நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 6 ஜூன், 2023

கருத்தியல் பின்னணியில் தொல்காப்பியர் அரிஸ்டாட்டில் : ஓர் ஒப்பீடு

கருத்தியல் பின்னணியில்

தொல்காப்பியர்அரிஸ்டாட்டில் : ஓர் ஒப்பீடு

         உலகை உய்ய அதனை விளங்கிக்கொள்ளல் முதன்மையாகிறது. அறிதலின் வழிப்பட்டது அறிவு எனப்பட்டது. விளங்கியதனை விளக்குதலின் வழி அறிவு கடத்தப்பட்டது. அறிவின் வழிப்பட்ட சிந்தனைசெயல்வடிவமானதன்வழி மனித ஆக்கங்கள் தோன்றின. இதையடுத்துப் பொருள்கள் மீதான சிந்தனைகளும் வெளிப்பட்டன. 'பொருள்களை உற்பத்தி செய்யும்போதுமனிதன் தன் சுற்றுச்சூழலின் மீது செயலாற்றிஅதைத் தன் உணர்வுப் பூர்வமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருகிறான். இவ்வாறு தன் வாழ்வுக்கான தேவைகளை உற்பத்திசெய்து கொள்கிறான். முதலில்மனிதன் இயற்கைமீது அதாவது வினைபுரிபவன்(subject), பொருளின்மீது(object) ஆரம்பச் செயல்பாடு புரிகிறான். இதைத்தொடர்ந்தி பிரதிபலிப்புச் செயற்பாடாக இயற்கையானது மனிதன்மீதுஅதாவது பொருள்வினைபுரிபவன்மீது வினையாற்றுகிறது.'[1] எனும் ஜார்ஜ் தாம்சன் கருத்து நோக்கத்தக்கது.

            உலக இயக்கத்தின் மூலமாகத் தொடக்கத்தில் இயற்கையைக் கண்ட மனிதர்கள்அதனை விளங்க முற்பட்டனர். அதையொட்டியே சிந்தனைகளை வெளிப்படுத்தினர். அது காலப்போக்கில் நீட்சியடைந்து வளர்ச்சியுற்றது. பிறகுஇயற்கை அறிவை வாழ்வின் மீதும் செலுத்தத்தொடங்கினர். இதற்கடுத்தே கருத்துப்பொருள்கள் மீதான கருத்துகளின் உருவாக்கம் தொடங்கியது. மனிதன்தன் அறிதல் அனுபவங்களை (cognitive experiences) முறைப்படுத்தி ஆயும் பிரிவு அறிவியல்தன் உணர்தல் அனுபவங்களை (affective experiences) முறைப்படுத்தி ஆயும் பிரிவு கலை. சிந்தனைக்கும் உணர்தலுக்கும் இடையிலான வேறுபாட்டையே அறிதலும் உணர்தலும் தெளிவாக்குகிறது[2] எனும் கருத்து இங்கு முதன்மையாகிறது. இதனடிப்படையில் அறிதல் அனுபவங்களையும் உணர்தல் அனுபவங்களையும் ஆவணப்படுத்தியோரில் தமிழில் தொல்காப்பியரும் கிரேக்கத்தில் அரிஸ்டாட்டிலும் முன்னோடிகள் ஆவர்.        

கருத்தியல்

கருதப்படுவது கருத்து. வெளிப்பாட்டின் ஒரு முறைமையாவது கருத்து. கருத்தானது சமூகம்அரசியல்,மெய்யியல் போலானவற்றின் வழியாகத் தொடரப்படுகையில் அது கருத்தியலாக உருவாகிறது. ஆங்கிலத்தில் இதனை ஐடியாலஜி என்பர். 1796ஆம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவியலாளர் டெஸ்டுட் டி ட்ரேசி(1754-1836) என்பவரால் ஐடியாலஜி என்ற சொல் "கருத்துகளின் ஆய்வு அல்லது அறிவியல்" எனும் பொருண்மையில் உருவாக்கப்பட்டது. “கருத்துகளின் அறிவியல்” எனப்படும் இது முதலில் “உணர்வுகளிலிருந்து அறிவுத்திறனைப் பெறும் அறிவின் தத்துவம்” (மெட்டாபிசிக்ஸ்க்கு மாறாக) எனப்பட்டது. ஐடியா + லாஜி எனும் இரு கிரேக்கச் சொற்களுக்கிடையே கிரேக்க உயிரெழுத்தான ஓ இணைத்து ஐடியாலஜி என்ற சொல்லை ட்ரேசி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.[3]  

அவர் கருத்தியலை தாராளவாத தத்துவமாகக் கருதினார்இது தனிநபர் சுதந்திரம்சொத்துசுதந்திர சந்தைகள் மற்றும் அரச அதிகாரத்தின் மீதான அரசியலமைப்பு வரம்புகளை எதிர்கொள்வதாய் அமைந்தது. இவற்றின் அடிப்படையில்கருத்தியல் என்பது மிகவும் பொதுச்சொல் என்று எண்ணுதற்கு, கருத்தியலானது அவற்றின் வெளிப்பாடுகளையும் ஊகித்தறிதல் பற்றிய ஆய்வையும் கொண்டுள்ளது.

உலகை விளக்குவதற்கான முறையான கருத்துக்கள்கோட்பாடுகள்” என்பதாக 1907ஆம் ஆண்டளவில் ஆங்கிலத்தில் பயன்பாட்டில் இருந்த இச்சொல்சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் எழுத்துகளில்வர்க்கத்தைக் குறித்தது. 1918இல் இருந்து அது சோசலிசம் மற்றும் கம்யூனிசத்துடன் (ஏன் பாசிசத்துடன் கூட) பயன்படுத்தப்பட்டதுதற்காலத்தில் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகப் பகுத்தறிவுவாதத்தால் ஆதரிக்கப்படாத பரிந்துரைக்கப்பட்ட கோட்பாடு என்றும் கருத்தியல் பொருள் கொள்ளப்படுகிறது.[4]

கருத்துகளின் தன்மைவரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை அவை எழுந்த தத்துவஅரசியல் மற்றும் உலகச் சூழல்களின் அடிப்படையில் விவரிக்கிறது கருத்தியல். இது, ‘குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள்குறிப்பாக அரசியல் அமைப்புகட்சி அல்லது அமைப்பை அடிப்படையாகக் கொண்டது[5]என்கிறது கேம்பிரிட்ஜ் அகராதி. கருத்தியல் என்பதற்கான விளக்கங்களாக மேரியம் வெப்ஸ்டர் அகராதி[6]அளிக்கும் விளக்கங்கள் வருமாறு:

·      ஒரு தனி நபர்குழு அல்லது பண்பாட்டுச் சிந்தனையின் தன்மை அல்லது உள்ளடக்கம்.

·      ஒரு சமூக அரசியல் திட்டத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த துணிவுரைகள் (integrated assertions),கோட்பாடுகள் மற்றும் நோக்கங்கள்.

·      குறிப்பாக மனித வாழ்க்கை அல்லது பண்பாடு பற்றிய முறையான கருத்துக்கள்.

இவற்றிலிருந்துஉலகத்தை விளக்கவும் மாற்றவும் விரும்பும் சிந்தனை அமைப்பு எனும் பின்னணியில் தொல்காப்பியர்அரிஸ்டாட்டிலை அவர்கள்தம் ஆக்கங்கள்வழி அறிதல் முதன்மையாகும்.

அறிவியல்-கலையியல்

மனிதச் சிந்தனையின் முதன்மை இரு வடிவங்கள் அறிவியலும் கலையும். இவ்விரண்டும் பருப்பொருட்கள் மீதும் கருத்துப்பொருட்கள் மீதும் செயலாற்றுகின்றன. இரண்டனுள் பருப்பொருட்கள் சார்ந்தே அறிவியல் முதன்மை பெறுகிறது. அறிவியலை விளக்க கருத்துநிலைய எண்களும் எழுத்துகளும் அடிப்படையாகின்றன. இவை மனித ஆக்கங்கள். கலையும் மனித ஆக்கமே. இரண்டுமே, உலகை விளக்குவதற்கான முறையான கருத்துகளைக்(கருத்தியல்) கொண்டுள்ளன. உலகளவில் மனிதச் சிந்தனையின் தொடக்க வடிவமாக அறிவியலும் காலப்போக்கிலமைந்த சிந்தனையின் வடிவமாகக் கலையும் இருந்துள்ளன.

பண்பாடு வளமடைந்த சமூகங்கள் அறிவியலிலும் கலையியலிலும் முன்னேறியிருந்தன. அறிவியல் ஒரு உற்பத்திச் சாதனமாக ஆன பின்னால்கலையும் ஒரு வாணிபப் பொருளாகிறது. கலையும் நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால்அது ஏனைய வாணிபப் பொருள்களிலிருந்து சில விஷயங்களில் வேறுபடுகிறது.[7]அறிவியலை புறச்செயல்பாடுகளுக்கும் கலையை அகச்செயல்பாடுகளுக்குமாய் அணுகினர். வாழ்தலுக்கான அடிப்படையாக அறிவியலும் வாழ்தலுக்கான இலக்காகக் கலையும் கொள்ளப்பட்டுள்ளன.

 

அறிவியலாளர்-கலையியலாளர் : தொல்காப்பியர்

தொல்காப்பியத்தின் முதலிரண்டு அதிகாரங்கள் பேசுவது எழுத்துசொல் கட்டமைப்புகளாகும். இது மொழியைத் தர்க்கப்பூர்வமாக அணுகும் அளவையியல்(அறிவியல்) வழியது. பொருளதிகாரம் பேசுவது இலக்கியப் பொருளாகும். இலக்கியம் எடுத்துக்கொண்ட பொருள் (subject), அது படிப்பவர்களுக்குத் தரும் பொருள் (meaning) என்னும் இரண்டுமே இலக்கியப் பொருளில் அடங்கும்அதனால் இரண்டும் பொருளதிகாரத்தில் அடங்கும்.  இலக்கியப் பொருளே வாழ்க்கை என்னும்போது அதன் எண்ணிலடங்காத அம்சங்களை வகுத்துத் தொகுத்து அளிப்பது இலக்கியத்தின் இலக்கணத்தை-கொள்கையை-எழுதுபவரின் தலையாய பணி.[8] இலக்கிய அம்சங்களை வகுத்தும் தொகுத்தும் அளித்தல் இயலும் தன்மையது. ஏனெனில்அது மனித ஆக்கம். மனித ஆக்கம் அல்லனவற்றையும் வகுத்தும் தொகுத்தும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். 

தொல்காப்பியத்தில் நேரடியாக அறிவியலைப் பேசும் பதிவுகள் காணக்கிடைக்கவில்லை. ஆனால்,அறிவியற்றொழிலை உடைய செயல்களின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அறிஅறிதல், அறிவன்... என அறி எனும் வேர்ச்சொல்லைக் கொண்ட 34 சொற்கள்[9] இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பெரும்பான்மை அறிதல் பொருண்மையைக் கொண்டவை. எனினும்அறிவுவயப்பட்ட பதிவுகளும் தொல்காப்பியத்தில் உள்ளன. 

மக்க டாமே யாறறி வுயிரே                                     (தொல். மரபு. 33.1)

என்பதோடுஆறறிவு என்பதற்கான வரையறையும் அளிக்கிறது தொல்காப்பியம்.

ஆறறி வதுவே யவற்றொடு மனனே                      (தொல். மரபு. 27.6)

எனும் அடிக்கு, ‘உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும் . நாவினாற் கைப்புகாழ்ப்பு,துவர்ப்புஉவர்ப்புபுளிப்புமதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மைசெம்மைபொன்மைபசுமைகருமைநெடுமைகுறுமைபருமைநேர்மைவட்டம்,கோணம்சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும்சொற்படும் பொருளும் அறியும். மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும். இது செயல் வேண்டுமெனவும்இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறிதலாயின.’ என்றுரைக்கிறார் இளம்பூரணர். அனுமானித்தல் மனிதரின் இயற்கைப் பண்புநலன்களுள் ஒன்றாக இளம்பூரணர் குறிப்பிடுவது முதன்மையானது. உயிரின வகைப்பாட்டுக் கொள்கையில் புலனுணர்வு அடிப்படையில் உலகுயிர்களை வகைப்படுத்தும் பாங்கு நோக்கற்குரியது. 

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியி னாற்றிய வறிவன் றேயமும்                      (தொல். புறத். 20)

எனும் அடிகளுக்கு “‘காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கமும்’ என்று நச்சினார்க்கினியர் உரையளிப்பது அறிவனைத் துறவி என்கிறது. குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் என்று இளம்பூரணர் சுட்டுவது இல்வாழ்வில் உள்ள கணியன் என்கிறது.[10] அனுமானித்தலும் அறிந்ததை மீளாய்வு செய்து செயலாற்றலும் மனிதத்தன்மையவை. 

மேற்காணும்மரபியல்புறத்திணையியல் அடிகளுக்கான இளம்பூரணரின் உரை ஆறறிவுஅறிவன் குறித்தான ஒருங்கமைவைத் தெளிவுபடுத்துகிறது. இதுதொல்காப்பியத் தேட்டத்தைக் குறிப்பதாகவே நோக்கவேண்டியுள்ளது. பொருளதிகாரத்தில் மரபியலில் இயற்கையில் விளைந்தவற்றின் வகைப்பாட்டைச் சொல்லுமிடத்தும் அறிவியலாளராகவும் செய்யுளில் கொள்ளத்தக்கனவற்றைச் சுட்டும் ஏனைய இயல்களில் கோட்பாட்டாளராகவும் தொல்காப்பியர் பரிணமிப்பதாகக் கொள்ளவியலும். இந்தக் கோட்பாடுகள் இலக்கியத்தின் வழிப்பட்டமைவதால் அதன் மூலம் கலை என்பதனுழி கலையியலாளராகவும் கூறவியலும்.

 

அறிவியலாளர் – கலையியலாளர் அரிஸ்டாட்டில்

“அனைத்து அறிவியலும் நடைமுறையானதுகவித்துவமானது அல்லது கோட்பாட்டுத்துவமானது”[11]எனும் அரிஸ்டாட்டிலின் கருத்து நோக்கற்குரியது. அரிஸ்டாட்டிலைப் பொறுத்தமட்டில்நடைமுறை அறிவியலானது அறவியலையும் அரசியலையும் உள்ளடக்கியது. கவித்துவ அறிவியலானது கவிதை உள்ளிட்ட கலைகளை உள்ளடக்கியது. கோட்பாட்டுத்துவ அறிவியலானது இயற்பியல்கணிதம்மெட்டா இயற்பியலை உள்ளடக்கியது.  இதனுழிதொடக்கக் காலத்தில் மெய்யியலின் ஓர் அங்கமாகவே அறிவியல் கருதப்பட்டுள்ளமை தெளிவாகிறது. 

            கோட்பாடுகள்காரணங்கள் மற்றும் கூறுகளைக் கொண்ட எந்தவொரு விசயத்திலும்அறிவியல் அறிவும் புரிதலும் இவற்றின் பிடியில் இருந்து உருவாகின்றன. செயலொன்றின் காரணங்களையும் கொள்கைகளையும் முதலில் புரிந்துகொண்டுஅதன் சிறப்பம்சங்களைக் கண்டறிந்தால் மட்டுமே பொருண்மை தெரியும் என எண்ணுகிறோம். இயற்கையைப் பற்றிய அறிவியல் அறிவைப் பெறமுதலில் அதன் கொள்கைகளைப் பற்றி முடிவு செய்ய முயற்சிக்க வேண்டும். 184ஏ10 எனும் அரிஸ்டாட்டிலின் கருத்து உலகை விளங்க முயன்றமைக்கான சான்றாக விளங்குகிறது. 

கொள்கைகோட்பாடுஅறிவியல் குறித்த வரையறைகளைக் கொண்டிருந்த அரிஸ்டாட்டில்,இயற்பியலில் உலகம்இயக்கம்கருத்துப்பொருளான காலம் மீதும் கருத்தளித்துள்ளார். மெட்டாஇயற்பியலில் காட்சிப்புலனாகும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகை அடையாளங்காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவை அவரை அறிவியலாளராகச் சுட்டும் காரணிகளாகின்றன. நடைமுறைகவித்துவ அறிவியல் எனும் பாகுபாட்டினுள் இடம்பெறலாகும் அரிஸ்டாட்டிலது பனுவல்கள் வாழ்விய நோக்கைக் கொண்டதாக அமையும். கவிதையின் சாயல்ஒருங்கிணைவு மற்றும் இசைமை ஆகியவை இன்பத்திற்காக உருவாக்கப்பட்டவை என்று வாழ்விய நோக்கில் கருத்தளித்தமை அவரைக் கலையியலாளராகக் கருத இடமளிக்கின்றது. 

ஒப்பீடு

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்கள் இலக்கணம்மொழியியல்கவிதையியல்,நாடகவியல்உயிரியல்காலநிலையியல்மெய்யியல்தர்க்கவியல் ஆகியவற்றின் பின்னணியில் வைத்துக் நோக்கத்தக்கன. தொல்காப்பியத்துள் பிறதுறைசார் கூறுகளும் இடம்பெற்றுள்ளனஇது தொல்காப்பியரைப் பல்துறை புலமை உடையவராகக் கருத இடமளிக்கிறதுகருத்து மூலங்களின் அடிப்படையில் இவற்றைக் அறிவியல் கலையியல் என்றே வகைப்படுத்தவியலும்.  தர்க்கவியல்இயற்கையியல்உடலுயிரியல்,மீமெய்யியல்அறவியல்அரசியல்அணியியல்கவிதையியல் எனும் தலைப்புகளின் கீழ் அரிஸ்டாட்டிலின் ஆக்கங்கள் அமைகின்றனஇதனை அரிஸ்டாட்டிலே கருத்துநிலை அடிப்படையில் முந்நிலைப்பட்டதாகப் பகுத்திருப்பினும் கருத்து மூலங்கள் அடிப்படையில் அறிவியல், கலையியல் என்றே வகைப்படுத்தவியலும்.

பருப்பொருட்கள் மீதற்ற கருத்துநிலைக் கூறுகள் மனிதர் உருவாக்குவது. அதனை,வகைப்படுத்துதலோதொகைப்படுத்துதலோ இயலும் தன்மையது. மொழிக்கான இலக்கணத்தை, கலை வடிவத்தை வரையறைக்குட்படுத்தி வகை தொகைப்படுத்துதல் ஒப்பீட்டளவில் எளிது. ஆனால்மனித உருவாக்கமல்லாதஇயற்கையில் விளைந்தவற்றை அடையாளங்கண்டு வகை தொகைப்படுத்தும் பாங்கு அறிவியற்வயப்பட்டதாகும்.  

உலகத்தை விளக்க விரும்பும் சிந்தனை அமைப்பு எனும் நிலையில் உயிரின வகைப்பாட்டை முன்வைக்கிறார் தொல்காப்பியர். இதே பாங்குபண்படிப்படையில் உயிரின வகைப்பாட்டை முன்வைக்கும் அரிஸ்டாட்டிலிடத்தும் உண்டு. உலக உயிர்களை முன்வைக்கும் இவர்களிருவரும் உலகின் அடிப்படைக் கூறுகளைப் பண்புநிலையில் நிலம்தீநீர்வளிவிசும்பு தொகுத்தும் (தொல். மரபு. 91 மற்றும் மெட்டாஇயற்பியல்  6) சுட்டியுள்ளனர். இத்தகு உலகின் அடிப்படை குறித்த இத்தகு தொகையாக்கம் என்பதுஅறிவியற்வழிப்பட்டது. கலைவழியன்று. 

            முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த அமைப்பு(Settings)’[12] என்றே கொள்ளவியலும். இது அமைப்புநிலையில் வகுத்துக் கொள்ளப்பட்டது. பயன்பாட்டு அடிப்படையிலானது. அறிவு நிலையில் கருத்தாக வைத்திருப்பது கொள்கை’ அந்தக் கொள்கையை வரன்முறையானசிந்தனை நெறிக்கைமைய வகுத்தமைத்துக் கொள்ளும் முறைமையே கோட்பாடு’’[13]  எனும் சிவத்தம்பியின் கருத்தை இங்குப் பொருத்திப் பார்க்கவியலும். 

இதனை அறிவியற் பின்னணியில் கருதும் வாய்ப்பற்ற அதேவேளையில்நிலம்-பொழுது எனும் கருத்தாக்கத்தை நிலம் முதலாகவும் விசும்பு ஈறாகவும் கொண்டு கலந்த  மயக்கம் உலகமாதலின் என உரைக்குமிடத்து அறிவிய நோக்கைப் பெறுகிறது. மேலும்உயிரின வகைப்பாடும்எழுத்தொலிகளின் பிறப்புகளை அறிவிக்கும் பிறப்பியலும் இயல்புகளைத் தொகைப்படுத்தும் அறிவியல் தன்மையவை. இதோடுஎண்ணுப்பெயர்கள் முதலான மொழியமைப்பின் அளவையியல் சிந்தனைகளும் அறிவியல் தன்மையவை. இவை உலகை விளக்க முனையும் சிந்தனை அமைப்பை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

இத்தகு வருவித்து நோக்கும் செய்கை அரிஸ்டாட்டிலிகத்திற்குத் தேவையில்லை. அது நேரடியாகப் பொருண்மையைப் பேசுவதால் தர்க்கவியல்இயற்கையியல்உடலுயிரியல்மீமெய்யியல் தலைப்புகளின் கீழமைந்த பனுவல்கள் உலகத்தை/இயற்கையை விளங்கிக் கொள்ள அறிவியல் வயப்பட்டவை என்றும் அறவியல்அரசியல்அணியியல்கவிதையியல் எனும் தலைப்புகளின் கீழமைந்த பனுவல்கள் மனித வாழ்வுக்காக மனித ஆக்கத்தால் விளைந்தவை என்பதால் கலைவழிப்பட்டவை என்றும் கொள்ளவியலும். 

நிறைவுரை

தனி நபர்குழு அல்லது பண்பாட்டுச் சிந்தனையின் உள்ளடக்கமாகவும்சமூக அரசியல் திட்டத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த துணிவுரைகளாகவும் (integrated assertions)கோட்பாடுகளாகவும்மனித வாழ்க்கை அல்லது பண்பாடு பற்றிய முறையான கருத்துகளாகவும் தொல்காப்பியர்அரிஸ்டாட்டிலது பனுவல்களை நோக்கவியலும். உலகத்தை விளக்கும் சிந்தனை அமைப்பில் இவை அமைந்துள்ளன.

தொல்காப்பியம் தனிமனித அறிவின் தேட்டமில்லைதமிழறிவு மரபின் நீட்சியிலும் தன் சமகால அறிதல்களிலுமிருந்தே தொல்காப்பியம் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறதுதொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளஎன்மனார் புலவர்(75முறை), ‘என்ப’(145 முறை), ‘மொழிப’ (87முறை), ‘மொழிமனார்’ (3முறை), ‘அறிந்திசினோரே’(2 முறை), ‘சிறந்திசினோரே’(1முறை) முதலான சொற்கள் தொல்காப்பியருக்கு முன்பிருந்த அறிவு மரபினரைக் குறிப்பதாகவே அமைகின்றனஇதனுழி முந்தையோரின் கருத்துகளை அறிந்து அதைவழிமொழிந்து, தன் கருத்துகளை வெளிப்படுத்தியமையும் நோக்கற்குரியன. முந்தையோரின் குறிப்புகள்,பனுவல்கள் கிடைக்காமையால் தொல்காப்பியக் கருத்துகளைத் தொல்காப்பியரின் கருத்துகளாக மட்டும் கொள்ளுதல் கடினமாகும். அதிலிருந்து உருவாகும் தமிழறிவு மரபின் அறிவுத்தேட்டக் கருத்தியலாகக் கொள்ளுதல் இயலும். புறனடைகளைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் மறுப்புகளைச் சுட்டாமை அவர்தம் தனித்தன்மையை விளங்க வாய்ப்பிலாதாக்கியது. தொல்காப்பியர் கருத்தியல் அனைத்தும் தொல்காப்பியக் கருத்தியல் எனலாம்ஆனால், தொல்காப்பியக் கருத்தியல் அனைத்தும் தொல்காப்பியர் ஆக்கிய கருத்தியல் ஆகாது. மேலும், ‘வேண்டும்’ (39) முதலான உறுதிக்கூற்று இடம்பெறும் நூற்பாக்கள் தொல்காப்பியரின் கருத்துகளாக வெளிப்பட்டுள்ளதாகக் கருதவியலும். இயற்கைக் கூறுகள் குறித்த மரபியல் 91ஆவது (கலந்த மயக்கம் உலகமாதலின்) நூற்பாவை தொல்காப்பியரது கருத்தியலாகக் கொள்ளவியலும். இது பிற்காலத்திய தமிழறிவு மரபால் சுட்டப்பெறாத ஒன்றாகும். ஒலி அடிப்படையில் இலக்கணம் சுட்டுமிடங்களிலும் உலகம் குறித்த கருத்துகளைக் வகை தொகைப்படுத்தி அளிக்குமிடங்களிலும் பொருள்முதல்வாதியாகப் பரிணமிக்கும் தொல்காப்பியர் ஏனைய இடங்களில் `கருத்துமுதல்வாதியாகக் கருத்துகளை மொழிகிறார் எனலாம். 

கிரேக்கத்தில்அரிஸ்டாட்டிலின் கிடைக்கலாகும் பனுவல்கள் விவாதத் தன்மையைக் கொண்டவை. அதில் முன்னோர்சமகாலத்தோரின் கருத்துகள் சுட்டப்பெற்று உரியவற்றில் விமர்சனம் வைத்துஅதிலிருந்து தாம் வேறுபடும் விதத்தைக் காட்டியிருப்பதால் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை அடையாளங்காணுதல் எளிது. பிற்காலத்தில்அவை அரிஸ்டாட்டிலிய மரபாக அது தொடர்ந்தமையும் நோக்கற்குரியது. நடைமுறை,கவித்துவ அறிவியல் பனுவல்களினால் கருத்துமுதல் வாதியாகவும் கோட்பாட்டுத்துவ அறிவியல் பனுவல்களினால் காட்சிப்பொருள் உண்மைவாதியாகவும் அரிஸ்டாட்டிலை அடைளாப்படுத்தவியலும். 

துணையன்கள்

                        சிவத்தம்பிகா. (1982). இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம். 

                வேங்கடராமையாகே. எம்.சுப்பிரமணியன்ச.வே. & நாகராசன்ப. வெ. (1996). தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு. திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.

                ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்). (2002). மனித சமூக சாரம். சென்னைநியு செஞ்சுரி புத்தக நிலையம்.

                Jonathan Barnes. (ed.). (1984). The Complete works of Aristotle The revised oxford translation - volume one. New Jersey: Princten University Press.

                Jonathan Barnes. (ed.). (1984). The Complete works of Aristotle The revised oxford translation - volume two. New Jersey: Princten University Press.

https://www.etymonline.com

https://dictionary.cambridge.org

https://www.merriam-webster.com

https://www.tamilvu.org

https://www.vallamai.com

 

 

 

 



[1] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 13.

[2] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 22.

[3] (02.06.2023). Online Etymological Dictionary. https://www.etymonline.com/word/ideology

[4] Raphael, Problems of Political Philosophy. P.69

[5] (02.06.2023). Cambridge Dictionary. https://dictionary.cambridge.org/dictionary/english/ideology

[6] (02.06.2023). Merriam Webster Dictionary. https://www.merriam-webster.com/dictionary/ideology

[7] ஜார்ஜ் தாம்சன்(ஆ.). ராஜதுரை எஸ்.வி.,(மொ-ர்).  மனித சமூக சாரம். ப. 160.

[8] அண்ணாமலைஇ., (2020) செவ்விலக்கியப் பொருள்: அகம்புறமாஅறம்பொருள்இன்பம்வீடா?. க.

[9] அறி (34)அறிதல் (11)அறிதலும் (1)அறிதற்கு (1)அறிந்த (4)அறிந்திசினோரே (2)அறிந்து (2)அறிந்தோர்க்கே (1)அறிந்தோரே (1)அறிந்தோள் (1)அறிநரும் (1)அறிய (11)அறியல் (1)அறியா (2)அறியாது (1)அறியாமை (1)அறியாமையே (1)அறியும் (6)அறிவது (1)அறிவதுவே (6)அறிவர் (3)அறிவர்க்கும் (1)அறிவன் (1)அறிவின் (2)அறிவினவே (5)அறிவினள் (1)அறிவு (6)அறிவும் (2)அறிவுறினும் (1)அறிவுறீஇ (1)அறிவுறுத்து (1)அறிவுறுதல் (1)அறிவே (1).

[10] (02.06.2023). தமிழ் இணையக் கல்விக்கழகம். https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=153

[11] "All science (dianoia) is either practical, poetical or theoretical" (Metaphysics 1025b25).

[12] சுந்தராம்பாள்கோ. (29.07.2022). தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும். (03.06.2023) https://www.vallamai.com/?p=107582

[13] சிவத்தம்பிகா. இலக்கியமும் கருத்துநிலையும். ப. 15

வெள்ளி, 31 மார்ச், 2023

செம்மொழியாம் எம் தமிழ்மொழி

 05.11.2022

 

அயலகம்வாழ் தமிழ்க்குழந்தை மேடையில் பேசுவதற்காக எழுதி அளித்தது

 

செம்மொழியாம் எம் தமிழ்மொழி

 

 

கலையென்ற கடலுக்கு

            கரைகண்ட புணையாம்

நிலைகொண்ட அறிவுக்கு

            நிகரற்ற துணையாம்

அலைபட்ட மனத்திற்கு

            அமைதிக்கு வழியாம்

மலையுச்சி ஒளியன்ன

            மறைவற்ற மொழியாம்

 

செம்மொழியாம் எம் தமிழ்மொழியை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்

 

 

A for apple

B for ball

C for cat

D for donkey

 

என எழுத்துகளுக்கெல்லாம் பொருள்களை உதாராணமாகச் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டத்தில் 

 

 அறம்செய விரும்பு

 ஆறுவது சினம்

 இயல்வது கரவேல்

 ஈவது விலக்கேல்

 

என எழுத்துகளுக்கெல்லாம் குணங்களை உதாரணமாகச் சொன்னமொழி தமிழ்மொழி

 

என்ன இல்லை தமிழில்எதுவும் முடியும் தமிழால் “தொன்மைமுன்மைநுண்மைதிண்மைஎண்மைஒண்மைஇனிமைதனிமைஇளமைவளமைதாய்மைதூய்மைமும்மைசெம்மைஇயன்மைவியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழிஅதுவே நம்மொழி” என்றார் நம் தேவநேயப் பாவாணர்.

 

4000 திவ்ய பிரபந்தங்கள்

1330 குறட்பாக்கள்

133 அதிகாரங்கள்

96 சிற்றிலக்கியங்கள்

64 ஆயகலைகள்

63 நாயன்மார்கள்

பதினெண் மேல்கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பன்னிரு திருமுறைகள்

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

ஏழு அகத்திணைகள்

ஆறு பொழுதுகள்

ஐம்பெருங்காப்பியங்கள்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

நான்குதிணைகள்

மூன்றுவேந்தர்கள்

இரட்டைக் காப்பியங்கள்

ஒற்றைக்கடவுள்

ஒருவனேதேவன்

 எனப் பண்பட்டுவந்த மொழி செம்மொழியாம் நம் தமிழ்மொழிஇலக்கியங்கள் செறிந்த மொழிஅதற்கான இலக்கணங்கள் கொண்டமொழி தமிழ்மொழிதொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட நம் தமிழ்மொழி காலம்தோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்துள்ளதுஓலைச்சுவடியிலும் தமிழ் இருந்துள்ளதுகாகிதத்திலும் தமிழ் வாழ்ந்துள்ளதுதற்போது கணினியிலும் தமிழ் வளர்ந்துவருகிறதுஅதனால்தானே நம் தமிழ்த்தாயை ‘உன் சீரிளமைத் திறன்வியந்து செயல்மறந்து’ வாழ்த்துகிறோம்.  

 

தமிழால் என்ன முடியும்சீக்கிரமே அது வழக்கொழிந்துவிடும் என்று பலர் பகல்கனவு காண்கின்றனர்அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.

 

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் 

மெத்த வளருது மேற்கே - அந்த 

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

 

சொல்லவும் கூடுவதில்லை - அவை 

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த 

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

 

என்றந்தப் பேதை யுரைத்தான் - 

இந்த வசை எனக்கெய்திடலாமோ

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் 

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

 என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கவே நாமெல்லாம் கத்தார் வரை வந்துள்ளோம்.  தமிழ்த்தாயைக் காப்பாற்ற எங்களைப்போல் ஆயிரமாயிரம் பிள்ளைகள் காலம்தோறும் தோன்றிக்கொண்டே இருப்பர்சிறுபிள்ளைதானே என்று எங்களை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்ஒன்றுதான்

 

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கொரு காட்டிலோர் 

பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்

சனி, 4 மார்ச், 2023

காவு வாங்கும் சாலைகள் - காவு கொடுக்கும் அரசாங்கம்

#காவு_வாங்கும்_சாலைகள் #காவு_கொடுக்கும்_அரசாங்கம் 

திரு ஸ்டாலின் ஜேக்கப் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தத்திற்குரியது. ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து வாடுவோரின் உடனிற்போம். 

அவரது மறைவையொட்டிய இரங்கற் பதிவுகள் முகநூல் முழுதும் நீண்டிருக்கின்றன. நல்ல வாழ்க்கை வாழ்ந்து நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார். 

இப்படிப்பட்ட இளவயது மனிதரின் இறப்பின் பின்னணி குறித்து முதல் தகவல் அறிக்கை வந்ததும் தெரியவரும் -  எங்கு தவறு நிகழ்ந்தது, விபத்திற்குக் காரணம் எது என்று. சாலைவிபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முற்போக்காளர்களால் அவருக்கென எழுதப்பட்ட இரங்கற்பதிவுகள் சில அபத்தமாகவும் மரணத்தை 'நார்மலைஸ்' செய்யும் விதத்திலும் அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

"அப்படி என்னய்யா அவசரம்?"
அவர் என்ன வேண்டுமென்றேவா இறந்தார். 

"வாழ்க்கை நிரந்தரமற்றது" யார் வேணும்னாலும் எப்ப வேணாலும் சாவலாம். அது உன்னிடமோ என்னிடமோ இல்லை. எதிரில் வருபவன் முட்டாள் தனமாக வண்டியேற்றி நம்மைக் கொன்றாலும் இதே வசனத்தைப் பேசி இரங்கற்பதிவு போட்டுட்டா வேலை முடிஞ்சிடுச்சு 😤 அதானே

"கலைஞரிடமே சென்றுவிட்டான்" இப்படியான கூற்றுகள் வழி மரணத்தைப் புனிதப்படுத்தி ஆசுவாசம் செய்துகொள்வது. சராசரிக் குடும்பங்களில் வழக்கமாகப் பாட்டிமார்கள் தான் இத்தகைய வேலையைச் செய்வர்.

இதெல்லாம் ஒரு விபத்தின் வீரியத்தை உணர முடியாமல் அதை ஏற்றுக்கொண்டுப் பழகிய மனதின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். ஆம்பள-ன்னா அப்படித்தான்  எனும் ஆணாதிக்கச் சிந்தனை போல, சாலைன்னா முன்ன பின்னதான் இருக்கும் - விபத்து நடக்கும் - நாமதான் கவனமா இருக்கணும் என்று பழக்கப்படுத்திவிட்டார்கள். 

கை கால் முறிவு - இயல்பு வாழ்க்கையையே புரட்டிவிடும். மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். விபத்து குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்  எல்லாநாளும் இடம்பெற்றிடுகிறது. இது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல; அவமானத்திற்குரியது.

சென்னையின் முதன்மைச் சாலைகள், புறவழிச்சாலைகள் தேவலாம். ஆனால், உள்பக்கச் சாலைகளின் தரம் கேள்விக்குறியே. வடபழனிக்கு உள்பக்கம் மிக மிக மோசமான சாலைகள்.  மாநிலத்தின் எத்தனை ஊர்களில் இதே நிலை எனத் தெரியவில்லை. மோசமான சாலைகளால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன.

எனக்குத் தெரிந்து/த திருவாரூரின் பெரும்பாலான சாலைகள்   மோசமானவை. கடந்த சனவரி மாதத்தில் புழுதிக்காடாக இருந்தது திருவாரூர். திருவாரூரில் கை உடைந்து கால் உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் ஏராளம். சாலை விபத்துகளில் மரணித்த நபர்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகம்.

 திருவாரூரைச் சேர்ந்த செல்வாக்குமிக்க முக்கியமான ஒருவரிடம், ஏன் இந்தச் சாலை இப்படி இருக்கிறது. நல்ல சாலை போட்டால் என்ன? நீங்க சொல்லக்கூடாதா என்று கேட்டதற்கு, "நீங்க வேற தம்பி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரே அவரோட அலுவலகத்துக்கு இந்தச் சாலைல தான் வர்றார். அவருக்குத் தெரியாதா? நா வேற சொல்லணுமா" என்றார்.

அரசாங்கத்தினர், அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வளவு மந்தமாக இயங்குவதும் இதான் தலைவிதி என்று மக்கள் மூக்கைப் பொத்திக் கடந்து செல்வது நார்மலைஸ் ஆக்கப்பட்டுவிட்டது.

சாலைகள் காவு வாங்குகின்றன. சாலை வரி செலுத்தியும் தரமான சாலை அமைக்கமால் காலம்தாழ்த்தும் அரசாங்கத்தால் மக்கள் சாகடிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நடத்தும் மது பானக் கடைகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களால் எதிரில் வருபவர்கள் சாகடிக்கப்படுகின்றனர். முறையான ஓட்டுநர் பயிற்சி அளிக்காமல், உரிய சாலை விதிகளைப் பயிற்றுவிக்காமல்,  தற்காலத்திற்கேற்ப நவீன முறையில் Test ஏதும் வைக்காமல் அரசாங்கம் வழங்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர்களால்  மக்கள் சாகடிக்கப்படுகின்றனர்.

இதை நீட்டித்துக் கொண்டே சென்றால், அந்நியன் படத்தில் அந்தக் குழந்தை  இறப்புக்குக் காரணமாக அத்தனை பேரையும் குற்றஞ்சாட்டியதுபோல் நீளும். உண்மையில் அத்தனை பேரும் குற்றவாளிகள் தான். உரிய சாலைகளை உடனடியாக அமைத்துத்தர இயலாத அரசாங்கத்தைக் கேள்வி கேட்காமல், எப்போதும் துதிபாடி துதிபாடி நம்மைச் சேர்ந்தவர்கள் இறந்தால்கூட இரங்கற்பதிவு எழுதி கடந்து செல்வதே வழக்கமாகிவிட்டது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் மாமனார், மருமகன் ஒரே நேரத்தில் மோசமான சாலையில் அரசுப் பேருந்து நடத்திய விபத்தில் சாகடிக்கப்பட்டனர். அந்த குடும்பம் இன்னும் மீளவில்லை. அந்தச்சாலையும் நான்காண்டுகளாகியும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதுபோல் எத்தனை குடும்பங்கள் சிதைந்துள்ளன. 

இதுவெல்லாமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணங்களாகாதா?

சாலையில் நிகழும் விபத்துகள் யாருடைய குறை/தவறு எங்கே இருக்கிறது.?

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் இல்லாத நாளே, குடிமக்களைக் காக்கும் நல்ல அரசாங்கத்தின் அடையாள நாளாம். இது கனவாக மட்டுமின்றி நனவாக முதலமைச்சர் ஆவண செய்யவேண்டும்.

தக | 04.03.2023

வெள்ளி, 29 ஜூலை, 2022

Tamil Abbreviation

 

AoA

Articles of Association நிறுவனத்தின் சட்ட திட்டங்கள்

CMA

Commissionerate of Municipal Administration நகராட்சி நிர்வாகத்துறை

CMDA

Chennai Metropolitan Development Authority சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

CMWSSB

Chennai Metropolitan Water Supply and Sewerage Board - சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்

CTE

Consent to Establish நிறுவுவதற்கான ஒப்புதல்

CTO

Consent to Operate இயக்குவதற்கான ஒப்புதல்

DIN

Director Identification Number இயக்குநர் அடையாள எண்

DISH

Directorate of Industrial Safety and Health – தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

DSC

DTCP

Digital Signature Certificate – டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்

Directorate of Town and Country Planningநகர் ஊரமைப்பு இயக்ககம்

DTP

Directorate of Town Panchayat – பேரூராட்சிகளின் இயக்ககம்

EC

Encumbrance certificate வில்லங்கச் சான்றிதழ்

GCC

Greater Chennai Corporation – பெருநகர சென்னை மாநகராட்சி

GST IN

Goods & Service Tax Identification Number – ஜிஎஸ்டி எண்

HT

High Tension மிகை அழுத்தம்

LLP

Limited Liability Partnership - வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில் நிறுவனம்

LT

Low Tension குறை அழுத்தம்

LUIS

Land Use Information System - நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு

MoA

Memorandum of Association – அமைப்பின் பதிவுக் குறிப்பு

NOC

No Objection Certificate – தடையில்லாச் சான்று

RDPR

Rural Development and Panchayat Raj – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

SEZ

Special Economic Zone – சிறப்புப் பொருளாதார மண்டலம்

SIDCO

Small Industries Development Corporation Limited – சிட்கோ

SIPCOT

The State Industries Promotion Corporation of Tamil Nadu – சிப்காட்

SPICe

Simplified Proforma for Incorporating a Company Electronically - நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான எளிமைப்படுத்தப்பட் படிவம்

TNEI

Tamil Nadu Electrical Inspectorate - தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை

TNFRS

TNGEDCO

Tamil Nadu Fire and Rescue Services – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

Tamil Nadu Generation and Distribution Corporation Limited – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

TNPCB

Tamil Nadu Pollution Control Board – தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

TWAD

Tamil Nadu Water Supply and Drainage Board – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்