நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 31 டிசம்பர், 2019

2009 தேசிய மலையேறும் பயிற்சி முகாம் - கேரளா

என்சிசி NCC – தேசிய மாணவர் படை
கேடட் Cadet – பயிலிளவள் அல்லது பயிற்சிப் படைஞர்

.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. திருவாரூர் கமலாலய கரையில் வீற்றிருக்கும். தமிழக அரசியல்-அமைச்சியல்-அதிகார வரலாற்றில் பல ஆளுமைகள் வார்த்தெடுத்த பள்ளி. ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம். அக்காலத்தில் கழகப் பள்ளி என்று பெயர்.

ஆறாம் வகுப்பில் இங்கு சேர்த்தபோது இருந்த நோக்கங்களில் தேசிய மாணவர் படையும் ஒன்று. சாரணர் இயக்கத்தின் தாக்கத்தாலும் ஜெயராமன் சாரின் ஈடுபாட்டாலும் ஏழாம் வகுப்பு அதில் சேர்ந்துவிட ஓராண்டு சென்றது. சில பல போட்டிகளில் சாரண இயக்கத்திலிருந்து பங்கேற்றிருந்தாலும் எச்சான்றும் கைக்கு வரவில்லை.

மேனாள் என்சிசி அலுவலரும் தலைமையாசிரியருமான பெரியசாமி சார் முன்னிலையில் எட்டாம் வகுப்பில் தேசிய மாணவர் படையின் கப்பற்பிரிவில் இணைந்தேன். 5 TN Naval Unit NCC இதனை நிர்வகித்தது. தேசிய மாணவர் படை அலுவலர் சமூக அறிவியல் ஆசிரியரான சதீஸ்குமார் சார். இன்றும் இவரே வழிநடத்துகிறார்.

இணைந்த ஒரு வாரத்திற்குள் முதலாவது பயிற்சி முகாம் கடலூர் தூயவளனார் கல்லூரியில். என்சிசியின் அனைத்து உத்தரவுகளும் இந்தியில் இருக்கும். ஒரு (ட்ரூப்) படையை நடத்திச் செல்லும் பாங்கு, உத்தரவிடும் குரல், அதற்குரிய ஏற்ற இறக்கம், குழு மனப்பான்மை, துப்பாக்கிப் பயிற்சி, மாலை கருத்தாடல், முகாம் நிறைவு நிகழ்ச்சி பல விடயங்கள் அங்கு கற்க நேர்ந்தது.

கொடிநாள் வசூல், மழைநீர் சேகரிப்புப் பேரணி, மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர குடியரசு தின அணிவகுப்பு முதலானவற்றில் பங்கேற்கவும் சிலவற்றில் தலைமையேற்று கேடட்களை வழிநடத்தவும் வாய்ப்பு கிட்டியது.

ஒன்பதாம் வகுப்பில் புதுச்சேரி விமான தளத்திற்கருகே பயிற்சி முகாம் நடந்தது. இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதவேண்டும். பின்னர் எழுதுகிறேன். அம்முகாமிற்குப்பின், அக்டோபர்-நவம்பர் வாக்கில் மற்றுமொரு முகாம் பற்றிய ஒரு அறிவிப்பு வந்தது.  


இது சாதாரண முகாம் கிடையாது. தேசிய அளவிலான முகாம். அதுவும் மலையேறும் பயிற்சி முகாம். உடலையும் மனதையும் உறுதிசெய்ய வேண்டியிருந்தது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு இருப்பதால் அவர்களைத் தேர்வு செய்யவியலாத சூழல்.

தகுதி திறன் அடிப்படையில் பள்ளியளவில் தேர்வு செய்யப்பட்ட ஒன்பதாம் வகுப்பு பயிலும் மூவரில் நானும் ஒருவன். 1.வசந்தகுமார் 2.விஜயானந்த் 3.நான். (இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் வசந்தகுமாருக்குத் திருமணமாகி ஆறுமாதம் முடிந்துவிட்டது!). அவர்களிருவரும் ஆங்கிலவழி. நான் மட்டும் தமிழ்வழி மாணவன். அப்போது, என்னுடைய ரேங்க் NC I.

ஒரு மாத காலத்திற்கு அடிப்படைப் பயிற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. படிகட்டுகள் ஏறுதல், அடிப்படை சுவாசம் இன்னும் சில. மூவரும் மூவர் இலத்திற்குச் சென்றுவந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக முகாமிற்குத் தயாராகினோம். புது உடை, புதிய தொப்பி, புதிய காலுறை, புதிய ஷூ, கிட் பேக் வழங்கப்பட்டது. NCC Cadet ஒருவருக்கு அவ்வளவு எளிதில் புதிய பூட் ஷூ கிடைத்திடாது. எட்டாம் நம்பர் பூட் ஷூ கனகச்சிதமாக இருந்தது.

டிசம்பர் 19 முதல் இருபது நாட்களுக்கு முகாம். அரையாண்டு தேர்வில் சமூக அறிவியல் தேர்வு மட்டும் எழுத முடியாத சூழல். முந்தைய மூன்று தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி இதில் பின்பற்றப்படுமென அறிவுறுத்தியிருந்தார்கள்.

இப்படி எல்லாம் சுபமாகச் சென்றுகொண்டிருக்கையில் தான் அது நிகழ்ந்தது. அது 1100 காலம். வருடத்திற்கொரு முறை தியேட்டர் செல்வதே அதிசயம்தான். கணினி, கைப்பேசி எதுவும் கிடையாது. புதிய படங்களை பார்க்க வேண்டுமெனில் உள்ளூர் தொலைக்காட்சியே கடைசி வாய்ப்பு. உள்ளூர் தொலைக்காட்சியினர் புதிய படங்களை விளம்பரங்களுக்கிடையில் ஒளிபரப்புவார்கள்.

டிசம்பர் தொடக்கத்தில் சில நண்பர்கள் லோக்கல் சேனல் பாத்தியா பாத்தியா” “படம் செம்மையா இருக்கு. நீங்க போறீங்கள்ள கேம்ப்பு அது மாதிரி தான்எனச்சொன்னார்கள். ஆர்வம் விரட்ட தேர்வுகளுக்கிடையே பாட்டி வீட்டில் பார்த்து பார்த்து சோர்ந்த படம் தான் பேராண்மை. அதன் ஏக வசனங்களும் அத்துப்படியாகி விட்டது.

அதுவும் ட்ரெக்கிங் கேம்ப், இதுவும் அப்படித்தான். ‘பேராண்மைபார்த்த சிலர் பயந்தார்கள், சிலர் பயமுறுத்தினார்கள். வசந்தகுமாரைப் பொறுத்தவரை அப்பா இராணுவ வீரர் என்பதும் விஜயானந்தைப் பொறுத்தவரை அண்ணன் இருக்கிறார் என்பதும் என்னைப் பொறுத்தவரை முன்பு இரண்டு முகாமில் பங்கேற்றிருந்தேன் என்பதும் கொஞ்சம் ஆற்றப்படுத்தியிருந்தது. ஆனால், பேராண்மை போன்ற அனுபவங்களைப் பெறுவது தான் உண்மையில் பெருமைக்குரியது.

ஒருவழியாக முகாமிற்குச் செல்வது இறுதியானது. முதல் முறையாக இரத்தப்பரிசோதனை செய்து, குருதி வகை கூறப்பட்டது. உடற்தகுதிக்கு அரசு மருத்துவர் இரவீந்திர பாபு சான்று வழங்கினார். வாழ்வில் முதல் முறையாக அடையாள அட்டை பெற்றதும் அப்போது தான். சதீஸ் சார், பாண்டிச்சேரி விமானத் தளம் வரை வந்து வழியனுப்பினார்கள். காரைக்காலைச் சேர்ந்த கணேசன் சார் அங்கிருந்து சென்னைக்கு வழிநடத்திச் சென்றார். சென்னை பார்க் நிலையத்தில் இறங்கி அப்போதைய சென்னை சென்ட்ரலுக்குச் சென்றோம். அங்கே மலையேறும் பயிற்சி முகாமில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை-தரைப்படை பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்தனர்.

எல்லாரும் ஏறியதை அறிந்த டிடிஆர் கொடியசைக்க லோகோ பைலட் இயக்க சென்னைக்கு விடைகொடுத்தது தொடரி. கேரளா. குளிர்மையும் பசுமையும் போர்த்திய ஆலுவா நிலையத்தில் இறங்கி ஒருங்கிணைப்பு செய்தவுடன் பெரிய ட்ரெக் வாகனத்தில் அள்ளிச்சென்றார்கள். ஒருமணிநேரத்திற்கு மேலான பயணம் ஒரு பள்ளி வளாகத்தில் இறங்க காலைக்கடனை முந்தியது பசி.

பெரும்பாலும் முதல் நாள், என்சிசி முகாமில் இனிப்பு இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். கேரளத்துக் கேசரியா களியா என்று சொல்லவியலாத உணவுப் பதார்த்தம் கையேந்திய தட்டில் இருந்தது. தீரா தாகத்திற்குத் தண்ணீர் அருந்த முற்பட்டால் வெந்நீர்தான் கிடைக்கும் என்றார்கள். அதுவும் கலர் கலர் வெந்நீர். தாகம் அடங்கவில்லை, களியும் உள்ளிறங்கவில்லை.

இப்படியாய் காலை கழிய, இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த மாணவர்களை இரு பகுப்பாகப் பிரித்தனர். அதில் தமிழகம் உட்பட சில மாநிலங்களடங்கிய குழு முதலில் மலையில் பயிற்சி எடுக்கும் எனவும் இன்னொரு குழு சமதளப் பயிற்சி எடுக்கும் எனவும் உத்தரவு மொழியப்பட்டது.

மீண்டும் ட்ரெக்கில் ஏற, சில திருப்பங்கள், உயரங்கள் கொண்ட மலையின் மீதேறி அழைத்துச் சென்றது அது. மேட்டிலிருந்த சாலையில் இறக்கிவிடப்பட்டிருந்தோம். சாலையிலிருந்து சற்றே பள்ளத்தாக்கான பகுதியில் என்சிசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அது ஒரு பழைய கட்டிடம். அலுவலர்களுக்கு ஒட்டுக் கட்டிடம், மாணவர்களுக்கு அஸ்பெடாஸ் அமைக்கப்பட்ட கூரை.

நேரே சென்றோம். விரைந்து சென்றாலே, சற்றே நல்ல இடம் கிடைக்கும். எறும்பு ஓட்டை போட்டது போக மீதி சுவரும் தரையும் சேரும் ஒரு இடத்தில் கிட் பேகை தூக்கிப் போட்டு இடம்பிடித்துக் கொண்டோம். ஓரளவு சுற்றியுள்ளவர்கள் தமிழ் மாணவர்கள் என்பதால் தகவல் பரிமாற்றத்திற்குச் சிக்கலில்லை.

கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முதலில் வந்திருந்தோம். காரைக்கால் வேளாண் கல்லூரியிலிருந்து வந்த சீனியர் கேடட்களின் தலைமையில் ஜூனியர் கேடட்களான நாங்கள் வேலை செய்யப் பணிக்கப்பட்டிருந்தோம். மாலை வரை சுத்தம் செய்தலில் பொழுது சென்றது. அவர்கள் கடுமையாக வேலை வாங்கினார்கள்.
ஏன் இப்படி கடுமையா வேலை வாங்கறீங்கஎன்று சற்றே சிரித்த முகத்துடன் இருந்த ஒரு அண்ணனிடம் கேட்டதற்கு, அவருக்குப் பக்கத்திலிருந்தவரோ கொஞ்சம் பொறுத்துக்கங்க சார், சாயங்காலம் ஆர்மி விங் வந்திடும், அப்ப என்ன சொல்றீங்கன்னு பாப்போம் என்றார். (கப்பற்படையை விட தரைப்படையில் பயிற்சி கடுமையாக இருக்கும்.)

மாலைக்கு மேல், ஆர்மி விங் உட்பட இன்ன பிறரும் வந்து சேர்ந்தார்கள். கட்டிடம் முழுமையும் கேடட்கள் நிரம்பியிருந்தார்கள். முதல் நாள் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஓட்டைகளில் இருந்து எறும்புகள் புலம்பெயர குளிரேறிய தரையில் தூக்கம் கண்ணுக்கிறங்கியது.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டார்கள், முந்திச் செல்பவர்களுக்கு முன்னுரிமை எனும் வகையில் கழிவறைகள் காத்திருக்கும். மலைமீது முகாம் அமைந்திருப்பதால் உயரம் தாழ்வு என அமைவிடங்கள் இருக்கும். இதில் ஆங்காங்கு, காட்டுவிலங்குகள் வரும் என வதந்தி வேறு. கழிவறை இருக்கும் தாழ்வாரம் நோக்கிச் சென்றோம். அது கழிவறையே அன்று. குழிகள் வெட்டி, ஒவ்வொன்றுக்கும் மேலே இரும்பு ரேக்குகள் போட்டு, ஒவ்வொரு குழியையும் நான்கு புறமும் துணிகள் இட்டு மறைத்திருந்தார்கள். இன்னும் சில நாட்களுக்கு அங்கு தான். பழக வேண்டியிருந்தது. பழகிக்கொண்டோம்.

சதீஸ் சார், அறிவுறுத்தலின் படி யாரிடம் எதுவும் வாங்காது, யாரையும் சாராது தனித்து நாட்களை நகர்த்தல் அவசியம். கொண்டுசென்ற வாளியை வடக்கத்து மாணவன் வந்து தருகிறேன் என்று பெற்றுச் சென்றான். அவன் இவனா இவன் அவனா என காலைக் குளிரில் வெளிவரும் ஒவ்வொருவரையும் நோக்கஒருவழியாக தமிழகத்து வாளிக்குச் சம்பந்தமில்லாத அவனது முகம் தென்பட்டதும் நிம்மதியடைய வைத்தது.

கடுங்குளிர். குளித்துவிட்டேன். காலை உணவு முடித்து குழுமினோம். தமிழக அணிக்கு ஆர்மி விங் கல்லூரி மாணவர் ஒருவர் தலைமையேற்றார். இரண்டாம் நாளிலிருந்து பயிற்சி தொடங்கியது. முகாம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து குறைந்தது பத்து கி.மீ தொலைவுக்கு மேல் நடந்து திரும்ப வேண்டும். பொதுவாக, அணிவகுப்பு செல்கையில் மூவர் மூவராகச் இருக்கணும். இது நடை என்பதால் இருவர் வீதம் பேரணி போல இருந்தோம். நிற்றல் பயிற்சி முடிந்த பிறகு, முகாமிலிருந்து கிளம்பினோம்.

ஒரு செயலைத் தொடங்கு முன்னர் பாரத் மாதா கீ ஜெசொல்லும் வழக்கத்தை முதல்முறையாக அந்தத் தேசிய முகாமில் காண நேர்ந்தது. உரத்த உற்சாகத்தோடு அங்கிருந்து விறு விறுவென கால்கள் நகர்ந்தன. இரப்பர் தோட்டங்கள் இருந்த மலைகளுக்கிடையே புகுந்து சென்ற சாலைகளில் பயணித்தன. ஒரு கி.மீக்கு ஒரு வீடு இருந்தாலே பெரிய விடயம். அவ்வளவு இயற்கையான மலை அது. செல்லுமிட மெல்லாம் இரப்பர் மரத்தின் வாடை வந்துகொண்டே இருக்கும். இரப்பர் மரத்தில் கோடு கிழிப்பார்கள். அதன்வழி மரத்திலிருந்து வடியும் இரப்பரை சேமிக்க கொட்டாங்குச்சி கட்டப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கொருமுறை கீறிவிட்டு சேகரமாகியிருக்கும் இரப்பரைச் சேமித்து செல்வார் தொழிலாளி. நாங்கள் மேலேயிருந்த நாட்களில் இந்த வாடை வாடிக்கையாகிவிட்டது.

உற்சாகமாகக் கிளம்பிய மாணவர்கள் அசதியில் திரும்பினோம். இயலாத மாணவர்கள் ஆங்காங்கு இருப்பு வைத்து திரும்ப வருகையில் சேர்த்துக்கொண்டோம். மதிய உணவு அதிர்ச்சியாக இருந்தது. அம்மாம் பெரிய அரிசி சோறு. உள்ளிறங்குமா? இறங்கினால் செரிக்குமா? என்றெல்லாம் கேள்வி. வேறு வழியில்லை. தேசிய முகாம் இப்படித்தானே. இதற்குத் தயாராகித் தானே வந்திருக்க வேண்டும். ஆம். சோறு செரித்துவிட்டது.

மாலை வரை ஓய்வு, அதற்கு மேல் விளையாட்டு எனச் சென்றது. நிலவிருக்கும் வானில் நட்சத்திரங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. போலவே, பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்க்க கல்லூரி மாணவர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர். தமிழக வாலிபால் அணி சற்றே வலுவாக இருந்தது. கல்லூரிப் பேரா. ஒருவர் அந்த அணியை வழிநடத்தினார். மேலிருந்து கீழிறங்குவதற்கு முதல் நாள் தமிழகத்திற்கும் பிறிதொரு அணிக்கும் நடைபெற்ற உச்சகட்ட (மானப்பிரச்சினை) வாலிபால் போட்டி நடந்தது. சுத்தியுள்ள நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்க தமிழகம் ரன்னர் அப் ஆனது. சோகம் தான். அன்றிரவு பலரும் சரியாக உண்ணவில்லை..

உணவைப் பொறுத்தவரை சிறப்புணவில் மீன், புலால் கிடைக்கும். எல்லா நாளும் சிறப்புணவு கிடையாது. உயரதிகாரிகள் வரும் நாட்கள், பண்டிகை நாட்கள் முதலானவற்றில் சிறப்புணவு கிடைக்கும். புலால் தவிர்த்த மாணவர்களுக்கு அங்கே லட்டு வழங்கினார்கள். காலையில் இட்லி இரண்டு போதுமானதாக இருந்தது. தொட்டுக்கொள்ள சுவையாக ஏதும் இராது. மதிய வேளையில் அதிகப் பசிக்கு குண்டு சோறு போதுமானதாயில்லை. காலை சுட்ட இட்லியின் மீதத்தை மதியம் வைத்திருப்பார்கள். ஈரிலக்க இட்லிகள் தட்டிலிருக்க கேரளத்து சாம்பார் மதிய உணவை ருசியாக்கவும் செரிக்கவும் செய்யும். இரவுக்கு ஏதேனும் டிஃபன் அல்லது சுடுசோறு எப்போதும்.

ஒருநாள் இரப்பர் தோட்டங்களிடையே சென்று கொண்டிருக்கையில், விளைச்சலான அன்னாசிப் பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிரைவரின்றி நின்றுகொண்டிருந்தது. கடப்பதற்குள் தன்னிருக்கைத் திரும்பிய ஓட்டுநர் சில அன்னாசிப் பழங்களை எங்களுக்கு எடுத்துக் கொடுத்தார். இதுபோல சம்பவங்கள் அதிகம் நடந்தன. எங்களை விருந்தாளிகள் போல பார்த்த அவர்கள் கிட்டியதை ஈந்தார்கள்.

அது 2009 என்பதால் கையில் டேட்டா இருக்காது. காதில் இயர்போன் இருக்காது. மனிதர்கள் சுதந்திரச் சிந்தனையில் மன அழுத்தமின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். எங்கள் மூவரில் விஜயானந்த் மட்டும் போன் கொண்டுவந்திருந்தான். அதுவும் 1100. ஏர்டெல் என்று நினைவு. எப்போதேனும் வீட்டிலிருந்து பேசுவார்கள். (செல்போனுக்குப் பணம் போட வேண்டுமெனில் கடைக்குச் சென்று ரீசார்ஜ் கார்டு வாங்கி சுரண்டி தான் பணம் ஏற்றியாக வேண்டும். அதனால் பெரும்பாலும் வரும் அழைப்புகள் தான்.)

முகாமிருக்குமிடத்திற்கருகே ஒரு அஞ்சல் நிலையமிருந்தது. அங்கு, 50காசுக்கு கடுதாசி வாங்கி வைத்திருந்தேன். அடுத்தடுத்த நாள் அதன்வழி செல்லும்போது வீட்டிற்குக் கடிதம் அனுப்பலானேன். அதற்கு அனுமதித் தருமளவு கணேசன் சார் உட்பட தமிழகப் பிரிவை வழிநடத்திச் செல்லும் சீனியர்களுக்குப் பரிச்சயாமாகியிருந்தேன்.


