நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 31 டிசம்பர், 2018

யாராலும் அழிக்க முடியாத இயக்கம் செங்கொடி இயக்கம் : ஜி. ராமகிருஷ்ணன்



யாராலும் அழிக்க முடியாத இயக்கம் செங்கொடி இயக்கம் : ஜி. ராமகிருஷ்ணன் பேச்சு
கீழ வெண்மணி ; ஐம்பதாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கீழ வெண்மணியில் நிலச்சுவான்தார்களுக்கும், கூலி உயர்வு கேட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக ஆண்டுதோறும் டிச. 25-ல் வெண்மணித் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

கீழவெண்மணி சம்பவத்தின் பின்னணி :
1968 டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் , ஏசுநாதர் பிறந்த நாள் விழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை ஜில்லா கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் அது கொடிய விடியலாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.


தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை படி நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளூர் விவசாயத்தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட நாகை வட்டார நிலப் பிரபுக்களின் தலைமையில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.

25.12.1968 அன்று மாலை மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலிலிருந்து தப்பிக்க இராமையா என்பவரின் குடிசைக்குள் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல வயதினரும் அடைக்கலம் புகுந்தனர். அந்தக் குடிசையை தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் 44 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நடந்த, நெஞ்சை உலுக்கும் கொலை சம்பவங்களில், தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர்25ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலை குறிப்பிடத்தக்கதாகும். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய படுகொலை இது.
ஐம்பதாண்டு நினைவு தினம் :
1968 டிச. 25இல் நடைபெற்ற இச்சம்பவத்தின் ஐம்பதாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது,
நிலச்சுவான் தாரர்களுக்கு எதிராக தங்கள் உரிமையை நிலைநாட்ட விவசாயிகள் போராடிக்கொண்டிருந்த போது, 1970இல் முதலமைச்சர் கருணாநிதி திருவாரூர் வருகிறார், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அவரை வந்து சந்தியுங்கள் என்று நிலச்சுவான் தாரர்களைத் திமுக வினர் சொல்லினர். அப்போது அவர்கள் சொல்லியது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.

ஜி.வீரையன், பி.எஸ்.தனுஷ்கோடி உள்ளிட்ட தோழர்களிடம் நிலத்தை விநியோகம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மிராசுதாரர்கள் இரவில் கூடினார்கள். உணவு பரிமாறுவதற்குத் தயாராக இருந்தபோது, ஜி. வீரையன் கூறினார், “இப்படி எத்தனை பேரை சோறு போட்டு, ஏமாற்றி இருப்பீர்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை கை நனைக்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டார். பத்து மணிக்கு மேல் பேச்சு வார்த்தை தொடங்கியது. அதிகாலை நான்கு மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் தோழர் ஜி.வீரையன், தனுஷ்கோடி ஆகியோருடன் நிலவுடைமையாளர்கள் கையெழுத்திடுகின்றனர். கையெழுத்திடுகையில் வலிவலம் தேசிகர் முப்பது நாற்பது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடத்தப்பட்டன., யாராலும் அழிக்க முடியாத இயக்கம் தான் செங்கொடி இயக்கம் என்று தெரிவித்ததாக ஜி.வீரையன் பதிவு செய்கின்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, அமைச்சராகக் கூட இல்லை. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடி வெற்றி பெற்றது.

நிலமனைத்தும் ஜமீந்தார்களிடமும், நிலச்சுவான் தாரர்களிடம் இருந்து வந்த காலத்தில், விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வந்த இடம் அவர்களுக்கு உரிமையானது எனப் போராடி, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா வாங்கித் தந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. தொழிலாளர்களுக்காக இன்றும் போராடி வருகிறது. சாதிக் கொடுமை, நிலவுடைமை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினோம், இன்று தவறான பொருளாதாரக் கொள்கை, மதவாதத்தை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவற்றை வெண்மணித் தியாகிகளின் ஐம்பதாமாண்டு நினைவு தினத்தில் மனதில் நிறுத்தி போராடுவோம். என்று ஜி.ராமகிருஷ்ணன் பேச்சை நிறைவு செய்தார்.

உரையங்கிற்குப் பிறகு, நிமிர் கலைக்குழுவின் பறை நிகழ்ச்சியும், பிரகதீஸ்வரன் குழுவினரின் நிகழ்ச்சியும், கவிஞர் முத்துநிலவன், பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் உள்ளடக்கிய விவாத அரங்கம் அரங்கேறியது. கீழவெண்மணி நினைவிடம் ஐம்பதாமாண்டில் திறக்கப்படும் என்று மக்கள் ஆவலாக இருந்தனர். ஆனால், கஜா புயல் மற்றும் தொடர்ச்சியான மழையால் கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டது. நிலநடுக்கம் வந்தால் கூட ரிக்டர் அளவுகோலில் எட்டு வரை இந்தக் கட்டுமானம் எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாகாது என்பது இக்கட்டிடத்தின் கூடுதல் சிறப்பு.

கீழவெண்மணி சம்பவத்தின் ஐம்பதாம் ஆண்டில் 44 உயிர்களை நினைவு கூர்வோம்.

-த.க.தமிழ்பாரதன்

25.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக