நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Monday, 13 April 2020

முத்துபேட்டை சுற்றுலா ! (குறு) பயணக்குறிப்பு


(சுற்றுலா தினத்தை ஒட்டி போட்டிகள் நடத்தி வென்றவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அதற்கான பயண அறிக்கையை வனத்துறை அலுவலர் கேட்டிருந்தார். திரும்பிய பின் எழுதிய அனுப்பியது இது. பொறுத்துக்கொள்க!)

சுற்றுலா தினச் சுற்றுலா – 2013

*காலை 5 மணிக்கு அடித்த
அலாரத்தை உறக்கத்தில் அணைத்து
காலை 5.15 மணி அலாரத்தினை
கண் திறவாமல் நிறுத்தி
காலை 5.30 மணி அலாரத்தை
அடிக்கும் முன்பே அழித்து
சூரியன் புலரும் முன்னே எழுந்து
முப்பத்திரு பல்லையும் துலக்கி
குளிர்நீரில் குளித்து
தலைசீவி புறப்பட்டேன்
திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு

*6.30 மணி மன்னார்குடி பேருந்து
ஊர்ந்து ஊர்ந்து மன்னை சேர
ஆனது 8.00 மணி
காலை உணவைக் கடையில் முடித்தபின்,
அரைமணி நேரம் காத்திருப்பு.
காத்திருப்பு கைகூடவே வந்தது
அரசாங்க வண்டி பொலேரோ க்ளக்ஸ்

*சிட்டாய் பறந்த வண்டி
பதினெட்டே நிமிடங்களில்
முத்துப்பேட்டை அடைய
வனச்சரக அலுவலகம்
வா! வா! என வரவேற்றது
என்னை/எங்களை.
வந்திறங்கி, கால் மணிநேரத்தில்
மற்றுமொரு பொலேரோ கிளக்ஸ்
அது முத்துப்பேட்டை வனச்சரக ரேஞ்சர் வண்டி
அடுத்த ஐந்து நிமிடங்களில்
அம்மையப்பன் பள்ளியும் வர
அங்கிருந்து புறப்பட்டோம்
படகுத்துறைக்கு.


*படையெடுத்து நின்ற படகுகளில்
அடியெடுத்து வைக்கயிலே
உள்ளமெல்லாம் ஒரே வெள்ளம்.
மூன்று படகுகளில் அனைவரும் அமர
முன்னேறின படகுகள் லகூன் காட்டுக்குள்
முதல் படகில் நான் செல்ல-முழு மகிழ்ச்சி
என்னவோ எனக்குத்தான்!

*ஒருமணி நேர ஓட்டத்துக்குப்பின்
செல்லிமுனை அடைந்தோம்.
வந்தவர்களை துப்புரவுப் பணி
மேற்கொள்ளவைத்தது
பாராட்டுக்குரிய செய்தி.
யாரோ தூக்கியெறிந்த குப்பைகள்
யாரோ மதுவருந்த காலியான பாட்டில்கள்
பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்களென என
ஏழுமூட்டைகள் கட்டப்பட்டன.
அறிவியல் தாவரங்கள் பற்றிக்கூறி
வன அலுவலர் அறிவை வளர்த்திட்டார்.
கால்மணி நேரத்தில் அடுத்தமுனை


*பார்வை எட்டும்தூரம்வரை
கடல் அலை நீர் மரம் வெயில் மட்டுமே
அலைகளால் ஆற்றி ஆற்றி ஆற்றுப்படுத்தும்
அலையாத்திக் காடுகளில் குறுக்கும் நெடுக்கும்
சுற்றினோம். 
நீரற்ற வறண்ட பரப்பும்
அங்கே இருந்தது வியப்பாகத்தான் இருந்தது.

*மதியம் ஒருமணிக்குத் தந்த டீ, பிஸ்கட்
தேவமிர்தமாய் இருந்தது பசிக்கு.
அங்கிருந்தும், ஒரு மூட்டை குப்பைகளை
ஏற்றிக்கொண்டு, மீண்டும்
முக்கால் மணி நேரப் பயணம்.
கிழித்துச் சென்ற நீர்
அழகாய் வீசிய காற்று
செல்லில் ஒலித்த பாட்டு
என அனைத்தையும் ரசித்தோம்.
2.00 மணி உச்சி வெயிலில்.
முத்துப்பேட்டைக்கு 3.00 மணிக்கு வரை
2.30க்கு விடைகொடுத்தோம்
லகூன் காட்டுக்கு.


*3.30க்கு வனச்சரக அலுவலகம் வர
பரிசு என்ன? என ஆர்வம் தட்டியது.
இதில் மதிய உணவை மறந்ததே ஆச்சரியம் தான்.

*எனக்கு கொடுத்த முதல் பரிசில்
முத்தான நான்கு புத்தகங்கள்,
அவற்றின் தலைப்புகள் என்னை
ஊக்கப்படுத்தியது. ஆனால்,
சான்றிதழ் இல்லாதது ஏக்கப்படுத்தியது.


*விரைந்து கிளம்பினோம், அங்கிருந்து
அம்மையப்பன் பள்ளியுடன்
உதயமார்த்தாண்டபுரம் சென்றோம்.
எனக்கு இது இரண்டாம் முறை
என்பதால் சலிப்பு தட்டியது கால்களுக்கு
இருப்பினும், சென்றேன்
இயற்கையை கண்டேன்
இதமான சூழ்நிலை உணர்ந்தேன்.
பலவித பறவைகளைப்
பைனாகுலாரில் கண்டுகளித்து
திரும்பினேன்.

*6.00 மணி ஆவதற்குள்
வீட்டுக்குள் குடிபுகுந்தேன்.
ஆனால், என்னுள்ளம்
முத்துப்பேட்டையில் குடிகொண்டதை
06.01க்கு உணர்ந்தேன்.

நன்றிகள் பல அரசுக்கு….
No comments:

Post a Comment