நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 28 ஜூலை, 2020

உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் இருந்து பின்வாங்க மறுக்கும் சீனா

28.07.2020

உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் இருந்து பின்வாங்க மறுக்கும் சீனா

(சீன விவகாரங்களுக்கான மூலோபாய ஆய்வாளர் டாக்டர். ரூபா நாரயண தாஸ் அவர்கள் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/101895

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சீன உண்மை எல்லைக் கட்டுபாட்டு க் கோட்டில் (எல்.ஏ.சி) பின்வாங்கும் நடைமுறை தொடர்பாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ராஜீய, ராணுவ ரீதியில் சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் ரோந்து முனை 14, 15 மற்றும் 17 ஏ ஆகியவற்றிலிருந்து, சீனப்படைகள் முழுமையாக பின்வாங்கப்பட்டுள்ளன. எல்லை விவகாரங்கள் தொடர்பான செயல்முறை  ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பின் கீழ்,  கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்திற்குப் பேச்சு வார்த்தை  நடைபெற்றது.

இருப்பினும், பாங்காங் த்சோ ஏரியை ஒட்டிய ஃபிங்கர்  5 முதல் ஃபிங்கர் 8 வரையுள்ள பகுதியிலிருந்து இன்னும் சீனப்படைகள் விலகவில்லை. இந்தியா தனது  நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,  சீனாவுடனான எல்லைக்கோட்டைக் கடைப்பிடிக்கவும் மதிக்கவும் இந்தியா முழுக்க உறுதிபூண்டுள்ளது என்பதையும், எல்லையில் நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளைத் தாம் ஏற்க மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (எம்.இ.ஏ) ஓர் அறிக்கையில், “இருதரப்புப் படைப்பிரிவு கோர்கமாண்டர்களின் மற்றொரு கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவாக, முழுமையான பின்வாங்கலை  உறுதி செய்வதற்கான  நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறைச் அமைச்சக அறிக்கையில் இருதரப்பு உறவுகளுக்கான நெறிமுறைகளுக்கு இணங்க, இந்திய-சீன எல்லைப் பகுதிகளிலிருந்து, படைகள் விரைவில்  முழுமையாக விலகி, அமைதியை நிலைநாட்டுவது  அவசியம் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது, ஜூலை 5, 2020 அன்று தொலைபேசி உரையாடல்களின் மூலம், இருதரப்பின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையே ஏற்பட்ட  உடன்படிக்கைக்கு இணங்க உள்ளதாகவும், மூத்த ராணுவத் தளபதிகளிடையே இன்றுவரை எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை  இரு தரப்பினரும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

மறுபுறம், ஊடகங்கள் சீன ஆதாரங்களை மேற்கோள்காட்டி, “களத்தின் நிலைமையைத் தணிக்கவும் எளிதாக்கவும் இரு நாடுகளின் முன்னணி எல்லைப் பாதுகாப்புப் படைகளால் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. இந்திய-சீனா உறவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, சீனாவுடனான வர்த்தகம் முன்பு போலவே இருக்காது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. எல்லைப் பகுதியிலிருந்து, படைகளை முழுமையாகப் பின்வாங்கி, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க சீனா செயல்படும்வரை, சீனாவுடனான வர்த்தகம் முன்பு போலவே இருக்காது என்பதை இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

வளர்ச்சிக்கான காலகட்டத்தில், எல்லை விரிவாக்க சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்பு கூறியதைக் கவனத்தில் கொள்ளலாம். குறிப்பிடத்தக்க வகையில், எந்த நாட்டினருடனான வர்த்தகப் போரையும் இந்தியா நம்பவில்லை. இருப்பினும், சில சீன செயலிகளுக்கான தடை, இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும்.

இரு நாடுகளுக்காகவும், இருநாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே  எல்லைக் கோட்டின் நிலைமை விரைவில் மீட்டெடுக்கப்படும். சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான போக்கு நிலவும் இந்நேரத்தில், பிளவுகளை சரிசெய்வதும், இருதரப்பு நலனுக்காக இரு நாடுகளுக்கும் அவர்களது மக்களுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை சரிசெய்வதும் சீனாவின் தரப்பில் விவேகமானதாக இருக்கும்.

இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகளாக இருக்கின்றன என்பது ஒரு வாழ்வியல் உண்மை. நிரந்தரக் கவலை மற்றும் பதற்றத்தை விட நிம்மதியாக வாழ்வது எப்போதும் புத்திசாலித்தனம். இந்த ஆண்டு, இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில், இந்தியா-சீனா எல்லையில்  அமைதியை மீட்டெடுப்பது, விரும்பிய திசையில் செல்வதற்கான பெரும் வளர்ச்சிப்படியாக இருக்கும்.

இந்திய சீன எல்லையில் நிலவும் தொடர்ச்சியான பாதுகாப்புத் தொடர்பான குழப்பம், மிக விரைவில் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்று, படைப்பிரிவு கமாண்டர்களின் கூட்டத்தில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

திங்கள், 27 ஜூலை, 2020

பொருளாதாரச் செயல்பாடுகளில் புதுமைகளைக் காண பிரதமர் அழைப்பு

27.07.2020

பொருளாதாரச் செயல்பாடுகளில் புதுமைகளைக் காண பிரதமர் அழைப்பு

(அகில இந்திய வானொலியின் செய்தி பகுப்பாய்வாளர் கௌசிக் ராய் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

ஆங்கிலக் கட்டுரை :http://airworldservice.org/english/archives/101866

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மாதாந்தோறும் ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்திய மக்களுக்கு உரையாற்றினார். ஜூலை 26, மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான், கார்கில் போரில் நமது இராணுவம் வெற்றிக் கொடி ஏற்றியது என்றார். கார்கில் போர் எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதை இந்தியாவால் ஒருபோதும் மறக்க முடியாது. தன்நாட்டில் நிலவும் உள்நாட்டு மோதல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இந்திய மண்ணை அத்துமீறி ஆக்கிரமிக்கும் தவறான முயற்சியில் இறங்கியது பாகிஸ்தான். பாகிஸ்தானுடனான நல்லுறவை வளர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தது.

பிரதமர் மோடி கூறுகையில், போர்க்காலங்களில் நாம் என்ன சொன்னாலும் செய்தாலும் அது, இராணுவத்தினரின் மன உறுதியிலும் எல்லையில் எப்போதும் விழிப்புடன் இருப்பதிலும், அவர்களுடைய குடும்பத்தின் மனஉறுதியிலும் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் நமது நடத்தை, நமது போக்கு, நமது பேச்சு, நமது நிலைப்பாடு, நமது வரம்புகள், நமது நோக்கங்கள், நாம் செய்பவை சொல்பவை அனைத்தும் நம் இராணுவத்தினரின் மனஉறுதியையும் மாண்பையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக, கொரோனாவுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து போராடிய விதம், அச்சத்திற்குரிய பலவற்றைத் தவறென நிரூபித்துள்ளது. இன்று, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் மீட்பு விகிதம் சிறப்பாக உள்ளது; பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​ நம் நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் மிகக் குறைவு. ஓர் உயிரை இழப்பது கூட வருத்தமளிக்கிறது, எனினும், இந்தியா மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இன்றளவும் ஆபத்தானது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனால்தான் நாம் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர், காண்டர்பால் நகரைச் சேர்ந்த ஜைடூனா பேகம் அவர்களின் சேவைகளை திரு. மோடி நினைவு கூர்ந்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் தனது ஊராட்சி போராடுவதோடு வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவர் முடிவு செய்துள்ளார். முகமூடிகள் மற்றும் ரேஷன் பொருட்களை இலவசமாக விநியோகித்துள்ளார்; அதே நேரத்தில் பயிர் விதைகள் மற்றும் ஆப்பிள் மரக்கன்றுகளையும் விநியோகித்துள்ளார், இதனால், விவசாயம் மற்றும் தோட்டத் தொழிலில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

இக்கட்டான காலத்தை வாய்ப்புகளாக மாற்றுவதில் சரியான மற்றும் நேர்மறையான அணுகுமுறை எப்போதும் நீண்ட தொலைவு செல்லும், இது வளர்ச்சியைத் தூண்டுகிறது என்று பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில், நம் நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் தனித்திறமை, செயற்திறன்களின் அடிப்படையில் புதிய சோதனைகளை எவ்வாறு கொண்டு வந்தனர் என்பதற்கு நாமே சாட்சி. பீகாரில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மதுபனி கலைநயத்துடன் முகமூடிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன; இவை மிகவும் பிரபலமாக மாறியது. ஒரு வகையில், மதுபனி முகமூடிகள் ஒரு பிராந்தியத்தின் மரபைப் பரவச் செய்கின்றன; ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதைத் தவிர, அவை வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

