நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 30 செப்டம்பர், 2020

தமிழ் மொழிபெயர்ப்பு அறிமுகம் | மொழிபெயர்ப்புக் கருவிகள்

அகில இந்திய வானொலிக்காக மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கி, 2020 செப். 23ஆம் நாளோடு ஓராண்டு நிறைவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் NCERT, NPTEL முதலான நிறுவனங்களுக்கும் மொழிபெயர்ப்புக்காகப் பங்காற்றியிருக்கிறேன். இந்த ஓராண்டில் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்பாக நிறைய நுட்பங்கள் கற்றுக்கொண்டுள்ளேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். அவற்றுள் அடிப்படையானவற்றைப் பொதுவில் பகிர்வது ஏனையவர்களுக்கும் பயன்படும் என்பதாலும், மொழிபெயர்ப்புத் துறையில் நுழைய எண்ணுபவர்களுக்கு உதவும் என்பதாலும் இங்கு பகிர்கிறேன். நன்றி.

உலக மொழிபெயர்ப்பு நாள் வாழ்த்துகள்.

..தமிழ்பாரதன் | 30.09.2020

தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றின் தொடக்கம்

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 

என்றார் பாரதி. பிறமொழியில் அறிவைத் தமிழுக்குக் கொண்டுவருதல் வாயிலாகத் தமிழ் மக்கள் பிறமொழி அறிவைப் பெறுதல் எளிதாகிவிடும். இதற்கு மொழிபெயர்த்தல் அடிப்படையானதாகும். தற்காலத்தில் கணினியில் ஒரு மொழியை உள்ளீடு கொடுத்தால், அது இன்னொரு மொழியில் பெயர்க்கப்பட்டுவிடுகிறது. இது எந்திர மொழிபெயர்ப்பு.  மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும்.

தமிழின் மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலத்திலேயே இதற்கான விதிமுறைகள் இருந்திருக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த நெடிய மரபில் தற்கால எச்சம் நாம் என்பதை எண்ணிக்கொண்டுச் செயல்படுதல் தமிழுக்கு வளமை அளிக்கும்.

    வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியலில் 5ஆவதாக இடம்பெறும் இந்த நூற்பா மொழிபெயர்ப்புக்கான வரையறைகளைக் கொடுக்கின்றது. தற்காலத்தில்தான் ஆங்கிலம்-தமிழ் பயன்பாடு அதிகம் உள்ளது. அக்காலத்தில் வடமொழிகளுடனே அதிகப் பயன்பாடு தமிழுக்கு இருந்தது. வடமொழியில் உள்ள ஒரு சொல்லைத் தமிழில் தர வேண்டுமானால், தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்ற வேண்டும். இங்கு, கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு.

1.         தற்சமம் – ஒலி மாறுபாடின்றி வழங்குவது – कमल (kamal) – கமலம் (தாமரை)

2.         தற்பவம் – ஒலி மாறுபாட்டு அமைவதுతెలుగు (telugu) – தெலுங்கு (ங் சேர்க்கப்பட்டுள்ளது)

இதன்வழி ஒன்றை அறிந்துகொள்ளவியலும். பிறமொழியில் உள்ள உச்சரிப்பே தமிழில் உச்சரிக்க வேண்டியதில்லை. அதாவது, Hariharan என்ற உச்சரிப்பைத் தமிழில் தர ஹரிஹரன் என்று எழுதவேண்டியதில்லை. தமிழ் மொழிக்கு ஏற்ப அரிகரன் என்று வழங்குவதே உரியது. கம்பரின் காலம் வரை தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்றியமைக்கும் வழக்கு இருந்திருக்கிறது. விபீஷணன் என்பதை வீடணன் என்றும் ராமன் என்பதை இராமன் என்றும் சீதா என்பதை சீதை என்றே தமிழுக்கு ஏற்ப மாற்றி வழங்கினார்.

 பிற்காலத்தில், மணிப்பிரவாளநடை தோன்றியபோது, கிரந்த எழுத்துப் பயன்பாடு தலைதூக்கியது. தனித்தமிழ் இயக்கம் அதனைப் பாடுபட்டு ஒழித்தாலும் இன்றளவும் கிரந்த எழுத்துகளின் ஆதிக்கம் தமிழ்ப் பொதுமக்களிடையே தவிர்க்க இயலாததாக உள்ளது. தமிழ்+ஆங்கில கலப்பு நடையான தமிங்கிலம் மொழிப்பயன்பாட்டில் புரையோடிவிட்டது. இதுவும் ஒழிக்கப்படவேண்டியதே. (தமிழில்/தமிழாக்கத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்து வாசிக்க…)

சான்றாகச் சொல்லவேண்டுமானால், Translation என்பதையே எடுத்துக்கொள்ளுங்களேன். இதனுடைய நேரடிப் பொருள்வேறிடம் எடுத்துச் செல்லல்என்பதே. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்பு என்கிறோம். Translation என்பதில் Language என்றசொல் இடம்பெறாத போதும், அதன் பொருள் தமிழில்மொழிபெயர்ப்புஎன்பதே.

ஆதலால், ஒரு மொழியிலிருந்து சொற்றொடர் ஒன்றைத் தமிழில் கொண்டுவர சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்தல் கூடாது. அதன் பொருளை உள்வாங்கிக்கொண்டு தமிழுக்குத் தகுந்தாற்போல மொழிபெயர்ப்பு செய்தல் அடிப்படையானதாகும். waterfalls என்பதை நீர்வீழ்ச்சி என்று மொழிபெயர்த்தல் கூடாது. அதற்குத் தமிழில் அருவி என்ற சொல் இருக்கிறது, அதனைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்.

ஏற்கெனவே மொழியில் இருந்த/இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்தும்போது தமிழின் சொல்வளம் பாதுகாக்கப்படுகிறது. புதிய சொற்களைத் தேவையின் அடிப்படையில் உருவாக்குவது கலைச்சொல்லாக்கம் எனப்படுகிறது. “nano” என்ற தொழில்நுட்பம் வருகையில், இதனை “நுணம்” என்று மொழிபெயர்த்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த தமிழார்வலர் திருவளவன். இதன்படி, nano technology என்பது நுணவ நுட்பவியல், இதில் எந்தச் சிக்கலும் இல்லையே.

Biology என்பதை முன்னமே உயிரியல் என்று மொழிபெயர்த்து புழக்கத்தில் இருப்பதால் நமக்குப் பெரிய மாறுபாடு தெரிவதில்லை. தற்காலத்தில் புதிய சொற்களை உருவாக்கும்போது ஐயோ புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்!! என்று கத்துவது அபத்தமானது. பரிதாபத்திற்குரியது.


Translation       - மொழிபெயர்ப்பு (சான்று : flower – மலர், soil - மண்)

Transcreation     - மொழியாக்கம் (ஒன்றை உள்வாங்கிக் கொண்டு தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தல். சான்றாக Munnaa Bhai M.B.B.S என்ற படத்தைத் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்று உருவாக்கும் போது, தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப வசனங்களை நபர்களை மாற்றம் செய்துகொள்ளுதல். ‘ஆழ்வார் பேட்டை ஆண்டவா….’ வரிகளை இந்திப் படத்தில் தேடினால் கிடைக்காது. இதுவே இலக்கியப் பனுவலுக்கும் பொருந்தும்)

Transliteration    - ஒலிபெயர்ப்பு (பிறமொழி உச்சரிப்புகளைத் தமிழில் எழுதுதல். அதாவது, twitter – ட்விட்டர், whatsapp – வாட்சப். பெரும்பாலும் இது பெயர்ச்சொற்களுக்கே உதவும்)

 செய்யப்படும் மொழிபெயர்ப்பு யாரைச் சென்றடையப் போகிறது என்ற கேள்வி தலையாயது. தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகள் ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் அப்படியே மொழிபெயர்க்க மாட்டார்கள். தேவையானதைத் தேவையான அளவு தமிழில் தருவார்கள். மொழிபெயர்ப்புத் தூய்மை அங்கு தேவைப்படாது. ஆனால், ஒரு கவிதையோ, கட்டுரையோ தரம் மாறாமல் அப்படியே இன்னொரு மொழிக்குப் பெயர்க்கப்படுகையில் அங்கு கூடுதல் கவனம் தேவை. ஒரு பனுவலில் “மொழிபெயர்ப்பு” என்று குறிப்பிடப்படும் அனைத்துமே செறிவாகப் பொருள்தளம் மாறாமல் பெயர்க்கப்பட்டிருத்தல் அவசியம்.

மொழிபெயர்ப்புக் கலை - மொழிபெயர்ப்பு செய்வது குறித்து ஏராளமான நூல்கள் தமிழில் எழுந்துள்ளன. அவற்றைப் படித்துத் தெளிவு பெறலாம். எனினும், தொடர்சியாகச் செய்துபார்த்தலின்வழியே மொழிபெயர்ப்பில் மேன்மையடைய முடியும் என்பது அறிஞர் கருத்து.

மொழிபெயர்ப்புக் கருவிகள்:

1.         அனைத்தையும் மனிதனே மொழிபெயர்ப்பது நல்லதுதான். சில நேரங்களில் நெடிய சொற்றொடர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பின் உதவியை நாடலாம்.

2.         இயந்திர மொழிபெயர்ப்பு உதவியை நாடுவது அறிவுடைமையாகும். இருக்கின்ற இயந்திர மொழிபெயர்ப்புகளிலேயே https://translate.google.com/ என்பது ஓரளவு நன்றாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்யவேண்டியதை இதில் உள்ளீடு செய்து தமிழ் பெயர்ப்பைப் பெறலாம். இயந்திர மொழிபெயர்ப்புக்குப் பின், அதனை திருத்தம் செய்து, செம்மையாக்கம் செய்வது அவசியமானதாகும்.

3.         தமிழ் அகரமுதலி https://www.xn--vkc6a6bybjo5gn.com/ இந்தத் தளத்தில் உள்ளது. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒத்த பொருண்மையுடைய தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நம்பிக்கையான அகராதி. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழின் அனைத்து அர்த்தங்களையும் இங்குக் காணலாம். இதனால், தமிழின் சொல்வளம், சூழலுக்குத் தக்க அர்த்தம் தரும் சொற்களைப் பெறலாம்.

4.         மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி http://218.248.16.22/etytamildict/TamilDemo.aspx என்ற தளத்தில் உள்ளது. தமிழ்ச் சொல்லுக்கு இணையான வேறு சொற்களைப் பெற இதனைப் பயன்படுத்தலாம். 

5.         இதிலும் விளக்கம் கிட்டவில்லையெனில், https://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil என்ற தளத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, வின்சுலோ தொகுத்த அகராதி, சென்னைப் பல்கலை.யின் தமிழ் அகராதி முதலானவை உள்ளன. தேவைப்படும் சொல்லை உள்ளீடு செய்து தேடலாம். 

6.         நிறைவான மொழிபெயர்ப்பை http://vaani.neechalkaran.com/ என்ற தளத்தில் கட்டுரையை உள்ளீடு செய்து பிழைகளை நீக்கிக்கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தனங்களைத் தாண்டி மொழிபெயர்ப்புச் செய்யவுள்ள பனுவல் மீதான அறிவு, புரிதல், தெளிவு, தமிழ்ச்சூழல்-பண்பாடு, யார் பயனாளர்கள் என்ற அணுகுதலோடு செய்யப்பெறும் மொழிபெயர்ப்புகளே தனித்து நிற்கின்றன.


கிரந்த எழுத்துகள் தேவையில்லை!

 கிரந்த எழுத்துகள் தேவையா? தேவையில்லை

தமிழில் வடமொழி ஒலிகளை எழுத உருவாக்கப்பட்டவையே கிரந்த எழுத்துகள். ஜ ஷ ஸ ஹ ஸ்ரீ முதலானவை கிரந்த எழுத்துகளே. இந்த எழுத்துகளை எழுதி வடமொழிக்காரர்களிடம் காட்டினால், அவர்களால் படிப்பது இயலாது.  ஏனெனில், இது தமிழுக்காக உருவாக்கப்பட்டவையே.

ஆக, கிரந்த எழுத்துகள் என்பவை தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வடமொழி ஒலிப்புடைய எழுத்து.  பிறமொழி (ஒலி)உச்சரிப்புக்கு ஏற்பத் தமிழில் ஏன் புதிய எழுத்துகளை உருவாக்க வேண்டும். தமிழின் ழ எழுத்தை வடமொழியில் ல என்றே விளிப்பார்கள். அதன் உச்சரிப்புக்கு ஏற்ப புதிய எழுத்துகளை உருவாக்கவில்லையே. Thamizh அல்லது tamil எப்படி எழுதி வாசத்தாலும் தமிழ் என்ற ஒலிப்பு வருவதில்லையே. அதனால், ஆங்கிலத்தில் ழ ஒலிப்புக்கு இணையாக ஓர் எழுத்தை உருவாக்கினார்களா. இல்லையே. பிறகு, ஏன் தமிழில் மட்டும்.

சரி, உருவாக்கி விட்டார்கள், சில தலைமுறை பயன்படுத்திவிட்டது. இனி, அவற்றை மறுத்துத் தற்சார்புத் தமிழை மீட்டுருவாக்குவதே சரியானதாக இருக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் தமிழாக்கம் செய்து எழுதப்பட்ட ‘ஒலி’கள். பிற்காலத்தில் அவ்வொலிகளுக்கு ஏற்ப எழுத்துகளை உருவாக்கும் அளவுக்கு நிலைமாறிப்போனது. தனித்தமிழியக்க வளர்ச்சியினால், தற்சார்புத் தமிழில் மீட்டுருவாக்கத்திலும் இந்த கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.

1.   தற்போது கிரந்த எழுத்துப் பயன்பாடு பெயர்ச்சொற்களில்தான் இடம்பெறுகிறது. பெயர்ச்சொற்களிலிருந்து முதலில் கிரந்த எழுத்தை நீக்கல் வேண்டும்.

2.   அடிமை மனோபாவத்தை ஒழித்தல். தன் பிள்ளைக்கு வடமொழி ஒலிப்பில் பெயர் வைத்தால் (சான்று : மோனிஷ், மஹிஷா) பெரிய மேதமை போன்ற போலிப் புகழ் உணர்வு அடையும் பெற்றோர்கள் தங்கள் மனப்பிறழ்வைச் சரிசெய்துகொள்ளுதல் வேண்டும்.

3.   இது எதிர்காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு உருவாகாமல் இருக்க உதவும். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் தற்போது சீனிவாசன் என்று தமிழில் பெருவழக்காக மாறியிருக்கிறது அல்லவா.   

4.   இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் அனைத்தும் கணினிமயம் ஆதலால், உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் ஒருங்குறியிலிருந்து ஸ, ஸ்ரீ, ஹ, ஜ, ஷ எழுத்துக்களை நீக்கம் செய்துவிட்டால்,  அவற்றைப் பயன்படுத்த இயலாமல், மக்கள் இயல்பாகவே தனித்தமிழுக்கு வந்துவிடுவார்கள்.



இப்போது, தமிழில் மொழிபெயர்க்கும்போது, அந்நியப் பெயர்களை எவ்வாறு உச்சரிப்பது என்ற ஐயம் வரும்.  அமெரிக்க மேனாள் அதிபர் George Walker Bush என்பதை ஜார்ஜ் வால்க்கர் புஷ் என்று எழுதுவதற்குப் பதிலாக சார்ச் வால்க்கர் புச் என்று எழுதலாம். இதைப் படிக்கும்போது, George Walker Bush என்ற ஒலிப்பில் சொல்ல வேண்டியதான்.

ஜார்ஜ் வால்கர் புஷ்பொதுமக்கள் மனநிலை

சார்ச்சு வால்க்கர் புசுதனித்தமிழ் பெயர்ப்பு

சார்ச் வால்கர் புச்தேவையான பெயர்ப்பாக கருதுவது.

நாவலாசிரியர், எழுத்தாளர், மெய்யியலாளர் Dostoevsky பெயரைத் தமிழில் தாஸ்தோவ்ஸ்கி /தஸ்தாயெவ்ஸ்கி என்று சொல்வார்கள். இது ஆங்கில உச்சரிப்போடு நெருக்கமாக இருக்கிறாதா என்ன? இல்லையே. பிறகு, தச்தோவ்ச்கி என்று எழுதி படிக்கும் போது, Dostoevsky என்ற ஒலிப்பில் சொன்னால் என்ன? இன்னும் சொல்லப்போனால், அவர் இரசிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பெயரை அதன் மூலமொழியின் ஒலிப்புக்கு இணையாகத்தானே உச்சரிக்க வேண்டும்.

சரி, கிரந்த எழுத்துகளுக்கு தமிழில் உச்சரிக்கத்தக்க ஒலி இல்லை என்று கருதுகின்றீர்களா!   

Ja

மஞ்சள் – இதில் உள்ள ச எழுத்து ஜ என்றே உச்சரிக்கப்படுகிறது.

Sha

பக்‌ஷி – பட்சி இதில் உள்ள ட்+ச் என்பது ஷ என்றே கொள்ளலாம்.

Sa

சக்கரம் – இதில் உள்ள ச எழுத்து ஸ என்றே உச்சரிக்கப்படுகிறது

Ha

பகல் – இதில் உள்ள க என்ற எழுத்து ஹ என்றே உச்சரிக்கப்படுகிறது

ஸ்ரீ

sri

திரு. (தமிழின் திரு = வடமொழியின் ஸ்ரீ)

ஆதலால், எழுத்துகளில் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதுவதும் ஒலிப்பில் உரியனவற்றை உச்சரிப்பதும் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க உதவும்.  

மனது வைத்தால் முடியாதது ஏதேனும் உண்டா?

இதன்பின்னரும் பிறமொழி எழுத்துகளை/அதன் உச்சரிப்பிலேயே தமிழில் ஒலிக்க கிரந்த எழுத்துகளை ஆதரிக்கும் நபர்கள் இருப்பின் ஒரு வேண்டுகோள்.

ல/ழ/ள, ண/ந/ன, ர/ற, ங/ஞ உச்சரிப்புகளை வேறுபடுத்த பிறமொழிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் அம்மொழிகளில் தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துகள் குறித்தும் தெரியப்படுத்துங்கள். தமிழில் கிரந்த எழுத்துகள் இருக்கலாமா என்பது குறித்து அதன்பின்னர் விவாதிப்போம்.

த.க.தமிழ் பாரதன் | 30.09.2020

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

புது வெள்ளை மழையும் ஆகாய கங்கையும் எம்.ஜி. வல்லபனும்

கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் என்ன நடக்குமோ என்று அறியாத பதட்டம் எல்லாருக்கும் இருந்தது.

மார்ச் 18 புதன்கிழமை காலை அகில இந்திய வானொலியில் பணி. காலை 4 மணிக்கே தயாராயாச்சு. சிலநாள் முன்பு வாங்கிய டெட்டால் சுத்திகரிப்பானைப் பையில் எடுத்து வைத்திருந்தேன். முன்னிரவு தயாரித்துவைத்த சிற்றுணவு எடுத்துக்கொண்டு, வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலி வாகனம் அனுப்பும். அந்த வாகனத்தில் Location பார்க்கும் வசதி கிடையாது. வாகன ஓட்டிக்கு இந்திதான் தெரியும். அவருக்குப் புரியும் இந்தியில் பேசி, எனது இருப்பிடத்திற்கு வரவைத்துவிட்டால் வெற்றிபெற்ற உணர்வு இருக்கும். நல்லவேளை, அன்றைக்கு வாகனஓட்டி சொன்னதைப் புரிந்து வந்துவிட்டார்.

ஒருவார காலமாக வெளியே செல்லாமல் தப்பித்த எனக்கு, அன்றைக்குப் பணிக்குச் சென்றே ஆகவேண்டும். பெரும்பாலும் தில்லி வீதிகள் காலை 4 மணியளவில் வெறிச்சோடி இருக்கும். இப்போது, கொரோனா தொல்லை வேறு.  சிலபத்து நிமிடங்களில் ஆகாசவாணி பவன் வந்துவிட்டது. அங்கே, சானிடைசர் சுத்தம் செய்து அனுப்பினார்கள். ஒலிபரப்பு அறைக்குள் செல்லும்வரை அப்பாடா என்றிருந்தது.

இப்போது ஏன் இதெல்லாம் சொல்கிறேன் எனக் குழம்புவதைவிட பத்துப் பங்கு அதிகக் குழப்பங்களைக் கொரோனா ஏற்படுத்தியிருந்தது. கொரோனா நோய்தொற்று என்ற புரிதலெல்லாம் இல்லை. தொற்றுநோய் என்றே அஞ்சிக்கொண்டு மூளையைக் குழப்பும் செய்திகள்-பகிர்வுகள் நடந்துகொண்டிருந்தன. எல்லாமே அந்த அறைக்குள் போகும்வரை. எதுவும் ஒலிபரப்பைப் பாதிக்கக்கூடாதென உறுதிஎடுத்தாலும், சிலதடங்கல் வந்திருந்தது. இனி, இந்த அறைக்கு வருவோமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். உண்மைதான். ஆறுமாதம் ஆகிவிட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் ஒலிபரப்பு இன்னும் தொடங்கியதாயில்லை.

05.30 – 06.15 வரையிலான நிகழ்ச்சியை அடுக்கி வைக்க வேண்டும். 05.50 வரை உரிய அனைத்தும் இடம்பெற்றுவிட்டது. 05.50 க்கு வாசிக்க வேண்டிய ஆங்கில உரையின் தமிழாக்கம் தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய A Regional Response To COVID-19 Challenge ஆங்கில உரையின் தமிழாக்கம் கையில் இருந்தது. இதற்கடுத்து புதன்கிழமைக்கு என்றே ஒலிபரப்பாகும் ‘சந்திப்பில் இன்று’ நிகழ்வு 05.55 அளவில் தொடங்கும். அதில் அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களை கவிஞர் இரவி சுப்பிரமணியன் அவர்கள் கண்டிருந்த பேட்டியின் நிறைவுப் பகுதி இடம்பெற்றது. 06.06க்குப் பிறகு இரண்டு பாடல்களே இடம்பெற நேரமிருந்தது.

முதல்நாளே நேய(ர்!) விருப்பமாக, ஏஆர் ரகுமான் பாடல் கேட்டிருந்ததால் “புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது”  பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாகிவிட்டது.  அடுத்து, ஒரு பாடல் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்று பெருங்குழப்பம் நிரம்பியிருந்தது. இந்தக் குழப்பமான சூழலில் உற்சாகமான ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தேடினேன் தேடினேன் தேடினேன். இளையராஜா பாடல்களில் உற்சாகமான, காதலான, வானொலியில் ஒலிபரப்பத்தக்க, காலையில் கேட்கத்தக்க, கணினியில் இருப்பில் உள்ள பாடல்களில் தேடித் தெளிந்து ஒரு பாடல் எடுத்தேன். “ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி… பொன்மான் விழி தேடி…”.  புது வெள்ளை மழைக்கும் ஆகாய கங்கைக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றியது. ஒலிபரப்புக்குத் தயாரானேன்.

வானொலியில் ஒலிபரப்பு செய்யும் அனைத்துக்கும் சான்று/எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும். Que sheet என்று சொல்வார்கள். எக்காலத்திலோ பாடல் வெளியாகிருந்தாலும் இன்றைக்கு ஒலிபரப்பினாலும், பாடல் வெளியிட்ட நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட சதவீதத் தொகை ராயல்டியாகச் செல்லும்/செல்லவேண்டும் என்பது  வழக்கு. அப்படிக் குறிக்கும்போது வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் தவிர, பாடல் குறித்த இன்னபிற தகவல்களையும் அளிக்க வேண்டும்.

எந்தப் படம், யாருடைய குரல், யாருடைய இசை, என்பதுதான் அவை. இதோடு அது யாருடைய வரிகள் என்பதும் அத்தியாவசியம். பெரும்பாலும், இசைத் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் பெயர் விடுபட்டுப் போய்விடும். அறிந்தவரை, வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்தான், பாடாலாசிரியர் பெயர் தவறாமல் இடம்பெறும். வரிகள் இல்லையென்றால், அப்பாடல் வெறும் இசைக்கோவையாகத்தான் இருக்கும். வரிகளை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிடுதல் அடிப்படையானது. இணையத்தில் தேடினாலும், பாடலாசிரியரின் பெயரை பெரும்பாலான இணையதளங்கள் விட்டுவிடுகின்றன. தற்போது வெளியாகும் புதுப்படப் பாடல்களில் lyrics : என்று பாடலாசிரியர் பெயர் இடம்பெற்றாலும், பழைய பாடல்களில் இத்தெளிவு இருப்பதேயில்லை.

சரி விசயம் இதுதான். அன்றைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு பாடல்களும் வைரமுத்து எழுதியது என்று எண்ணியிருந்தேன். ஆனால், ஆகாய கங்கை பாடல் எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். பாடலாசிரியர் பெயர் அறிமுகமே இல்லை. அத்தனைமுறை இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட இவர் பெயரைச் சொன்னதாயில்லை. எம்.ஜி. வல்லபன் குறித்த நிகழ்வு முடிந்து தேடுவோம் என்று முடிதாயிற்று.

நோய்த்தொற்று சூழ் சூழலில் பாடல் ஒலிபரப்பும்முன் சொல்லும் பாடல் விளக்க/அறிமுகத்தில் கொஞ்சம் உற்சாகமான வரிகளை அள்ளித்தெளித்து எழுதிமுடிக்கையில் 05.30 வந்துவிட்டது.

·         வந்தேமாதரம், திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் தொடங்கி 

·         மங்கல இசை

·         தமிழ்ச்செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பு

·         நிகழ்ச்சிக் குறிப்புகள்

·         பக்தி இசை

·         குறளமுதம்

·         ஆய்வுரை

·         சந்திப்பில் இன்று முடித்து

பாடலுக்கு வந்தாயிற்று. பாடலை அறிமுகம் செய்து “ஆகாய கங்கை” ஒலிபரப்பாகையில் முழுதும் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருந்தன. ஆகாய – இந்த எழுத்துகளில் ஆ-3 அசையும் கா-2 அசையும் கொடுத்து பாடியிருப்பார் காந்தக்குரலோன் மலேசியா வாசுதேவன். எளிய சொற்சேர்க்கை கொண்ட அற்புதமான வரிகள், ஹம்மிங் சேர்த்து இளையராஜா அசத்தி இருப்பார். “பாடுதே மங்களம் – நாடுதே சங்கமம்”, “சீதா புகழ் ராமன்” சொற்களைச் சுருக்கி பொருண்மையைப் பெருக்கியிருந்தார் எம்.ஜி. வல்லபன்.

அடுத்த பாடல், நேய(ர்!) விருப்பமான புதுவெள்ளை மழை பாடல் சொல்லவே வேண்டாம். தற்காலத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயமான பாட்டு. முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த நாளில்,  நான்கைந்து வரிகள் அள்ளித்தெளித்து அந்தப் பாட்டை ஒலிபரப்பினேன். அதுதான் கடைசியாக ஒலிபரப்பிய பாட்டு. நிறைவான பாட்டு. அன்றைய ஒலிபரப்பை 06.15க்கு நிறைவு செய்ததோடு, வெளியே வந்து தமிழகத்திற்கு விமானச்சீட்டு பதிவு செய்தாயிற்று. ஆறுமாதம் ஓடியும் விட்டது.

*

இளையராஜாவோடு பல பாடல்கள் உருவாக்கியிருக்கும் எம்.ஜி.வல்லபன்,  “மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”, “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” முதலான வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். கேரள மாநிலத்தின் திருச்சூரில் பிறந்த எம்.ஜி. வல்லபன் பின்னாளில் தமிழ்த்திரையுலகில் காலடி வைக்கிறார். தமிழ் இதழியல் பயின்ற அவர், ஃபிலிமாலாயா இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்றறிய முடிகிறது. வெள்ளித்திரையில் பாடலாசிரியராக மட்டுமின்றி, கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். தைப்பொங்கல் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுபோல் எத்தனையோ கலைஞர்கள் மகத்தான பங்களிப்பு செய்திருந்தும், அவர்களது படைப்புகள் வெற்றியடைந்திருந்தும் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரை அடையாளப்படுத்தாமல் போவது வருதத்திற்குரியதே. பண்பலை ஒலிபரப்பிலும், இசைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

- தக | 18.09.2020

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!!

#shared post. Source in link
(https://m.facebook.com/Theni2Day/photos/a.324913914202619/494029070624435/) 

கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஒருவர் கூறுகிறார் .

2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. 

ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச் செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.

பயன்கள்:
மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 

5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4 லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு கரு நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500) வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.

எங்கு வாங்கலாம்?
கரு நாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.

குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, நன்றாக கடிக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6 மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5 லட்சங்கள் சம்பாதிக்கலாம்.

அணுக வேண்டிய முகவரி :
ஃப்ராடு x & y
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும்.

___________________________________________
(விழிப்புணர்வுப் பதிவு! பொருளாதாராத்தைத் திட்டமிட்டு தேர்ந்தறிந்து முதலீடு செய்யுங்கள்)

தற்கால பொருளாதாரம், தொழில், முதலீடு குறித்தறிய செல்லமுத்து குப்புசாமி எழுதிய இழக்காதே, பணம் பத்திரம், ஷேர் மார்க்கெட் ஏபிசி, வாரன் பஃபட் முதலான நூல்களையும் நாகப்பன் எழுதிய அறம் பொருள் இன்பம், எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய தொழில்முனைவோர் கையேடு ஆகிய நூல்களை வாசிக்க வேண்டும்.