கணேசன் சார், மிகவும் இயல்பானவர், குழந்தையைப் போல எல்லாவற்றுக்கும் ஆச்சரியப்படுவார். தானே ஒரு கோடு கிழித்துகொண்டு கோட்டுக்கு வெளியே நடக்கிற விடயங்களுக்கு வியப்பினை அன்பளிப்பார். அவ்வப்போது கேட்கும் கேள்விக்கும் அறிவு வழியிலும் அற வழியிலும் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் வாட்சப் கிடையாது. ஏதேனும் புதிய விடயங்கள், செயல்கள், நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டுமெனில் செய்தித்தாள், புத்தக வாசிப்பு அத்தியாவசியம். சில இடங்களில் கைக்கொடுத்தது.

ஒரு நாள் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நிகழ்ந்தது. அவரது கேள்விகள் புரியவில்லை. புரிந்தன. புரிந்தும் புரியவில்லை. புரியாமலும் புரியவில்லை. காரணம் ஆங்கிலம். மருத்துவரோடு ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க அதுவெல்லாம் காமெடியாகி ட்ரோல் செய்யப்பட்டது உதிர்ந்த சிரிப்பலைகளுக்குத் தெரியும்.

அப்போதெல்லாம் நான் அம்பி ஸ்கொயர்ட். யாரிடத்தும் எந்த வம்புக்கும் செல்வதில்லை. தேடி வந்தாலும் விரும்புவதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது. இது மேட்டிமைத் தனமாக இருந்தாலும் அப்போதைய சூழலில் அதுவே சரியெனப்பட்டது. இதனையறிந்த பலருள் சிலர் சீண்டுவதுண்டு. வெறுத்துப் போய்விடும். என்ன செய்வதென்று தெரியாது. ஏகத்துக்கும் எரிச்சலாக இருக்கும். காரைக்கால் வேளாண் கல்லூரியின் கப்பற்படைப் பிரிவிலிருந்து வந்திருந்த அருண் குமார் என்ற மாணவர்தான் அதீத மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். என்னை மாற்றியே தீருவதென்பதை இம்முகாமின் நோக்கமாகக் கருதியிருப்பார் போல. திரும்ப பாண்டிச்சேரியில் பிரியும் வரை அறிவுரை எனும் பேரில் தொந்தரவு தான். பயிற்சியின் போது சிலமுறை கூடுதல் தண்டனை கூட அவரால் கிடைத்தது.  

ஆர்மி விங் மாணவர்கள் அப்படியே வேறு. அதுவும் வழிநடத்தும் கேடட் கெத்தாக இருப்பார். அவருக்குச் சரளாமாக தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்தது. இந்திக்கு அடுத்து தெலுங்கு மொழியில் உத்தரவுகள், கலந்தாய்வுகள் மொழியப்பட்டன. அச்சூழலில் தமிழக அணியிலிருந்து தெலுங்கு தெரிந்த ஒருவர் உடனிருப்பார். ஆனால், இவருக்கு நன்றாகத் தெலுங்கும் தெரியும் என்பது பின்னாளில் தெரிந்தது. ஏன் தெலுங்கு தெரிந்தும் வேறொருவரை அனுப்பினாரென்பது பில்லியன் டாலர் கேள்வி.

சென்னையிலிருந்து வந்த தரைப்படைப் பிரிவில் சீன இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இடம்பெற்றிருந்தான். மிகவும் கட்டையாக, வெள்ளையாக அந்த இனத்திற்கேயுரிய உடல் மொழி அவனுக்கிருக்கும். நன்றாகத் தமிழ் பேசும் அவனை, தொடக்கத்தில் பலரும் சீண்டினார்கள். அவனோடு நட்புருவாக்குவதே மிகப்பெரிய விசயம் எனப் பேசப்பட்டது. அதையெல்லாம் மீறி அவன் வெகு இயல்பாக நட்பானான்.

இப்படியாக நடைபயிற்சி, மலைப்பயிற்சியினூடே பலர் நண்பர்களாகினர். கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. காலை பயிற்சிக்குச் செல்கையில் கையில் நீர்நிரம்பிய பாட்டில் எடுத்துச்செல்வோம். திரும்ப வரும்வரை அதுதான் உயிர்வளி. வீடுகளற்ற வனத்தில் நீரற்றுத் திரிகையில் அரிதாகத் தென்படும் வீடுகள் காவிரி மறுக்காத கர்நாடகமாக இருக்கும். அவர்கள் வீடுகளே அநாயசமாக இருக்கும்.

ஒரு மாதம் சலிப்பு தீர அந்த வீடுகளில் வசிக்க வேண்டும் என்பது போல இருக்கும். திருத்தப்பட்ட குறிஞ்சியில் கட்டப்பட்ட அவ்வீடுகளின் மீது இப்போதும் அவா உண்டு. பெரும்பாலும் அவ்வீடுகளில் கிறித்தவர்களே இருந்தார்கள். அது கிறிஸ்துமஸ் மாதம் என்பதால், நாங்கள் வரும் வேளைகள் நட்சத்திரங்கள் மின்னாது தன்னடக்கம் காத்திருந்தன. மலைகள் சந்திக்குமிடம், உச்சிகளில் இயேசு உயிர்த்தெழுப்பப் பட்டிருந்தார்.

