தமிழரின் மெய்ப்பொருளியல் தொடக்கங்கள் - கட்டுரை மதிப்புரை
- தக
27.03.2019
தமிழரின்
மெய்ப்பொருளியல் தொடக்கங்கள் எனும் கட்டுரை ஜனவரி 2019 பிறழ் இதழில் வெளியானது.
தத்துவம் என்பது தமிழில் மெய்ப்பொருள் எனப்படுகிறது. மெய் என்பதற்கு உடல், உண்மை எனவும் பொருள் என்பதற்கு
பருப்பொருள், பொருண்மை எனவும் பொருள் கொள்ளமுடியும். ஆனால், தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்லுக்கு அடுத்து இடம்பெறும் பொருளதிகாரத்தில் உள்ள பொருள் என்பது பொருண்மையையே
குறிக்கிறது. பொருள் உணர்த்தினமையான் பெற்ற பெயர் என்றும்,
சொல்லின் உணரப்படுவது அது என்றும் விளக்கம் அளிக்கிறார் கட்டுரையாளர்.
வைசேடிகத்
தத்துவமும் பொருட்களின் குறிப்பான பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கி ஆய்கிறது. குறிப்பான பண்பு
குணவிசேடம் என்றும் பதார்த்த விசேடம் என்றும் பொருள்படுகிறது. பதம் + அர்த்தம் = பதார்த்தம்.
சொல் + பொருள் எனில், தமிழும்
வைசேடிகமும் சொல்லையும் பொருளையும் மிக நெருக்கமாக வைத்தே அர்த்தப்படுத்தியுள்ளது.
நிலமும்
பொழுதும் பொருள்முதல்வாதம்.
தமிழில் செழுமையான உலகியல் மரபு பழங்காலம் தொட்டே வழங்கி வருகிறது.
புறநானூறு காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு சிந்தனைகள் தோன்ற அதுவே
காரணமாக இருந்திருக்கிறது. பிற்காலத்தில் இறைவன் முதற்பொருளாக
ஆக்கப்பட்டாலும் பண்டைத்தமிழர் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கருதினர்.
நிலம் ‘மாறாத்தன்மையது’ பொழுது
’மாறும்தன்மையது’ என்று நிறுவும் கட்டுரை முதல்,
உரி, கருப்பொருள் குறித்த சுருக்கமான வரையறையைத்
தந்துள்ளது.
முதற்பொருள் – அடித்தளம்
– இயற்கை, இயல்பானது
கருப்பொருள் – இடைத்தளம்
உரிப்பொருள் – மேல்தளம்
– சமூகக்கற்பிதம், கட்டமைப்புப் பண்பு,
செயற்கை
தத்துவ வரலாற்றில் இயற்கை முதற்புள்ளி. மனிதன் இரண்டாம்
புள்ளி. முதல்நிலையில் இயற்கையுடனும், பின்
மனிதர்களுடனும் தன்னை நிறுத்திப் பார்க்கிறான். இதனை,
சங்க இலக்கியத்தில் வெளிப்படையாகக் காண இயலும்.
இன்றைய சூழலில், மொழி தகவல் தொடர்புக்
கருவி-சாதனம் எனும் நிலையில் உள்ளது, பெரும்பாலானோரின்
வாழ்வு மொழிநிலைச் சிந்தனைகளுக்கு இட்டுச் செல்வதில்லை. ஆனால்,
பழங்காலத்தில் மொழி வாழ்வியலாக இருந்துள்ளதெனக் கருதினால்,
மொழிமுதற்
காரணமாம் அனுத்திரள் ஒலி எழுத்து;
அதுமுதல்
சார்பு என இருவகித்தே;
உடம்பும்
உயிரும் ஆம் முப்பது முதலே.
(நன்னூல்)
மேற்காணும்
நூற்பாவின் வழி,
மொழியின் எழுத்துகளை உடலும் உயிருமாகச் சுட்ட வேண்டியதன் பின்னணியை அறிய
வேண்டியது அவசியமாகிறது. அகமின்றி புறமும், புறமின்றி அகமும் பிரிய முடியாது.
வசுப தமிழில் அகமே அடிப்படை என்கிறார். இயற்கைத்
தத்துவத்திலிருந்து அகத்திணை தோற்றம் கொள்கிறது என்கிறார். அகத்திணைமரபு
பெண்பாத்திரங்களின் வெளிப்படாக வருவது குறிப்பிடத்தக்கது.
பண்பாட்டில் வேர்கொண்ட ஒரு
மெய்ப்பொருளியலைத் தமிழ் தன் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆனால்,
ஐரோப்பிய சிந்தனை மெய்யியல், நாடு, காலம் கடந்த பொதுச் சொல்லாடலாக இருக்க வேண்டும் என்கிறது. தமிழின் மெய்யியல் தமிழ்ப்பண்பாட்டையும் சுமப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மெய்ப்பொருளுக்கான வரையறை
தரப்பட்டுள்ளது. முதல், உரி, கருப்பொருள் குறித்த சுருக்கமான அறிமுகம் முதிர்நிலையில் இருக்கும் கட்டுரைக்கு
அவசியமற்றதாகவே இருக்கிறது. கட்டுரையாளருக்கு இருக்கும் மார்க்சீய
பின்பு கட்டுரையில் ஆங்காங்கு வெளிப்படுகிறது. ஐரோப்பிய சிந்தனை
மரபுக்கேற்பத் தமிழை வகைப்படுத்த முயற்சித்திருக்கிறார். தமிழின்
மெய்யியல் உலக மெய்யியலாகக் கொள்ளமுடியாமைக்கான காரணமாகத் தமிழ் மெய்யியல் தமிழ்ப்
பண்பாட்டைச் சுமப்பதைச் சுட்டுவதை எந்தவகையில் ஏற்பதெனத் தெரியவில்லை.
- தக
27.03.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக