நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 31 டிசம்பர், 2018

ஆளுநர் எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் – அற்புதம் அம்மாள்


ஆளுநர் எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் அற்புதம் அம்மாள்
மேனாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் ஆதரவுக் குரல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் எழுவர் விடுதலைக் குறித்த கருத்தரங்கம் திருவாரூரில் நேற்று (23.12.2018) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் அம்மாள் கலந்துகொண்டு பேசினார், அவர் பேசியதிலிருந்து

வருமானத்திற்கேற்றார் போல் வாழ வேண்டும் என்பதற்காக பெரியார் கொள்கை அடிப்படையில் அரசுப் பள்ளியில் தான் என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். தொழிற்கல்வி படிக்க வைக்க வைத்தோம். எலக்ட்ரிகல் மற்றும் கம்யூனிகேசனில் டிகிரி கூட அல்ல டிப்ளமோ படித்தவன் தான் பேரறிவாளன். பேட்டரி வாங்கிக் கொடுத்தவனை குண்டு செய்தவனே பேரறிவாளன் தான் என வெடிகுண்டு நிபுணனாகவே பிரகடனப் படுத்தினார்கள் சிபிஐ.
அன்று அவர்கள் சொன்னதை ஆதரித்த ஊடகங்கள், இன்று உண்மைகள் வெளிவந்த பின் என் பக்கம் வந்திருக்கின்றன. 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த பின்பு, உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்திருந்தது. தற்போது, மீதமுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. தமிழ்நாடு அரசு அதற்குத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்.? சட்டப்படி அறிவிக்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்துவதில் தயக்கம் என்ன இருக்கிறது.  அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால், அதற்கான காரணத்தையாவது தெளிவுபடுத்த வேண்டும்.  
ஜோடிக்கப்பட்ட வழக்கு, தில்லு முல்லு நடந்தேறி இருக்கிறது. கொலை செய்தவர்கள் இறந்துவிட்டார்கள், ஆனால், கொலைக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இவ்வழக்கில் ஆயிரம் குளறுபடிகள், ஏன் ஏன் என்று கேள்விகள் கேட்கலாம். ஆனால், கேட்கத் தேவையில்லாத சூழல் வழக்கு முடிந்து விட்டது. விசாரணைக்கு என்று சொல்லி அழைத்துச் செல்லும் போது, வெறும் 19 வயது. இன்று பேரறிவாளனுக்கு வயது 47.
அந்த குண்டு எங்கு வடிவமைக்கப்பட்டது, யார் வடிவமைத்தார்கள் என்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கைத் தொடுத்தவர் வேறு யாருமல்ல, என்னுடைய மகன் தான்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவனை, இன்று வெளியாவார், நாளை வெளியாவர் என எதிர்பார்த்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தவறு செய்யவில்லை, அதனால் தண்டனை அனுபவிக்கக்கூடாது. ஆனால், தண்டனையும் அனுபவித்தபின் விடுதலை செய்யத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. யார் சிறையிலிருந்து விடுதலையானாலும், நான் எதிர்க்கமாட்டேன் பெரியாரைப் படித்த என்னுடைய நிலைப்பாடு இதுதான். முழுவதும் தண்டனையை அனுபவித்த ஒருவன் விடுதலையாவதில் என்ன இருக்கிறது ? எத்தகைய குற்றம் புரிந்தவனையும் திருத்தி இந்த சமுதாயத்தோடு வாழ வைக்க வேண்டும். தற்போது, தான் கிருஷ்ணையரை நினைவிற்கொள்கிறேன். 8 வருடத்தில் ஒருவனைத் திருத்த முடியவில்லையெனில் ஏன் சிறை வைத்திருக்க வேண்டும் என்று கேள்விகேட்டவர். அவர் நீதிமான். இன்று அவர் இருந்திருந்தால், ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தன்னால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்திருப்பார். 
என்னிடம் கேள்வி கேட்பவர்கள் எல்லாருமே பிஜேபி அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறதென நினைக்கிறீர்களா எனுமாறு தான் கேள்வியே கேட்கின்றனர். எல்லாவற்றையும் நானே பதில் கூற வேண்டும் என்பதில்லை. மக்கள் பார்க்கிறார்கள், முதல் முறை காங்கிரசு ஆட்சியிலும், பின்னர் பிஜேபி ஆட்சியிலும் இந்த எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு இருந்தது.
இந்த வழக்கால் யார் யாருக்கு ஆதாயம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்த வழக்கை நீட்டிப்பது என்பதே உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முயற்சி தான்.  இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் இந்த ஏழு பேரும் சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் கருத்து. சாதாரண மக்கள் நாங்கள் எப்படி சட்டத்தை மதிக்கிறோமோ? அதிகாரத்தில் இருப்பவர்களும் சட்டத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதை உணரவேண்டும்..! அதிகார துஷ்பிரயோகம் தவிர்க்கப்படவேண்டும். ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா நிச்சயம் ஆளுநரை வற்புறுத்தி இருப்பார்கள், எனக்கே நம்பிக்கை கொடுத்தவர்கள் அவர்கள் என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, சொன்னார்கள் சொர்க்கவாசல் திறந்துவிட்டது. பெருமாள் வெளியே வந்துவிட்டார் என்று. ஆனால், சிறைவாசல் திறக்கப்படுவது எப்போது
முன்னதாக த.ரெ.தமிழ்மணி, கலைபாரதி ஆகியோரின் நூல் வெளியீடு நிகழ்ந்தது. அந்நூல் குறித்த விமர்சனங்களை சிலர் வழங்கினர். அதனை உணர்ந்து இரசிக்கக் கூட முடியாத அளவிலான போராட்டக் களத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
மொத்தத்தில் எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஆளுநர் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த பேரறிவாளனைப் பெற்றெடுத்த அற்புதம் அம்மாளின் ஒட்டுமொத்தக் கருத்து.

த.க.தமிழ்பாரதன்
திருவாரூர்
23.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக