நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 30 ஜூலை, 2019

பல்லவ வாரிசு | சிறுகதை


கரு & கதை - பு.கி.ஸ்வேதா & ..தமிழ்பாரதன்

பல்லவ வாரிசு

புது வருடம் பிறந்தது. என் பெற்றோர்க்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் தான் 2018 வரட்டும் எனச் சொல்லிருந்தேன். ஏனெனில் கல்லூரிப் படிப்பை முடித்த மகளுக்கு மண முடித்து தன் கடமையை முடிக்க வரைவுத் திட்டம் தயாரித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பெண்ணை மணம் செய்து கொடுப்பதே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பங்களில் ஒன்றே என்னுடையதும்.

என்ன தான் வீரத்தமிழச்சி,  கண்ணகி,  கொற்றவைன்னு பேசிட்டிருந்தாலும் பெண் என்பவள் உடைமைப் பொருளாகவே பார்க்கப்படும் இன்றைய காலகட்டத்தில் நான் ஒரு விதிவிலக்கல்ல. எனக்குன்னு சில கொள்கை, கோட்பாடு, மண்ணாங்கட்டினு சிலது இருக்கு. ஆனா., எனக்குக் காரணமாக இருந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும், என்னுடைய திருமணம் தான் கனவே.

கனவுக்குப் பின், கணவனை ஏற்கலாம் என நானும், கணவனுக்குப் பின் கனவை ஏற்கலாமே என பெற்றோரும் பட்டிமன்றமே நடத்தியதுண்டு. அப்போதெல்லாம் அண்ணன் தான் தீர்ப்பு சொல்வான். அவன் எப்போதுமே என் பக்கம் தான். கல்யாணத்துக்கப்புறம் சந்தோசமா இருக்கலான்றது, இப்ப சந்தோசமா இல்லாதவங்களுக்கு வேணா ஓகே.  இவ தான் இப்பவே சந்தோசமா இருக்காளே அப்றம் எதுக்கு கல்யாணம்னு தங்கச்சிக்காக வக்காலத்து வாங்கும் அவனால் தான் 2018 வரைக்குமே தள்ளி போட முடிஞ்சிது.

என்    வாழ்க்கைப் பயணத்திற்கே அவன்தான் முன்னோடி. எனக்கு முன்னாடி பிறந்ததால் அவன் சோதித்ததன் வெற்றிப் பக்கங்களை மட்டுமே படித்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியவள்தான் நான்’. சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டப்ப, எனக்கான தழும்புகளையும் அவனே ஏந்தியிருக்கிறான். அவன் தோல்விகளின் கணிசமான பங்கு எனக்கும் இருக்கிறது.

அதையெல்லாம், நான் முடியும் சிண்டுகளிலும், நெற்றியில் தூங்கும்முன் வைக்கும் துன்னூறிலும், முன்பு தின்ற கூட்டாஞ்சோற்றிலும், இப்போது நான் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கும் சபர்மாவிலும் அவன் மறந்துபோய் விடுவான்.

ஆமா, ‘அவன் தானே எல்லாத்துலயும் முன்னாடி. அப்புறமென்ன திருமணம் மட்டும் எனக்கு முதல்ல., அதையும் அவனே பண்ணிக்கட்டுமே என்ற தாராள மனப்பான்மை எனக்குண்டு. திருமணம் செய்து, அவன் வாழ்க்கையில் அடிபட்டால் அது கூட எனக்குப் பாடம்தானே எனும் சுயநலம் இல்லாவிட்டாலும் கூட, அவனுக்குத் திருமணம் நடத்திவைப்பதில் எனக்குக் கொள்ளைப் பிரியம். இவ்வளவு நாள் அவனோடு மட்டும் சண்டையிட்டு போரடிக்குது. அண்ணியும் வந்துட்டா நல்லா இருக்கும்ல என நினைக்கும்போதெல்லாம், இந்தக் கதை அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா செல்கிறதோ என நீங்கள் நினைப்பதைப் போல, நானும் நினைப்பதுண்டு என் வாழ்க்கைக் கதையை.

Art : Anu Akka



எனக்கு அண்ணி யாருண்ணு தெரியாமலாம் இல்ல. அண்ணியையும் தெரியும். அண்ணனுக்குக்கூட ஒரு காதல் இருக்கு, அதுக்கு ஆயுசு எவ்ளோனு தெரியல. ஆனா வயசு அஞ்சு இருக்கும். அந்தக் காதலை சீக்கிரம் கல்யாணமாக்கிக்கோன்னு சொன்னேன்னா  பாவமாகிடும் அவன் முகம். தந்தையின் குட்டி இளவரசியான எனக்கு இருக்கும் உரிமைகளை விட, மூத்த மகனான அவனுக்கு இருக்கும் கடமைகளே அதிகம். தங்கைத் திருமணத்திற்கு பின்னரே, தமையன் திருமணம் என இன்னிக்கு சமூக வழக்காறாகுமளவுக்கு எவன் சொன்னானோ, அவனத் தான் அவனும் தேடிட்டு இருக்கான், ஏன் நான் கூட அவனத்தான் தேடிட்டு இருக்கேன்.

பாவம். முன்மண்டை முடிகளெல்லாம், முதிர்ச்சியடைய, ஞானப்பல் முளைத்து நான்காண்டுகளாக, மேலணிந்த சட்டைக்கு முன்பாக எட்டிப் பார்க்கும் குட்டித் தொப்பை, கண்ணாடி போட்டால் அங்கிள் என அழைக்கத் தோன்றும் இரண்டு பிள்ளைகள் பெற்ற தோற்றம் அவனுக்கு வந்து சில மாதங்களாகிவிட்டன. இனி காதல் அண்ணியைத் தவிர இவனைத் திருமணம் செய்ய எந்த அழகுத் தேவதையும் தயாராக இருக்கமாட்டாளென அவனுக்குத் தெரியும். அது எனக்கும் தெரியும். அதனால் தான் எனக்கு நானே விதித்துக் கொண்ட கெடு 2018.

அவனுக்குக் கிடைத்ததைப் போல எனக்கொரு காதல் கிடைச்சிருந்தா நானும் இந்நேரம் செட்டில் தான். எனக்குப் பிடித்த-பிடிக்குமளவு யாரையும் இன்னும் பார்க்கலை. அம்மா கோயிலுக்குப் போயிருக்கும் சமயங்களில், “காதல்னு எதாச்சும் இருந்தா சொல்லும்மா, தைரியமா கல்யாணம் பண்ணி வச்சிடுறோம் என அப்பா கூட ஒரு சிலமுறை கேட்டிருக்கிறார். லூசாப்பா நீ, உண்ட்ட சொல்ல என்ன தயக்கம் அப்டிலாம் ஏதும் இல்லை”. அப்பாக்கு காதல் பத்தின புரிதல் இல்லாமல்லாம் இல்ல. சொல்லப்போன அத்தைப் பொண்ணே மனைவியே வந்ததாலே அப்பா அம்மாவோட ஆயுசுக்குமான காதலுக்கு வயசு 40.

போட்டித் தேர்வில் வெல்வது தான் என் நோக்கம். ஆனால், என்னை வெல்ல போட்டி போட்டுக் கொண்டு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்துவைத்திருந்தனர்.  ஜனவரி முதல் வாரத்திலே பெண் பார்க்க வந்தனர். இன்னும் பெயரிடப்படாத ஏதோ ஒரு தமிழ்த் திரைப்படத்தின் வழக்கமான பெண்பார்க்கும் காட்சி தான் அன்றும் கூட. சோழ மண்டலத்திலிருந்து பல்லவ தேசத்திற்கு வந்திருந்தனர் அவர்கள்.

பில்டர் காபி நிரம்பிய டம்ளரை அவர்களனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் அவர்களூடே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். ஏதேச்சையாக நானும் அவரும் ஒரே நீலநிற ஆடை உடுத்தி இருந்தோம். குடித்த காபிக்கும், கொரித்த மிக்சருக்கும் நன்றியாக மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் எப்படிப் பொருத்தமா இருக்கு பாத்தீங்களா என ஆடைப் பொருத்தமே வாழ்க்கைப் பொருத்தமென தொலைக்காட்சி தொடர்களில் எதார்த்தத்தைத் தொலைத்த சுற்றத்தார் கூறிச் சிரித்தனர்.

வரதட்சணைலாம் எதும் கேட்கலை. எனக்குக் கூட அவரை பிடிச்சிடுற மாதிரி தான் இருந்தது. வீட்டுக்குப் போய்ட்டுப் பேசிட்டு சொல்றோம்னு சொன்னாங்க. நான் நம்பர் கொடுங்கனு எழுதிக் கொடுத்த பேப்பர்ல ஸ்மைலி வரைந்து, பக்கத்து குட்டீஸ்கிட்ட கொடுத்துட்டு போய்ட்டார். கொஞ்ச நாளில் அந்த நல்ல செய்தியும் வந்தது.

**********

மறுபடியும் புது வருடம் பிறந்தது. என் பெற்றோர்க்கு அளவு கடந்த மகிழ்ச்சி. இந்த முறை மருத்துவர் தான் 2019 வரட்டும் எனச் சொல்லிருந்தார். ஜனவரி 9. பிரசவம் முடிந்தது. மகப்பேறு சுகப்பிரசவமாகவே இருந்ததால் பேராண்டி, ரொம்ப போஷாக்கா இருக்கப்போறான்னு புதிய தாத்தாக்கு குத்திட்ட மயிர்க்கால்கள் இன்னும் உயிர்ப்புடனே இருந்தன. பாட்டியாய்ப் போன அம்மாதான் குழந்தையைக் கையிலேந்தி உலோலாஅய்க்கு உலோலாஅய்க்கு என முகமெல்லாம் ஒளியாகிப் பரவியிருந்த மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

இங்க பாரேன், என் கையில் குழந்தையைக் கொடுத்த பின்னர் தான் நினைவுக்கே வந்தேன்ன்ன்… “பனிக்குடத்தில் பாதுகாப்பாய் இருந்த அவன். ஏன் வெளியே வந்தான்., பாவம் இந்த உலகில் என்ன பாடு படப்போகிறானோ எனவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த எனக்கு நீ ஒன்னும் கவலப் படாதே, இருட்டுல இவ்ளோ நாள் வாழ்ந்த எனக்கு, இந்த வெளிச்சத்துல வாழ்றது பெரிய விசயமில்லைன்னு சொல்லி கண் மூடிக்கொண்டே உதட்டுக்குள்ளிருந்து பல்முளைக்காத அவன் சொன்ன சொற்கள் என் மனதை நிரப்பியிருந்தன.

இந்தப் பிரபஞ்ச மொழிகள் எல்லாவற்றிலும் முகிழ்த்தெடுக்கப்பட்ட  சொற்களைக் கொண்டு அவனுக்கொரு பிள்ளைத் தமிழ் பாட வேண்டும் என்பது போலிருந்தது. இன்னும் பெயரிடப்படாத அவனுக்கு ஆழப்பதியாமல் நெற்றியில் ஒரு முத்தமிட்டு அம்மாவிடமே கொடுத்துவிட்டேன்.

எதுவாயிருந்தாலும் என்னை அத்தைன்னு உரிமையாய் கூப்பிட ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்குறப்பவே மகிழ்ச்சியாக இருக்கு.  ஆம். அண்ணிக்கும் அண்ணனுக்குமான இயற்கைக் கொடுத்த காதற்பரிசே இந்தப் பல்லவ வாரிசு. போட்டித் தேர்வுகளில் வென்ற நான் இந்திய ஆட்சிப் பணிக்காக இப்போது டேராடூனில் பயிற்சி பெற்று வருகிறேன். வேலைக்குப் (போகப்)போற பொண்ணு ஒத்துவராதுண்ணு சொல்லிட்டுப் போன அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் ஏதோ ஒரு பெண்ணோட வீடுகளில் ஏறியிறங்கி காபி குடிச்சிட்டு இருக்காங்க போல.

கெட்டியான ஆயுசுள்ள அண்ணனுடைய காதலை வீட்டில் சொல்லி மார்ச்சில் அண்ணன் அண்ணிக்கு திருமணம் செஞ்சு வைத்த பின்னர்தான், டேராடூனுக்கே சென்றிருந்தேன். இப்போ மருமகனைப் பார்க்க வந்தாச்சு. அப்றம் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டனே.

என் காதலுக்கு வயது நான்கு மாதம்.

_சுபம்_


(இது பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி, ப்ரதிலிபியின் மகளிர் தின இறைவி போட்டியில் பங்கேற்றது, பரிசுபெறவில்லை)

புதன், 24 ஜூலை, 2019

அபாயச் சங்கிலியும் அபயமும் ! (பயணக் கட்டுரை)

22 ஜூலை 2013

கல்லூரி சேர்க்கை போட்டு., கல்லூரி செல்லத் தொடங்காத 17 வயது நிரம்பிய மீசைக்கு ஆசைப்பட்ட இளைஞன்.

மைக்ரோமேக்ஸ் ஆண்டெனா வச்ச போன்,
அதுல மொத்தம் 60-80 தொடர்பு எண்கள்
கழுத்துல என்சிசி ஐடி கார்டு
சின்ன டைரி அதுல ஒரு 16 போன் நம்பர்
ஒரு பை அதுல ரெண்டு செட் துணிகள்
500
ரூ கிட்டத்தட்ட கையிருப்பு

இவற்றோடு அன்றைய பயணம் துவங்கிற்று. சோழன் விரைவு வண்டியை மயிலாடுதுறையில் பிடித்த போது, இரயில் கூட்டத்தால் உள்ளீடதிகம் இருந்தது. ஒரு வழியாக சிதம்பரம் தாண்டுவதற்குள், சராசரி இந்தியக் குடிமகனின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் சிம்மாசனமான Luggages onlyஇல் அமர்ந்து கொண்டதும் பெருவேகமெடுத்தது இரயில்.

ஒரு கான்ஸ்டபிள் உட்பட என்னோடு சேர்த்து மூவர் மேலே அமர்ந்திருந்தோம் பைகளோடு. கடலூர் தாண்டிய பின்னர் கான்ஸ்டபிளின் போனில் சார்ஜ் இல்லை என்பதால் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசினார்  எல்லா இரயில் பயணம் போலவே இயல்பாகத் தான் இருந்தது. அது நடக்கும் வரை....

விழுப்புரம் கடந்து திண்டிவனம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பேரணி எனும் நிலையத்தை தாண்டி 100மீ தொலைவு சென்றிருக்கும். இரயில் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்கியது. எதிரிலிருப்பவருக்காகக் காலை ஒடுக்கி உட்கார்ந்ததில் காதில் மாட்டியிருந்த இயர்போன் கையிலிருக்க, வாலிபாலை விட மோசமாக அங்கிங்கு மாறி ஜன்னலின் வழியே வெளியே விழுந்திட்டது மைக்ரோமேக்ஸ் ஆண்டனா போன்.

ஏதோன்றும் செய்வதறியா நிலையில்,  அபாயச் சங்கிலியை இழுக்க கைகள் நீண்டன. சக பயணிகளான பொதுமக்கள் எல்லாம் ஏதொன்றும் அறியாது பதறிப்போய், அபாயசங்கிலியைப் பிடித்து, நிறுத்துவதற்குள் எனைத் தடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பைப் புறக்கணித்து அபாயச்சங்கிலி இழுத்தபின், செருப்புகூட போடாமல், வேகமாக இரயிலில் இருந்து குதித்தன கால்கள்.(எப்பாஆ எம்மாம் உயரம், நடைபாதையில ஏறி ஏறி, முதல் முறையா நேரடியா தரையில இறங்குனப்ப அம்மாம் உயரம்).

கடைசியில் உள்ள பொதுப்பெட்டியில்(Unreserved) ஏறியதால், உடனே செல்போனை எடுத்துவிடலாம் என்ற எண்ணம். இரயில் கார்டு "என்னப்பா, எங்க ஓடுறே" எனக் கேட்க,"இதோ வந்துடறேன்" என திரும்ப கூட பார்க்காமல் வேகமாக ஓடினேன். இரயில் வந்த பாதையில் போனைத் தேடிய போது, இரயில் செல்லட்டும் பிறகு கடக்கலாம் என, கிடாரிகளை நிப்பாட்டி வைத்திருந்தவர், "தம்பி என்ன தேடுறே.... இரயிலு அந்த டிராக்குலருந்து வந்துச்சி"ன்னு சொல்ல உடனே அங்க ஓடுனேன்.

கீழ பார்த்தா செல்போன் மேல்பாகம், கீழ்பாகம், பேட்டரி எல்லாம் தனித்தனியா கொஞ்சம் எட்டி எட்டி கிடந்தது (ஓடுற இரயிலில் இருந்து விழுந்ததால்). எல்லாத்தையும் கையில எடுத்துட்டு திரும்பிப்பார்த்தால், நான் வந்த இரயில் இரண்டு கி.மீ தாண்டி சென்றுகொண்டிருந்தது. அப்போது தான் தமிழ்த்திரையுலகின் தொட்டுதொடரும் மோசமான அறிவிலி காட்சிப்படுத்தலை மனதார திட்டித் தீர்த்தேன். படங்கள் வழியே பெரும்பாலான வாழ்க்கைப் பாடங்களை கற்க நேர்கிறது. பொதுவாக படங்களில் யாராவது அபாயச்சங்கிலி பிடித்திழுத்தால் இரயில் கார்டு வந்து அபராதம் வசூலிப்பார். பின் வண்டி செல்லும் என்பதே மனதில் பதிந்தது. அந்நிகழ்விற்கு பின் படத்தை பார்ப்பதோடு இரசித்து மட்டும் விடுவதென முடிவு செய்துவிட்டேன். 

எப்போதோ பேசியில் சேமிக்கப்பட்டிருந்த இரயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு "அபாயச்சங்கிலி இழுத்துவிட்டேன், உடைமைகள் யாவும் இரயில் செல்கின்றன" என சொன்னால், அது கேரளா எண்ணாம், அவர்கள் தந்த தமிழக எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக பேரணி இரயில் நிலைய அதிகாரியைச் சந்திக்கச் சொன்னார்கள்.


அங்கு செல்வதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு. துண்டித்தேன். மீண்டும் அழைப்பு
"என்னம்மா(கடும் அமத்தலுடன்)".,
"எங்கே போயிட்டுருக்கே"
"ஏன், திண்டிவணம் போகப்போகுது வண்டி"
"சரி சரிபா"
அழைப்பு துண்டித்தேன்., இரயில் நிலைய அதிகாரியைச் சந்திப்பதற்குள் அடுத்த அழைப்பு அம்மாவிடம்,

"ஒண்ணுமில்லே, நீ இரயில்ல இருந்து கீழ குதிச்சுட்டன்னு சொன்னாங்க, அதான்"
"ஓஓ! தெரிஞ்சிட்டா, கவலைப்படாதே நான் பாத்துக்கறேன், பத்துரமா வந்துடறேன்" என பலவாறு தேற்றி போனை வைத்தேன்.

பேரணி இரயில் நிலைய அதிகாரி பின், இரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். திண்டிவனத்திலிருந்து வந்த அவர்கள், பேரணியிலிருந்து அழைத்துச் சென்றனர். இரு சக்கர வாகனத்தில் எனக்கு முன்னும் பின்னும் காவலர்கள் அமர திண்டிவனம் சென்றோம். இரண்டு நாட்களில் திண்டிவனம் இரயில் நிலையத்திற்கு.மீண்டும் வரவேண்டும். விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அபராதம் ரூ.500 செலுத்த வேண்டும் என்றனர். ஜாமீன் கையெழுத்து இட்டதும் விடுவித்தனர். (நான் திண்டிவனம் அடைவதற்கு முன்பே கல்லூரி மாணவர்கள் சிலர் குழுமியிருந்தனர். அவர்கள் எனக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள். கல்லூரியில் பணியாற்றும் யாரோ தகவல் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த யாரோ-வுக்குத் தகவல் சொன்னது அம்மா, அப்பா. அந்த இளைஞர்கள் கையெழுத்திட்டதும் காவலர்கள் விடுவித்தனர்)

(குறிப்பு: 
உயிர் பிரச்சினை என்றாலோ, ஆபத்து என்றாலோ, ஐந்திலக்க ரூபாய் மதிப்பிலான பொருட்களாக இருந்தாலோ, அபாயச்சங்கிலி இழுத்தமைக்கு அபராதம் கிடையாது . இது இரயில்வே பாதுகாப்புப் படையினர் சொன்ன தகவல். மற்றபடி தனிப்பயன்பாட்டிற்காக அபாயச்சங்கிலியை இழுப்பது இந்திய இரயில்வே சட்டத்தின் 141வது பிரிவின் படி  குற்றமாகும். இதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். உரிய காரணங்களிருப்பின் ரூ.500யாகக் குறைக்கப்படும். 

பேரணி நிலையத்தை மெதுவாகக் கடந்து வேகமெடுக்கையில் அபயாச்சங்கிலியை இழுத்ததால் இரயிலுக்கு ஏதும் சேதமில்லை. இதே இரயில் பெருவேகமெடுத்துச் செல்லுகையில் அபாயச்சங்கிலி இழுக்கப்படின் இரயில் தண்டவாளத்தை விட்டே வெளியேறிவிடும் சூழலுள்ளது.  இரயில் சக்கரம் - தண்டவாளம் இரண்டுமே ஒரே தனிமம் ஆதலின் ஓரினக்கவர்ச்சி விசையின் காரணமாக  Break அடித்தவுடன் உடனடியாக நிற்காது. சற்று நேரமாகும். 110 கி.மீ வேகத்தில் செல்லும் வண்டி அபாயச்சங்கிலி இழுத்தவுடன் நிற்க 3-4 நிமிடங்களாகலாம். 

மேலும், தனிப்பட்ட ஒருவரின் அபாயச்சங்கிலி இழுப்பால் உடன் பயணிக்கும் மொத்த பயணிகளுக்கும் நேரத்தாழ்ச்சி ஏற்படுகிறது. அதோடு இந்த இரயில் சென்றால் தான் செல்லமுடியும் எனவுள்ள Connection இரயில்களின் பயணமும் பாதிப்புக்குள்ளாகும். இது அழகிய வலைப்பின்னலில் சிக்கலை ஏற்படுத்தும், ஆதலின் பெரும்பாலும் அபாயச்சங்கிலி இழுக்காமல் சூழலை கைக்கொள்வது நல்லது)

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு எழுதிக்கொடுத்த பின், சென்னை வந்தேன். சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அலுவலக அதிகாரியிடம் என் செருப்பு முதற்கொண்டு எல்லா உடைமைகளையும் ஒப்படைத்துச் சென்றார் இரயில் பயணத்தில் என் பேசியில் தன் வீட்டிற்கு பேசிய கான்ஸ்டபிள். அவர்தான் என்பையிலிருந்த சிறுடைரியிலிருந்து எண் எடுத்து எனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தவர். தன் வீட்டில் தொடர்பு கொண்டு என் எண்ணை அறிந்து என்னிடம் பேசியவர் (அவர் போனில் சார்ஜ் இல்லாததால் இவையாவும் பிறர் போனிலே செய்திருக்கிறார் என்றறிக. 2013இல் இரயிலில் எல்லா பெட்டிகளிலும் சார்ஜ் ஏற்றும் வசதி செய்துதரப்படவில்லை என்பதறிக)

எழும்பூர் வந்ததும் சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். உறவினரனைவரும் பதட்டத்தில் இருக்க, நான் ஏதும் ஏடாகூடமாய் முடிவெடுக்கக் கூடாதென பரிவாகவே நடந்தனர். ஏனெனில் சித்தப்பாவை அடுத்த நாள் காலை ராஜதானியில் வழியனுப்ப வந்தவன். என்னை பாதுகாக்க அவர்கள் ஆவடியிலிருந்நு எழும்பூர் வந்திட்டார்கள். இரவு 12 மணி அவர்களோடு ஆவடி செல்லும்போது. காலை 04.30க்குலாம் மீண்டும் கிளம்பி சென்ட்ரல் வந்தாச்சு.

அன்றைய அல்ட்ரா டீலக்ஸ் வண்டியில் ஊருக்கும் திரும்பியாயிற்று.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப்பின்,

25 ஜூலை 2018

கையில் பெட்டி, உணவு
ஸ்மார்ட்போன்
அதில் நான்கிலக்க எண்ணிக்கையில் தொடர்பு எண்கள் என 22 வயது கன்னத்து மயிர் முளைத்த இளைஞன் இப்போது! இந்த ஐந்தாண்டுகளில் தான் எவ்வளவு மாற்றங்கள்! ஐந்தாண்டுகளுக்குப் பின் இப்போது தான் சோழன் விரைவு வண்டியில் சென்னை செல்கிறேன்.

ஒரே ஒரு வேறுபாடு :
2013இல் டெல்லிக்கு வழியனுப்பும் பொருட்டு சோழனில் பயணம்.
2018
இல் டெல்லிக்குச் செல்லும் பொருட்டு சோழனில் பயணம்.

-தக
25.07.2018

(தனித்தமிழார்வலர்கள் பொறுத்தருள்க மீஆங்கிலப் பயன்பாட்டிற்காக)

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 4


மார்ச் 20
ஆரம்ப்பா – 18 நிகழ்வு நல்லபடியாக தீபக் கிருஷ்ணனுடன் சேர்த்து அரங்கேற்றினேம். (நிகழ்ச்சிச்சுட்டி https://youtu.be/X-lr2axe2Ig). ஆனால்அரசியல் வயப்பட்ட பகடி நிகழ்வாகிப் போனதால்மாணவர்களிடையே வரவேற்பையும் நிர்வாகத்தில் இருக்கும் பேராசிரியர்களிடத்தில் எதிர்ப்பையும் பெற்றுக்கொடுத்ததுஒரு பேராசிரியர் நேரடியாகவே, “உன்னிடம் இதுபோல் எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்இதற்கொரு காரணம் என்னவெனில்தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மேடையில் அரங்கேறும் நிகழ்வுகள் யாவும் முன்னமே விழாக்குழுவினரால் ஒப்புதல் பெற்றாக வேண்டும்ஆனால்எங்கள் தென்றல் ஆர்மி எப்போதும் அப்படிச் செய்ததில்லைநேரடியாக மேடை தான்ஏனெனில்மேடையேறும் முன்னர்வரை என்ன வெளிப்படுத்தப் போகிறோம் என்பது எங்களுக்கே தெரியாது.  மேடையேறியபின் மாறிய ஸ்க்ரிப்ட்களும் உண்டுஅதுவே அடையாளமாகிப் போய்விட்டதும் கூட.
சரிஜேஎன்யு விற்கு வருவோம்நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினசரி ஜேஎன்யு பல்கலைக்கழக இணையத்திற்குத் தவறாது வருகை புரிந்தால்மாணவர் சேர்க்கை குறித்த எந்தப் பதிவும் இடம்பெற்றிக்காதுஆனாலும்ஏதுமற்ற வானத்தில் எதையோ நோக்கும் ஏது இலார் போலநோக்கிக்கொண்டிருந்தேம்இன்று வரும்நாளை வரும்அடுத்தவாரம் வரும்அடுத்தமாதம் வரும் என நாட்களின் எண்ணிக்கை மூன்றிலக்கத்தையே தொட்டுவிட்டது.
இதற்குள்ளாக,  முதுகலைத்தேர்வுகள் முடிந்து, “ஐங்குறுநூறு நெய்தல் திணை (175-200) : எழுத்துசொல்லிலக்கண ஆய்வு” ஆய்வேடு முடிந்துபல்கலைக்கழகமே முடிந்து விடுமுறையே முடிந்துவிட்டதுகேட்பதற்கு ஒன்று போதும் என்றாலும் இரண்டு இருக்கும் செவியைப்போலஎதற்கும் இருக்கட்டும் என்றுசேரவிருப்பமில்லையெனினும் திருவாரூர் சியுடிஎன்-இலும் முனைவர்/ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேம்மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பொதுநுழைவுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண்(37%)  பெற்றிருந்தேம்இருப்பினும்,  50%க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கே சேர்க்கை நிகழும் என எங்கோ ஒரு ஏசி அறையில் கல்வி வல்லுநர்கள்(!) எடுத்த முடிவில் அந்தக் கல்வியாண்டில் சியுடிஎன் தமிழ்த்துறையில் மொத்தம் இரண்டு மாணவர்களே JRF ஒதுக்கீட்டின்கீழ் இணைந்தனர்மீதமிருந்த பெரும்பாலானோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் படையெடுத்தனர்.

இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்ட சேர்க்கைக்கான அறிவிப்பு வந்திருந்ததுசென்னைப் பல்கலையில் இரண்டு துறைகள் உள்ளனஒன்று இலக்கியத்துறைமற்றொன்று மொழித்துறைமொழித்துறைக்கு விண்ணப்பித்திருந்தேம்மெரீனா வளாகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றதுமதியத்திற்கு மேல்நேர்காணல் என அறிவிப்பு வந்ததுஅன்றைய தினம் இராணிமேரி கல்லூரியில் எம்ஜிஆர் பேச்சுப்போட்டியைத் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியதால்அங்கு சென்று நண்பர்களைப் பார்த்து பேசிமதிய உணவு முடித்தேம்.
மதிய உணவுக்குப் பின்னான நேர்காணல் சென்னைப் பல்கலைமொழித்துறைத் தலைவர் அறையில் நிகழ்ந்ததுமுகநூல் வழியே அடையாளந்தெரிந்த பேராசிரியர் சிலர் உள்ளிருந்தனர்சான்றிதழ் சரிபார்ப்பில் இயற்பியல்செம்மொழித் தமிழ் போன்றவை குறித்த வினாக்கள் எழுப்பி யிருந்தனர்காலை நடைபெற்ற எழுத்துத்தேர்வின் பிழைகளுக்கான காரணம் கேட்டறிந்தனர்எல்லாம் முடிந்தபின், ’நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்சேர்வீர்களா ?’ என்ற கேள்விக்கு ஜேஎன்யு முடிவுகளுக்குப் பின்னரே இதற்கு பதில்கூற இயலும் எனக்கூறதேரின் கடிதம் வீடடையும் என்றனர்.

விடைபெற்றுவிடுமுறை நாட்களை எண்ணி எண்ணிக் கழியாதுமொத்தமாய்க் கழித்த வேளையில்நெட் தேர்வு வந்ததுதமிழ்வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை முகாம் வந்தது. 2017ஆம் ஆண்டு துறைக்கு வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், 2018-19ஆம் கல்வியாண்டு தொடக்கத்திலேயே (ஜூலை 16-22) முகாம் நடத்தப்பெற்றதுமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏழுநாள் நிகழ்ந்த முகாம் இதுவரை கலந்துகொண்டதிலேயே மிக ஆர்ப்பரிப்பான முகாமாகும்ஏழுநாளும் கலைகட்டியதுகீழடிமீனாட்சி அம்மன் கோயில் எனக் களப்பயணம்புலவர் இளங்குமணன் அவர்கள் உள்ளடங்கிய ஆளுமைகளின் பயிலரங்குகள் மிகப்பயனுடையாதாக இருந்தது. மாலை நடைபெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் முகப்புத்தகத்திலும் மின்னரட்டையிலும் நேரம்தொலைத்த என்னைபோன்றவர்களுக்கு மிகப்பிடித்தமானதாக இருந்தது.
ஜூலை 20
மாலை ஆறுமணிக்கு கூட்ட அரங்கில் நிறைவு அமர்வு நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல ஜேஎன்யு இணையத்தை பார்வையிட, முடிவுகள் வந்திருந்தன. இணையத்தைத் தீர்க்கமாகப் பார்க்க ஆர்வமிகுதியில் உலகத்தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினால், ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளோம் என வரவேற்றது. அதுகாறும் உடனிருந்து பயணிக்க வைத்த யாவருக்கும் தேர்வான விடயத்தைக் குறுக்கும் நெடுக்குமாகச் சொல்லிமுடிக்க மணிமுள் ஒருவட்டம் அடித்திருக்கும்.

இரவு உணவுக்குள் இனிப்பும் சேர்த்து பகிர்ந்திடலாமென மதுரைத் தம்பி ஹரிபாலா வுடன் மதுரை சுற்றினால், எல்லாம் விலை உயர்வாகவிருந்தது. ஒருவருக்கெனில் வாங்கிக்கொடுத்திடலாம், ஒவ்வொருவருக்குமெனில் என்னசெய்யலாமென யோசித்து இனிப்பு மிட்டாய் பாக்கெட்டுகள் சிலவற்றை வாங்கினால், அந்த ஊரில் அதிகபட்ச சில்லரை விலை என்னவாக இருக்கிறதோ அவ்விலையில் தான் கொடுப்பார்களாம். அது தான் நிரந்தரவிலையும் கூடவுமாம். இத்தனைக்கும் அது சூப்பர் மார்க்கெட் வேறு.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட்த தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்” என கண்ணகி தன் ஊரை அறிமுகப்படுத்தியதும், உயிர்நீத்த பாண்டிய நெடுஞ்செழியன் நினைவுக்கு வர, ஊர்ப்புராணங்கள், எப்படிலாம் விலை குறைப்பாங்க, எத்தனை சதவீதம் குறைப்பாங்கனுலாம் சொன்னாலும், அந்த சூப்பர்மார்க்கெட் விலைக் குறைப்பதாகத் தெரியவில்லை. அதைநீங்கினால் வேறிடம் தொலைவென்பதால் வேறுவழியின்றி அதிகபட்ச சில்லறை விலைக்கே மொத்தமாக வாங்கித் திரும்பினோம்.
  சியுடிஎன் தமிழ்த்துறையில் சேருவதற்கு ஆற்றுப்படுத்திய தமிழ்ப் பல்கலை. அண்ணன் சிவக்குமார் ஜேஎன்யுவிற்குத் தேர்வான விடயமறிந்து அன்றிரவு உறக்கத்திற்கு முன் பொதுவுடைமைப் புத்தகம் வாங்கிப் பரிசளித்தார். இரண்டுநாட்களில் விடைபெறும்முன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் விஜயராகவன், மதுரை உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், தமிழ்ப் பல்கலை. மேனாள் துணைவேந்தர் ம.திருமலை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் கலப்புப் படிப்பு (Cross major) + ஆய்வுப்போக்கு குறித்து மேலும் நெறிப்படுத்தினர். நிறைவுநாள் சான்றளிப்பு விழாவில்  வீரயுகநாயகன் வேள்பாரியை மறுவாசிப்புக்குட்படுத்தியவரும்  இன்றைய மதுரை மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெ யிடம் ஜேஎன்யு மாணவர் அறிமுகப்படுத்தி வழியனுப்பியது மதுரை.



ஜூலை 24
            ஊருக்கு வந்தபின், மூன்று நாட்களுக்குள் சேர்ந்தாகப் பணித்தது ஜேஎன்யு இணையம். தேவையானதை முன்னமே பெற்றுவைத்ததில் சிக்கலில்லை. பகடிவதை செய்யக்கூடாதென முத்திரைத்தாளில் நோட்டரிபப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கத்தான் பெரும்பாடாகிவிட்டது. கடையை மூடும் தருவாயில், பணமேதும் பெறாமல் தட்டச்சு பயிற்சி மையம் வைத்திருக்கும் ஜவகர் பத்திரம் எழுதித்தந்தார்.  “பணம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியபோது, பணம் பெறுவதாக இருந்தால் நாளைக்குத் தான் செய்திருப்பேன் என்று கூறிவிட்டார். கண்ணகி தான் எவ்வளவு சிறப்பான ஊரினை உடைமையாகக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால், நோட்டரி பப்ளிக் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.

ஜூலை 27
புதுதில்லி ஜேஎன்யுவில் சேர்க்கை. கூட்ட அரங்கில் அங்கு, இங்கு, அதற்கு, இதற்கு என ஒருவழியாக்கிவிட்டனர். மூளை கலங்கி, மூக்கொழுகாத நிலைதான். (2019-20 கல்வியாண்டில் தேசியத் தேர்வு நிறுவனம் NTA  வழியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தி, பட்டத்திற்கேற்ப நாட்களை பிரித்து, சில நடைமுறைகளைக் கடைபிடித்ததால் எளிமையாக இருந்திருக்கிறது சேர்க்கை) சேர்க்கை முடித்தாலும், முதல்நிலை இருந்தும் விடுதிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒரு வாரத்திற்குள், தகர அகரமும் பகர அகரமும் தகர இகரமும் சேர்ந்தோடும் ஆறொன்றின் பெயரிலான விடுதி வாய்த்தது. மாடி எடுத்தால், வெயில்காலத்தில் வெக்கை, தரை தளம் எடுத்தால் குளிரில் கொடுமை, நடு தளமே நமக்கு ஏற்புடையதென பலரும் அறிவுறுத்தியிருந்தனர். சிகரெட், போதை வஸ்துக்களின் புழக்கம் அறைக்குள்ளிருப்பது தென்பட்டால், தவிர்ப்பது நல்லதெனவும் சொல்லியிருந்தனர் அனுபவசாலிகள். இவ்வுலகில் நாம் நன்றாக வசிப்பதற்கு நம்மோடு வசிப்பவரும்  நன்றாக இருக்கவேண்டியிருக்கிறது. எல்லா அறைகளும் அவசர அவசரமாகப் பிடித்துக்கொள்ள, சாளரக் கண்ணாடி துடைக்கப்பட்ட அறையொன்றின் நெடுநேர கவனிப்பிற்குப் பின் தெரிந்தெடுத்து நுழைந்தால், வடகிழக்குப் பிரதேச பையன் ’இல்ல மச்சி, சரி மச்சி’ என தன் MCC நினைவுகளிலிருந்து வார்த்தையெடுத்துப் பேசினான்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் இந்த சேர்க்கைக்காக எவ்வளவு அழைப்புகள், எவ்வளவு கலாய்ப்புகள், எவ்வளவு தவி(ர்)ப்புகள். இன்னும் ஓரைந்தாண்டுகளுக்கு பிஎச்டி என்று சொல்லி எல்லார் வாய்களையுமடைத்துவிடலாம் என்ற பெருமூச்சு.  

இதோடு வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் முடிந்து, இப்ப ஆய்வுப் பணிக்கு வந்தாச்சி. எவ்வளவு வேகமாகப் போயிருக்கிறது இந்த ஓராண்டு. படுக்கையோட நூலகம் போயிடணும் எனச்சொன்ன அரசின் வார்த்தையை மட்டும் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இனியேனும் நிறைவேற்றினால் உருப்படலாம். 

தொடர் முற்றும், உருப்படுவதன்பொருட்டு பயணம் தொடரும்...

-தக
23.07.2019