நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 15 ஜூலை, 2020

ஆசிரியரின் மரணம் – வகுப்பறைக்குள்ளும் வெளியிலும்

அறிவியல் ஆசிரியர் சாரதி சார் ஜூன் 21 மறைந்தார் என்ற செய்தி எதிர்பாராத ஒன்று. வகுப்பறைக்குள்ளும் வெளியிலும் அணுகுவதற்கு எளியவர். அவருடனான நினைவுகள்....


ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்கையில் அது மேல்நிலைப்பள்ளி. அப்போது எங்களுக்கு வகுப்பெடுத்த அனைவரும் முக்கியமானவர்கள். அவர்கள் வாயிலாகத் தான் உயர்கல்வி-மேல்நிலைப் பள்ளியைப் புரிந்துகொண்டோம்.

அப்படித்தான் சாரதி சார், ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தார். மேலும் 7 9ஆம் வகுப்பிலும் பாடமெடுத்தார். உயர்ந்த மனிதர், பருத்த உடல். வகுப்பிற்கு நேரந்தவறாமல் வந்திடுவார்.

சாரதி சாரின் வகுப்புகள் போர் அடித்ததில்லை, ஒரு போதும் நோட்ஸ் வாங்கச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியதில்லை. பாடப்புத்தகங்களை விட பயிற்சிப் புத்தகங்கள்தான் மாணவர்களை மேம்படுத்தும் என்ற பொதுப்புத்தி அப்போது நிலவியது. அறிவியல் போன்ற பாடங்களுக்கு நோட்ஸ் வைத்திருப்பது மாணவர்களிடையே சமூக அந்தஸ்தாக கருதப்பட்ட காலம் அது. அதிலும் வெற்றி நோட்ஸ்கள் தரமானவை என்ற போக்கு இருந்தது.

அந்த விலை உயர்ந்த நோட்ஸ்கள் வாங்க இயலாத மாணவர்கள் படித்த வகுப்பறை எங்களுடையது. அப்போதெல்லாம் ரோகிணி என்றொரு நோட்ஸ் வரும். 2007இல் அதன் விலை 6ரூபாய். சாணித்தாளில் பொடி எழுத்துருவில் வெளியாகும். 9ஆம் வகுப்பு வரை அதைத்தான் பயன்படுத்தினேன்/னோம். புத்தகத்திலேயே பெரும்பகுதியை முடித்துக்கொள்வோம்.


           

நான் படித்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் நுட்பாமான உள்கட்டமைப்பில் இருக்கும். 6இன் நீட்சி 7, 7இன் நீட்சி 8 என படித்தான வளர்ச்சியில் பாடங்கள் இருக்கும். இந்த நீட்சி 12ஆம் வகுப்பில் நிறைவடையும். அறிவியல் ஆசிரியர்கள் ப்ளூ ப்ரிண்ட் பார்த்து சில பாடங்களை தவிர்த்து விடுவதுண்டு. அப்படி ஆசிரியர்கள் தவிர்க்கும் பாடங்களில் முதன்மையானது உயிரியல் சார் பாடங்கள். குறிப்பாக மனித உடலமைப்பு, பாலுறுப்பு தொடர்பான பாடங்கள்.

அத்தகைய பாடங்களை நடத்துகிறேன் எனும் பெயரில் கொச்சையாகவும், முறையற்றதுமாக தவறாக மாணவர்களை வழிநடத்துபவர்களும் உண்டு. ஆனால், சாரதி சார், அப்படியில்லை. முறையாக நடத்தினார். தேவையானவற்றை தேவையான அளவு தெளிவாக நடத்தினார். மாணவர்களின் கேள்விகளை சந்தேகத்திற்கு இடமின்றி போக்குமளவுக்கு வலிமையானவர்.

அப்போதெல்லாம் வினாத்தாள் அச்சிடப்பட்டு வருகையில் ஏதேனும் பிழைகள் இருக்கும். அத்தகைய பிழைகளை பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்யச்சொல்லி ஒவ்வொரு வகுப்பாக வருவார்கள். பெரிய பள்ளிக்கூடங்களில் கடைசி அறையில் தேர்வெழுதும் மாணவருக்கு இந்தத் தகவல்சேர ஒருமணிநேரத்திற்குமேல் ஆகிவிடும். அதற்குள் அந்தத் தவறுகளைக் கண்டுபிடித்த மாணவர் தேர்வறைக் கண்காணிப்பாளரை பாடாய்படுத்திவிடுவார்.

அப்படித்தான் ஒருமுறை, கணிதத்தில் ஒரு கேள்வி தவறாக வந்துவிட்டது என்றெண்ணி, அன்றைய தேர்வறைக் கண்காணிப்பாளரான சாரதி சாரிடம் சொன்னேன். அவரோ கேள்வி சரியாகத்தான் உள்ளதுஎன்றார். இல்லை சார், பதில் வரவே இல்லை, கேள்விதான் தவறுஎன்றேன். அவர் எரிச்சலடையவோ கோவப்படவோ இல்லை. அந்தக் கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய், இவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் அதற்கான வழிமுறையைக் காட்டினார். சிலநொடிகள் தான் இருக்கும், விடைவந்துவிட்டது.

சாரதி சார் சூப்பர் ஹீரோ இல்லை. தனக்குரிய பாத்திரைத்தை செவ்வனே செய்தவர். இரசனைக்குரியவர், இரசித்துச் செயல்படுபவர். அவரிடம் சில ஹீரோயிச பண்புகள் இருக்கும். சிகை அலங்காரம், குரல் தொனி, நடை என்று. பல ஆசிரியர்களும் ஹீரோ ஹோண்டா வண்டி ஓட்டிவருகையில் இவருடைய வாகனம் மட்டும் TVS Suzuki Max 100.

ஏழாம் வகுப்பில் சிலநாள் அவருடைய வகுப்புகளில் திடீரென ஒரு வாசம் வரும். அது பாக்கு வாசம். பாக்கு சாப்பிட்டதற்கான சிறுதடயம் சிறுசலனம் சிறுசத்தம் கூட இருக்காது. ஆனால், வாசம் வரும். அப்படியொரு வாசம். பின்னாட்களில், “பேரறிஞர் அண்ணா மேடையில் முழங்கும்போது மூக்குப்பொடி போடுவார், பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்து எடுப்பார், எங்கே வைப்பார், எப்படி மூக்குக்குப் போகும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத வண்ணம் மூக்குப்பொடி போடுவார்எனும் தகவலை செவிவழி அறிந்தபோது, சாரதி சார்தான் மனதில் தோன்றுவார்.

சாரதி சாருடனான தொடர்பு பள்ளிக்கூட வகுப்பறையோடு நின்றுவிடவில்லை. பள்ளி வாழ்க்கைக்குப் பின்னும் தொடர்ந்தது. இணையம் கற்று சமூக வலைதளங்களில் களமாடியபோது, முகநூலில் சாரதி சாரைக் காணநேர்ந்தது. அவருடைய நண்பர்கள் பட்டியல் முழுமையடைந்து ஃபாளோவர்களும் பெற்றிருந்தார். புதியதொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர் என்பதால் 2013-14-15 வாக்கிலேயே அவ்வளவு நண்பர்கள் கொண்டிருந்தார். அப்போது நண்பராக இணைய முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்தே நண்பரானேன்.

தேர்ந்த கவிஞன் கவிதை வடிவத்தில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதைப்போல, புதிய புதிய முயற்சிகளை முகநூலில் செய்வார். ஒரு நாளில் நூறுபதிவுகள் பதிவேற்றுதல் போல பல பரிட்சார்த்த முயற்சிகள் செய்தார். சினிமா பற்றி எழுதுவார், அதன்வழி 80களின் சினிமாக்கள் நிறைய அறிந்துகொள்ளமுடிந்தது. அவருக்கு பிடித்த நாயகி அனுஷ்கா என்பது அவரது பதிவுகளின் வழி வெளிப்படும்.  சுஜாதா, ஓஷோ, ஆன்மா, சினிமா என்ற துறைகளில் பரந்த வாசிப்பனுபவம் அவருக்கிருந்தது.

his last fb post

காடந்தேத்தி கோயில் பற்றி  2014-15 வாக்கில் நிழற்படக் கலைஞர் சதீஷ்-உடன் நேரில் சென்று  எழுதியிருந்தேன்.  இணையத்தில் அதுகுறித்துத் தேடியபோது கட்டுரையாளர் பெயரை பார்த்து  அந்த மகிழ்ச்சியை அப்படியே பதிவிட்டிருந்தார் சாரதி சார். காலம் கடந்தும் எழுத்து நிலைக்கும். யாரோ ஒருவரின் தேடலுக்கு முன்பு இட்ட உழைப்பு பலன்தரும் என்பதை உணர்ந்த நாள் அன்று (அந்த பதிவு : https://www.facebook.com/photo.php?fbid=1226105337556653&set=a.103340696499795&type=3&theater)

பிறகு, “திருவாரூர் (Thiruvarur)” என்ற முகநூல் குழுவை நண்பர்களுடன் நடுநிலையோடு வளப்படுத்தி வந்தார். இன்று அந்த குழு 60 ஆயிரம் நபர்களுக்கு மேல் இணையப்பெற்று வலுவான குழுவாக உள்ளது. உள்ளூர்/வெளியூர்/வெளிமாநிலம்/வெளிநாடுகளில் வசிக்கும் திருவாரூர் மக்களை இணைக்கும் பாலமாக அந்தக்குழு விளங்கிவருகிறது. ஆக்கப்பூர்வமாக பல செயல்பாடுகளுக்கும் இக்குழு வாய்ப்பு தந்தது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த தவறான புரிதல் புரளிகள் திருவாரூர் மக்களிடையே ஏராளம். இதனால், திருவாரூரில் பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தகுதி இருந்தும் அங்கு விண்ணப்பிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பத்தேதி முடிந்தபின், “எனக்குத் தெரியாம போயிடுச்சேஎன ஆதங்கப்படும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். எல்லா விவரமும் தெரிந்தும் இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் பிள்ளை வீணாப் போயிடும்னு கவைக்குதவாத பொதுப்புத்தியிலிருந்து அணுகும் படித்த(!) அறிவார்ந்த பெற்றோர்கள் 2020லும் இருக்கிறார்கள்.

சாரதி சாரிடம் இதுகுறித்து சொன்னபோது, திருவாரூர் முகநூல் குழுவில் நேரலைக்கு ஒத்துழைப்பு நல்கினார். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் ஓரளவுக்கு மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த புரிதலையும், கமெண்டுகளில் வந்த கேள்விகளுக்குப் பதிலையும் நல்கினேன். (அக்காணொளி:https://www.facebook.com/butterbharathan/videos/2601596456725555/) அதன் தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்வது குறித்த விளக்கக் காணொளியை (https://youtu.be/hwxK991InYI) நண்பர்கள் குபசி, அபர்ணா உதவியுடன் செய்து முடித்தோம். இக்காணொளி பார்த்தவர்களில் ஒருவர் சேர்ந்தால் கூட அது சாரதி என்ற ஆசிரியருக்குக் கிடைத்த வெகுமதியாகக் கொள்வேன். 

ஆரூர் நெட்ஸ் என்ற வாட்சப் குழுவை 02.12.2015 இல் தொடங்கினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவர் உருவாக்கிய குழு இயங்கி வருகிறது. அந்த வாட்சப் குழுவிலும் பல மாறுபட்ட முயற்சிகளைக் கொண்டுவந்தார். அதில் ஒன்று நேர்காணல். குழுவில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேர்காணல் செய்யலாம். தினம் ஒருவர். யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அதில் என்னையும் பொருட்டாக எண்ணி நேர்காணல் செய்தனர். அன்றைய வாட்சப் பேட்டி மாறுபட்ட அனுபவமாக இருந்தது.


தற்போது ஓடிவரும் திருவாரூர் தேர் புதியது. 2015க்குப் பின் தான் செயல்பாட்டுக்கு வந்தது. 2016 நிகழ்ந்த முதல் தேரோட்டத்திற்கு ஆரூர் நெட்ஸ் குழு சார்பில் ஒரு புகைப்பட போட்டி அறிவித்திருந்தனர். திருவாரூர் தேர்த்திருவிழா அன்று எடுக்கப்படும் படங்களைப் போட்டிக்கு அனுப்பலாம். வெல்பவர்களுக்குப் பணப்பரிசளிக்கப்படும். என் சார்பில் ஒரு படம் அனுப்பியிருந்தேன். அது முதல் பரிசை வென்றது. அதன்பின், திடீரென ஒருநாள் சாரதி சாரின் ஃபோன் வந்தது. இந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யலாம்ல என்றார். 100ரூ. மதிப்பில் என் பேசிக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்தது. அன்றைய நாள் எனக்கு அது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.

பின்னாட்களில், நூற்றுக்கணக்கில் செலவு செய்து தூக்கம் தொலைத்து பயணம் செய்து, மாநில அளவிலான போட்டிகளில் ஆயிரக் கணக்கில்(8000+) பரிசு வென்றிருந்தாலும் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து இன்றுவரை தராமல் இருக்கும் போட்டி நடத்திய அமைப்பினரைக் கண்டபின். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னால் உதவ முடிந்தும்(!) உதவுவதற்கான கடமை இருந்தும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களை நம்பி கைக்காசை ஆயிரக்கணக்கில்(31,000+) செலவு செய்து இன்றுவரை இத்தொகையைத் தராமல் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டபின். அன்றொருநாள் ஏதோ ஒரு பெட்டிக்கடையில் தன்னிடம் படித்த மாணவனிடம் கேட்டு அவனுக்கு எந்த ப்ளான்ல ரீசார்ஜ் செய்யவேண்டும் என்று கேட்ட சாரதி சார் இன்றளவும் வியப்பிற்குரியவராகத் தெரிகிறார்.

அவரது அதீத சமூகவலைதளப் பயன்பாடு பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தியது என்று அறிகிறேன் அல்லது அவரது தனிமைப்படுத்தல் சமூகவலைதளங்களில் அதீதமாகச் செயல்படவைத்திருக்கலாம்.  தனிமனிதரின் சமூக வலைதளப் பயன்படுத்தலுக்குப் பின் பல்வேறு உளவியல் காரணிகள் இருக்கும். டிக் டாக் செயலி வந்தபோது, பங்கெடுத்தார். தனியாகவும் சக டிக்டாக் வாசிகளுடனும் வீடியோ எடுத்து பொதுவில் வெளியிடுவார். முகநூல் வாட்சப் ஸ்டேடசில் வைப்பார். இதில் பெண்களுடன் பாட்டுப்பாடி நடித்திருக்கும் வீடியோக்களும் அடங்கும். பெரும்பாலும் அவை பிறமொழி/80களின் பாடலாக இருந்திருக்கும். சாரதி சார் இறப்பதற்கு முதல்நாள் கூட ஒரு மலையாளப் பாடலை ஒரு பெண்ணோடு இணைந்து பாடி பதிவேற்றியிருந்தார். இந்தச் சமூகம் தனிமனிதர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுள் சில ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் டிக் டாக் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், அவருடைய உரிமை. சாரதி சார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்வகையில்தான் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டேன்.


சாரதி சார், கவிஞர். கவிதைப் போட்டிகளுக்கு அவர் நடுவராக இருந்திருக்கிறார். மாணவர்களை கவிதை எழுதச் சொல்லித் தயார்ப்படுத்துவார். 2007ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள்புத்தகத்தை அளித்து, அதில் இரண்டு கவிதைகளை மனனம் செய்யச் சொல்லியிருந்தார். 2007 ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பாரதிதாசன் கவிதையை முதல்முறையாக மாணவர்கள் முன்னிலையில் கூறினேன். நிகழ்வு முடிந்து புத்தகத்தைத் திரும்பத்தரச் சென்றபோது, நீயே வைத்துக்கொள் என்றார். இன்றுவரை என்னிடம் இருக்கும் ஒரே ஒரு பாரதிதாசன் கவிதைகள் புத்தகம் சாரதி சார் அளித்தது. ஒன்று சொல்லட்டுமா, இதே பாரதிதாசன் கவிதைகள்ஒப்பித்தல் போட்டியில்தான் 2016இல் எம் பள்ளியின் மேனாள் மாணவரும் மேனாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியிடம் மாநில அளவில் பரிசு பெற்றேன்.

விதை சாரதி சார் போட்டது.

தக | 15.07.2020


வெள்ளி, 10 ஜூலை, 2020

உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி !

             ரௌடி விகாஸ்துபே என்கவுண்டர் இன்று நிகழ்ந்திருக்கிறது. இது தேசிய அளவில்  முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகக் கருதப்படுகிறது. கடந்த ஜூலை 2ஆம் நாள் கான்பூர் மாவட்டம் பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ்துபே-ஐ கைதுசெய்ய 8 காவலர்கள் (DSP-1, SI-3, Constable-4) சென்றுள்ளனர். அவர்களை சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார் விகாஸ் துபே. அதன்பின், அவரது தலைக்கு உபி அரசாங்கம் 2.5 இலட்சம் தொகை நிர்ணயித்தது. அது, 5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜூலை9 ஆம் நாள் மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூர் கொண்டுவரும் வழியில்  தப்ப முயன்றிருக்கிறார். இதனால் என்கவுண்டர் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது உத்திரப் பிரதேச கான்பூர் மாவட்டத்தின் SSP ஆக  தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி தினேஷ்குமார் பணியாற்றிவருகிறார். அவருக்கு உபி அரசு 2019 குடியரசு தினவிழாவில் விருதளித்தது. இதையொட்டி விகடன் ஆர்டிகலுக்காகப் பேட்டி எடுத்திருந்தேன். அது சில காரணங்களால் வெளியாகவில்லை. அதனை இப்போது  எடிட் செய்யாது வெளியிடுகிறேன்.

-தக | 10.07.2020


உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசு தின விழாவில் சமூகத்திற்கு நன்மை செய்த பல்துறையைச் சேர்ந்த ஆளுமைகள் அரசாங்கத்தினால் பாராட்டப்படுவது நாம் அறிந்ததே. நேற்று (26.01.2019) நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்தமைக்காக விருது கொடுத்து பாராட்டப்பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமார்.


விருது பெற்றதன் பின்னணி

2018 அக்டோபர் 2 இரவு. உத்திரப்பிரதேசத்தின் மேற்கில் உள்ள ஷாம்லியின் ஜின்ஜனா காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் காவலர்கள் மீது பாய்ந்தனர். ஒரு காவலரைச் சுட்டுவிட்டு, மற்றொருவரைத் தாக்கினர். காவலர்களின் 303 மற்றும் இன்சாஸ் இயந்திர நவீனத் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அவர்களைக் கண்டுபிடிக்க ஷாம்லி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் நான்கு குழுக்கள் அமைத்தார். உபி.யின் மேற்குப் பகுதிகள்  மற்றும் எல்லைப் பகுதிகளில் அவர்கள் தொடர்ச்சியான தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் துப்பு கிடைத்தது. அதனடிப்படையில், ஹரியானாவின் எல்லைப் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கிகளை அபகரித்துச் சென்றவர்களில் மூவரை மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தின் போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

குற்றவாளிகளிடம் அக்.02 ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்களிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகள் மட்டுமல்லாது சீனக் கைத்துப்பாக்கியும் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டு, விசாரைணை நடைபெற்றது. விசாரணையில் அவர்கள் காலீஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அக்.07 ஆம் தேதி  பஞ்சாப் பாட்டியாலாவில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

 இந்திய சுதந்திரத்தின் பின், பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சில அமைப்புகள் ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர். சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள்எனப்படுகின்றனர். அக்கூட்டத்தில் மேனாள் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான சுக்பீர்சிங் பாதல் கலந்து கொள்ள இருந்தனர். இவர்களிருவரும் தனிநாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லாதவர்கள்.

இந்தத் தீவிரவாதிகளின் குறி, சுக்பீர்சிங் பாதல் மீதே இருந்துள்ளது, தெரியவந்துள்ளது. உபியிலிருந்து, ஹரியானா வழியாக, பஞ்சாப் செல்வது அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால், அவர்களைப் பிடித்ததால் அசம்பாவிதச் சம்பவம் முறியடிக்கப்பட்டது. 

இது போன்ற தீவிரவாத வழக்குகளை மத்தியப் புலனாய்வு அமைப்புகளான ஐபி அல்லது ஐஎன்ஏ போன்றவையே விசாரணை செய்யும். ஆனால், காவல்துறையினர் கண்டுபிடித்தது சமீபகாலத்தில் பெருமைக்குரிய செயல் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

       ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் இந்தத் துரிதச் செயலைப் பாராட்டி, அவருக்கு உத்திரப்பிரதேச மாநிலம், சஹரான்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உபி.யின் ஆயுர்வேதத்துறை அமைச்சர் தரம்பால் சிங் செய்னி DGP Commendation Desk’s silver விருது வழங்கி சிறப்பித்தார்.

தற்போதுசஹரான்பூர் மாவட்ட எஸ்எஸ்பியாகப் பணியாற்றி வரும் தினேஷ்குமார் அவர்களிடம் பேசினோம்

மேட்டூரின் சின்னதண்டா கிராமத்தைச் சேர்ந்த நான் விவாசயத்தைப் பின்புலமாகக் கொண்டவன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து 2009இல் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தேன். கடந்த காலத்தில் பல்வேறு சவாலான வழக்குகளைச் சந்தித்திருந்தாலும், இது முதன்மையான ஒன்று. உரிய நேரத்தில், உரிய வேகத்தில் செயல்பட்டமையால் அவர்களைப் பிடிக்க முடிந்தது. இச்செயலுக்காக உபி மாநில அரசு விருது கொடுத்துப் பாராட்டியிருப்பது பெருமைக்குரியது. தீவிரவாதிகளைப் பிடிக்க இணைந்து பணியாற்றிய அனைத்துக் காவலர்களுக்கும் சென்று சேரும்”. என்றார்.

இதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி டூன்கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் இல்லத்தில்  50இலட்சத்திற்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 18 நாள் விசாரணைக்குப் பின், 40இலட்சத்திற்கும் மேல் மீட்டுக் கொடுத்துள்ளார் இவர். சஹரன்பூரில் கொள்ளையடிக்கப்பட்டதில் அதிகபட்ச தொகை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

உ.பி. தமிழருக்கு ஒரு சல்யூட்! 

- தக | 27.01.2019


செவ்வாய், 30 ஜூன், 2020

சங்க கால வானிலை | நூலறிமுகம்

  

..தமிழ்பாரதன்

30.06.2020

சங்க கால வானிலை | நூலறிமுகம்

சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்திய மக்களின் வாழ்க்கைப் பதிவு. புனைவு தவிர்த்து நோக்குகையில் புலனாகும் அறிவியல் தகவல்கள், தொழில்நுட்பம் மீப்பெரும் வளர்ச்சியடையாத அக்கால அறிவு வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன. இதனை உய்த்துணர்தலின் வழி தமிழர்தம் அறிவு மரபை அறியலாம். இயற்கை சார்ந்த வாழ்வியலை மரபாகக்கொண்டு தமிழர் தம் அறிவை மீட்டுருவாக்குதலின் வழி செயற்கையாக முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகின் இயற்கை வாழ்வியலை முன்னெடுக்க இயலும்.

ஒன்றன் இயல்புகளைப் புரிந்துகொள்ளும் அறிவியல்துறை இயற்பியல். அதனுள் வானின் இயல்புகளைப் புரிந்துகொள்ளும் துறையே வானியல். மானுடத் தொடக்கத்தில் மெய்யியலாக இருந்த வானியல் அறிவு, பின் அறிவியலாக அறியப்படுகிறது. தமிழர்களின் வானியல் அறிவு பெரும்பாலும் சோதிடத்தோடு தொடர்புறுத்திய ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழாய்வு உலகில் அதனை அறிவியல் துறையோடு தொடர்புறுத்தி வந்திருக்கும் நூல் சங்க கால வானிலை.

வானிலையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் எழுதிய 272 பக்கங்கள் கொண்ட இந்நூல் 2018 டிசம்பரில் முக்கடல் வெளியீடாக (300உரூபா) வந்துள்ளது. வானிலை, காலநிலை பற்றிய கருத்தாக்கங்களை விளக்குவதோடு, அதன் தற்கால அறிவியல் செய்திகளையும் தந்து, அதற்கொப்பான சங்க இலக்கியப் பதிவுகளிலிருந்து சங்க கால வானிலை பற்றிய தமிழர் அறிவை வருவிக்கிறார்.

அறிவியல், இலக்கியப் புலத்தில் வெளியான காலநிலை, வளியியலுக்கு ஓர் அறிமுகம், வானிலை ஆராய்ச்சி, வானிலை அறிவியல், வேளாண்மை வானிலையியல், சங்க இலக்கியத்தில் நிலவியல், கடலும் காற்றும், பழந்தமிழ் அகப்பாடல்களில் நிலமும் பொழுதும், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல் முதலான நூல்கள் இந்நூலுக்கு முன்னாய்வுகளாக அமைந்திருக்கின்றன. அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையது வானிலை. எனின், சங்கப் புலவர்கள் அது குறித்துப் பாடியிருக்கக்கூடும் என்றே நூற்தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பதை அறிவிக்கிறார் நூலாளர்.

வானிலை பற்றி சங்க இலக்கியத்தில் காற்று, மழை, மேகங்கள் எனும் இயல்களிலும் காலநிலை பற்றி சங்க இலக்கியத்தில் காலநிலை இயலிலும் எடுத்தியம்புகிறார். இவை தவிர்த்த தொடக்க இயல் கருத்துருவாக்க வளர்ச்சி நிலைகளையும் நிறைவு இயல் நூற்தொகுக்கும் கருத்துகளையும் பதிவு செய்வதாக மொத்தம் ஆறு இயல்களால் நூலாக்கிள்ளார்.

கருத்துவிளக்கம் கூறும் இயலில் வானிலையியலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மூன்று கட்டங்களாகப் பகுக்கிறார். முதலாவது கருத்துருவாக்கமும் மத அடிப்படை நம்பிக்கைகளும், இரண்டாவது வானிலை பற்றிய ஊகங்கள், மூன்றாவது தொழிற்புரட்சிக்குப் பிந்தைய சிந்தனைகள். மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் மழையின்மை, பெருமழைப்பொழிவு என இருவேறு வானிலைக் காரணிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் நீட்சியில் வழிபடுதல், பலியிடுதல் உள்ளிட்ட சோதிட வானிலையியல் வழக்கிற்கு வந்திருக்கிறது. அதன்பின், காலநிலையைக் கருத்தில்கொண்டு கொண்டு ஊகங்களும் கொள்கைகளும் உருவாகியிருக்கின்றன

நீர்சுழற்சி பற்றி எழுதிய தாலஸ், நகரும் வாயுக்களின் தொகுதியே காற்று என்ற அனாக்சிமேண்டர், மழைப் பொழிவிற்கான காரணம் சொன்ன அனாக்சகோரஸ் முதலான கிரேக்கர்களின் தொடக்ககால பங்கு வானிலை வளர்ச்சிக்கு முதன்மையானவை. ஆனால், இவர்களின் கருத்துகள் பின்னாட்களில் அறிவியலால் மறுக்கப்பட்டதும் இந்நூலில் பதிவாகியுள்ளது. இயற்கையோடு மழைக்கான தகவமைப்புகளைச் சுட்டிக்காட்டிய தியோப்ரஸ்டஸ் குறித்தும் வானிலை பற்றிய கருத்தாக்கங்களை வெளிப்படுத்திய ரோமானியர்கள் குறித்தும் பிறமொழி இந்திய அறிஞர்கள் குறித்தும் பகர்கிறார். சூரியனே மழையைத் தரும் எனப்பொருள்படும் மனுஸ்மிருதியின் மூன்றாவது பகுதியில் 76ஆவது துதியின், இரண்டாவது வரியான ஆதித்யாத் ஜாயதே வ்ருஷ்டிஹி என்பதே இந்திய வானிலை ஆய்வுத் துறையின் முத்திரை வாசகமாக உள்ளதை அறியமுடிகிறது.

தற்கால அறிவியல் முறையிலான வானிலை அறிவுக்கு கலிலியோ வெப்பமானி, டாரிசெல்லி காற்றழுத்தமானி முதலானவை அடிப்படையானவை. வளிமண்டலத்தின் வெப்பம், குளிர், ஈரப்பதம், உலர்தன்மை, காற்றோட்டம் முதலானவற்றின் நிலைகளைக் குறிப்பது வானிலையாகும்.  அதாவது, குறிப்பிட்ட இடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வான் நிலைக் கூறுகளின் தொகுப்பு வானிலை (Weather) எனலாம். காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், திசைவேகம், அழுத்தம், வானிலுள்ள மேகங்களின் வகை, அளவு முதலியன தரைநிலையில் அளக்கக்கூடிய வானிலைக் கூறுகள். காற்றின் வெப்பநிலை, திசைவேகம், ஈரப்பதம் ஆகிய வளிமண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில் அளக்கக்கூடிய வானிலைக்கூறுகள். தரைநிலை மற்றும் வளிமண்டல வானிலைக் கூறுகளின் மாற்றத்தால் மழை, பனி, புழுதிக்காற்று போன்றவை ஏற்படுவதாகச் சுட்டுகிறார்.

·            நுண்ணிய துகள்கள் மண்ணில் எழும்பி காற்றில் பரவியிருக்கும் நிலையை உருவாக்கும் வானிலையானது மண்சார்ந்த வானிலைக் கூறுகள் (Lithometeor) ஆகும்.

·            வானில் மேகமாகி, மண்ணில் மழையாகுபவையும் அப்படியே ஆவியாகுபவையும் காற்றில் பரவி நிற்கின்ற மேகமும், மண்ணிலிருந்து மேலெழும்பும் பனித்துகள் படலமும், பனித்துளி, உறைபனி முதலானவை நீர்ம வானிலைக் கூறுகள் (Hydrometeor) ஆகும்.

·            வளிமண்டலத்தில் வழி சூரியன், நிலவு ஆகியவற்றின் ஒளி பயணிக்கையில் எதிரொளித்தல், ஒளிவிலகல் நிகழ்வுகளால் உருவாகும் ஒளிவட்டம், வானவில் முதலானவை ஒளி வானிலைக் கூறுகள் (Photometeor) ஆகும்.

·            மேகங்களிடையே தோன்றும் இடி, மின்னல் போன்றவை மின் வானிலைக் கூறுகள் (Electrometeor) ஆகும்.

பெருநிலப்பரப்பின் பெருங்கால அளவின் சராசரி வானிலை காலநிலையாகும் (climate). இது தட்பவெப்பநிலை, காலப்போக்கு, சமுதாயச்சூழ்நிலை அமைதி, காலச்சூழ்நிலை அமைதி, பண்பாட்டமைதி எனப் பொருள்படுகிறது. இக்காலநிலையின் முடிபே பருவங்களையும் அதற்கேற்ற வாழ்வியல் தகவுகளையும் கட்டமைக்கும் என்பது வெளிப்படை.

வானிலை, காலநிலை குறித்த கல்வி முறையே மெடியராலஜி (Meteorology) கிளைமேட்டாலஜி (Climatology) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மெடியராலஜி என்பது அரிஸ்டாட்டில் எழுதிய வானிலை குறித்த நூலின் தலைப்பாகும். காலஅளவே வானிலைக்கும் காலநிலைக்குமான வேறுபாடு ஆகும். வானிலையின் தொகுவாக்கம்(integration) காலநிலை ; காலநிலையின் பகுவாக்கம் (differentiation) வானிலை. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்பு ஓர் எனும் சொல் தவறுதலாகப் பலவிடங்களில் (.30:1) இடம்பெற்றுள்ளது.

நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றும் பூமியின் சுழல் அச்சின் இருமுனைகளும் துருவப்பகுதியில் அமைகின்றன. கோளவடிவமான பூமியின் தட்டைப்பகுதியில் துருவங்கள் இருப்பதால், அவை குறைந்தளவு சுழற்சியையே கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் நாள் நிலநடுக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும். ஆதலின், இவை பகலிரவு சமநாட்களாகும். வெப்பநிலையில் அடிப்படையில் நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதி குளிர்காலமற்ற வெப்ப மண்டலப்பகுதியாகும். நிலநடுக்கோட்டுக்கு தொலைவிலுள்ள பகுதி வெப்பகாலமற்ற குளிர் மண்டலப்பகுதியாகும். இவ்விரண்டிற்குமிடைப்பட்ட குளிர்/கோடை பருவம் கொண்டவை துணை வெப்பமண்டலப்பகுதியாகும். இவற்றோடு காலநிலைகளின் பல்வேறு வகைகளையும் அதற்கான குறியீடுகளையும் குறிப்பிட்டுள்ளார். காலநிலையின் அடிப்படையிலேயே வாழ்வாதாரமான உணவு உற்பத்தி அமையுமென்பது வெளிப்படை. இந்தியாவின் ஓராண்டுக்கான காலநிலைகள் குளிர்காலம், கோடைக்காலம், தென்மேற்குப் பருவமழைக் காலம், வடகிழக்குப் பருவமழைக் காலம் ஆகும். சங்க காலத் தமிழகக் காலநிலைகளையும் தற்கால நிலவரைவியலின் அடிப்படையில் சுட்டியுள்ளார்.

·                        குறுகிய மழையற்ற கோடைக்காலமுடைய பருவமழைப் பிரிவு – Amw - (கேரள, கர்நாடக, கோவா, தென் மகாராஷ்டிரா கடற்கரைப்பகுதிகள்)

·                        வெப்பமண்டலப் புள்வெளிப்பிரிவு – Aw - (தமிழக, ஆந்திர, கர்நாடக மாநில உள்பகுதிகள்)

·                        நீண்ட மழையற்ற கோடைக்காலமுடைய பருவமழைப்பிரிவு – As - (தென் ஆந்திர தமிழகக் கடற்கரைப்பகுதிகள்)

·                        வறண்ட கோடையும், மழை குறைவாகவும் பெறுகின்ற பிரிவு – Bshw - (மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அதன் மேற்கே அமைந்துள்ள தமிழக, கர்நாடக பகுதிகள்)

சங்ககாலத் தமிழகமாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளடக்கிய நிலப்பரப்புக்கு பொதுவான காலநிலை இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. கேரள கர்நாடகக் கடற்கரைப்பகுதிகளுக்கு தென்மேற்குப்பருவமழையும் ஏனையவற்றுக்கு வடகிழக்குப் பருவமழையும் அதிகபட்ச மழையைத் தரும். தமிழகம், ஆந்திரம் புயலால் பாதிப்படைவதைப்போல கேரளமும் கர்நாடகத்திற்கும் அபாயம் இல்லை. இவற்றுக்கு கிழக்கு/மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அமைப்பே அடிப்படையாகின்றது. தற்கால இந்திய வரைபடத்தை உற்றுநோக்கினால் கடக ரேகைக்குக் கீழுள்ள கிழக்குப் பகுதி உள்வாங்கி ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருப்பதும், மேற்குப் பகுதி சீரான வடிவமைப்பில் இருப்பதும் தெரியும் இதற்கும் தொடர்ச்சி மலைகளே காரணமாகும். வரைபடம் இணைத்து அதன் வழி (ஐந்திணை வரையறைகளின்படி) சங்க கால வானிலைப் பதிவுகளை மாதிரிப் படமாக காட்சிப்படுத்தியிருந்தால் மேலும், பயனுடையதாக இருந்திருக்கும்.

தொடக்கத்தில் கடவுளாக வணங்கப்பட்ட காற்று உயிர்வாழ அடிப்படையானது. தொடக்கத்தில் காற்றையும் கருமையையும் பார்த்து பதட்டமுற்ற மனத்தால் காத்து கருப்பு எனும் தொடர் இன்றளவும் வழக்கத்திலுள்ளது. ஓரிடத்தின் வானிலையை பாதிக்கக்கூடிய, நில அமைப்பையே மாற்றக்கூடிய காற்று பற்றிய தரவுகள் சங்க இலக்கியத்தில் காற்று எனும் இயலில் இடம்பெற்றுள்ளது.  காற்றின் வேகத்தை அளக்கும் அனீமாமீட்டர் (Anemometer) வெப்பமானி, காற்றழுத்தமானி, மழைமானி முதலான கருவிகள் இல்லாத காலத்தில் காற்று பற்றிய அறிவு சங்ககாலப் புலவர்களுக்கு இருந்துள்ளதைச் சான்றுகளுடன் பகர்கிறார்.

நகரும் காற்று(air) காற்றோட்டம்(wind) எனப்படுகிறது. காற்றழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து குறைவான பகுதியை நோக்கியே காற்று வீசும். ஒரு பகுதியில் வெப்பநிலை அதிகமிருந்தால் காற்றழுத்தம் குறைவாகவும் வெப்பநிலை குறைவாக இருந்தால் காற்றழுத்தம் அதிகமாகவும் இருக்கும். காற்றின் வலிமையைப் பொறுத்து மாற்றமுரும் அதன் பல்வேறு வகைகளும் காற்று வீசும் பதினாறு கோணங்களும் இங்கு சுட்டப்பட்டுள்ளன. பகல் முழுதும் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் பூமி இரவு முழுக்க அதை வெளிப்படுத்தி அடுத்தநாள் சூரியன் உதிக்கும் முன்பு அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்யும்.  வெயில் காலங்களில் கடலோரப் பகுதிகளில் நிலப்பரப்பு காற்று சூடாகி வளிமண்டலம் செல்ல கடல்காற்று அவ்விடத்தை நிரப்ப வந்துவிடும், இதனால் வெயிலின் தாக்கம் குறையும். (சென்னை<தில்லி வெயிலின் தாக்கம்). ஓரிடத்தின் வெப்பநிலையை நிர்ணயிப்பதில் காற்றில் தலையாய பண்பு இதிலிருந்து அறிய முடிகிறது.

வளி, கடுவளி வெந்திறல், கடுவளி, துகள் தொகுத்து எற்வளி, வடந்தைத் தண்வளி, வளி மறை, சில்காற்று, கடுங்காற்று, குடகாற்று, ஊதை, வாடை அசைவரல் வாடை, வடந்தை, கொண்டல், கோடை, கோடை அவ்வளி, எழல் எறி கோடை, வறந்த கோடை, ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க்கோடை, வங்கூழ், தென்றல் முதலான காற்று எனப்பொருள்படும் சங்க இலக்கியச் சொற்களை சுட்டுகின்றார். இவை பெரும்பாலும் செய்யுளில் உவமிக்கப் பயன்படுவதால் காற்றின் தன்மைக்கான அடை சேர்ந்தவையாகவே கருதவேண்டியுள்ளது. இருப்பினும், காற்றின் வகைகள் வாடை, கொண்டல், கோடை, தென்றல் என்பனவே.

பூமிக்கு மேலே பத்து மீட்டர் உயரத்தில் காற்றின் வேகத்தை பியூபோர்ட் அளவை எண்கள் குறிக்கின்றன. 1.மென்காற்று, 2.லேசான காற்று, 3.சுகமான காற்று, 4.மிதமான காற்று, 5.விறுவிறுப்பான காற்று, 6.பலமான காற்று, 7.மிதமான விசைக்காற்று, 8.விறுவிறுப்பான விசைக்காற்று, 9.பலமான விசைக்காற்று, 10.கடுங்காற்று, 11.புயற்காற்று, 12.கடும்புயற்காற்று. இவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் சங்க இலக்கியப் பதிவுகளிலிருந்து சான்றுகளும் பொழிப்பும் தந்துள்ளார். இதில் பனிரெண்டாம் எண் அபாயகரமானது, மின்கம்பங்கள் சரிந்து, மேற்கூரைகள் பறக்கக்கூடிய, காணும் திறன் குறைவடையத்தக்க, மட்டம் உயர்ந்த வெண்ணிறமாகக் காட்சியளிக்கும் நிலையாகும். இதனை மலையையே அசைக்கக்கூடிய காற்று எனப்பொருள்படும் பெருமலை மிளிர்ப் பன்ன காற்றுடை (குறி. கலி 45.4) எனும் வரி குறிப்பிடுகிறது.

நிலநடுக்கோட்டிற்கு வடக்கு, தெற்கில் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று வாணிகக்காற்று எனப்படுகிறது. தொடக்கத்தில் வாணிகம் செய்தவர்கள் இதனை அடிப்படையாக வைத்து தங்கள் இலக்கு இடங்களை அடையாளங்கண்டனர். தீ பரப்பும் காற்றுக்கு, மூங்கில் ஒன்றோடொன்று உராய்ந்து தீ உண்டாக்கி காற்று வீசும் திசையெல்லாம் தீபரப்பியதையும் (அகம். 39.6) கீழிருந்து மலைநோக்கி வீசும் காற்றுக்கு, மலையேறு வளி என்பதையும் (பரி. 8.90) சான்றாகின்றன.  காற்றின் திசை, வேகம், தன்மை எப்படி வரையறுக்கவியலாததோ அதேபோன்றதே வாழ்நாள் என்பதை வளியினும் வரைநில்லா வாழுநாள் (பா.கலி. 20/9) என குறிப்பிடுகிறது. தற்காலத்திய காற்று அளவை முறைகொண்டு சங்க இலக்கியப் பனுவல் பதிவுகளை வகைப்படுத்தி விளக்கியுள்ளார்.

உலகப் பரப்பில் நீரானது 97% கடலிலும் 2% உறைபனிப்பாறைகளிலும் ஏனைய 1%இல் 0.31 விழுக்காடு நிலத்தடியிலும் 0.69 விழுக்காடு மழை, ஆறு, குளங்களிலும் ஆகிய வடிவங்களிலும் காணப்படுகிறது. உலகளவில் வேளாண்மையானது இந்த 1% நீரினை நம்பியே உள்ளது. இதற்கு நீராவி மழையாக மண்ணில் பொழிவது அடிப்படையானதாகும். இன்றைய சூழலில் மழையின் அளவு, அது பெய்யும் இடத்தின் பரப்பு, பொழிவின் தன்மை, வீழ்படிவாகும் நிலை ஆகியவற்றினால் பல்வேறு வகைப்பெயர்களையும் சுட்டியுள்ளார். மழை, பெயல், கார், மாரி, தூறல், துவலை, சாரல், ஆலி ஆகியன மழையைக் குறிக்கும் சங்க காலச் சொற்களாகும். இவற்றின் தன்மைகொண்டு ஆலி, அழி, கண, அதிர், உறு முதலான அடைகளோடு விளிக்கப்படும் மழைச்சொற்களைப் பட்டியலிட்டுள்ளார். பெய்கின்ற மழையின் அளவைப் பொறுத்தும் வகைப்படுத்தலாம். ஒரு நாளில் ஓரிடத்தில் பெய்கின்ற இலேசான மழை (2.5 மி.மீ-7.5 மி.மீ), மிதமான மழை (7.6 மி.மீ-35.5மி.மீ), கனமழை (64.5 மி.மீ முதல் 124.4 மி.மீ) மற்றும் தொடர்மழை, பருவகாலமழை(வடகிழக்கு 715மி.மீ ; தென்மேற்கு 379மி.மீ).

மாக்கடல் முகந்து, மணிநிறத்து அருவித்

தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாரஅய் (நற்.112.6-7) எனும் வரிகள் நீர்நிலைகளிலிருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகிய நீர், வளிமண்டலத்தின் மேலே செல்லச் செல்லக் குளிரடைந்து, மேகமாக மாறி மழையாகப் பொழிகிறது எனும் மழையின் இயற்பியல் நோக்கினைப் பதிவு செய்துள்ளது. ஆலங்கட்டி மழை அளிக்கக்கூடிய மேகங்கள் தோன்றி, மறைய குறைநேரமே பிடிக்கிறது. இவை திரள் முகிலாக மாறுகையில் உள்ளிருக்கும் காற்று வெளியிருக்கும் காற்றை விட வெப்பமானதாக இருக்கிறது. இதனால் மேல்நோக்கிய காற்றோட்டம் மேகம் முழுதும் பரவியிருக்கும். இந்நிலையில் வெளியில் உள்ள எடை அதிகமுள்ள காற்று மேகத்தைத் துளைத்துக் கொண்டு உள்நுழையும். சுமார் பதினைந்து நிமிடங்களில் மேகம் சுமார் 7.5 – 9 கி.மீ வரை சென்றுவிடும். மேகத்தின் நீர்த்தவலைகளின் பருமனும் பனிக்கட்டி பருமனும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். நன்றாக வளர்ந்த பின் இவை, புவியீர்ப்பு விசையால் மேல்நோக்கி வீசும் காற்றை மீறி பெருந்துளி மழையாகவும் ஆலங்கட்டி மழையாகவும் கீழிறங்குகின்றன.

இது போன்றே மின்னலுக்குமான சூழல். நீர் ஆவியாகும் போது வெப்பசக்தி தேவைப்படும். நீராவி குளிர்ந்து நீராகும் போது வெப்பசக்தி வெளிப்படும். வளிமண்டலத்தில் மேகத்துகள்கள் மேலே செல்லச் செல்ல நீர்த்திவலைகளாக மாறுகின்றன. இதனால் வெளிப்படும் வெப்பசக்தி அவற்றை மேலே அனுப்ப, மேகங்கள் எடை அதிகரிக்கின்றன. அதே நேரம் புவியீர்ப்பு சக்தியால் கீழிழுக்கப்பட சுழற்சி உண்டாகிறது. இத்தகு மேகங்களின் மேல்மட்டத்தில் நேர்மின் அயனிகளும் கீழ் மட்டத்தில் எதிர்மின் அயனிகளும் சேர்ந்துவிடுகின்றன. மேகங்களை விட பூமியில் எதிர்மின் அயனிகள் அதிகமென்பதால் மேகங்களிலிருந்து பூமிக்கு மின்னிறக்கம் நடைபெறுகிறது. இதுவே மின்னல் எனப்படுகிறது. மேகம்-பூமி இடையேயான மின்னழுத்த வேறுபாடு 1 மில்லியன் முதல் 100 மில்லியன் வோல்ட் வரை இருக்குமென்றும் இதனால் உருவாகும் மின்னோட்டம் சுமார் 20,000 முதல் 2,00,000 ஆம்பியர் வரை இருக்குமென்றும் இம்மின்னல் செல்லும் பாதையின் வெப்பநிலை சுமார் 15,000 டிகிர் செல்சியஸ் வரை உயருமென்றும் தகவலளிக்கிறார்.

தொடக்கத்தில் மழை பெய்தலின் போதான மீப்பெரும் ஒலி, ஒளி வடிவங்களை இடி என்றே குறிப்பிட்டுள்ளனர். பிற்காலத்திலேயே மின்னல் எனும் சொல் மீப்பெரும் ஒளிக்கான சொல்லாகத் தோன்றியிருக்கும் என்பதை அகராதிகள் வழி அறியமுடிகிறது. ஆதலின், தொடரமைப்பைப் பொறுத்தே இடிக்கான பொருளை விளங்க முடியும். இடி, மின்னல் குறித்து வரும் சங்க இலக்கியப் பதிவுகள் இவ்வியலில் காணப்படுகின்றன. சான்று - இடி விழுந்ததால் பெண் யானை இறந்தது(நற்.114.9). இவை பெரும்பாலும் அகத்திணையில் தலைவியின் உள்ளத்தை ஆற்றவும் வெளிப்படுத்தவும் புறத்திணையில் நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும் உவமிக்கவும் சுட்டப்பட்டிருக்கின்றன

(மின்னல் விழுந்து திருச்செங்கோடு அருகே, குளம் நிரம்பியது https://www.vikatan.com/news/local-bodies/32798-, கிணறு நிரம்பியது https://www.dinamalar.com/district_detail.asp?id=1238151, மலைகளில் நீர்நிலைகள் உருவானமை https://www.vikatan.com/news/environment/villages-near-pachamalai-in-a-battered-condition நிகழ்காலசம்பவங்கள் ஊற்று உருவாக்கத்திற்கான காரணங்களை எடுத்தியம்புகின்றன) இவ்வியலில் பாம்பிற்கு கேட்கும் திறன் உண்டு என்ற சங்க கால நம்பிக்கையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்குமிடையிலான வேறுபாட்டை விளக்கி, அறிவியலின் மாறும் தன்மையினையும் நம்பிக்கையின் அறுதித்தன்மையும் சுட்டுகிறார்.

நுண்ணிய/வெவ்வேறு அளவிலான நீர்த்திவலைகள், பனிக்கட்டியால், காற்றால் செலுத்தப்படும் வகையில் அமைந்துள்ள நீர்த்திவலைகளின் தொகுதியே மேகம். லூக் ஹவார்ட் என்கிற வானிலை அறிவியலாளர் 1803இல் மேகங்களை கீற்று வகை முகில்கள்(cirrus clouds), படை முகில்கள்(stratus clouds), குவியல் முகில்கள்(cumulus clouds) என்றும் வளிமண்டலத்தில் அவை உருவாகும் உயரத்தின் அடிப்படையில் பின்வருமாறும் பகுத்திருக்கிறார்.

உயர்மட்ட(high clouds) – கீற்று முகில், கீற்றுத் திரள் முகில், கீற்றுப்படை முகில்

இடைமட்ட(medium clouds)– இடைமட்ட திரள், இடைமட்ட படை, கார்ப்படை முகில்

கீழ்மட்ட(low clouds) – படைத்திரள் முகில், பனிமுகில், திரள் முகில், இடிமுகில்

வெப்பச்சலனம், மலைப்பகுதியில் ஏறும் காற்று, காற்று முகப்புகள், பருவக்காற்று எனும் நான்கு காரணிகளால் மேகங்கள் உருவாகின்றன. நீராவியான காற்று வளிமண்டலம் செல்கையில், குளிரடைந்து மேகமாய் உருப்பெறுகின்றது. மேகங்கள் உருவாகும் விதம் குறித்து ஒலிக்கின்ற கடலின் நீரைப்பருகி மேகங்கள் எழுந்து வந்தமை (அகம். 334.4) முதலான பல்வேறு சான்றுகளும் மழைப்பொழிய வாய்ப்பற்ற மேகமற்ற வானம், இளவேனிற்காலத்தில் காணப்படும் புகைபோன்ற மேகங்கள், மழை நீங்கிய பஞ்சு போன்ற மேகங்கள், பறவை/விலங்குகள் போலத் தோன்றும் திரண்ட மேகங்கள், தொங்கும் பைகளையுடைய மேகங்கள், பருவ கால மேகங்கள், இடி மேகங்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இடியால் நிலம் அதிர்தல், மின்னல், மலையும் மேகமும் குறித்தும் மலைச்சரிவுகளில் நகரும் மேகங்கள் பற்றி நக்கீரரும் (நற்.197.10-12), உயர்ந்த கிளைகளில் உள்ள மின்மினியை விளக்காகக் கொண்டு வானிற் செல்லுகின்ற மழைமுகிலின் இயக்கத்தைக் காணுதல் (நற்.44.10-12) முதலான மேகங்களின் இயக்கம் குறித்தும் குறிப்பிடுகின்றார். அடுத்தடுத்த இயல்களில் கருத்துகளின் தொடர்ச்சியைப் பற்றிப் பேசுவதால், கூறியவிடயத்தையே திரும்பக் கூறும் பண்பு நிலவுகிறது. இது தொகுப்பு நூல் இல்லை என்பதால் இச்சிக்கலைத் தவிர்க்க முனைந்திருக்கலாம்.

ஓராண்டினை ஒரே மாதிரியான வானிலை நிலவுகின்ற பகுதிகளாக, பருவகாலங்களாகப் பிரித்து அறிதல்(முதற்பொருளில் பொழுது), ஓரிடத்தின் வெப்பநிலை, மழையளவு இயற்கைத் தாவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலப்பகுதிகளைப் பல பகுதிகளாகப் பிரித்தறிதல்(முதற்பொருளில் நிலம்) என இருவகை காலநிலைக் கணிப்புகள் உள்ளன. ஒரு பகுதியின் காலநிலை பற்றி அறிய, அப்பகுதி நிலநடுக்கோட்டிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம், அப்பகுதியின் நிலம், நீர்நிலைகள், காற்று, மலைகள், காடுகள் குறித்த தெளிந்த அறிவு அவசியமாகிறது.

காரே கூதிர் முன்பனி பின்பனி

சீர்-இள வேனில் முதுவேனில் என்றா

அறுவகைப் பருவம் என்ப அவைதாம்

ஆவணி முதலா இரண்டிரண் டாக

மேவின திங்கள் எண்ணினர் கொளலே   

என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது. பூமி சூரியனைச் சுற்றிவரும் ஒரு சுழற்சிக்காலத்தில் (ஓராண்டில்) பருவகாலங்கள் மாற்றமுருகின்றன.

      முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம் (ஆவணி, புரட்டாசி). இம்மாதங்களை வர்ஷ ருது என்று காளிதாசர் எழுதிய ருது ஸம்ஸ்காரம் நூல் குறிப்பிடுகிறது. கார்காலத்தின் தொடக்கத்தில் பொழிவது இளமழை எனவும் பலநாட்களாகப் பொழிவது பழமழை எனவும் இறுதியில் பொழிவது சில்பெயல் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது.   

      மார்கழி, தை மாதங்களான முன்பனிக்காலத்தில் பயிர்களின் நிலை (அவரி பூத்தல், நெற்பயிர் முற்றுதல்), பனியால் உயிரினங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து நேரடி விளக்கங்களே இருக்கின்றன. பின்பனிக்காலமான மாசி, பங்குனியில் தனித்த வரையறைகளைக்காண முடிவதில்லை. முன்பனி-பின்பனிக் காலம் என்ற பருவ வரையறை இன்றி பனிக்காலத்ததாகவே காணமுடிகிறது. இவ்விரண்டையும் இணைத்து அற்சிரம் என்ற சொல் குறிக்கும் என்ற மு.-வின் கருத்தைப் பதிவுசெய்கிறார்.

      மாசி, பங்குனி மற்றும் சித்திரை, வைகாசி முறையே இளவேனில், முதுவேனில் ஆகும். இவ்விரண்டு காலமும் பாலைக்குரியதென தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பாலைத்திணைப் பாடல்களில் முதுவேனில் குறித்த வருணனைகள் இடம்பெற்றுள்ளன. சூரிய வெப்பத்தால் நிலம் பிளவுபட்டு, குளங்களில் நீர்வற்ற, வயல்கள் நலம் குன்றுகின்றன. இது தட்பவெப்பத்தால் நில அமைப்புத் திரிபடைவதைக் குறிக்கும். இவ்வியலில் கோடை வறட்சியைத் தாங்கும் இலையுதிர்க் காடுகள் பற்றியும் பருவ காலங்களில் நீர்வேட்கை, கோடை மழை, காட்டுத் தீ, புழுதி பரவுதல், கானல்நீர் குறித்தும் மேலதிகத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார்.    

              இவ்வியலின்/நூலின் தலையாய பகுதி காலநிலை மண்டலங்கள் பற்றியது. உலக இயக்கத்தைப் புரிந்து கொள்ள காலநிலை மண்டலம் அடிப்படையானது. ஐந்திணைக்கும் தொல்காப்பியர் கூறியுள்ள நிலமும் பொழுதும், கருப்பொருட்களும், உரிப்பொருட்களும் அவரை திறமையான காலநிலையாளராகப் புலப்படுத்துவதாக விதந்தோதுகிறார். காலநிலை செய்யுந்தொழிலோடு தொடர்புடையது. கூதிர்ப் பருவத்திலும், முன்பனிப்பருவத்திலும் சங்க காலத்தில் போர்கள் தொடங்கப்படுவதில்லை, தொடங்கிய போர்கள் தான் தொடரும். இக்காலத்தில் ஆண்கள் பெண்களை விட்டுச் செல்வதில்லை. இருவரும் இல்லத்தில் இணைந்து இருக்கின்ற காலமாகவே கொள்ளப்பட்டது முதலான நூலாளர் தொகுத்தளித்தத் தகவல்கள் காலநிலையொட்டியே சங்க கால வாழ்வியல் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும், முதற்பொருளான நிலம்+பொழுது அடிப்படையிலும் நிலத்திற்கான பொழுதின் அடிப்படையிலும் உரிப்பொருள் அமைகின்றன. இதனையொட்டியே தொழில், உணவு, புள் முதலான  கருப்பொருள்கள்  அமைந்திருக்கின்றன என்பதும் வெளிப்படையானதே.  

           தற்கால அறிவியல் நோக்குநிலையில், வானிலை, காலநிலை குறித்த விளக்கங்கள் கொடுத்து அதற்கான சங்க இலக்கியத் தரவுகளை மட்டுமே சான்றுகளாகக் கொடுத்திருக்கிறார். அதற்கான காரணங்கள், எவ்வாறு அந்நுட்பங்களை அறிந்திருக்கக்கூடும், அதற்கான அனுமானக் கருத்துகளே தமிழர்தம் அறிவியலைப் பற்றிப் பேசுவதாக இருந்திருக்கும்.    

          சங்க கால வானிலை எனும் நூற்தலைப்பு கொண்ட நிறைவு இயலில் நூலில் விவாதித்த, வெளிப்படுத்திய கருத்துகளின் தொகுப்புகளை நூல் முடிவுகளாக அளித்துள்ளார். சுருக்க விளக்கம் முன்னரும் துணைநூற்பட்டியல் பின்னரும் இடம்பெற்றுள்ளன. கலாநிதி கைலாசபதி பற்றி நாடகவியலாளர் மௌனகுரு குறிப்பிடுமிடத்து, தன்துறையில் ஆழமான புலமையும் ஏனைய துறைகளில் பரிச்சியமும் உள்ளவன்தான் ஒரு ஆய்வாறிவாளன் என்கிறார். இஃது கருத்தளவில் நூலாளருக்கு பொருந்துகிறது.

- தக

வெள்ளி, 19 ஜூன், 2020

Magnificent proportions mean in Tamil - சிறந்த பரிமாணம்

Magnificent proportions mean in Tamil

என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.


தமிழில் Magnificent proportions என்பதை  சிறந்த பரிமாணங்கள் அல்லது அற்புத பரிமாணங்கள் என்று சொல்லலாம்.

CTH meaning in Tamil

CTH meaning in  Tamil  என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.

Custom Tariff Heading - CTH

தமிழில் Custom Tariff Heading என்பதை சுங்கவரி கட்டண தலைப்புகள்
என்று சொல்லலாம்.

Determine full meaning in Tamil explain - தீர்மானித்தல்

Determine full meaning in Tamil explain

என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.


தமிழில் Determine என்பதை உறுதிகொள்ளுதல், முடிவு செய்தல், தீர்மானித்தல் 
என்று சொல்லலாம்.