நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 2 ஏப்ரல், 2020

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் – ஏப்ரல் 2

இன்று செல்பேசியைத் தூய்மைசெய்துகொண்டிருக்கையில் ஒரு காணொளி கண்ணில்பட்டது.

2018 இறுதியில் கஜா புயல் பாதித்த சிற்றூர் ஒன்றில் நிவாரணப் பொருட்கள் கொடுத்துக்கொண்டிருந்தோம். மிகவும் உள்ளடங்கிய அவ்வூரின் உருக்குலைந்து மீண்ட ஒரு வீட்டில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை(குமரி) கண்டோம். சில விடயங்கள் கேட்டறிந்தோம். பக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பதாகத் தெரிவித்தார்கள். இத்தகு குழந்தைகளை எங்கேனும் கண்டால் அனுதாபப்படுவதோடு சரி, அவர்கள் குறித்த செய்திகள் அறிதல் மற்றும் அப்பெற்றோர்க்குத் தர வேண்டிய உறுதிகளைத் தருதல் முதன்மையானதாகும். வளர்ந்த குடும்பங்களில் வளரும் ஆட்டிச குழந்தைகளுக்கு உரிய வளர்ப்பு நெறிகள் கிடைப்பதே பெரிய விடயமாக இருக்கிறது. இதுபோன்ற உள்ளடங்கிய சிற்றூர் மக்களுக்கு மேலதிகப் புரிதல் அத்தியாவசியமானது. 

அந்தக் காணொளியை ஒலிப்புப் பேச்சு குறித்த படிப்பு MASLP பயிலும் நண்பர் அம்ரித வர்ஷிணிக்கு அனுப்பினேன். அது குறித்து மேலதிகத் தகவல் தந்த அவருக்கு நன்றி. கூகுள் நாட்காட்டி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் இன்று (ஏப்ரல் 2) என நினைவூட்டியது. அதையொட்டி எழுதியது.


ஆட்டிசம் என்ற சொல் புதியதாகவும், ஆட்டிச நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் விநோதமாகவும் பார்க்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அது மாறிவருகிறது. வீட்டில் முடங்கியிருந்தவர்கள் சமூகத்தில் சக மனிதராய் உலவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சமூக அறிக்கையின் படி, 68இல் 1 குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பதை நோய் என்று குறிப்பதைவிட ‘நிலை’ என்று குறிக்கலாம். ஆட்டிசம் உட்பட மூளைசார் வளர்ச்சிக் குறைபாடுகளை Autism Spectrum Disorder (ASD) என்ற ஒரு குடை பெயர் குறிக்கும்.

இதன்கீழ் வருபவை
*ஆட்டிசம் (autism)
*அஸ்பெர்ஜர் ஸிண்ட்ரோம் (asperger syndrome)
*பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் (pervasive developmental disorder)
*பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என வரையறுக்க முடியாதவை (pervasive developmental disorder-not otherwise specified)
*ரெட் ஸிண்ட்ரோம் (rett syndrome)
*குழந்தைப்பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு ( childhood disintegrative disorder)

மருந்து உண்டா?
உலகம் முழுதும் இதற்கென பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், முழுத்தீர்வு அளிக்கும் எவ்வித மருந்தோ அல்லது மருத்துவ முறையோ கண்டறியப்படவில்லை.

குழந்தையின் ஆட்டிச நிலையின் அடையாளங்களை 18வது மாதத்திலிருந்தே கண்டறியலாம்.  எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நன்கு கவனிப்பது அவசியம்.

அறிகுறிகள்:
·         ஒதுங்கி இருப்பது
·         கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது
·         ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது
·         அதீதமான பதட்டம் அல்லது துருதுருப்பு அல்லது மந்தத் தன்மையுடன் இருப்பது
·         தன் தேவைகளை வெளிப்படுத்த விரலை சுட்டிக்காட்டுவது
·         பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது
·         மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில் ஈடுபாடின்றி இருப்பது

என்ன செய்ய வேண்டும்?
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். பெற்றோர் எவ்வித சலனமும் அடையத் தேவையில்லை. மற்ற குழந்தைகளைப்போல இவ்வுலகில் சஞ்சரிக்க உரிய வழிகாட்டுதலை பெற்றோர்களாலேதான் வழங்கவியலும். இவ்விடயத்தில் எதனையும் மேற்கொள்வதற்கு முன், அரசு மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும். அதேவேளையில் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்கவேண்டும். இக்குறைபாட்டைச் சரிசெய்யும் பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ளச்செய்தல் அவசியம்.

பயிற்சிகள்:
·         நடத்தைப் பயிற்சி
·         வளர்ச்சிக்கான பயிற்சி
·         கல்விக்கான பயிற்சி
·         பேச்சுப்பயிற்சி

பயிற்சினால் விளையும் பயன்கள்:
இப்பயிற்சிகளை மேற்கொள்வதால் ஆட்டிச நிலையாளர்கள் தன்னிச்சையாக இயங்குவதற்கான, தரமான வாழ்வை வாழ தயார்ப்படுத்த இயலும். அதாவது, பாதிப்படைந்த கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் செல்வதை இது தடுக்கும்.

ஆட்டிசம் பாதித்தவர்களுக்கான சலுகைகள்
மாநில அரசாலோ மத்திய அரசாலோ ஆட்டித்தால் பாதித்தவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் என்று எதுவும் நடத்தப்படுவதில்லை. கண் பார்வையற்றவர்களுக்கு மற்றும் செவித்திறன் இழந்தவர்களுக்கும் மட்டுமே தமிழ்நாட்டில் சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

ஆட்டிம் பாதித்த குழந்தைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்கவேண்டியுள்ளது. மொழிப் பாடத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது‌. தேர்வுகளின்போது, கூடுதலாக ஒரு மணி நேரம் தரப்படுகிறது. scribe உதவுதல் முதலான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பில் 3% ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நிறையத் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடத்தைப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகளை அளிக்கின்றன. இதற்குக் குழந்தையின் தாய் நாள்முழுதும் குழந்தையோடு பயிற்சிப் பள்ளிகளில் இருக்க வேண்டியுள்ளது. பெற்றோர்களே அழைத்துச் சென்று, பள்ளியில் இருந்து அழைத்து வருவதைக் காணமுடிகிறது. ஒரு குழந்தை மட்டுமே என்றால் அந்தத் தாயால் குழந்தையுடன் நாள் முழுவதும் செலவழிக்க இயலும். இரண்டு மூன்று குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்க்கு இது மிகவும் சவாலானது.

அரசாங்கம் செய்ய வேண்டியது:
முதியவர்களுக்கு உதவித்தொகை அளிப்பது போல மாதாமாதம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆட்டி நிலைப் பெற்றோருக்கு அரசாங்கம் பொருளுதவி செய்ய வேண்டும். அரசுப்பள்ளிகளில் அதற்கான சிறப்பு ஆசிரியர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். அவர்களும் சமுதாயத்தின் ஒரு அங்கம்தான் என்பதை மாணவர்கள் உணர பொதுப் பள்ளிகளில் அவர்கள் சேருவதை உறுதி செய்ய வேண்டும் தேர்ச்சி சதவீதத்தை காரணம் காட்டி எந்த ஒரு தனியார் பள்ளியோ அல்லது அரசுப் பள்ளியோ குழந்தைகளை பள்ளியைவிட்டு இடைநிறுத்தம் செய்தல் கூடாது என்பதை ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும்

இவர்களது வளங்களை உறுதி செய்ய எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தனிப்பிரிவு செயல்படுகிறது. சென்னை கேகே நகரில் இயங்கும் SRTCஇல் (State Resource Training Centre) பயிற்சியுடன் தேவையான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

நன்றி : அம்ரித வர்ஷிணி மற்றும் அம்மா
- தக | 02.04.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக