நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 18 மே, 2017

ரசனையும் தாக்கமும் தனக்குதவுமா ?

இவ்ளோ இருக்கிறதே என டேப் ஐ மூடி எத்தணிக்கும் நபர்கள் மட்டும் கட்டுரையின் கடைசி வரியை வாசித்து மூடுக., மற்றவர்கள் இறுதி வரை இருந்து தொடர்ந்து படிக்க.

ஒரு செயல் என்பது எப்போது முழுமை பெறும் என்று சொன்னால், அது எப்போது தன்னை முழுவதும் எல்லாராலும் கவனிக்கப்பட்டு பிறருக்கு ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அப்போது தான், எந்த ஒரு கலையும் இலக்கியமும் நம்மை படைப்பாளியின் பிரம்மாண்டத்தின் பிம்பத்திற்குள் ஆழ அழுத்தி விடும்.  


அந்த பிம்பத்திலிருந்து நம்மை வெளியெடுக்கும் முயற்சி அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்திடுவதில்லை. அதிலிருந்து வெளியாகுபவர்கள் மட்டுமே தம்மை உலகத்தின் ஓட்டத்தில் நிலைநிறுத்திக்கொள்கிறார்கள்.


எல்லாராலும் பிரம்மாண்டத்தின் உச்சம் எனப்பட்ட பாகுபலி 2

ஆனால், பெரும்பாலானோர் பிரம்மாண்டத்தில் தம்மை நாம் சிக்க வைக்கும் போது, தம் அன்றாடம் என்னவோ அதற்குள் மூழ்கிப் போய் விடுகிறது. ஒரு சராசரி மனிதனென்பவன் அவனது வாழ்க்கையில் பிரம்மாண்டத்தை காண இயலாதவாறு, அவனது வாழ்வின் இறுதி வரை கடத்திச் செல்வது இந்த பிரம்மாண்டத்தின் மீதான தீராத பற்று தான். எந்த செயலும் தீர்க்கமாக முன்னெடுக்கப்படவேண்டுமெனில் அது தன்னிலிருந்து துவங்க வேண்டும். 


ஒரு தலைவனை ஏற்றுக்கொள்கிறாய் என்று சொன்னால் கடைசி வரை நீ தொண்டனாகவே இருக்கப்பழகப் போகிறாய் என்று பொருள். அவன் நிச்சயம் நமக்கு மேலான எண்ண ஓட்டங்களைக்  கொண்டிருந்தானேயானால் அவன் தலைவனாகவும் நீ தொண்டனாகவும் இருப்பதும் சாத்தியம்.  ஆயினும், இன்றைய உலகின் பிம்பங்கள் யாவும் கணினி மயமாகிவிட்டது. எது மெய்யென்பதே பொய்யாகத்தான் இருக்கிறது. 


அப்படிப்பட்ட சூழல் பொருண்மையில், ஒன்றன் மீதான் கலை ரசனை வேறு அதன் மீதான கலைத் தாக்கம் வேறு. ரசனை என்பது வெறும் மேலடுக்கு, அது படைப்பின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பேசியே நம்மையும் நம் நேரத்தையும் அழித்து விடும், நம்மை ஒன்றன் மீதான அடிமை மனப்பான்மைக்குக் கொண்டு சென்று விடும்.  ஆனால், கலைத் தாக்கம் என்பது, முற்றிலும் வேறுபாடானது, ஒரு படைப்பை படைத்த பின்பு தன்னை அதனூடாக பயணிக்கச் செல்லும், உள்ளும் புறமும் கரைபுரண்டோடும் கலைத்தாகத்தை அது தணிக்கும். மேலும் ஒரு செயற்பாட்டாளனாக்க அது உதவும். தாக்கம் ஒன்று தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


ஒரு நிழற்படத்தை பார்த்து படம் நன்றாக இருக்கிறது என்பவன் ரசிகன், அதன் பின்னான கடும் முயற்சி, நிழற்படம் எடுத்தவரின் திறன், ஒளியமைப்பு பற்றி சிலாகிப்பவன் தாக்கத்தை உணர்ந்தவன்.


கடைசி வரை தன்னை சச்சினுக்கு ரசிகனாகவே நினைத்துக் கொண்டிருக்கும் ”சுதிர்”


பெரும்பான்மை முன்னேறிய சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்குக் காரணமாக ஏதாவது ஒரு தாக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அதே தான் படைப்பின் மீதான தாக்கமும், இராஜா அரிச்சந்திரா நாடகத்தின் தாக்கம் தான்  காந்தியை மகாத்மாவாக இந்தியாவிற்கு அளித்தது. கிரிக்கெட் மீதிருந்த தாக்கம் தான் பயணச்சீட்டு பரிசோதகரை இந்தியாவின் சாம்பியன் தோனியாக அளித்தது. இவர்கள் தாம் கண்ட வாழ்க்கைப் பயணத்தை வெறும் ரசனைக்குரிய பொருளாக மாற்றிக் கொண்டிருந்தால் நாடறிந்த நாயகர்களாக வலம் வந்திருக்க இயலாது.


ஆக, தாக்கத்தை எவனொருவன் தன் வாழ்க்கைக்குள் செலுத்திப் பார்க்கிறானோ, அவனே அதன் வெற்றிக்கணைகளை சுவைக்கிறான். ஆனால், பெரும்பகுதி மக்கள் எங்களால் இயன்றது இதுவே., இதுவே எனக்கு அதிகம்., ஹப்பா நான் எவ்ளோ சந்தோசமா இருக்கிறேன்., எனக்கு இது போதும் என்கிற நிறைவடைந்த மனம் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாவற்றையும் ரசிக்கத் தெரிந்திருக்கிறார்கள் என்று பொருள். 


ஆயினும் நான் இன்னும் முற்று பெறவில்லை, என் வாழ்வியல் பயணம் இன்னும் முழுமையடைவில்லை என எண்ணி இன்னும் சிறந்த இலக்கை அனுதினமும் கூர்தீட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தாக்கம் இருந்து கொண்டேஇருக்கும். ரசனைக்கும், தாக்கத்திற்கும் இடையே எதிலும் சிக்காத சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் எதனையும் ரசிப்பதும் இல்லை, தக்கதொரு தாக்கத்தை பின்பற்றுவதுமில்லை. கடைசி வரை உலக எதார்த்ததை அறிந்த கொள்ள இயலாமல் வாழ்க்கையை வாழாமலே இறப்புற்று விடுகிறார்கள். 


எந்த ஒரு படைப்பையும் அதன் பின்புலம், காலம் சூழல், தன்மை இவற்றோடு சேர்ந்து ரசனைக்குட்படுத்துவதும். கரு கொண்ட தாக்கத்தை தன் வாழ்வியலோடு நிலைநிறுத்தி அதன் அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்வை நகர்த்துவதுமே மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கும்.  வாள் பார்க்க அழககாக இருக்கிறது எனச் சொல்லிக் கொண்டிருப்பதை விட, வாளெடுத்து வீச கற்றுக்கொள்வதே வீரனுக்கு அழகாகும்.

 நீ வீரனாக இரு.


எதைக்கண்டும் பிரம்மிக்காதே, அந்த பிரம்மிப்பு உன்னை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லவே செல்லாது.


உன் வாழ்வு உனக்கும், பிறர்க்கும் ரசனைக்குரியதாக இருப்பதை விட, தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைத்துக் கொள், அதுவே உன்னை உலகிற்கே அடையாளம் காட்டும் ஆயுதமாகும்.


-த.க.தமிழ்பாரதன் 

18.07.2017

(பாகுபலி பார்த்து விட்டு, கீர்த்திக்கு பதிலனுப்பும் பொருட்டு எழுதப்பட்டது)



 

1 கருத்து:

  1. பாகுபலி படத்தின் மீது எனக்குண்டான தாக்கத்தை படம் பார்த்த அன்றே நான் உணர்ந்தேன். அதில் உள்ள ஏதோ நச்சயம் இன்று வரை மீண்டும் பார்க்க தூண்டுகிறது. பெண்ணின் தைரியத்தை, மக்களின் மனத்தை, சூழ்ச்சியை, காதலை, பிரமிப்பை அத்தனையும் அத்தனை ஆழமாக சொல்லிய விதம், சொன்னதை அவ்வளவு அழகாக வெளிபடுத்திய நாயக- நாயகிகள் நிச்சயம் பிரமிக்க தான் வேண்டும்
    சில பெண்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் தேவசேனை பாகுபலியை தேடி செல்லவில்லை. அதனால் பாகுபலியை போல மணாளனை தேடுவதை விடுத்து தேவசேனை போல் வாழ முயலுங்கள் உங்கள் பாகுபலி உங்களைத் தேடி வருவான்.
    என் எண்ணங்களை நகல் எடுத்தது போல் உள்ளது கட்டுரை. இத்தனை கூர்மையாக புரிந்து எனக்கு பதிலுரை எழுதியதற்கு மிக்க நன்றி தமிழ் பரதன். மிகச் சிறப்பு.

    - கீர்த்தி

    பதிலளிநீக்கு