ஒருநாள் சாதாரணப் பயிற்சி என நினைத்துக்கொண்டிருந்தோம். உண்மையிலே மலையேற பயிற்சி தரப்பட்டது. செங்குத்து மலை. (திருச்செங்கோடு மலையைப் போல) பிடித்துக்கொள்ள ஏதுமில்லை. வழிநடத்துநர்கள் மட்டும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முக்கல் முனகி, பாட்டில் காலியாக மலையேறினோம். அங்கேயும் சிறிய தேவாலயக் கட்டிடம் இருந்தது. அம்மலைத் தொடரின் உச்சி என ஒருவர் சொன்னார், புரளியாக இருக்கலாம். ஆனால், தற்கொலை செய்துகொண்டால் உடல் தப்பாத அளவினுக்கு உயரம். எட்டிப்பார்க்கையில் தெரிந்தது. பணவசதி படைத்த அரியவர்கள் கொண்டுவந்திருந்த நோக்கியா கீபேடு பேசிகளில் உள்ள கேமிராவில் படமெடுத்துக்கொண்டிருந்தனர். இதுவெல்லாம் கிட்டாத நாங்கள் கீழிறங்க பத்துநிமிடம் கூட ஆகவில்லை.

மேலேயிருந்த நாட்களெல்லாம் நயமானவை. பல புதிய விடயங்களைச் சொல்லித்தந்தவை. குறுகிய இடம், அதிகமான கேடட்கள் என்பதால், உயரதிகாரிகள் வரும் நாட்களில், தேசிய கீதம் இசைக்கையில் உட்கார்ந்தே இருக்குமாறு பணித்தனர். தரையில் அமர்ந்திருந்த அனைவரின் முதுகெலும்பும் நேராக இருக்க, இடது தொடையில் தொப்பி இருக்க வேண்டும் என்பது தேசிய கீதத்திற்குச் செலுத்தும் மரியாதை. தேசியம் என்பதை இந்தியம் என்ற ஒற்றைப்புள்ளியில் கட்டமைத்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல, மேலே உள்ள எல்லா இடங்களுக்கும் சென்றுவந்தாயிற்று. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் முகாமிருக்கும் இடத்தினிலே நீர்த்தட்டுப்பாடு. இதற்குமேலே இருக்கமுடியாது எனுமளவுக்கு நீர் வஞ்சித்தது. தட்டுகளைக்கூட, ஏன் கைகளின் விரல்களைக் கூட கழுவ நீரில்லை. இனி கீழிறங்க வேண்டியதுதான் எனும் நிலையில், கீழிருக்கும் குழுவினர் மேலே வரும் நாளும் வந்தது. அப்போதைய கவலையெல்லாம், இவர்களுக்கு நீரில்லை என்பதினும், துணிகள் காவல்காத்த கழிப்பிடக் குழிகள் எல்லாம் ஏற்கெனவே அபாய அளவைத் தாண்டி விட்டன என்பதாகவே இருந்தது.!

கிட் பேக்கில் எல்லாவற்றையும் சரிபார்த்து, ஒரு ட்ரெக்கில் எல்லார் உடைமைகளையும் ஏற்றி, மனித உயிர்களைத் தாங்கிய வாகனத்தில் ஏற, அது கீழிறங்கியது. ஒரு பள்ளியில் தங்க வைத்திருந்தார்கள். அது அரையாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் வகுப்பறை எங்களுக்குப் பள்ளியறை ஆனது.

இங்கே குளிர் இல்லை, விலங்குகள் பயமில்லை. பக்கத்திலேயே பெரியாறு ஓடிக்கொண்டிருந்தது. வீடுகள் அதிகமிருந்தன. இரப்பர் மரமில்லாத மரங்கள் தென்பட்ட. வானுயர்ந்த சர்ச் பக்கத்திலிருந்தது. வேறேதேனும் உணவு வேண்டுமெனில், அருகே சில உணவகங்கள் இருந்தன. புட்டு பாயா உட்பட கேரளத்துப் பதார்த்தங்களைப் பதம் பார்த்த இடம் அவை. பக்கத்தில் சிற்றோடை ஒன்று சலசலத்துச் சென்றுகொண்டிருந்தது.

கீழிறங்கிய பின்னர், சிற்றோடையில்தான் காலை மாலை குளியல். அருமையாக இருக்கும். ஆறுகளில் குளிக்க வாய்ப்பற்றவனுக்கான வரப்பிரசாதமாக இருந்தது. சில நாட்களாக சில மணிநேரங்கள் அங்கே கும்மாளம் போட்டுக்கழிந்தன. மகிழ்ச்சிக்கு விடைகொடுக்கும் விழாவை உடனுக்குடன் அரங்கேற்றும் தேவதை அங்கேயும் வந்திருந்தாள்.


ஒருநாள் அருகேயுள்ள தாவர ஆராய்ச்சியகத்திற்குச் சென்று திரும்புகையில், கையில் சில தாவரங்களை எடுத்துக்கொண்டோம். அப்போது ஒருவன், “அதோ பாரு பாம்பு என்றான். இந்தப் படை நடுங்கவில்லை. பாம்பு நாங்கள் குளிக்கும் ஓடையின் ஒருபகுதியில் நீந்திச் சென்றது. அவ்வளவு தான். நான் தவிர்த்த பிறர் பாதுகாப்பாக ஓடையில் குளித்தாலும், நான்கு நாட்கள் குளிக்காமலே கடந்தன.

சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு நாள் இருந்தது. வங்காள விரிகுடாவில் வானம் பார்த்து இரவைக் கழித்தவனுக்கு அரபிக்கடல் ஆச்சரியமாக இருந்தது. நீலம் என்றால் அது தான் நீலம். அப்படியொரு தெளிவு. கோடியக்கரை கடலோடு ஒப்பிட்டால் கோடி மடங்கு தூய்மை. கடலுக்குச் செல்லும் வழியில் ஆக்டோபஸை முதல் முறைச் சந்தித்தேன்அதைப்போலவே இன்னபிற உயிரிகள் அசாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்தன. அரபிக்கடல் வரை வந்துவிட்டேன். கால் நனைக்காமல் போகக் கூடாது என்று சிறப்பனுமதி வாங்கிக் காலுறை, பூட் ஷூ கழட்டி கால் நனைத்துத் திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் இங்கு வர என்றிருந்தது. ஆனால், கடைசி வரை அரபிக் கடலோரம் ஓர் அழகைத் தான் காணமுடியவில்லை.! சோ சேட்.

ஆங்கிலேயன் முதன்முதலில் கட்டிய தேவாலயம், இதில் அதீத ஓவியங்கள் இருக்கும், இதில் அதீத சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும் என்று சில பல தேவாலயங்கள் அழைத்துச்சென்றனர். (தமிழகத்தில் கோயில்களைப் போல). ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் பெருநேரம் கழிந்தது. அங்கு தான், பலரும் தமிழ் பேசக் கண்டேன். தமிழில் பூசைகள் கூட நடந்தன. அது அமைந்திருந்த வளாகம் கங்கைக் கரையை நினைவுபடுத்தியது. 5ரூபாய்க்கு ஒரு போட்டோ மட்டும் வாங்கிக்கொள்ள விடைகொடுக்கலானேன்.


கீழேயிருந்த நாட்களெல்லாம் மகிழ்ச்சியாகக் கழிந்தன. தினசரி பத்து கி.மீ தொலைவுக்குக் குறையாமல் நடந்தாகவேண்டுமென்பதால் வீடுகளை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. வீடுகள் அமைந்திருக்கும் வீதிகளின் தார்ச்சாலைகளெல்லாம் மேடுபள்ளங்களற்று ஆச்சரியத்தை எழுப்பின. ஒவ்வொரு வீடும் சுற்றுச்சுவர் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உயர்ந்த மரம் இருக்கும். பெரும்பாலும் தென்னை மரம். அதில் மிளகு கொடியை சுற்றிவிட்டிருப்பார்கள். (பொதுச்சொத்தாக கைக்கெட்டும் மிளகுக் காய்களை பிய்த்துக்கொண்டோம். வீட்டிற்கு வந்த சில மாதங்களில் காயவைத்து பொங்கலில் இட்டுச் சாப்பிட்டேன். அப்படியொரு சுவை).

சில வீடுகளில் வெற்றிலைக் கொடியும் இருக்கும். எல்லா வீடுகளும் இரசனைக்குரிய அமைப்புகளைப் பெற்றிருந்தன. அவை வெறும் சுவர்களாக இல்லை. திரும்பிப் பார்க்கவைக்கும் அழகுடைய பெண்ணைப் போல நடந்துகொண்டே கழுத்துவலிக்கத் திரும்பப் பார்க்கவைத்த இல்லங்களும் இருந்தன. சில வீடுகளின் அமைப்பை வைத்து அவர்களது எண்ண ஓட்டத்தை அளவிட்டிருக்கிறோம். ஒரு வீடு கருப்பு உடையணிந்து, எருமைத்தலையோடு வில்லத்தனமாக இருந்தது. ஒரு வீடு சுவருக்கு வண்ணமே அடிக்காமல், பூங்கொடி ஒன்றையே உடையாக உடுத்திக்கொண்டிருந்தது. எல்லா வீட்டிலும் கிணறு இருக்கும். கிணறு இல்லாத வீட்டைத் தேடிக் கண்டடைவதில் தோல்வியடைந்திருந்தோம்.

கீழே தங்கியிருந்த இடத்திற்கருகே தேங்காய்களை மரத்திலிருந்து பறித்து சேமித்திருந்தனர். ஒவ்வொரு நாளாக அதனை அடுத்தநிலைக்கு எடுத்துச் சென்றனர். சேமித்தல் < மட்டை உரித்தல் < தேங்காய் உடைத்தல் < கொப்பரை எடுத்தல் எனப் படிநிலைகள் இருந்தன. தேங்காய் உடைக்கும் நாளன்று திகட்டத் திகட்ட இளநீர் கிடைத்தது. எல்லாருக்கும் வழங்கச்சொல்லி உரிமையாளர் சொல்லிவிட்டதால் டம்ளரோடு கைநீட்டும் அனைவரது தாகமும் தீர்ந்தது.

ஒரு நாள் பெரியாறு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அவ்வளவு பெரிய ஆறு. கரைகளில் மரங்கள் பசுமையாக வளர்ந்திருக்கும். தண்ணீர் அதிகரித்துக் குறைந்திருக்கும் காரணத்தால் ஷூ உள்வாங்கி வழுக்கிவிடும் சூழல் இருந்தது. ஆதலால், பெருந்தொலைவு அழைத்துச்செல்லவில்லை. (மூன்று வருடங்களுக்குப் பிறகு 2012ஆம் ஆண்டில் இதே இடத்தில் பயிற்சி முகாமிற்கு வந்த 5 கேடட்கள் இறந்துபோயினர். காண்க : செய்தி https://www.indiatoday.in/india/south/story/ncc-cadets-from-delhi-drown-in-periyar-river-in-kerala-125374-2012-12-26)


முதல் முறையாக, அயலூரில் அயல்மாநிலத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டும் அதுதான். (இன்றுவரையிலும்). இரவு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி கேக் தந்தார்கள். வந்திருந்தவர்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருந்தது. மாலை யாரையேனும் அழைத்து வந்து பேசச்சொல்லி கலந்துரையாடல் செய்வார்கள். படம் ஓட்டுவார்கள். அப்படி ஒருநாள், கார்கில் யுத்தம் பற்றிய ஆவணப்படம் என்று நினைக்கிறேன். அதனை ஒளிபரப்புகையில் பலரும் உணர்ச்சிவயப்பட்டார்கள். மயிர்க்கூச்செரியும் காட்சிகள் அவை. மொழி புரியாமலே எல்லார் கைகளும் தட்டின.
உச்சபட்ச நிகழ்வுகளின்போது, “பாரத்மாதா கீ ஜெஎன்பதனை அவர்கள் சொல்ல மறக்கவில்லை.

ஒருநாள் அறிஞர் ஒருவருடனான கலந்துரையாடல். அவர் கேரளத்தின் சிறப்புகளை அடுக்கி, குறுக்குவெட்டாக நிகழ்கால எதார்த்தத்தை எடுத்துவைத்துப்பேசினார்.  “கிறிஸ்துமஸ் புத்தாண்டுக் கிடைப்பட்ட நாட்களிடையே மட்டும் இத்தனை கோடி வருவாய் மதுவிற்பனையில் இங்கு கிடைத்திருக்கிறது என்றார். “கல்வியில் முன்னேறிய இந்தியாவின் முதன்மை மாநிலம் நல்லதைச் சொல்லலாமேஎன்று அப்போதிருந்து வாழ்க்கைக்கல்வி போன்ற பாடத்திட்டத்தால் பேச முடிந்தது. அவர், அந்தக் கருத்தையும் உள்வாங்கிக்கொண்டு விவாதத்தைச் செம்மையாக்கினார். தற்காலத்தில் கல்வி மட்டுமே ஒழுக்கமில்லை என்பது அதன் சாரம்.

இது மலையேறும் பயிற்சி முகாம். ஆதலின் துப்பாக்கிப் பயிற்சி தரப்படவில்லை. பேராண்மை படத்தில் வருவது போல, கல்லூரிப் பிரிவில் சிலரைத் தேர்வு செய்து உள்ளடக்கக்காடுகளில் பயிற்சி வழங்கினர். எவ்விதச் சிக்கலுமின்றி அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பினர். இருப்பினும், இருபது நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி முகாம் உரிய காரணங்களின்றி பன்னிரு நாட்களிலே முடித்துக்கொள்ளப்பட்டது. (உயரதிகாரிகளுக்கு மட்டுமே இதற்கான உண்மைக்காரணம் தெரியும் போல)

முகாம் நிறைவடைவதால் கொடுக்கும் இனிப்புப்பையுடன் கிட்பேக் சுமந்து பல்வேறு நினைவுகளுடன் ஆலுவா நிலையத்தை அடைந்தோம். இங்கா, அங்கா எனத் தெரியாத மின்னறிவிப்புப் பலகைகள் வழிகாட்டும் நிலையத்தில் ஏதோ ஒரு பெட்டியிலேறி உரிய பெட்டிக்குப் புலம்பெயர்ந்தோம். ஆவடி வழியே சென்ட்ரலை அடைந்தது வண்டி. அங்கிருந்து பாண்டிச்சேரி பேருந்துநிலையம் வரை கணேசன் சார் பாதுகாப்பில் வந்தோம். அங்கிருந்து வீடுதிரும்ப இரவு நிலவும் உலவக் காத்திருந்தது.

தொடக்கத்தில் அணிந்து சென்ற புதிய பூட் ஷூ-வின் அடி தேய்ந்து, மரம் தேய்ந்து, தேய்மானம் பாதம் வரை வந்துவிட்டது. அவ்வளவு தொலைவைக் கால்கள் கடந்திருக்கின்றன. புதிய மாநிலத்தில், புதிய மக்களோடு பல்வேறு அனுபவங்களை அது வழங்கியது. அம்பி ஸ்கொயர்டு மரணித்ததும் அப்போது தான்.

பெரியசாமி சார், சதீஸ் சார், கணேசன் சார்க்கு நன்றி.

- த.க.தமிழ்பாரதன் | 31.12.2019

பிகு : சரியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு, டிச. 16,17,18 மீண்டும் கேரளா செல்ல நேர்ந்தது. ஞானபீடம் விருதுபெற்ற கவிஞர் ஓஎன்வி நினைவு விருது வழங்கும் நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றிருந்தார். தன் வாகனம் திரும்பிக்கொண்டிருந்த அவரோடு நடைபயின்றே எடுத்த படம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக