசம்பர், 2018

ஆளுநர் எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் – அற்புதம் அம்மாள்


ஆளுநர் எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் அற்புதம் அம்மாள்
மேனாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் ஆதரவுக் குரல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் எழுவர் விடுதலைக் குறித்த கருத்தரங்கம் திருவாரூரில் நேற்று (23.12.2018) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் அம்மாள் கலந்துகொண்டு பேசினார், அவர் பேசியதிலிருந்து

வருமானத்திற்கேற்றார் போல் வாழ வேண்டும் என்பதற்காக பெரியார் கொள்கை அடிப்படையில் அரசுப் பள்ளியில் தான் என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். தொழிற்கல்வி படிக்க வைக்க வைத்தோம். எலக்ட்ரிகல் மற்றும் கம்யூனிகேசனில் டிகிரி கூட அல்ல டிப்ளமோ படித்தவன் தான் பேரறிவாளன். பேட்டரி வாங்கிக் கொடுத்தவனை குண்டு செய்தவனே பேரறிவாளன் தான் என வெடிகுண்டு நிபுணனாகவே பிரகடனப் படுத்தினார்கள் சிபிஐ.
அன்று அவர்கள் சொன்னதை ஆதரித்த ஊடகங்கள், இன்று உண்மைகள் வெளிவந்த பின் என் பக்கம் வந்திருக்கின்றன. 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த பின்பு, உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்திருந்தது. தற்போது, மீதமுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. தமிழ்நாடு அரசு அதற்குத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்.? சட்டப்படி அறிவிக்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்துவதில் தயக்கம் என்ன இருக்கிறது.  அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால், அதற்கான காரணத்தையாவது தெளிவுபடுத்த வேண்டும்.  
ஜோடிக்கப்பட்ட வழக்கு, தில்லு முல்லு நடந்தேறி இருக்கிறது. கொலை செய்தவர்கள் இறந்துவிட்டார்கள், ஆனால், கொலைக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இவ்வழக்கில் ஆயிரம் குளறுபடிகள், ஏன் ஏன் என்று கேள்விகள் கேட்கலாம். ஆனால், கேட்கத் தேவையில்லாத சூழல் வழக்கு முடிந்து விட்டது. விசாரணைக்கு என்று சொல்லி அழைத்துச் செல்லும் போது, வெறும் 19 வயது. இன்று பேரறிவாளனுக்கு வயது 47.
அந்த குண்டு எங்கு வடிவமைக்கப்பட்டது, யார் வடிவமைத்தார்கள் என்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கைத் தொடுத்தவர் வேறு யாருமல்ல, என்னுடைய மகன் தான்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவனை, இன்று வெளியாவார், நாளை வெளியாவர் என எதிர்பார்த்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தவறு செய்யவில்லை, அதனால் தண்டனை அனுபவிக்கக்கூடாது. ஆனால், தண்டனையும் அனுபவித்தபின் விடுதலை செய்யத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. யார் சிறையிலிருந்து விடுதலையானாலும், நான் எதிர்க்கமாட்டேன் பெரியாரைப் படித்த என்னுடைய நிலைப்பாடு இதுதான். முழுவதும் தண்டனையை அனுபவித்த ஒருவன் விடுதலையாவதில் என்ன இருக்கிறது ? எத்தகைய குற்றம் புரிந்தவனையும் திருத்தி இந்த சமுதாயத்தோடு வாழ வைக்க வேண்டும். தற்போது, தான் கிருஷ்ணையரை நினைவிற்கொள்கிறேன். 8 வருடத்தில் ஒருவனைத் திருத்த முடியவில்லையெனில் ஏன் சிறை வைத்திருக்க வேண்டும் என்று கேள்விகேட்டவர். அவர் நீதிமான். இன்று அவர் இருந்திருந்தால், ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தன்னால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்திருப்பார். 
என்னிடம் கேள்வி கேட்பவர்கள் எல்லாருமே பிஜேபி அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறதென நினைக்கிறீர்களா எனுமாறு தான் கேள்வியே கேட்கின்றனர். எல்லாவற்றையும் நானே பதில் கூற வேண்டும் என்பதில்லை. மக்கள் பார்க்கிறார்கள், முதல் முறை காங்கிரசு ஆட்சியிலும், பின்னர் பிஜேபி ஆட்சியிலும் இந்த எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு இருந்தது.
இந்த வழக்கால் யார் யாருக்கு ஆதாயம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்த வழக்கை நீட்டிப்பது என்பதே உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முயற்சி தான்.  இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் இந்த ஏழு பேரும் சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் கருத்து. சாதாரண மக்கள் நாங்கள் எப்படி சட்டத்தை மதிக்கிறோமோ? அதிகாரத்தில் இருப்பவர்களும் சட்டத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதை உணரவேண்டும்..! அதிகார துஷ்பிரயோகம் தவிர்க்கப்படவேண்டும். ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா நிச்சயம் ஆளுநரை வற்புறுத்தி இருப்பார்கள், எனக்கே நம்பிக்கை கொடுத்தவர்கள் அவர்கள் என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, சொன்னார்கள் சொர்க்கவாசல் திறந்துவிட்டது. பெருமாள் வெளியே வந்துவிட்டார் என்று. ஆனால், சிறைவாசல் திறக்கப்படுவது எப்போது
முன்னதாக த.ரெ.தமிழ்மணி, கலைபாரதி ஆகியோரின் நூல் வெளியீடு நிகழ்ந்தது. அந்நூல் குறித்த விமர்சனங்களை சிலர் வழங்கினர். அதனை உணர்ந்து இரசிக்கக் கூட முடியாத அளவிலான போராட்டக் களத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
மொத்தத்தில் எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஆளுநர் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த பேரறிவாளனைப் பெற்றெடுத்த அற்புதம் அம்மாளின் ஒட்டுமொத்தக் கருத்து.

த.க.தமிழ்பாரதன்
திருவாரூர்
23.12.2018

யாராலும் அழிக்க முடியாத இயக்கம் செங்கொடி இயக்கம் : ஜி. ராமகிருஷ்ணன்



யாராலும் அழிக்க முடியாத இயக்கம் செங்கொடி இயக்கம் : ஜி. ராமகிருஷ்ணன் பேச்சு
கீழ வெண்மணி ; ஐம்பதாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கீழ வெண்மணியில் நிலச்சுவான்தார்களுக்கும், கூலி உயர்வு கேட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக ஆண்டுதோறும் டிச. 25-ல் வெண்மணித் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

கீழவெண்மணி சம்பவத்தின் பின்னணி :
1968 டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் , ஏசுநாதர் பிறந்த நாள் விழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை ஜில்லா கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் அது கொடிய விடியலாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.


தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை படி நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளூர் விவசாயத்தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட நாகை வட்டார நிலப் பிரபுக்களின் தலைமையில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

25.12.1968 அன்று மாலை மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலிலிருந்து தப்பிக்க இராமையா என்பவரின் குடிசைக்குள் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல வயதினரும் அடைக்கலம் புகுந்தனர். அந்தக் குடிசையை தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் 44 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நடந்த, நெஞ்சை உலுக்கும் கொலை சம்பவங்களில், தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர்25ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலை குறிப்பிடத்தக்கதாகும். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய படுகொலை இது.
ஐம்பதாண்டு நினைவு தினம் :
1968 டிச. 25இல் நடைபெற்ற இச்சம்பவத்தின் ஐம்பதாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது,
நிலச்சுவான் தாரர்களுக்கு எதிராக தங்கள் உரிமையை நிலைநாட்ட விவசாயிகள் போராடிக்கொண்டிருந்த போது, 1970இல் முதலமைச்சர் கருணாநிதி திருவாரூர் வருகிறார், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அவரை வந்து சந்தியுங்கள் என்று நிலச்சுவான் தாரர்களைத் திமுக வினர் சொல்லினர். அப்போது அவர்கள் சொல்லியது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.

ஜி.வீரையன், பி.எஸ்.தனுஷ்கோடி உள்ளிட்ட தோழர்களிடம் நிலத்தை விநியோகம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மிராசுதாரர்கள் இரவில் கூடினார்கள். உணவு பரிமாறுவதற்குத் தயாராக இருந்தபோது, ஜி. வீரையன் கூறினார், “இப்படி எத்தனை பேரை சோறு போட்டு, ஏமாற்றி இருப்பீர்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை கை நனைக்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டார். பத்து மணிக்கு மேல் பேச்சு வார்த்தை தொடங்கியது. அதிகாலை நான்கு மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் தோழர் ஜி.வீரையன், தனுஷ்கோடி ஆகியோருடன் நிலவுடைமையாளர்கள் கையெழுத்திடுகின்றனர். கையெழுத்திடுகையில் வலிவலம் தேசிகர் முப்பது நாற்பது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடத்தப்பட்டன., யாராலும் அழிக்க முடியாத இயக்கம் தான் செங்கொடி இயக்கம் என்று தெரிவித்ததாக ஜி.வீரையன் பதிவு செய்கின்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, அமைச்சராகக் கூட இல்லை. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடி வெற்றி பெற்றது.

நிலமனைத்தும் ஜமீந்தார்களிடமும், நிலச்சுவான் தாரர்களிடம் இருந்து வந்த காலத்தில், விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வந்த இடம் அவர்களுக்கு உரிமையானது எனப் போராடி, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா வாங்கித் தந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. தொழிலாளர்களுக்காக இன்றும் போராடி வருகிறது. சாதிக் கொடுமை, நிலவுடைமை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினோம், இன்று தவறான பொருளாதாரக் கொள்கை, மதவாதத்தை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவற்றை வெண்மணித் தியாகிகளின் ஐம்பதாமாண்டு நினைவு தினத்தில் மனதில் நிறுத்தி போராடுவோம். என்று ஜி.ராமகிருஷ்ணன் பேச்சை நிறைவு செய்தார்.

உரையங்கிற்குப் பிறகு, நிமிர் கலைக்குழுவின் பறை நிகழ்ச்சியும், பிரகதீஸ்வரன் குழுவினரின் நிகழ்ச்சியும், கவிஞர் முத்துநிலவன், பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் உள்ளடக்கிய விவாத அரங்கம் அரங்கேறியது. கீழவெண்மணி நினைவிடம் ஐம்பதாமாண்டில் திறக்கப்படும் என்று மக்கள் ஆவலாக இருந்தனர். ஆனால், கஜா புயல் மற்றும் தொடர்ச்சியான மழையால் கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டது. நிலநடுக்கம் வந்தால் கூட ரிக்டர் அளவுகோலில் எட்டு வரை இந்தக் கட்டுமானம் எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாகாது என்பது இக்கட்டிடத்தின் கூடுதல் சிறப்பு.

கீழவெண்மணி சம்பவத்தின் ஐம்பதாம் ஆண்டில் 44 உயிர்களை நினைவு கூர்வோம்.

-த.க.தமிழ்பாரதன்

25.12.2018

சனி, 22 டிசம்பர், 2018

அறுவடையாகும் உயிர்களன்றோ.....(கீழவெண்மணி)


உண்டிக் கொடுத்தோன்
உயிர்க் கொடுத்தோன் அன்று
உண்டிக் கொடுத்தோன்
உயிர் மாய்த்தான் இன்று

மானம் பார்த்த உழவர் குடி
மரித்துப் போன தெதனாலோ? 

வானம் பார்த்த பூமியெல்லாம்
வீணாய்ப் போன ததனாலோ ..

அணை தாண்டா காவிரி
ஐந்திணை தீண்டா ததாலோ ...

மழை மட்டும் வேண்டுமென
யாகம் பல செய்திட்டும்

தாகம் தீர்க்க மட்டுமென
நன்னீரும் நமை ஏமாற்றியதாலோ ...

பாவம் தான் பயிரெல்லாம்
நோவு காணாது இறந்திட்டதாலோ. ..

மாறிய மண் தன்மையினால்
மாநில மீதினில் மாண்டாரோ! 

இல்லெனின் ,

கண்ணெட்டும் தூரமுட்டும்
முப்போகம் விளைந்திட்டும்
தப்பாமல் சாதிவர்க்கம்
சரமாரியாய் வளர்ந்திட்டும்

அழித்தொழிக்க முனைந்திட்டு
செந்நெல்லாய் விளைந்தாரோ !

அறுவடையாகிடும்
பயிர்களெல்லாம்
ஒருவகை உங்கள்
உயிர்கள் அன்றோ...


த.க.தமிழ்பாரதன்
25.12.2016


ஞாயிறு, 9 டிசம்பர், 2018

உதிர்ந்த மலர்கள் - உ.வே.சா வின் அனுபவக் கட்டுரை

உதிர்ந்த மலர்கள்

தட்டச்சு செய்து உதவியவர்: திரு. வெண்பாவிரும்பி

பத்துப்பாட்டை நான் ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியபோது எனக்கு முதலில் மூலமுள்ள பிரதி கிடைக்கவில்லை. பதவுரை மட்டும் அடங்கிய பிரதிகளே  கிடைத்தன. அதன் முதற் பதிப்பில் (1889-ஆம் வருஷம்) உரையிலிருந்து  தொகுத்த மூலத்தையே வெளியிட்டேன். அக்காலத்தில் மூலப் பிரதி எங்கேனும் கிடைக்குமோவென்று சிரமப்பட்டுத் தேடியும் பயனில்லை.

உரையில் நச்சினார்க்கினியர் கொடுத்துள்ள மூலப் பகுதிகளை இணைத்து எதுகைமோனைபொருட்டொடர்பு முதலியவற்றை ஆராய்ந்து ஒரு வகையாக அமைத்துக்  கொண்டேன். அந்த நிலையிலும் ஓர் இடையூறு உண்டாயிற்று.

பத்துப்பாட்டில் எட்டாவது பாட்டாக இருப்பது குறிஞ்சிப்பாட்டென்பது. அது  சங்கப் புலவர்களில் தலை சிறந்தவராகிய கபிலரால் ஆரிய அரசனாகிய பிரகத்தன்  என்பவனுக்குத் தமிழின் நயத்தைத் தெரிவிக்கும் பொருட்டுப் பாடப்பெற்றது.  அதன்கண் ஒரு தலைவி ஒரு தலைவனைக் கண்டு காமுற்று அளவளாவிய செய்தியாகிய  களவொழுக்கம் மிகவும் அழகாகச் சொல்லப்படுகின்றது.


மலைவாணர் மகளாகிய ஒரு தலைவியை அவளுடைய தாய், "தினைக்கொல்லையைக் காத்து வருவாயாக" என்று கூறித் தோழியுடன் அனுப்பினாள். தலைவியும் தோழியும்  தினைக்கொல்லைக்குச் சென்று பரண் மேலிருந்து கிளி முதலியவற்றை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.


பிறகு அருவியிலே விளையாடி மகிழ்ந்தும்பாட்டுக்களைப் பாடியும்பலவகையான அழகிய மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்தும்தழைகளையெல்லாம் ஆடைபோலக் கட்டி உடுத்தும்மாலை தொடுத்து அணிந்தும்இடையிடையே கிளிகளை ஓட்டியும்  பொழுது போக்கினார்கள்.


அப்பொழுது அங்கே ஒரு தலைவன் வந்தான். அவன் அழகும் வீரமும் உடையவன்.  அவன் தன் தலைமயிரில் எண்ணெயும் மயிர்ச்சாந்தும் பூசியிருந்தான். அகிற்புகையினால் அதனை உலர்த்தினமையின் அதில் வாசனை கமழ்ந்தது. அவ்வாசனை  பற்றி வண்டுகள் அவன் குடுமியிலே மொய்த்தன. பல மலர்களை அவன் தன் தலையில் அணிந்து பிச்சி மலரால் தொடுத்த ஒற்றை வடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு காதில் அசோகந்தளிரைச் செருகியிருந்தான். பூமாலையும் ஆபரணமும் அவன்  மார்பிலே விளங்கின. கையில் வில்லையும் அம்புகளையும் ஏந்தியிருந்தான். இடையிலே கச்சையும் காலிலே வீரக்கழலும் திகழ்ந்தன.


அவனோடு சில நாய்கள் வந்தன. அவை குரைத்துத் தலைவியையும் தோழியையும் வளைத்துக் கொண்டன. அவர்கள் அஞ்சி வேறிடத்திற்குச் செல்ல முயன்றார்கள். அப்பொழுது அவ்வீரன் அவர்களை நோக்கி இனிய சொற்களைக் கூறி அவர்கள் அழகைப்  பாராட்டினான்.


எப்படியேனும் அவர்களோடு பேசவேண்டுமென்பது அவன் விருப்பம். அதனால் பொய்யாக, "நான் வேட்டையாடி வந்தேன். யானை முதலிய சில மிருகங்கள் எனக்குத் தப்பி இங்கே வந்தன. அவற்றை நீங்கள் கண்டீர்களோ?" என்று வினவினான். மகளிர் இருவரும் நாணமிகுதியால் ஒன்றும் விடை பகரவில்லை.


மேலும் அவன், "என் வினாவிற்கு ஏற்ற விடை தராவிடினும் என்னோடு ஒரு வார்த்தையாவது பேசக் கூடாதா?" என்று சொல்லிவிட்டு ஒரு பூங்கொம்பை எடுத்துக் குரைத்துக் கொண்டிருந்த தன் நாய்களை அடித்து அடக்கினான். தலைவியின் வாயிலிருந்து ஒரு சொல்லேனும் வருமோவென்று எதிர்பார்த்து நின்றான் அவன். ஒன்றும் வரவில்லை.


அப்பொழுதுவேடன் ஒருவனால் தினைப்புனத்திலிருந்து துரத்தப்பட்ட ஒரு யானையானது மதமிகுந்து மரங்களை முறித்துக்கொண்டு அவ்வழியே வந்தது. அதைக் கண்ட அம்மகளிர் இருவரும் அஞ்சி நடுங்கினர். அவர்களுடைய நாணம் இருந்த  இடம் தெரியாமல் மறைந்தது. உயிருக்கே ஆபத்து வந்தபோது நாணம் என்ன செய்யும்! உடனே அவ்வீரனருகிலே ஓடிச் சென்று அவர்கள் நடுங்கி நின்றார்கள்.


நினைத்த பொருள் கைவந்தவனைப் போல அவன் மகிழ்ந்து மிகவும் எளிதாக ஓர் அம்பைத் தொடுத்து அந்த யானையின் முகத்தில் எய்தான். அது வெருவி ஓடி விட்டது. மகளிர் அச்சம் நீங்கினர்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஒருவகை அன்பு உண்டாயிற்று.


பிறகு மகளிர் இருவரும் மலையருவியில் குதித்து விளையாடுகையில் கால் நிலையாமல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்பொழுது விரைவில் தலைவன் சென்று அவர்களைக் காப்பாற்றினான். தலைவியைத் தழுவிக்கொண்டு அன்பு காட்டினன். அதுமுதல் அவ்விருவரும் காதலராயினர். தினந்தோறும் சென்று தலைவன் தலைவியைக் கண்டு அளவளாவி வந்தான். தலைவி காலையிலே தினைப்புனஞ் செல்வதும் கிளியை ஓட்டுவதும் தலைவனைக் கண்டு பேசி அளவளாவி மகிழ்வதும் மாலையிலே தன் வீடு திரும்புவதுமாக இருந்து வந்தாள்.


பின்பு தினைக்கதிர் விளைந்தவுடன் தலைவிக்குத் தினைப்புனம் காக்கும் வேலை ஒழிந்தது. இதனால் அவள் தன் வீட்டிலேயே இருந்தாள். அக்காலத்திலே தலைவன் இராப்பொழுதில் அவளை நாடி வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தான்.


அவன் வரும்பொழுது இராக்காலமாதலின் இடைவழியிலே அவனுக்கு நேரக்கூடும் அபாயங்களுக்கும் தன் ஊரிலும் வீட்டிலும் உள்ள காவல்களுக்கும் பயந்து தலைவி வருந்தினாள். அந்த வருத்த மிகுதியினால் அவள் உடல் மெலிவுற்றது. அம்மெலிவைக் கண்ட தாய் முதலியோர் அதற்குக் காரணம் யாதென்று ஆராயத் தொடங்கினர்.


தலைவிக்கு உண்டான நோய் மருந்தால் தீர்வதன்றென்பதை அவர்கள் அறிந்திலர். முதியவர்களையும் தெரிந்தவர்களையும் கேட்டார்கள்கடவுளுக்குப் பூசை போட்டனர்அவர்களால் நோயின் காரணத்தை அறிய முடியவில்லை. உண்மையறியாமல்  அவர்கள் வருந்துவதையும் தான் தலைவனை மணம் செய்து  கொள்வதற்கு வழியின்றித் துன்புறுவதையும் தலைவி உணர்ந்து யோசித்தாள். 'நம்முடைய காதலை வெளிப்படுத்தாவிடின் அதனையறியாத இவர்கள் ஏதேனும் செய்யத் துணிவார்கள்.

அதனால் நம்முடைய காதலுக்கும் கற்புக்கும் குறை நேரும். ஆபரணங்கள் உடைந்துவிட்டால் மறுபடி திருத்தியமைத்துக் கொள்ளலாம். ஒழுக்கமும் கற்பும் வழுவினால் மறுபடியும் அமைத்துக்கொள்ள முடியுமாஎப்படியேனும் நம்  நிலையைத் தாய்க்குத் தெரிவிப்பது தான் பரிகாரம்என்று துணிந்தாள்துணிந்து தன் உயிர்த் தோழிக்கு அதனை அறிவித்தாள். அத்தோழி அதனைக்கேட்டு அவள் விருப்பத்தின்படியே செவிலித்தாய்க்குத் தலைவியின் காதல் வரலாற்றைச் சொல்லுகிறாள்.


அப்படிச் சொல்லும் முறையிலே குறிஞ்சிப் பாட்டு அமைந்திருக்கின்றது. அதில் உள்ள வருணனைகளும்பழைய வழக்கங்களும்பிறவும் என் மனத்தைக் கவர்ந்தன. தலைவியும் தோழியும் பல மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்த செய்தி கூறப்படுமிடத்தில் 99 மலர்களின் பெயர்கள் வருகின்றன. 'இவ்வளவு பூக்களின் பெயர்களை எதற்காக அடுக்கி இங்கே சொல்ல வேண்டும்?' என்று யோசித்தேன். ஆரிய அரசனுக்குத் தமிழ்ச் சிறப்பை அறிவுறுத்த வந்த கபிலர், "தமிழர்கள் இயற்கையின் எழிலை நன்கு உணர்ந்தவர்கள். நிலப்பாகுபாடுகளையும் மரஞ்செடி கொடிகளின் இயல்புகளையும் தெளிவாக ஆராய்ந்தவர்கள். அவர்களுக்கு வார்த்தைப் பஞ்சமில்லை" என்பதை அவ்வரசன் தெரிந்து கொள்வதற்காக இவ்வாறு பாடியிருக்க வேண்டுமென்று கருதினேன். மாலைக்காலத்தை எவ்வளவு அழகாக அவர் அதில் வருணித்திருக்கிறார்!


'சூரியன் அத்தகிரியிலே மறைகிறான். மான்கணங்கள் மரத்தடியிலே வந்து கூடுகின்றன. பசுக் கூட்டங்கள் வயிறார மேய்ந்துவிட்டுத் தம்முடைய கன்றுகளை நினைந்து விளித்துக்கொண்டே மந்தைகளிற் புகுகின்றன. அன்றிற் பறவை பனைமரத்தில் இருந்து துணையை அழைக்கின்றது. பாம்பு இரை தேடும் பொருட்டு மணியை உமிழ்கின்றது.


இடையர்களெல்லாம் தம்முடைய புல்லாங்குழலில் ஆம்பற்பண்ணை வாசிக்கின்றனர். ஆம்பலரும்புகள் இதழ் விரிகின்றன.


வீடுகளிலெல்லாம் சுமங்கலிகள் விளக்கேற்றுகின்றனர். அந்தணர் அந்திக்கடனைச் செய்கின்றனர்.


இலைகளின்மேல் அமைத்த பரண்களில் வேடர்கள் கொடிய மிருகங்களை அச்சுறுத்தக் கொள்ளிக் கட்டையால் தீ உண்டாக்குகின்றனர். மேகங்கள் மலையைச் சூழ்கின்றனஎங்கும் இருள் சூழ்கின்றது. காட்டிலே கல்லென்ற ஒலி உண்டாகின்றது. புள்ளினங்கள் தத்தம் கூடுகளில் வந்து ஒலிக்கின்றன. இப்படி மாலை வந்தது.'

இவற்றைப் படிக்கப்படிக்க இக்காட்சிகள் என் மனக்கண்முன் தோன்றலாயின. ஒருமுறை படித்தேன். இருமுறை படித்தேன். பலமுறையும் படித்தேன்.


மூல அடிகளை நன்றாக வரையறை செய்துவரும் போதுமலர்களை வரிசையாகச் சொல்லும் பகுதியின் இடையே சில அடிகள் விட்டுப்போயினவென்று தெரிந்தது. அங்கே ஏட்டில் இடம் விடப்பட்டிருந்தது. அழகாகத் தொடுத்த அம்மலர் வரிசையிலே சில மலர்கள் காணப்படவில்லை. அவ்வரிசையின் அழகு அதனால் சிறிது சிதைவுற்றது. எவ்வளவோ இடங்களில் தேடியும் மூலம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தால் நைந்திருந்த நான்உரையின் உதவிகொண்டு ஒருவாறு மூலத்தைச் செப்பஞ் செய்யலாமென்ற தைரியத்தை அடைந்திருந்தேன்மூலவரையறையும் ஒருவாறு அமைந்து வந்தமையால் திருப்தியுற்றேன். இடையிலே இம்மலர் வரிசை அற்றிருந்தது. நான் என் செய்வேன்!


அங்கே செங்காந்தட் பூ முதல் செம்பூ வரையிற் பல மலர்கள் சொல்லப்படுகின்றன. செங்கோடுவேரி என்னும் பூவுக்கும் கூவிளம் பூவுக்கும் இடையிலே சிதைவு காணப்பட்டது. ஏட்டுச் சுவடியில் அடிவரையறையோஅடிகளின் எண்ணோ இராது. இத்தனை அடிகள் அங்கே இல்லையென்று விளங்கவில்லை. 'எத்தனை மலர்கள் உதிர்ந்து விட்டனவோ! அவற்றை எங்கே தேடி எடுத்துக் கோத்துக்

குறையை நிரப்புவோம்!என்று நான் ஏங்கினேன். ஏடுகள் தேடாத இடம் ஏதாவது இருக்குமோவென்று யோசித்தேன். தமிழ் வாணர்களைப் பாதுகாத்தும் சைவத்தை வளர்த்தும் வரும் தருமபுர ஆதீன மடத்தில் நான் அதுகாறும் ஏடுகளைத் தேடாதது  என் ஞாபகத்துக்கு வந்தது.


அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் தருமபுர ஆதீனத்திற்கும் சில வழக்குகள் நடந்தன. அதனால் இரண்டு மடத்தினர்க்குள்ளும் ஒற்றுமை இல்லை. தருமபுர மடத்தின் பழம்பெருமையையும்திருவாவடுதுறை மடத்தைப் போலவே  அம்மடத்திலும் தமிழ் வளர்த்த பெரியார்கள் பலர் இருந்தமையையும் நான் அறிவேன். ஆயினும் திருவாவடுதுறை மடத்தின் சார்பு பெற்றவனாதலின் நான் தருமபுரத்திற்குச் செல்லத் துணியவில்லை. பழங்காலத்தில் இவ்விரண்டு மடங்களும் ஒற்றுமையோடு இருந்தன. தருமபுரத்தைக் கீழைவீடென்றும் திருவாவடுதுறையை மேலை வீடென்றும் சொல்வார்கள்.


'ஆதீனங்களின் இடையே பிணக்கு நேர்ந்தபோது ஓர் ஆதீனத்திற்குரியவர்கள் மற்ற ஆதீனத்திற்குரியவர்களோடு பழகாமல் இருப்பது வழக்கம். அதனால் தருமபுரம் செல்வதைத் திருவாவடுதுறை மடத்தினர் விரும்பாமல் இருத்தல்கூடும்தருமபுரத்தினர் உள்ளன்போடு என் வரவை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தலும் கூடும்என்ற எண்ணத்தினாலேயேபல இடங்களில் சென்று சென்று ஏடுகளைத் தேடிவந்த நான் தருமபுரம் செல்லாமலே இருந்தேன்.


'இப்பொழுது அவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தால் காரியம் நிறைவேறுவது எப்படிதமிழ்ப் பணியில் இந்த ஸம்பிரதாயங்களைப் பார்ப்பது அவசியமன்று. நமக்கு அகௌரவம் நேர்ந்தாலும் பெரிதன்று! நம் காரியம் நிறைவேறினால் அதுவே  பெரிய கௌரவம்என்று நினைத்துத் தருமபுரத்திற்குச் செல்லத் துணிந்தேன்.


கும்பகோணத்தில் நான் வேலைபார்த்து வந்த காலம் அது. அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் 17ஆம் பட்டத்து ஆதீனகர்த்தராக விளங்கினார். அவரிடம் சென்று என் கருத்தைத் தெரிவித்தேன். அவர் என்பால் பேரன்பு உடையவராதலின் மடங்களின் இடையிலேயுள்ள பகைமையைப் பாராட்டாமல், "அப்படியே செய்யலாம்" என்று சொல்லி விடை கொடுத்ததோடு  மடத்தின் முக்கிய காரியஸ்தராகிய ஸ்ரீ பொன்னுசாமி செட்டியாரென்பவரையும் உடன் அனுப்பி வண்டி முதலியவற்றையும் உதவினார்.


அன்று சனிக்கிழமை. காலையில் ஏழு மணிக்கு நான் பொன்னுசாமி செட்டியாருடன் தருமபுரம் சென்றேன். அந்த ஊரை அதற்குமுன் நான் பாராதவன்ஆதலின் அதனை முதன்முதலில் பார்த்தபோது எனக்குச் சிறந்த இன்பம் உண்டாயிற்று. காவிரிக் கரையில் உள்ள அவ்வூரின் இயற்கையழகைக் கண்டபோது சோழநாட்டின் பெருமையைப் புலவர்கள் வருணித்திருக்கும் பகுதிகள் நினைவுக்கு வந்தன.


மடத்திற்குச் சென்றேன். அங்கே நிலவிய ஒழுங்கான அமைப்பும் தவக்கோலம் பூண்டிருந்த தம்பிரான்களின் கூட்டமும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. திருவாவடுதுறை மடத்தில் அத்தகைய காட்சிகளைக் கண்டு ஈடுபட்டவனாதலின் தருமபுரத்திலும் அவற்றைக் கண்டபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. 'இதுகாறும் இங்கே வாராதது ஒரு குறையேஎன்றுகூட நான் எண்ணலானேன்.என் வரவைச் சொல்லியனுப்பிவிட்டு மடத்தினுள்ளே சென்றேன்.


அங்கே ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தனர். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்குமுன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டபோது அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்றெண்ணினேன்; 'திருவாவடுதுறை

மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமாஎதற்காக வந்தீர்?' என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரை மணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை.


நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்; "நான் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வருகிறேன். தமிழ் நூல்களை ஆராய்ந்து  பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறேன். இப்பொழுது பதிப்பிப்பதற்காகப் பத்துப்பாட்டு என்னும் சங்க நூலொன்றை ஸித்தம் செய்துகொண்டிருக்கிறேன். அதில் இடையிலே ஒரு பாகம் சிதைவாக இருக்கிறது. பல இடங்களில் தேடித் தொகுத்த சுவடிகளில் அந்தப் பாகம் காணப்படவில்லை. இந்த ஆதீனத்தின் பெருமையை நான் நன்றாக உணர்ந்தவன். இந்த ஆதீன வித்துவானாக இருந்த சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கத்தைப் படித்து இன்புற்றிருக்கிறேன். கவிதா சார்வபௌமராகிய ஸ்ரீ சிவப்பிரகாச  சுவாமிகளுடைய ஆசிரியர் இந்த மடத்தில் இருந்த வெள்ளியம்பலவாண முனிவரென்பரே. இன்னும் பல வித்துவான்கள் இந்த மடத்தின் ஆதரவு பெற்றுச் சிறந்த நிலையில் இருந்தார்கள்பல நூல்களை இயற்றியிருக்கின்றார்கள்ஆதலால் இங்கே பழங்காலந் தொடங்கிப் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கும். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற அவா எனக்கு நெடுநாட்களாக  இருந்தது. இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இடத்திற்கு வந்தால் சிதைந்த பாகம் கிடைக்குமென்று எண்ணி வந்தேன். ஸந்நிதானம் கட்டளையிட்டால் நான் வந்த காரியத்தைக் கவனித்துக்கொண்டு செல்வேன்.


மடத்துக் காரியஸ்தர்கள் சிலரும் உடன் இருந்தால் நான் விரைவில் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க அனுகூலமாக இருக்கும். இந்த உபகாரத்தினால் தமிழுக்கும் பெரிய சிறப்பு ஏற்படும். ஸந்நிதானத்தின் நன்றியை என்றும் மறவாமல் இருப்பேன்" என்று சொன்னேன்.


இவ்வளவையும் கேட்ட பிறகு அவர் தலை நிமிர்ந்தார். 'என்ன சொல்லுவாரோ?' என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர் போலக் காணப்பட்டார். பிறகு, "நாளை வரலாமே" என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. 'பிழைத்தேன்என்று நான் எண்ணிக்கொண்டேன்; 'இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததேஎன்று  மகிழ்ந்தேன். "உத்தரவுப்படியே செய்கிறேன்" என்று சொல்லி மறுநாள் வருவதாக விடைபெற்றுக்கொண்டு பொன்னுசாமி செட்டியாருடன் மாயூரம் சென்றேன். தருமபுரம் மாயூரத்திற்கு அருகில் தான் இருக்கிறது.


மாயூரத்தில் அக்காலத்தில் சிறந்த தமிழ் வித்துவானும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கரும் முன்ஸீப் வேலையில் இருந்து உபகாரச் சம்பளம் பெற்றவருமாகிய வேதநாயகம் பிள்ளை இருந்தார். அவர் வீட்டிற்குப் போனேன். அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் மெலிந்திருந்தார். அவரது உடல்நிலை கண்டு வருந்தினேன். அவர், "நான் இப்பொழுது வியாதியோடு சண்டை போடுகிறேன்என்னோடு அது சண்டை போடுகிறது. யார் ஜயிப்பார்களோ தெரியவில்லை" என்று சொன்னார். வியாதியே ஜயித்ததனால் அதன் பின் சில மாதங்களில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.


அன்று வேதநாயகம் பிள்ளையோடு பேசிப் பொழுது போக்கினேன். இராத்திரி முழுதும் எனக்குச் சரியாகத் தூக்கமே வரவில்லை. என் மனம் தருமபுரத்திலே இருந்தது. ஏடுகளைக் குவியல் குவியலாக என் முன் கொண்டுவரச் செய்து பார்ப்பதாகவும் எவ்வளவோ அரிய நூல்கள் இருப்பதாகவும் மனத்திலே பாவனை செய்து கொண்டேன். அந்த ஒரு இரவு ஒரு யுகமாகவே இருந்தது. எப்பொழுது விடியுமென்று காத்திருந்தேன்.


விடிந்தது. உடனே பொன்னுசாமி செட்டியாருடன் புறப்பட்டு ஏழு மணிக்குத் தருமபுரம் போனேன். அன்றும் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் முதல்நாள் இருந்த கோலத்திலேயே இருந்தார். அதே சாய்வு நாற்காலிஅதே மௌனமான நிலை. நானும் முதல் நாளைப்போலவே அருகிலே போய் நின்றேன்.


சிறிது நேரத்திற்குப்பின் அந்த மடத்திற் காறுபாறாக இருந்த ஸ்ரீ சாமிநாதத் தம்பிரானென்பவர் அவ்வழியே வந்தார். அவரோடு எனக்குப் பழக்கம் இல்லாவிடினும் என்னைப்பற்றி அவர் நன்றாக அறிந்திருந்தார். நான் தமிழ் நூல்கள் விஷயத்தில் மேற்கொண்ட உழைப்பையும் திருவாவடுதுறையாதீனத்திற்கு வேண்டியவனென்பதையும் அவர் தேசிகருக்கு எடுத்துச் சொன்னார். கேட்ட  தேசிகர் மெல்ல, "சரி ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாமே" என்று உத்தரவிட்டார்.


சில ஓதுவார்களையும் கணக்குப்பிள்ளைகளையும் எனக்கு உதவி செய்யும்படி தேசிகர் கட்டளையிட்டார். அவ்வாதீனத்துப் புஸ்தகசாலைக்கு அவர்கள் என்னை அழைத்துச்சென்றார்கள். அங்கே பல ஏட்டுச் சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் எடுத்து ஓரிடத்தில் தொகுத்து வைத்தார்கள்ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அவற்றைக் கண்டவுடனே எனக்கு வியப்பு உண்டாயிற்று. எல்லாம் பழைய ஏடுகளேபுதிதாக எழுதப்பட்ட ஏடு ஒன்றேனும் அதிற் காணப்படவில்லை. பலகாலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட அவ்வேடுகளை ஒவ்வொன்றாகச் சோதிக்கத் தொடங்கினேன்.


உடனிருந்தவர்களில் ஒரு சாரார் சுவடிகளின் கட்டை அவிழ்த்துக் கொடுத்தார்கள். நான் ஒவ்வொன்றாகப் பார்த்தேன். பார்த்தவுடன் அவற்றை மீண்டும் ஒரு சாரார் கட்டி வைத்தார்கள். சுவடிகளைப் பார்ப்பதும் ஒழுங்காகக் கட்டுவதுமாகிய காரியங்களில் அவர்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.


சுவடிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஸ்தல புராணங்கள்மகா புராணங்கள்பிரபந்தங்கள்சைவ சாஸ்திரங்கள் முதலிய பலவகைகள் இருந்தன. தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் உரைகளுடன் இருந்தன. சில நூல்களிற் பல பிரதிகளைக் கண்டேன். சிவதருமோத்திரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிகள் இருந்தன. அங்ஙனம் இருப்பதற்குக் காரணமென்னவென்று நான் விசாரித்தேன். "இங்கே துறவு பூண்பவர்களில் ஒவ்வொருவருக்கும் காஷாயம் கொடுப்பவர்கள் இந்த நூலின் பிரதி ஒன்றைக் கொடுப்பது இவ்வாதீனத்தின் வழக்கம். அதனால் இவ்வளவு பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன" என்று உடனிருந்தவர்கள் சொன்னார்கள். 

என்னுடைய தமிழாசிரியராகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ஒருமுறை சிவதருமோத்திரச் சுவடி எங்கும் கிடைக்காமல் அதனைப் பெறுவதற்கு எவ்வளவோ சிரமப்பட்டுக் கடைசியில் ஒரு மாணாக்கர் செய்த தந்திரத்தால் மிகவும் அரிதாகச் சில நாள் மட்டும் வைத்துக்கொள்ளும்படி ஒரு பிரதியைப் பெற்றார்கள்.(1) அவ்வரலாறு அப்பொழுது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.


ஏட்டுச் சுவடிகளைச் சோதித்து வரும்போது நான் பல அருமையான நூல்களைப் பார்த்தேன். அவற்றைப் பெறுவதில் எனக்கு விருப்பம் இருப்பினும் அதிகப் பழக்கமில்லாத அவ்விடத்திலுள்ளவர்கள் தருவார்களோ மாட்டார்களோ என்று அஞ்சி வாளாவிருந்தேன். அன்றியும் என்னுடைய நாட்டம் முழுவதும் பத்துப்பாட்டிலே தான் பதிந்திருந்தது. மிக விரைவாகச் சுவடிகளைப் பார்த்து வந்தேன். பகல் பன்னிரண்டு மணி வரையிலும் பத்துப்பாட்டு அகப்படவில்லை. பல நூறு சுவடிகளைப் பார்த்தேன்பயனில்லை. இடையிலே சிறிது நேரம் உண்ணுவதிற் போயிற்றுமற்றக் கால முழுவதும் சுவடிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.நாழிகை ஆகிக்கொண்டிருந்ததுபல சுவடிகள் சோதிக்கப்பட்டனபத்துப்பாட்டு மட்டும் அகப்படவில்லை.


சூரியன் மறைந்தான். அன்று சூரியோதய காலத்தில் என் மனம் தருமபுர மடத்து ஏட்டுச்சுவடிகளைக் காண்பதில் ஊக்கமும்நாம் தேடியது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உடையதாக இருந்தது. சூரிய அஸ்தமன காலத்திலோ என் நம்பிக்கை தளர்ந்தது. குறிஞ்சிப் பாட்டின் குறை நிரம்பாமலே போய்விடுமோ என்ற ஏக்கம் தலைப்பட்டது. விடுபட்ட மலர்களை நாம் காணக்கொடுத்து வைக்கவில்லையே என்று இரங்கினேன். குறிஞ்சிப்பாட்டிலுள்ள மலர்களெல்லாம் ஒரு மாலையாக என் அகக்கண் முன் வந்து நின்றன. அம்மாலையின் இடையிலே சில மலர்கள் உதிர்ந்தமையின் அது குறையாக இருப்பதுபோன்ற தோற்றத்தையும் நான் கண்டேன். 'ஐயோ! இந்த மாலை நிரம்புமா?' என்று எண்ணி எண்ணி நைந்தேன்.


இரவு வந்துவிட்டது. உயரமான குத்துவிளக்குகளை ஏற்றிக் கொணர்ந்தார்கள். அவற்றிலுள்ள சுடரைத் தொழுதுவிட்டு நான் மேலும் பார்க்கத் தொடங்கினேன். மணி ஏழு ஆயிற்றுஅதன்பின் எட்டு அடித்தது. மனக் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டே வந்தேன். 'இந்தத் தமிழ்நாடு தான் எவ்வளவு துரதிருஷ்டமுடையது!   இவ்வளவு அருமையான நூல்களைப் பறிகொடுத்துக் தவிக்கின்றதேஎன்று எண்ணி உருகினேன். ஒன்பது மணியும் ஆயிற்று.


அப்பொழுது ஆதீனத் தலைவராகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். அன்று அவர் மிளகுக்காப்புச் செய்துகொண்ட தினம். சடையுடையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்வது வழக்கமில்லை. மிளகு முதலிய சிறு பொருள்களைப் பால் விட்டு அரைத்துத் தேய்த்துக் கொள்வார்கள். அதற்குத் தான் மிளகுக்காப்பு என்று பெயர். தருமபுர ஆதீனத் தலைவர்கள் சடாதாரிகள். மாணிக்கவாசக

தேசிகர் மிளகுக்காப்புச் செய்து கொண்டமையால் அவருடைய சடை ஈரமாக இருந்தது. அதைப் புலர்த்துவதற்காக ஒரு தவசிப்பிள்ளை அதைக் கையில் தாங்கி நின்றான். மற்றொருவன் தூபமூட்டியைப் பிடித்து அதற்குப் புகை மூட்டிக்கொண்டு நின்றான். வேறொருவன் தூபமூட்டியில் தசாங்கம்சாம்பிராணி முதலியவற்றைப் போட்டுக் கொண்டிருந்தான்.


இந்த நிலையில் வந்து நின்ற தேசிகரைக் கண்டதும் நான் எழுந்தேன். அவர் நின்றபடியே கையமர்த்தி, "நீங்கள் அப்படியே இருந்து பாருங்கள்" என்று சொல்லி விட்டு சிறிது நேரம் நின்றனர். அப்பால், "ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டார். நான் மிக்க கவலையோடு, "பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. ஆனாலும்எனக்கு எது வேண்டுமோ அது கிடைக்கவில்லை. இங்கே இல்லையென்றால் வேறிடங்களில் இருக்க நியாயமில்லை. என்னுடைய அதிருஷ்டம் இப்படியிருக்கிறது" என்று சோர்வு புலப்படும் தொனியில் விடையிறுத்தேன்.


"இருந்திருக்கும்யாராவது கொண்டுபோயிருப்பார்கள்" என்று அவர் சொன்னார்.


"இந்த இடத்தைத் தவிரச் சுவடிகள் இருக்கும் இடம் இந்த மடத்தில் வேறு உண்டோ?" என்று கேட்டேன். வேலைக்காரர்கள் இல்லையென்று சொன்னார்கள்.


அப்பொழுது முன்னே குறிப்பிட்ட காறுபாறு ஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் அங்கே வந்தார். எனக்கு வேண்டிய சுவடி கிடைக்காமல் வருத்தத்தோடு நான் சொல்லிக்கொண்டிருந்தவற்றைக் கேட்ட அவர், "சில தினங்களுக்கு முன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியிற் கொண்டுபோய் விட்டுவிடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக் கொண்டு போனார்கள். அதில் சில பழைய ஒற்றை ஏடுகளைக் கண்டேன். ஒருவேளை மடத்துத் தஸ்தாவேஜாக இருக்கலாமென்று எண்ணி அவைகளை மட்டும் எடுத்துக் கட்டி என் பீரோவின்மேல் தனியே வைக்கச் செய்தேன்.  அவைகளில் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாம்" என்று சொன்னார்.


"பார்க்கிறேன்அவற்றைக் கொண்டுவரச் செய்தால் அனுகூலமாக இருக்கும்" என்று நயந்த குரலில் நான் கூறினேன். உடனே அவர் உத்தரவிடவே ஒருவர் சென்று ஒரு கட்டு ஒற்றை ஏடுகளை எடுத்துக் கொணர்ந்து என்முன் போட்டார். மிக்க ஆவலோடு அவற்றைப் பார்க்கத் தொடங்கினேன். அந்தக் கட்டில் பலவகையான அளவுள்ள ஒற்றை ஏடுகள் இருந்தன.சிலவற்றில் கணக்கு எழுதப்பட்டிருந்ததுசிலவற்றிற் பெரிய புராணச் செய்யுட்கள் காணப்பட்டனஇலக்கணச் சுவடிகளின் ஏடுகள் சில காணப்பட்டன. அவற்றைப் பார்த்து வந்தேன்.


ஓர் ஏட்டைப் படித்துப் பார்த்தேன். அது பத்துப்பாட்டாக இருந்தது. அக்காலத்தில் பத்துப்பாட்டு உரை முழுவதும் என் ஞாபகத்தில் இருந்தது. அதனால் அந்த ஏட்டிலிருந்தது பத்துப்பாட்டு உரையே என்பதைக் கண்டுகொண்டேன். என் உள்ளம் சிறிதே ஊக்கம் பெற்றது.


அப்பால் அந்த ஏட்டின் அளவில் இருந்த வேறு ஏடுகளையெல்லாம் தொகுத்தேன். அவற்றைப் படித்துப் பார்க்கவோ நேரமில்லை. மணி பத்துக்குமேல் ஆயிற்று. மறுநாள் நான் கும்பகோணத்தில் இருக்க வேண்டியவன்ஆதலின் அந்த ஒற்றை ஏடுகளை அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஆராயலாமென்று எண்ணினேன். ஆதீனத் தலைவரிடம், "இப்பொழுது நாழிகையாயிற்று. நான் விடியற்காலையில் மாயூரம் சென்று ரெயில் வண்டியேறிக் கும்பகோணம் போகவேண்டும். ஸந்நிதானத்தில் உத்தரவானால் இந்த ஒற்றியேடுகளை எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறேன். இதில் எனக்கு வேண்டியவைகளை மற்றும் பொறுக்கிக்கொண்டு கணக்கு முதலியவை இருந்தால் ஜாக்கிரதையாக அவற்றைத் திரும்பச் சேர்ப்பித்து விடுகிறேன். இதில் சிறிதும் சந்தேகம் கொள்ளவேண்டாம்" என்று கூறினேன்.


"அப்படியே செய்யலாம். அதில் என்ன தடை?" என்று தேசிகர் அன்போடு கூறினர். முதல்நாள் வந்தபோது அவர் இருந்த நிலையையும் அப்பொழுது அவர் அன்போடு கவனித்துக் கொண்டிருந்து ஒற்றை ஏடுகளைக் கொண்டுபோகும்படி  அனுமதியளித்ததையும் நினைக்கும்போது எனக்கு வியப்புண்டாயிற்று. "எல்லாம் திருவருட் செயலே" என்று எண்ணி ஆறுதல் அடைந்தேன்.


ஐம்பது அறுபது ஒற்றையேடுகளை அப்படியே கட்டிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றுப் புறப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தேன். அன்றிரவு நான் உணவு உட்கொண்டேனோஇல்லையோ ஞாபகம் இல்லை.


மறுநாட்காலை ரெயில் வண்டியிலேறிக் கும்பகோணம் வந்தேன். கொண்டுவந்த ஒற்றையேடுகளைப் பிரித்துப் பார்த்தேன். சில பத்துப்பாட்டு உரை ஏடுகள் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமல் கலந்திருந்தன. ஆத்திரத்தோடு ஒவ்வொன்றாகப்  பார்த்தேன். நான் எந்தப் பாகம் காணாமல் தவித்தேனோ அதை ஓர் ஏட்டிலே பார்த்தேன். என் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரே மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. என் கண்களைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தேன்ஏட்டையும் துடைத்துப் பார்த்தேன்.குறிஞ்சிப்பாட்டுத்தான் என்பதில் சந்தேகம் இல்லவிடுபட்ட மலர்களையே நான் அதில் கண்டேன்:


'தேமா- தேமாம்பூமணிச்சிகை- செம்மணிப்பூஉரிது நாறு அவிழ் தொத்து/ உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரித்த கொத்தினையுடைய பெருமூங்கிற் பூ' (குறிஞ்சிப்பாட்டு. 64.5உரை) என்ற சிறுபகுதியே விடுபட்டிருந்தது. என் மனம் ஆறுதலுற்றது. இழந்த குழந்தையைக் கண்டெடுத்த தாய்க்கு உண்டாகும் மகிழ்ச்சியைத்தான் நான் அதற்கு உபமானமாகக் கூறலாம்.


விடுபட்ட மலர்கள் மூன்றே. ஆனாலும் அந்த மலர்களைத் தேடி என் மனம் அலைந்தது. மூன்று என்பது அதற்குமுன் எனக்குத் தெரியாது. மூன்றாக இருந்தால் என்னமுப்பதாக இருந்தால் என்னகுறை குறைதானேஅப்பால் குறிஞ்சிப்பாட்டு முழுவதையும் செப்பஞ் செய்துகொண்டேன். குறை நிரம்பிய குறிஞ்சிப்பாட்டை இப்பொழுது பத்துப்பாட்டுப் பதிப்பிற் காணலாம்.


பத்துப்பாட்டு ஏடுகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு மற்றவற்றை நான் வாக்களித்தபடியே தருமபுர மடத்திற்கு அனுப்பிவிட்டேன். அவற்றை அனுப்பும்போது எனது மகிழ்ச்சியையும் நன்றியறிவையும் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினேன்.


தருமபுர மடத்தில் இப்பகுதி கிடைத்ததைப் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் (2) குறித்திருக்கிறேன். அங்கே கிடைத்த ஒற்றை இதழ்களில் உதிர்ந்த அம்மலர்களைக் காணாமல் இருந்தால் பத்துப்பாட்டின் முதற் பதிப்பு அச்சிறு  குறையோடேதான் வெளிவந்திருக்கும். அக்குறை நேராதபடி ஆண்டவன்

காப்பாறினான். குறிஞ்சிப்பாட்டுகுறை நிரம்பப் பெற்றதுஅதனால்,

"(3)ஆன்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து

சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரியல் (4)"

ஆகிய பத்துப்பாட்டு முழு உருவத்தோடு வெளிவந்து மணக்கின்றது.


அடிக்குறிப்பு

(1) ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்பாகம் 1பக்கம் 108 - 16.

(2) 3-ஆம் பதிப்புபக்கம் 489அடிக்குறிப்பைப் பார்க்க.

(3) நச்சினார்க்கினியர் உரைச்சிறப்புப்பாயிரம்.

(4) தெரியல் - மாலை.