நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 9 டிசம்பர், 2019

நெல் ஜெயராமன் மரணமும் மர்மமும் !? (இயற்கையை முன்வைத்து அரசியல்)


நெல் ஜெயராமன் மரணமும் மர்மமும்
அறிமுகம் :
தமிழகத்தில் இயற்கை வேளாண் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் நம்மாழ்வார். அதில் விளைந்த வீரிய வித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியைச் சேர்ந்த நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக இருந்து 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டுருவாக்கியவர்.
2006 லிருந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடக்கும் நுகர்வோர் நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக விண்ணப்பிக்க வேண்டுமெனில், விண்ணப்பத்தோடு கட்டுரை இணைத்து அனுப்ப வேண்டும். 2014இல் விண்ணப்பிக்கையில் உள்ளூர் பிரபலம் அவரது செயல்கள் பற்றிய பேட்டிக்காக நெல் ஜெயராமன் அவர்களிடம் இயற்கை வேளாண்மை மற்றும் நெல் திருவிழா குறித்து பேட்டி எடுத்து அனுப்பியிருந்தேன். 
தேர்வாகி கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் ஊடகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் நிகந்த போதிலிருந்தே தேசிய நெல் திருவிழாவிற்குச் செல்வதுண்டு. இயற்கை விதை நெல்லை விவசாயிகளுக்கு கொடுத்து, கொடுக்கப்பட்டதன் இரட்டிப்பு பங்கினை அடுத்த ஆண்டு திரும்பப் பெறுதல் இதன் முதன்மை நோக்கமாகும். நம்மாழ்வார் உள்ளிட்ட வேளாண் முன்னோடிகள் தங்கள் வாழ்வனுபவங்களை-திட்டங்களை-பயிரிடு முறைகளை விதந்தோதி பிற விவசாயிகளை ஆற்றுப்படுத்துவர். அங்கு தரமான கம்மங்கூழ், கேப்பை கூழ், மூலிகை பானம், இன்னபிற இயற்கை உணவுகள் தாராளமாகக் கிடைக்கும்.
சில ஆண்டுக்குப் பின், திருத்துறைப்பூண்டி ஏஆர்வி மண்டபத்தில் நெல் திருவிழா நிகழத்தொடங்கி செம்மையாகவே சென்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கே.சந்திரசேகரன் மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் பிறை.அறிவழகன் முதலான சமூக ஆர்வலர்கள் இறந்தபின் அவர்களின் நினைவாக அரங்குகள் நடத்தி அஞ்சலி செலுத்தினார் நெல் ஜெயராமன். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2018 தேசிய நெல் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தியிருந்தார்.


 புற்றுநோய் பாதிப்புக்குப் பின்னரும் 2018இல் நடத்திய நெல் திருவிழாவில்
புற்றுநோயால் மரணம்:
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன்   உடல்நலக்குறைவால் 06.12.2018 காலை 05.10 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல் சென்னையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது‌. பல்வேறு கட்சியினர் திரையுலகப் பிரபலங்கள் பொதுமக்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அன்று இரவு அவரது உடல் சென்னையிலிருந்து அவர் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
அவரது இல்லத்தில்...
07.12.2018 காலை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி உரை நிகழ்த்திய அமைச்சர் காமராஜ், அவரது மருத்துவச்செலவை அரசு ஏற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். திருச்சி சிவா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் இலக்கியத்திற்கு உ.வே.சா, சி.வை.தா ஆகியோரின் பணி போல், தமிழக வேளாண் உலகிற்கு நம்மாழ்வார்நெல் ஜெயராமன் ஆகியோரின் பணி போற்றத்தக்கது என்றார்.
நண்பகல் 12 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின.  12.30 மணியளவில் இறுதிஊர்வலம் தொடங்கியது. 1 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அலுவல் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட ஆட்சியர் மயானத்தில் கொள்ளி வைப்பதற்கு முன்னதாக நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இயற்கை வேளாண்மைக்காகப் போராடியவரின் இறுதி நிமிடம்
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த ஊருக்கு அவரது உடலைக் கொண்டு வரும் செலவையும், அவரின் குழந்தையின் கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். நெல் ஜெயராமனின் மறைவுக்கு தமிழகத்துக்கும் வேளாண்மைத்துறைக்கும் மிகப்பெரும் இழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார். 
2019 :
திருத்துறைப்பூண்டி ஏஆர்வி மண்டபத்தில் 2019 ஜூன் 8,9இல் தேசியத் திருவிழா நெல் ஜெயராமன் பங்கெடுத்திருந்த இயக்கத்தினர், நண்பர்கள், இயற்கை ஆர்வலர்களால் செம்மையுற நடந்தேறியது. இத்திருவிழா தொய்வின்றி நடக்கும்வரை இயற்கை வேளாண்மை மீதான நாட்டம் பரவலாக அதிகரித்துக்கொண்டே வரும்.
ஜெயராமன் < நெல் ஜெயராமன்
இருபத்தோறாம் நூற்றாண்டில்தான் வெளியுலகிற்குப் பரவலாக அறியப்படுகிறார் நம்மாழ்வார். தம் பயணங்களில் பல மனிதர்களை இயற்கையின் பக்கம் திருப்புகிறார். அகவை முதிர்வின் காரணமாக நம்மாழ்வார் இயற்கையாக மரணமடைகிறார். அப்போது தமிழக இயற்கை வேளாண்மையில் வெற்றிடம் உருவாகிறது.
வேளாண்மை அழிந்து வருகிறது, செயற்கை உரங்களால் மண் மலடாகி வருகிறது, இது தவிர்த்து, காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றால் இயற்கை வளமே இல்லாது போகும் சூழல் ஒருபக்கம். காவிரியில் நீர்வரத்து சரியாக இல்லை, மாற்றுப் பயிரிடலில் முறையான விளைச்சலில்லை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை. இவற்றுக்கிடையே இவையாவற்றையும் தாண்டி விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றி, இயற்கை சார்ந்து பயிரிட்டு சாதிக்கலாம் என்பதை மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்து செயல்படுத்திக் காட்ட வேண்டிய தேவை இருந்தது.
நெல் திருவிழாவில்  முன்னோடி விவசாயியின் ஆற்றுப்படுத்தல்
அதைச் செய்து காட்டியவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாருக்குப் பின்னான, நெல் ஜெயராமனின் வளர்ச்சி அதீதமானது. நம்மாழ்வாருக்குப் பின் இயற்கை வேளாண்மையின் அடையாளமாக நெல் ஜெயராமன் பரவலாக அறியப்பட்டார். மத்திய அரசிடம் அவர் விருது பெற்று வந்த பின்னர், திருவாரூர் செல்வீசு அரங்கில் பாராட்டுவிழா நடத்தப்பெற்றது. தோழர் ஜீவி உள்ளிட்ட திருவாரூரைச் சேர்ந்தவர்களும் ஏனைய முற்போக்காளர்களும் சேர்ந்து பாராட்டு விழாவை சிரத்தையோடு நடத்தினர்.
நெல் திருவிழாவை இடையறாது நடத்தி, மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவும் இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கியதாலும் ஜெயராமன் நெல்எனும் அடைமொழிபெற்று நெல் ஜெயராமனாக உருவானார்.
நெல்ஏற்படுத்திய தாக்கம்
நம்மாழ்வாருக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தில் இலகுவாக நெல் ஜெயராமன் பொருந்தினார். தமிழக வேளாண்மையின் அடையாளமாக(icon) மாறினார். அவர் அரசாங்கத்தோடு பெரும்பாலும் முரண்களை சந்திக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் நெல் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். ஓஎன்ஜிசி நிதி ஆதரவில் நெல் திருவிழா நடத்தப்பெறுவதா? நடிகர் விஷால் நெல் திருவிழாவில் கலந்துகொள்வதா? என அவ்வப்போது சிலரின் மனக்கசப்புக்கு ஆளானாலும், இடையறாது இயங்கும் நெல் ஜெயராமனுக்கு அவற்றைக் கடப்பது பெரிய விடயமில்லை. இயங்கினார், இயங்கினார், இயங்கினார் இயங்கிக் கொண்டே இருந்தார்.
பரந்துபட்ட இந்திய தேசத்தின் அடிப்படையாக நான் கருதுவது கூட்டுறவு. கூட்டுறவு ஒழிந்து கார்ப்பரேட் கலாச்சாரம் தழைத்தோங்கியதே இன்று நடக்கும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்குக் காரணம்.
நெல் திருவிழாவில் ஒரு பகுதியினர்
நெல் திருவிழாவின் நோக்கத்தைச் செம்மையாகச் செயல்படுத்தினார். நெல் ஜெயராமன் தன்னை ஒரு கார்ப்பரேட்டாகக்  கட்டமைக்கவில்லை. கூட்டுறவாகக் கட்டமைத்தார். ஒரு கிலோ விதைநெல்லைப் பெற்றுச்செல்லும் விவசாயி, அடுத்த ஆண்டு இரட்டிப்பாக திரும்பத் தருகிறான். இதேபோல், ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு விவசாயிக்குச் செல்கிறது, அவனும் பயனடைகிறான், கொடுக்கப்பட்ட விதைநெல்லும் இரட்டிப்பாகத் திரும்பக் கிடைக்கிறது. தமிழகத்தின் எல்லா விவ்சாயிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் நெல் திருவிழா நடக்கிறது.
உழவின் ஆதாராமான (தரமான) விதை நெல் எல்லாருக்கும் கிடைக்கிறது. எல்லாரும் அதனை வாங்கும் தன்மையும் எளிதாக இருக்கிறது. இதற்குக் காரணம் நெல் ஜெயராமன். அவர் கட்டமைத்திருக்கும் கூட்டுறவான அமைப்பு. 2006இல் இருந்த ஜெயராமனாக இருந்தவர் 2016இல் நெல் ஜெயராமனாக அறியப்பட்ட போது நூறு மடங்கு வளர்ந்திருந்தார். நகரத்திற்கு நகரம் ஆங்காங்கு, புத்தகக் கண்காட்சிகள் நடப்பதுபோல, வேளாண் கருத்தரங்குகள், வேளாண் விற்பனைகள் நடப்பதற்கு அடிப்படையானார்.
தமிழகத்தின் நிலை
தமிழகத்தின் திரை இயக்குநர்கள், நாயகர்கள் இயற்கை வேளாண்மை பற்றி பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இன்று தமிழகப் பாடத்திட்டத்திலேயே இடம்பெறுமளவு வளர்ந்தார். அவரது பிம்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி தமிழக இயற்கை வேளாண்மையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மதிப்பு கூட்டப்பட்ட இயற்கைப் பொருட்களின் விற்பனையகமாக இயற்கை அங்காடிகள் சிறுமுதலீட்டில் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்டன. இரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றால் அவதிப்பட்டு மக்கள் வெளிச்சந்தையில் அரிசி வாங்குவதைக் குறைக்கத் தொடங்கினர். உழுவித்த உழவர்களிடம் மக்களே நேரடியாக அரிசியைப் பெற்றுக்கொண்டு பணம் தரலாயினர்.
விதைநெல்
இடைநிலைக் குடும்பங்களை பெரும் சந்தையாகக் கொண்ட தமிழகத்தின் அரிசி விற்பனை பெரும் சரிவைக் காணவில்லையெனிலும் சரிவைக் காணுவதன் தொடக்கமாக இது அமைந்தது. தனியார் ப்ராண்டில் அரிசிகள் விற்பனை செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதற்கிடையே ப்ளாஸ்டிக் அரிசி மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இயற்கை பக்கம் மக்களின் கவனம் திரும்பத் தொடங்கியது. இயற்கையின் மீது நேரடி ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையெனினும், நோய்களிலிருந்து விடுபட இயற்கையின் பக்கம் திரும்புவது சரியானதாக இருக்குமென மக்கள் முடிவெடுக்கத் தொடங்கினர். இது சிறுதுளி தான் எனினும், பெருவெள்ளம் ஆவதற்கான எல்லாச் சூழற் களன்களையும் சமூகம் ஏற்படுத்தித் தந்தது. 
மரணமும் மர்மமும்
இதற்குப் பின்னணியில் நெல் ஜெயராமன் விதைநெல்லாக இருந்தார். சலனமற்ற வெளியில் காற்றுருவாக்க சிறு அசைவை ஏற்படுத்தும் புல்லாக அவரது செயல்கள் இருந்தன. கடைசியாக அவர் வெளிநாட்டிற்கு (பிலிப்பைன்ஸ்) சென்றிருந்தார். சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையமான (IRRI)இல் உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு அவரை அழைத்தது. உரையாற்றி தமிழகம் திரும்பிய பின் தோல் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது.
சென்னையில், சமூக ஆர்வலர் செந்தூர்பாரி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார் முதலானவர்களின் உதவியில் முதன்மையான மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சையில் ஓரளவு தேறி 2018 நெல் திருவிழாவை செம்மையுற நடத்தினார். கதிரியக்க-கீமோதெரபி சிகிச்சையால் அவரது தோல் ஆங்காங்கு வெளுப்படைந்திருந்தது. ஊடக கவனம் அவரது சிகிச்சை மீதிருந்தது. தமிழ்த் திரையுலகம் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்து நலம் விசாரித்தது. அரசியல்வாதிகள் அவரது உடல் முன்னேற்றத்தை அவ்வப்போது தெரிந்துகொண்டிருந்தனர்.
06 டிச. 2018 அவர் மறைந்தார் எனும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனெனில், புற்றுநோயாளி மரணிப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்கள் வந்திருந்தார்கள். மரணத்தை ஏற்றுக்கொண்டனர். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே அவருக்குப் புற்றுநோய்த் தாக்குதல் இருப்பதறிந்து சிகிச்சை வழங்கப்பட்டாலும் சிறிது சிறிதாக உடல்நலம் குன்றத் தொடங்கியது. அவரது மரணம் கண்காணிக்கப்பட்டது எல்லாராலும். 

2015இல் ஆதிரெங்கத்தில் நிகழ்ந்த தேசிய நெல் திருவிழா
இடையறாது உழைத்து இடைநிலை வயதில் மரணித்தவர்கள் வரலாறெங்கிலும் ஏராளம். ஆனால், அம்மரணத்திற்கான காரணங்கள் நோக்கப்படவேண்டியவையே. அவ்வகையில் நெல் ஜெயராமனின் மரணம் இயற்கையானதன்று.
நெல் ஜெயராமனின் மரணத்தால் என்னவெல்லாம் கட்டமைக்கலாம்:
இந்த அரிசியில் இந்த சத்து, இந்த அரிசி சாப்பிட்டால் சர்க்கரை வராது, இந்த திணைவகை உடலுக்கு வலிமை கொடுக்கும் என்று நம்மாழ்வார் அறிமுகப்படுத்த மக்கள் நம்பிக்கை அதன்பக்கம் திரும்பியது. இயற்கையின் பக்கம் திரும்பிய மக்களின் நம்பிக்கையை தகர்ப்பச் செய்வதாக நெல் ஜெயராமனின் மரணம் இருந்தது.
இயற்கை வேளாண்மையில் விளைந்தவற்றை உண்டு வாழ்ந்தாலும் நோய் ஏற்படும். இயற்கையில் விளைந்த பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியாது. மரணம் என்பதை இயற்கை வேளாண் உணவால் தள்ளிப்போட இயலாது போன்ற கருத்தாக்கங்களை நெல் ஜெயராமனின் மரணம் இலகுவாக்கியது.
//இவ்வளவு உபதேசம் செய்யும் சித்த மருத்துவர் சிவராமனால் அவரது உடல்பருமனைக் குறைக்க முடியவில்லை// என்பதை நக்கலாகச் சொல்லும் நவநாகரீக நபர்களைக் கண்டிருக்கிறேன். //முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை// என்று தன் முன்னோர்களின் அறிவுநுட்பங்களைப் பகடி செய்யும் பட்டதாரி அறிவிலிகள் சூழ்ந்த தமிழகத்தில் நெல் ஜெயராமனின் மரணம் இயற்கை மீதான பிம்பத்தைக் கட்டுடைத்திருக்கிறது.
அவருடலில் தோல் புற்றுநோய்க் கிருமிகள் தோன்றியதா? தோற்றுவிக்கப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. பிலிப்பைன்ஸ் சென்று திரும்பிய பின்னரே உறுதிசெய்ப்பட்டதெனில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்தது என்ன? மேலும்,
*புற்றுநோய் வகை
*அதற்கான காரணம்
*நோய்த்தாக்குதல் வந்த விதம்
*தமிழகத்தில் அதற்கான சாத்தியம்   
*காலம் முழுவதும் இயற்கை வேளாண் உணவை உண்டவருக்கு இந்நோய்த் தாக்கும் திறன் உண்டா?
என்பனவற்றுக்கு உரிய பதில் கிடைத்தாக வேண்டும். நெல் ஜெயராமனின் உடல் தகனத்திற்குப் பின் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடத்துப் பேட்டி எடுக்கையில் அவர் சொன்ன தகவல் வருமாறு. “கீழத்தஞ்சையில் ஒரு கூட்டத்தில் ஜெயராமன் பேசுகையில், தன்னுடைய புற்றுநோய் குறித்த பல்வேறு கேள்விகளையும் வேறு சில சமூக செயற்பாட்டாளருக்கும் இதே போல நோய்த்தாக்குதல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.”
இது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகவே கருதுகிறேன். ஒட்டுமொத்த உலகையும் கார்ப்பரேட் கையாள வேண்டும் என்று செயல்பட்டுவரும் வேளையில் நெல் ஜெயராமன் போன்று கூட்டுறவைக் கட்டமைப்பவர்கள் மீதும் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்கிற செயற்பாட்டாளர்கள் மீதும் நோய்த்தாக்குதல் கட்டவிழ்க்கப்பட்டால் அது முளைக்குமுன்னரே பிடுங்கவேண்டிய களை.
இலகுவாக, நெல் ஜெயராமனின் மரணத்தைக் கடக்க முடியாது. மனித உரிமை ஆர்வலர்கள் மேலும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு அவரது மரணம்-புற்றுநோய்த் தாக்குதலின் பின்னணி முழுமையான விசாரணை செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.
-த.க.தமிழ் பாரதன் | 09.12.2019
படங்கள் : க.சதீஷ் குமார் (வெவ்வேறு ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை)
     


1 கருத்து: