திணைவெளி - கட்டுரை மதிப்புரை
இக்கட்டுரை
க.ஜவஹர் எழுதிய திணைவெளி எனும் நூலில் அமைந்துள்ள முதற்கட்டுரையாகும்.
திணையெனும் சொல் தன்னளவில் பன்முகத்தன்மை கொண்டதாகும். கா. சிவத்தம்பி வரலாற்று நிலையில் விளக்குகையில்,
‘ஆதியில் குடியிருப்பைக் குறித்த இச்சொல் கால வளர்ச்சியில் சொற்பொருள்
மாறுதலடைந்து குடியிருப்பில் உள்ள மக்களின் ஒழுக்க வடிவங்களைச் சுட்டுவதாக மாறியிருப்பது
சாத்தியமே’ என்கிறார்.
குறிஞ்சிக்கு முருகன்,
முல்லைக்குத் திருமால் என திணைக்குரிய தெய்வங்களாகத் தொல்காப்பியர் முதன்மைப்படுத்துவது,
நாட்டார் தெய்வங்கள் வைதீக மரபுக்குள் உட்செறிக்கப்பட்டதைக் காட்டுகிறது.
இதைப் பொதுமையாக்க அரசியலாக நோக்குகையில், “திணை”யை மையமிட்ட அரசியல் உருவாவதை அறியலாம். இதற்கு வலுசேர்ப்பதாக
கட்டுரையாளர், திணைமயக்கம் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படினும்,
பாடல் வைப்புமுறை, கூற்றுமுறை போன்றவை திணை அடிப்படையில்
உள்ளதைச் சுட்டுகிறார்.
ஐயப்பப் பணிக்கர்,
தமிழ்/திராவிட மரபின் இலக்கியக் கோட்பாடாக திணைக்கோட்பாட்டை
இனங்காண்கிறார். தொல்காப்பிய திணைக்கோட்பாடு மார்க்சிய ஆய்வுக்கு
வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் மிகவும் நெருக்கமானது என்பது கோவை ஞானியின் கருத்து.
இவ்வாறு இதற்கு முன் திணை பற்றி ஆராய்ந்த அறிஞர் கருத்துகளை அவர்களின்
நோக்குநிலையிலிருந்து சுட்டி விளக்குவதாக இக்கட்டுரையின் முற்பகுதி அமைந்துள்ளது.
திணைக்கோட்பாட்டின் கட்டமைப்பு
நிலம், காலம் இவற்றின் அடிப்படையிலான இயற்கைச் சுற்றுச்சூழல்,
சமூகச்சூழல், வரலாற்றுச் சூழல் போன்ற பின்புலங்களில்
உயிரியக்கம், வாழ்வியக்கம், கலை,
பண்பாடு ஆகியவற்றுடனான ஆக்கங்களைத் திறக்கிறது. திணைக்கோட்பாட்டின் பன்முகத்தன்மையை அழகியல் நோக்கு, பண்பாட்டியல், சமூகவியல், சூழலியல்,
புவியியல், ஒப்பியல் இவற்றின் அடிப்படையில் விளக்கவியலும்.
சுற்றுச்சூழல் அழகியல் கோட்பாடாகத்
திணைக்கோட்பாட்டை காணவியலும். திணைக்கோட்பாடு என்பதே தமிழின்
சூழலியல் கோட்பாடாகும். ஞானி, சிவத்தம்பி
போன்றோர் மார்க்சியப் பின்புலத்தில் திணைக்கோட்பாட்டை ஒருங்கமைக்கின்றனர். இலக்கியத்திற்கு அடிக்கருத்தாக விளங்கும் உரிப்பொருள் வரலாறு மற்றும் பொருளியல்
சூழலுக்கு ஆட்பட்டதே. நில அமைப்பும், கால
இயக்கமும் இவற்றோடு இணைந்த சூழலில் சிந்தனை மரபுத் தன்மையுடையதாகிறது. திணைக்கோட்பாடு தமிழ்நிலத்தில் நிலவிய இயற்கை வாழ்வின் தற்சார்பற்ற பகிர்தலை
வெளிக்கொண்டுவருகிறது. இன்றைய சூழலில் பன்மைத்துவ அடையாளங்களில்
நம் தனித்தன்மை, அடையாளங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
அவ்வகையில், திணைக்கோட்பாடு ஒற்றை அதிகார அரசியலுக்கு
எதிரான தமிழின் தனித்துவக் கோட்பாடாக அடையாள அரசியலாகக் கட்டமைக்க இயலும் என்கிறார்
கட்டுரையாளர். திணைகளில் காணப்பட்ட மொழிகளை அடையாளங்காணுவதும்
அவசியமாகும். வட்டார வழக்குகளை நிலம், காலம்,
சூழல் அடிப்படையில் எவ்வாறு பகுப்புருகிறது என்பதை திணை மொழியியல் வெளிப்படுத்தும்.
திணைக்கோட்பாடும்
சூழலியல் திறனாய்வும்,
திணைக்கோட்பாடும் மார்க்சியமும் திணை மெய்யியல், திணைக்கோட்பாடும் பின் நவீனத்துவமும், திணைக்கோட்பாட்டுப்
பெண்ணியம், திணைக்கோட்பாடும் உளவியலும், திணைக்கோட்பாடும் மானிடவியலும், திணைக்கோட்பாடும் மொழியியலும்,
திணை உயிரியல் எனும் தலைப்புகளின் கீழ் ஆய்வுப் போக்குகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
சங்க
இலக்கியத்தை வாசிப்பதற்கான அறிமுகத்தைத் தருகிறது. சங்க இலக்கியத்தைத் திணை பின்னணியில்
வாசிப்பதற்கான அறிமுகத்தைத் தருகிறது. நூலின் தன்மையில்,
நூல் தலைப்புக் கட்டுரையாகவும், பிற கட்டுரைகளினை
வாசிப்பதற்கான வாயிலாகவும் இக்கட்டுரை அமைகிறது. திணை பற்றிய
சூன்ய மதிப்புடையவருக்கான தொடக்கநிலைப்புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்தும். நவீன ஆய்வுச் சூழலில் வேறெந்த மரபிலும் அதிகம் காணப்பெறாத திணைக் கோட்பாட்டை
தமிழ் மரபிலிருந்து வளர்த்தெடுப்பதன் தேவையை உணர்த்துகிறது. இதுகுறித்து,
மேலும் வாசிக்க வேண்டியவற்றையும் கட்டுரை ஈற்றில் தந்திருக்கிறார் கட்டுரையாளர்.
-தக
25.02.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக