நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 18 ஏப்ரல், 2020

நேரப்பெயராக்கம் - கட்டுரை மதிப்புரை

நேரப்பெயராக்கம் - கட்டுரை மதிப்புரை 


            நேரப்பெயராக்கம் (சங்ககாலம்) எனும் கட்டுரை செ.வை.சண்முகம் எழுதிய அறிவியல் தமிழாக்கம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள ஈற்றுக் கட்டுரையாகும். இந்நூலில் அறிவியல் கருத்தாக்கம் பற்றிய அடிப்படைப்புரிதல் விளக்கப்பட்டுள்ளது. நேரப் பெயராக்கம் எனும் கட்டுரையில் நேரம் (time) குறித்த விவாதங்களை முன்வைத்துள்ளார்.
  காலம்தானே மூன்றென மொழிப என காலத்தை மூன்றாகப் பகுப்பதைத் தொல்காப்பியர்வழி சுட்டுகிறார். எனினும், மூன்றுவகைக்காலம் இருப்பினும், காலத்தை உணர்த்த இறந்தகால விகுதி, இறப்பல்லாத விகுதி என்ற இரண்டே உள்ளதால், தொல்காப்பியர் மூன்று காலத்தை உணர்த்தாது மூன்று நேரத்தை உணர்த்துவதாக நூற்பா இயற்றியுள்ளார் என்ற கருத்தை முன்வைக்கிறார். இங்கு காலம் என்பதை tense என்ற பொருளிலும், நேரம் time என்பதை என்ற பொருளிலும் அடையாளங்காண்கிறார். பொருளதிகாரத்தில்பொழுதுஎன்று குறிப்பிடுவது  நேரப் பெயர்களையே ஆயினும், எழுத்ததிகாரத்தில் நேரப் பெயர்களையே காலப்பெயர் எனக்குறிப்பிட்டுள்ளார்.
            சங்க காலத்தில் வெள்ளம்,ஆம்பல், ஊழி என்ற எண்மதிப்புகளை எல்லையாக உடைய கணக்கீடு இருந்துள்ளது. இது, நேரம் எனும் கருத்துப் பொருளை சங்க இலக்கிய மதிப்பீடுகளின் பேரெல்லை, சிற்றெல்லை என்பதிலிருந்து வருவிக்கிறார்.
நாள் = சிற்றெல்லை ; வெள்ளம் = பேரெல்லை
ஆனால், கால அளவு சுழற்சிக்குட்பட்டதாகவே இருக்கிறது. பொழுது என்கிற புரிதல் இடைக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஆறுபொழுது என்கிற வரையறை ஏற்பட்டபோது, இரண்டு திங்கள் சேர்ந்தது ஒருபொழுது என்ற வரையறை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் திவாகரம் வழி நிலைப்படுத்துகிறார். திங்கள் வானியலையும் பொழுது தட்பவெப்பத்தையும் பொறுத்தமைவதால் பொதுமக்கள் பொழுது பற்றிய கருத்தையே பரவலாக ஏற்றிருக்கக்கூடும்.
         பொழுது என்ற சொல்லுக்குப் பதிலாக அமையம், காலை, பருவம், திங்கள், நாள் ஆகிய சொற்கள் அப்பொருளின் கையாளப்பட்டுள்ளன. பொழுது, திங்கள் இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளைச் சுட்டும் கட்டுரையாளர், திங்களின் பகுப்பான நாள் குறித்தும் பேசுகிறார். தொல்காப்பியருக்கு முன்பே புனர்பூசம் என்ற சொல் இருந்திருக்க வேண்டும். வடமொழி சொல்லானபுனர்வசுஇருந்திருந்தால் அது பற்றிய இலக்கண வரையறையைத் தொல்காப்பியர் சுட்டியிருப்பார். ஆனால், சுட்டவில்லை.
ஒவ்வொரு திங்களின் பெயரும் பிறமொழிப் பெயராக இருப்பதோடு, வானியலோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதால், சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் மொழியின் வாயிலாகவே இலக்கியத்துள் நுழைந்திருக்க வேண்டும். சங்க இலக்கியத்துள் திங்கள் குறித்த பெயர்களினும், பொழுது குறித்த பெயர்களின் இலக்கியப் பயிற்சி அதிகமாகக் காணப்படுகின்றன. திங்களைக் குறிப்பவை சிறப்புப் பெயர்களாகவும் பொழுதைக் குறிப்பவை பொதுப் பெயர்களாகவும் இருப்பது நோக்கத்தக்கது.

            வாரம் பற்றிய கருத்து சங்கம் மருவிய காலத்திலும், நேற்று, இன்று, நாளை என்ற பாகுபாடு சங்க காலத்திலும் இருந்துள்ளதை சான்றுகள் வழி அறியமுடிகிறது. இவ்வாறு நேரப்பெயராக்கம் குறித்தத் தரவுகளை இலக்கியச் சான்றுகள்வழி விளக்குகிறார். நேரம் அதன் பொருண்மைக்கு இட்டுச்செல்லும் அளவுப்பெயர்கள் குறித்தான இக்கட்டுரை காலம் குறித்த அடிப்படைப்புரிதலைத் தருவதாக அமைகிறது. நேரம் என்ற கருத்தாக்க வளர்ச்சி நிலை குறித்து எடுத்தியம்புகிறது. நிகண்டு, தொல்காப்பியம், சங்க மற்றும் சங்க மருவிய காலத்திலிருந்து சான்று தரப்படுவதால் இக்கட்டுரை நேரப்பொருண்மையின் பல தரப்பை தருக்க முறையில் விவாதித்துள்ளது வெளிப்படையாகிறது. தமிழ் மரபிற்குரிய நேரத்தை விரிவாகப் பேசும் இக்கட்டுரை தமிழ் மரபின் பொழுது குறித்த ஆராய்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும்
- தக

04.03.2019 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக