நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

காற்று வெளியிடைக் கண்ணம்மா...




காற்று வெளியிடை வந்த புதிது எல்லாரும் தூக்கிக் கொண்டாடினார்கள். வரும் முன்னரே பலரும் சிலாகித்திருந்தார்கள். அப்படித்தான் எல்லாரின் கவனக்குவியலுக்கேற்ப படத்தை ஒரு முறை பார்த்திட வேண்டுமென்று ஒரு பின்னரவில் படம் பார்க்கத் தொடங்கினேன். அரை மணி நேரம் உள்ளாகவே ஐந்தாறு முறை கண்ணின் கதவுகளை தாழிட்டுச் சென்றது உறக்கம்.  அதற்குப் பின் காற்று வெளியிடைக்கு இடைவெளி விட்டுவிட்டேன்.

இது புதிதல்ல இரவு 11 மணிக்கு மேல் பார்க்கத் தொடங்கிய நான் அறியாத மலையாள மொழிப் படமான பிரேமம் முதல் 45 நிமிடத்தில் தூக்கத்தின் விலாசத்துக்கு அழையா விருந்தாளியாய் அழைத்துச் சென்றாலும், அதுக்கப்புறம் வந்த சில காட்சிகளின் வீரியத்தால் மழையிடைப் பருகிய தேநீராய் உயிர்ப்பித்துச் சென்றது. அந்த இரவைத் தூக்கமின்றி வைத்தது வேறுகதை. அடுத்த பல மாதங்களுக்குக் தூக்கத்தில் காலிங்பெல் அடித்த காட்சிகள் பிரேமத்தினுடையது.  தூக்கத்தை  வரவைத்த படத்தை மீண்டும் பார்ப்பது கடினம்.

படத்தின் உயர்தர ஒளிப்பேழை கையில் கிடைத்து கிட்டத்தட்ட முப்பது நாட்கள் ஆகிய பின்னரும் அந்தப் படம் பார்க்கப்படாமலே இருந்தது.  ஏனோ, நெருக்கடியாக ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு ஊரில் இருந்திட வீட்டில் இருப்பதே அருகிப் போய்விட்டது. இன்னொரு முக்கியமான விசயம் திறன் பேசியில் பார்ப்பதற்கு வகை இயலாத காரணத்தால் கணினியில் தான் பார்க்க வேண்டிய சூழல் நிலவியது.

இந்நிலையில், காற்று வெளியிடை பற்றிய பேச்சுகள் ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் மீண்டும் காற்று வெளியிடையை சமூகவலைதளங்களில் உயர்த்திப் பிடிக்கத் துவங்கியிருந்தனர் இரு சக்திகள்.  தனா சக்தி & சக்தி நற்பவி. இவர்களிருவர் பதிவிட்டதின் தொடர்ச்சியில் இன்று தான் படம் பார்த்தேன்.
தற்போது படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவிற்கெல்லாம் மனம் இல்லையென்பதால் சுருக்கமாகவே கூறுகிறேன். காற்று வெளியிடை படம் பார்த்தேன்., படம் ஓகே, அலைபாயுதே, ரோஜா அளவிற்கு என்னில் இஃது இல்லையென்றாலும் – சிறப்பு. கால வெள்ளத்தில் கரைந்து போகாத தமிழ் நிலத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத தொலை தூரத்து வேற்று நிலப்பரப்பில் நிகழும் உயர் நவீன காதலை ஸ்கிரீனிங் செய்திருக்கிறார். அசால்ட்டான காதல் வசனங்களும் அருமையான ஒளிப்பதிவும் சிறப்பு.
கூட்டத்தில் பெண்ணை பேச வைத்து அதன் மூலம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் பாணி அலைபாயுதே டெக்னிக். ஆனால், அதே இடத்தில் பேசிய பெண்ணைஅடக்கி ஆளும் தன்மையை கதாநாயகனிடத்தில்  கொடுத்து நோஸ்கட்டிங் பண்ணுபவர் மணிரத்னம் ஜி. எனக்குத் தெரிந்து பேச்சாளர்கள் சில இடங்களில் பேசும் போது,  நிறைய நேரம் இருக்கையில் தாங்கள் ஏற்கெனவே பேசிப் பேசி ஃபில்டரில் தங்கி இருக்கும் காபிதூள் போல வடிந்து வடிந்து இன்னும் சுவை குன்றாதிருக்கும் சில தகவல்களை மீட்டுருவாக்கிக் கூறுவர். அதே தான் இந்தப் படத்திலும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளுக்காக வருடக் கணக்கில் அனுபவிக்கும் துன்பங்களையும்  இயல்புலகிலிருந்து டேக் ஆப் ஆகி அந்நிய உலகில் லேண்டிங் செய்யப்பட்ட விமானம் போல காட்சிப்படுத்தியிருப்பது உலகசினிமாவின் நீட்சி. அது காதலியை தவிக்கவிட்ட தவிப்பிற்காகத் தான் தவிப்பது என்பது நம் சராசரி உளவியலின் வே ஆப் ஆங்கில் படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாகும்.  
முதல் காட்சியில் மிகத்துல்லியமாக அமைந்த இராணுவக் காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. அவதார் படத்திற்கு பின் ஒரு எச்டி படம் இப்படித் தன்னை என்னுள் நிலைநிறுத்தி இருக்கிறது. கடைசியில் அவ்வளவு துல்லியமாக இராணுவக் காட்சிகளையும் வான்வெளிக்காட்சிகளையும் பதிவு செய்துள்ளவர்., ஒரு குற்றவாளியாக பாவிக்கப்படுபவன் செல்லும் வண்டியின் சக்கரத்தில் தோட்டாவைத் தொடுத்து வண்டியின் இதயத்தை நிறுத்தும் சிங்கம் 1 பட டெக்நிக்கை மறந்தது தான் சோகமாக இருக்கிறது.
படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி வசனம், கடைசியில் அந்தக் குழந்தை உன்ன எங்கேயோ ? பார்த்திருக்கேன்னு வருனைப் பார்த்து சொல்றப்போ, ”உங்கள” என தாய்க்காரி லீலா கூறுவது உச்சம். வசனத்தின் வீரியத்திலும் – உளவியலின் தாக்கத்திலும் – இன்றைய தமிழ்ச் சமூக சூழலிலும் சரி இந்த ஒரு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனெனில், தமிழ்ப் பேராசிரியர்களின் பெரும்பிள்ளைகளுக்குத் தற்போது தமிழ் என்பது தன்வாய்க்குள் வர காலம் – சூழல் – பொருளாதாரம் – உலகமயம் என பல டோல்கேட்டுகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.  தில்லி தமிழ்ப் பேராசிரியராகக் காட்சிப்படுத்தப்பட்ட  பாட்டியின் பெரும் பிள்ளை தமிழ் பேசுவதை மருத்துவம் படித்த தாய்க்காரி திருத்துவது தான் உச்சம்.




சரி, படத்தின்  தலைப்பு பற்றிய விவாத்ததிற்கு பச்சை விளக்குக் காட்டுகிறேன்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று

சரி.. இதில் உள்ள ‘காற்று வெளியிடை’க்கு என்ன அர்த்தம்?
கவிஞர் மகுடேசுவரன், இப்போது முகநூல் விளக்கத்தை இங்கே அளிக்கிறேன். 
எடுத்த எடுப்பில் இத்தொடருக்குப் பொருள்காண முயன்றால் “காற்று வெளி இடுப்பு” என்று கொள்ள நேரும். ஆனால், இது முற்றுத் தொடரன்று.
“காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்கின்றார் பாரதியார். இடை என்பது இங்கே இடுப்பு இல்லை. இடையில் (நடுவில்) என்னும் பொருளிலும் பயிலவில்லை. ஏனென்றால் “வெளியிடைக் கண்ணம்மா” என்று பாரதியார் வலிமிகுவித்து எழுதியிருக்கிறார். அவ்வாறு வலிமிகுவித்து எழுதியமையால் ‘இடை’ என்பது இங்கே ஏழாம் வேற்றுமை உருபு எனக்கொள்ளல் வேண்டும். ஏழாம் வேற்றுமை உருபென்று “கண்” என்பதை மட்டுமே கருதியிருக்கிறோம். ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள் உள்ளன. அவற்றுள் இடை என்பதும் ஒன்று.

இங்கே இடை என்பதற்குக் ‘கண்’ என்ற உருபின் பொருளையே கருதலாம். “காற்றுவெளிக்கண் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கண்ணம்மா” என்றே பாரதியார் பாடியதன் பொருளை உணரலாம். கண்ணம்மாவின் காதலை எண்ணியபடி காற்றுவெளியில் மிதப்பதுபோன்ற எடையறு நிலையை, மெய்ம்மறந்த நிலையை அடைந்து மகிழ்கின்றேன். இங்கே காற்றுவெளி என்பது தரையில் கால்படாத மிதப்பு நிலையைக் குறிக்கிறது. வான்வெளி எனலாம். அதனால் ‘காற்று வெளியிடை’ என்னும் தொடர்க்கு ‘வானத்திலே’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு : இன்னும் இயக்குநர் மணிரத்னத்தின் கடல், ஓகே கண்மணி போன்ற படங்களை பார்க்கவில்லை., அதை பார்ப்பதற்கான ஆவலை யாராவது பதிவுகள் இட்டுத் தூண்டுவீர்களாக.
-த.க.தமிழ்பாரதன்
15.08.2017
(முகநூலில் மீண்டும் தென்றலாக பரவிய காற்றுவெளியிடை படத்தின் வீச்சை உணரவேண்டி மதியம் படம் பார்த்து மாலையில் எழுதிய பதிவு )


புதன், 9 ஆகஸ்ட், 2017

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

கவிஞர் எச்.ஜி. ரசூல் பயிற்சியளித்த அமர்வு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்தேர்வு செய்யப்பட்ட இளம் படைப்பாளர்களுக்கான மாநிலம் தழுவிய பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் தேர்வுற்றவர்களில் நானும் ஒருவன். மொத்தம் மூன்று நாள். முதல் நாள் துவக்க விழா, இறுதிநாள் நிறைவு விழா. இடைப்பட்ட ஒருநாள் தான் நான் பங்குகொண்ட நாள். பல முற்போக்கு சிந்தனையாளர்களால் நிறைந்திருந்தது அந்த உலகம். அதிகாலை நான்கு மணியளவில் சிங்காநல்லூர் பேருந்துநிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தின் இறுதியில் தான் பயிற்சி முகாம் நடக்கும் மலையடிவாரத்தின் இயற்கை வனப்புப் பகுதிக்குள் சென்றிருந்தேன்.

muthukumar - rasul - tamil bharathan
 காலை வேளைகள் முடித்த பின், வயிற்றுக்கு உணவிட்டு பின் செவிக்கு உணவிடத் தொடங்கினார்கள். சிந்தையில் பாழ்பட்டுக்கிடந்த சீழ்பட்டபழைய கருத்துருக்களை சீர்திருத்தி சிகரம் ஏற்ற வந்திருந்தார்கள் அவர்கள். உண்மையில் அப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா எனுமளவிற்கு முதன்முதலில் கேள்விகளால் திணறடிக்கப்பட்ட பதில்களையும், பதில்களால் பந்தாடப்பட்ட கேள்விகளையும் அந்த இடத்தில் தான் கற்கத் தொடங்கினேன். ஆடம்பரமின்றி எளிமையாக புல்வெளியிலும் மணல்வெளியிலும் சென்று கொண்டிருந்தது ஒவ்வொரு அமர்வும்.
me and thiruvarur district friends
தமிழகத்தின் முக்கிய முன்னணி ஆளுமைகள் பங்கு கொண்டிருந்தனர் அந்த பயிற்சி முகாமில். பல நபர்களை அப்போது தான் நான் முதல்முறையாக சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் சல்மா என இன்னும் ஏராளமான பல படைப்பாளர்கள் பங்குகொண்டு பயிற்சியளித்துக் கொண்டிருந்தனர். பலரது பெயர்கள் முன்னமே பரிச்சயம் என்றாலும், சிலரது எழுத்துகள் முன்னமே பரிச்சயம் என்றாலும் அவர்களை அப்போது தான் காண்கிறேன். அப்படி மதியம் 12 மணிக்கு மேல் ஒரு அமர்வு நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெயரை அப்போது வரை நான் கேட்டது கிடையாது.
அவரது கவிதை அரங்கேறும் நேரம் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சியும் மேனாட்டு கோட்பாட்டு வடிவங்களும் சொல் வளங்களை கையாளும் விதமும் சிந்திக்கும் திராணியை வளர்க்க வேண்டிய கவிதைகளை கருவாக்குவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். அவர் பேசி முடித்த பின்னர் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். பலர் பேசுவார்கள் ஆனால், செயல்பட மாட்டார்கள். சிலர் மட்டும் தான் பேசுவது படி செயல்படுவார்கள். அப்படி அன்று அறிமுகம் செய்யப்பட்டவர் தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் எச்.ஜி.ரசூல்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர். அரசுப்பணியில் இருந்த அவர் அண்மையில்தான்  ஓய்வு பெற்றார். இவர் ஜனகனமன, என் சிறகுகள், மைலாஞ்சி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் . பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். இஸ்லாம் மதத்தில் பெண்களின் நிலையை பற்றி அதிக புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளவர் இவர். மேலும், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
'ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ..
ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி '
என்ற தனது கவிதைக்காக தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது ஜமாஅத் தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவர். பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர். என அறிமுகம் செய்த பிறகு அவர் மீதான வியப்பு எங்களைச் சூழ்ந்தது.  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தான் எழுதியவற்றிற்காக எவ்வளவு தான் போராட முடியும்.
கவிஞர் ரசூல் அவரைப் பற்றி,
2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது. என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன். நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர். எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன? இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.
-       எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்
      (எழுத்தாளர் ஜெயமோகன் பக்கத்திலிருந்து)

அன்றைய மதிய உணவுக்குப் பின்னும் அவர் எங்களோடு தான் இருந்தார். பின்னிரவு வரை நீண்ட படைப்பாளர்களின் பயிற்சி முகாம் நிறைவில் கண்கள் கனவு காண தூக்கத்தை அழைக்க பயணச்சீட்டு ஏதுமின்றி பயணப்பட்டன கண்கள் உறங்கூருக்கு. அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து முதன்முறையாக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை பேச்சுப் போட்டிக்கு கிளம்பிச் சென்றேன் என்பது தனிக்குறும்படம்.

சமீபத்தில் 05.08.2017 அன்று மாலை ஒலிபரப்பட்ட வானொலி செய்திகளில் எச்.ஜி.ரசூல் மறைவுச் செய்தி என்னை நினைவுகளில் நீந்த வைத்தது. சிலரது எழுத்து நிலைக்கும், சிலரது கருத்து நிலைக்கும், சிலரது வாழ்வு நிலைக்கும், ஆனால், சிலர் மட்டுமே நிலைப்பார்கள்.

மனதில்பட்டதைச் சொன்ன எழுத்தை ஆண்ட வாழ்வை ஆண்ட கவிஞர் ரசூல் அவர்களுக்கு என்றென்றும் நீங்கா நினைவுகளுடன், தங்களால் சிறு மாற்றத்தை  கவிதை நடையில் மாற்றிக்கொண்ட வீர வணக்கங்கள் !

த.க.தமிழ் பாரதன்
05.08.2017
(கவிஞர் எச்.ஜி. ரசூல் அவர்களின் மரணத்திற்குப் பின் எழுதியது))

பாவலரேறு நம்முடன் உள்ளார்...

 பாவலரேறு நம்முடன் உள்ளார்...                    

                                                                         -த.க.தமிழ்பாரதன்

தமிழன் மானமும் அறிவும் உள்ளவனாகத் தன்னாடு-தன்மொழி-தன்வரலாறு- பெருமை அறிந்தவனாக வாழ்ந்திருந்த காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சென்று மறைந்துவிட்ட்து. வந்தேறிகளான ஆரியப் பார்ப்பனக் கயவர்களுக்கு வால்பிடிப்பதும் கால் கழுவுவதுமான ஈந்த பண்பாட்டில் மூழ்கித் தன்னடையாளங்களை இழந்தவன் தமிழன். தமிழர்களியும் மலையாளிகளையும் ஒப்பிடும் ஆய்வியல் அறிஞர்கள்,
  தமிழன் தன் மொழியைக் காப்பாற்றிப் பண்பாட்டை இழந்தான்.
-    மலையாளி தன் பண்பாட்டைக் காப்பாற்றி மொழியை (தமிழை) இழந்தான் என்று தெரிவித்தனர்.

தமிழ் மிகப் பழைய மொழியாகதன்னையே திருத்தி அமைத்துக் கொள்ளத் தூண்டும் பேராற்றல்களைக் கொண்டதாக இருந்ததுதான். ‘The Oldest living Dravidian Language’ மிகப் பழைய, இன்றும் உயிர்வாழும் திராவிட மொழி என்று ஆக்சுபோர்டு அகராதி தெரிவிக்கிரதுதான். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, ஐம்பேரிலயக்கியங்கள் எல்லாம் சரிதான். உள்ளே நுழைந்துதமிழன் வாழ்வைச் செல்லாய் அரித்த இழிதகைப் படிகள் – இப்பிறவித் திருடர்கள், ஆரியப் பின்புலத்தினை வேரோடு சாய்த்து தமிழ்ப்பெருமையை ஒரு நல்ல தலைவன் சிந்தனையாளர் வரிசைப் போராளிகளின் பேரணி – தமிழகத்தில் உருவாகவில்லை என்பதுதான் வரலாறு.

தமிழ் தமிழன் தமிழ்நாடு என்று நினைப்பது-பேசுவது-செயல்படுவது உயிருக்கு ஊறு தரும் செயலாக அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. இந்தப் பின்னணி தான் அஞ்சலக அலுவலரை ‘அரிமாவகப்’ பாவலர் ஏறுவாக ஆக்குகிறது.

மொழித்தூய்மை
தமிழினவிழிப்பு
தமிழக விடுதலை
ஆகிய மூன்று குறிக்கோள்களைத் தமது நெஞ்சில் தாங்கி வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய பெருமைக்குரிய தமிழ்ப்பெருமகன் பெருஞ்சித்திரனார்


படித்தவர்கள் பலர் தமிழுணர்ச்சியின்றி வாழும் இக்காலச் சூழ்நிலையில், தமிழிலே தம் பெயரையோ கையெழுத்தையோ எழுத எண்ணாத விரும்பாத தமிழர்கள் வாழ்கின்ற காலத்தில், தங்கள் பெயர்களினையே தமிழுடன் ஆங்கில கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் தமிழறிஞர்கள் வாழும் காலத்தில் தமிழுக்குத் - தனித் தமிழுக்கு முதன்மை கொடுக்கப் போரடியவர் பாவலரேறு என்பதை யாவரும் அறிவர்.

பாவலரேறு வின் வாழ்க்கைச் சுவடுகள்
தமிழ்நாட்டின் தளைகளைத் தகர்த்தெறிய தமிழ்மக்கள் குருட்டாட்டம் ஆடிக் ‘கால் தமிழர் – அரைத்தமிழர்’ ஆக வாழாமல் முழுத் தமிழராக வாழ வழிகாட்டியவர் பெருஞ்சித்திரனார். மாவிலும் ஒட்டாமல் மாங்காயிலும் ஒட்டாமல் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்றெண்ணுவோர் எங்கும் காட்சி அளிக்கும் இக்காலத்தில் தன்மானத்தைத் தமிழர் மானத்தைக் காக்க முயன்ற முதல்வர் அவரன்றோ !

ஆன்ற புலமையும் ஆழ்ந்தகன்ற கல்வியும், ஆற்றல் மிக்க சொல்வன்மையும் அழுத்தம் நிறைந்த எழுத்தாற்றாலும், அஞ்சா நெஞ்சும், அளவிலா உறுடியும், அசையாத துணிவும், அயரா முயற்சியும் உடையவர் பாவலரேறு என்பதைத் தமிழுலகு நன்கறியும். 

தமிழுக்காகவும் தமிழகத்துக்காகவும் தமிழ் ஈழத்துக்காகவும் அவரைப்போல அல்லற்பட்டு, அடிபட்டு, சிறைப்பட்டு உழைத்த ஒப்புயர்வற்ற வீரத்தமிழ் மகன் செய்த செயல்களனைத்தும் தனித்தமிழ் வரலாற்றின் முதன்மையானவை.

மறைமலையடிகளின் தூய தமிழ் முயற்சிகள், தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் பரவல் நிலைகள், பாவேந்தர் பாரதிதாசனாரின் எழுச்சியெரிமலைப்பாவெடிப்புப் பரவல்கள் போன்ற பன்னிலை உயிர்ப்புகளைத் தமிழ்மண் உட்கொள்ளத் தொடங்கிய முகிழ்ப்புப் பருவத்தில் 1933 மார்ச்சு 10இல் பாவலரேறு தோன்றினார். அவர் கண்டு வந்த சமூக வளர்ச்சிப் படிநிலைகளின்  உந்துதலால் தமிழுக்காய்ப் பல்வேறு பணிகள் செய்து வந்தார். மொழித்திருத்தமும் நாட்டுவிடுதலையும் மக்கள் பண்பாட்டு வளர்ச்சியும் எங்கள் உயிரும் உணவும் நீரும் ஆகும் என்பதை துணிவோடும் பணிவோடும் கூறிக் கொள்கிறோம் ! என்ற அறைகூவலை 1959ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிய தென்மொழி இதழியில் குறிப்பிடுகின்றார்.

பிரிவினைத் தடைச்சட்டம், தனித்தமிழ்நாடு , தமிழகம் பிரிதலே தக்கது, பிரிவிஐ நோக்கித் தள்ளப்படுகிறோம், விடுதலை பெறுவது முதல் வேலை, இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும் தமிழனின் விடுதலை எழுச்சியும், பிரிவினை தவிர வேறு வழியில்லை, யாருமில்லை நாங்கள்தாம், தமிழகப் பிரிவினை தேவையே – என்றெல்லாம் தொடர்ந்து 1963 தொடங்கி 1970 வரை ஆசிரியவுரைகள் எழுதித் தமிழக விடுதலைத் தேவையை விளக்கப்படுத்தியிருந்தார்.

பாவலரேறுவின் வரிகளில் எனக்குப் பிடித்தது.,
‘கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை’ எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே !


பா வரிகளால் பாவலரேறுவைப் பிடித்தது.,
ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும்
உணர்வும் உயிர்ச்செறிவும்!
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும்
தாளும் ! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என் உடலும் ;
எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன்,
உரைப்பேன், மக்களுக்கே !
பாவலரேறு அவர்களின் திருமகள் பொற்செல்வி அவர்களுடன்

வள்ளுவனின் அறிவுப் புலமையும், கம்பனின் மொழிப்புலமையும் வாய்க்கப்பெற்ற இந்த மாணிக்கப் பேரொளி தமிழ்வானில் இருள் நீக்கும் கதிர். அவரது தமிழ்ப்பற்றை இன்றும் என்றும் நோக்க வேண்டியது முதன்மையானது. பலரும் முன்னோடியாய் கொள்ள வேண்டிய தமிழ்மகனவர். அவரது மொழி குறித்த சிந்தை இன்றைய இளம் காளையர்க்கு வாய்ப்பின் அதுவன்றோ எம் தமிழகத்தின் சீர்த்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.


விடுதலை வேண்டும் அதுமுதல் வேலை !
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை !

நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்து இறப்பை எதிர்னோக்கிய போதும் அவர்
‘நாட்டை நசுக்கும் நயவஞ் சகர்களின்
பாட்டைச் சிதைக்காமல் எனுடல் படுப்பதா’ எனக் குமுறினார்.


அவரது வாழ்வின் நினைவுகளை நினைந்து போற்றினார் பாவலர் காசி ஆனந்தன்.
தன்னுயிர் போகினும் மண்ணுயிர் உள்ளவரை இந்த மக்கள் உள்ளத்தின் கிழக்கின் இருளைப் போக்கும் கார்காலக் கதிரவனாய் என்றும் நிறைந்திருக்கிறார் பாவலரேறு.

பிறந்த தாய்மண் உயிர்த்தெழப் பிறந்தார்…
        பெருஞ்சித்திரனார்.., அவர்பணி தொடர்க!
மறந்தும் மாற்றார் தலைமை ஏற்காதே !
        மண்டியிட் டெவர்க்கும் தொண்டியற் றாதே!
சிறந்த தமிழர் வழிவழி வந்தாய்…
        சின்ங்கொண் டெழடா! தளைகள் அகற்று !
பறந்த னசிறை மதிலும் கதவும்
        பார்! என எழுக! எழுகநீ! எழுகவே!

பெருஞ்சித்திரப் பெருஞ்சிறப்பே! நீ தமிழுக்கு – தமிழர்க்கு – தமிழ்நாட்டுக்கு வாராது வந்த மாமணி. ஆயிரம் ஆண்டில் ஒருமுறை தோன்றும் வீர இலக்கியம், வீரியச் சித்திரம்! நீ விதைக்கப்பட்டிருக்கிறாய். வீரமாய், செறிவாய், திறன் விளைக்கும் திடத்தோள் பலவாய் அறுவடை நிகழும் நாள் அண்மையில் தான்.

-த.க.தமிழ்பாரதன்
(15.07.2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான பெருஞ்சித்திரனார் நினைவு பேச்சுப் போட்டியினை முன்னிட்டு வெளிவர இருந்த இதழுக்காக எழுதியது)

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இறப்புக்கு ஆதார் அவசியமா ? வள்ளுவர் கூறுவது என்ன ....?

2017இல் தமிழக - இந்திய அரசியல்களம் மிக சூடாக இருக்கிறது. அன்றாடம் புதிய புதிய அறிவிப்புகள், அரசியல் மாற்றங்கள் என மக்களை வைபிரேட் மோடிலேயே வைத்திருக்கிறது சூழல்.  இதற்கொப்ப, புதிய மீம்கள் தயாரித்து நெட்டில் விடுவதும் பழைய கருத்துருக்களை மீட்டுருவாக்கம் செய்து வெளியிடுவதும் அன்றாடமாகிவிட்டது நெட்டிசன்களுக்கு. 

உலகப் பொதுமறை என எல்லாராலும் மேன்மைபடுத்தப்படுவது நம் திருக்குறள். எக்காலத்திற்கும் ஏற்ற அறக்கருத்துகள் திருக்குறளில் காணப்படுகின்றன என்பது மெய். அப்படி நேற்று ஓவியா பிக்பாஸ் விட்டு வெளியேறிய போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது ஒரு திருக்குறள்.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேர்ஆதார்
(சேராதார்) 

இக்குறள் ட்ரெண்ட் ஆக்கப்பட்டதன் பின்னணி :
இறப்பைப் பதிவுசெய்வதற்கு ஆதார் அவசியம் என்று அறிவித்த மத்திய அரசு, இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை எனப் புதிய விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இறப்புக்கும் ஆதார் அவசியம் என்றதும் அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துவருகிறது.
இந்நிலையில், 'ஒருவரின் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 4-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் வெளியிட்டார். இந்த வெளியீட்டிற்குப் பின்னர் இறப்பு பதிவு, இறப்புச்சான்றிதழ் என அனைத்துக்கும் ஆதார் எண் அவசியமா என்ற குழப்பநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதை உணர்ந்த மத்திய அரசு, மீண்டுமொரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண் இறப்புப் பதிவுக்கு அவசியமென்றும், இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது.


இப்படித்தான் ட்ரெண்ட் ஆனது.,

இறப்பு பதிவு செய்ய பிற்காலத்தில் ஆதார் தேவைப்படும் என்பதை 2000 வருஷத்துக்கு முன்னாடியே தீர்க்கதரிசி திருவள்ளுவர் எப்படிச் சொல்லிருக்கார் பாருங்க ! 

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேர்ஆதார்
 

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10) 

இறைவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது என்பது இக்குறளால் அறியவரும் கருத்து. ஆனால், தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் உத்தரவுபடி ஆதார் இல்லாமல் இறப்புச் சான்றிதழ் பெற முடியாது என்பதால் (சேராதவர் – சேர்ஆதார்) ஆக்கி ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.  

இவ்வாறு வள்ளுவத்தை இந்நாளிலும் தங்கள் கருத்துகளுக்குப் பக்கபலமாகக்கொள்ளும் திறனும் வலிமையும் இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. இந்த வள்ளுவத்தை இணையத்தோடு விட்டுவிடாமல், வாழ்க்கையோடு இணைந்து வாழ்ந்தால் மகிழ்ச்சி நிச்சியம்.
  
ஆதார் நிச்சயம் வேண்டும் என்கிற மத்திய அரசின் போக்கைப் பார்த்தால்,

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை ஆதார் என்பதாகிவிடும் போல.

த.க.தமிழ்பாரதன்
30.07.2017