மூங்கிலைப் பயன்படுத்தி, திரிபுரா, மணிப்பூர் மற்றும் அசாமின் கைவினைக் கலைஞர்கள் உயர்தர நீர் பாட்டில்கள் மற்றும் டிஃபன் டப்பாக்களை வடிவமைக்கத் தொடங்கினர். இது புதிய தயாரிப்பு, மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

திரு. மோடி மக்களை புதுமையாக சிந்திக்கச் சொன்னார். பீகார் இளைஞர்கள் வழி காட்டியுள்ளனர். முன்னதாக அவர்கள் வழக்கமான வேலைகளையே செய்து வந்தனர். ஒரு நாள், அவர்கள் முத்துக்களை சாகுபடி முடிவு செய்தனர். தங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு இது பற்றி அதிகம் தெரியாது. எனினும், இந்த இளைஞர் குழுவினர், தேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்து, பின்னர் ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் சென்று பயிற்சி எடுத்து, தங்கள் கிராமத்தில் முத்துக்களை சாகுபடி செய்யத் தொடங்கினர். இன்று, இந்த செயல்பாட்டிலிருந்து சம்பாதிப்பதோடு, பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முசாபர்பூர், பெகுசராய் மற்றும் பாட்னாவில் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர். பலருக்கு, இது தற்சார்பிற்கான வழிகளைத் திறந்துள்ளது.

ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நாள். இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் பல நூற்றாண்டுகளாக வரலாற்றுப் புகழுடையது. இந்திய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை முடிந்தவரை பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும், மேலும் இவற்றைப் பற்றி முடிந்தவரை பலரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

சுரினாமுடனான இந்தியாவின் நெருங்கிய உறவை பிரதமர் நினைவு கூர்ந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து சென்ற மக்கள், அதைத் தங்கள் உறைவிடமாக மாற்றியுள்ளனர். இன்று, சுரினாமின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சர்னாமி என்பது அங்குள்ள பொதுவான மொழிகளில் ஒன்றாகும்; இது போஜ்புரியின் பேச்சுவழக்கு ஆகும். இந்த பண்பாட்டுப் பிணைப்புகள் குறித்து இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது.

சமீபத்தில் சுரினாமின் அதிபராக திரு சந்திரிகா பராசாத் சந்தோகி தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுதிமொழியேற்பு விழாவில், திரு. சந்தோகி வேத பாடல்களை ஓதினார்; அவர் சமஸ்கிருதத்திலும் பேசினார். திரு சந்திரிகா பிரசாத் சந்தோகிக்கு தன்சார்பாகவும், 130 கோடி இந்தியர்கள் சார்பாகவும் பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/

வணக்கம்

ஞாயிறு, 26 ஜூலை, 2020

கோவிட் -19 தடுப்பூசிக்கான பந்தயத்தில் இந்தியா

26.07.2020

கோவிட் -19 தடுப்பூசிக்கான பந்தயத்தில் இந்தியா

(இந்தியன் சயின்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியர் என்.பத்ரான் நாயர் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)

ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/101798

சீன நகரமான வூஹானிலிருந்து கொரோனோ வைரஸ் திடீரென பரவி, உலகையே மூடிமறைத்து விட்டது  அதன் பரவலைக் கையாள்வதில் முதலாவதாக அதன் அறிகுறிகள், அது தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது தொற்றுநோயாக இல்லாவிட்டாலும் சரி; இரண்டாவதாக மிக முக்கியமாக, உடனடி ஆன்டிஜென்கள் ஏதேனும் இருந்ததா?

ஜனவரி நடுப்பகுதியில் இந்தியா தனது குடிமக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தனது செயல்களை ஒருங்கிணைத்து சீனாவுக்குப் பயண ஆலோசனைகளை வழங்கியது. உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து நாடுகளுக்கும் விரிவான தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்கிய பின்னர், அந்நேரத்தில் வைரஸ் பற்றி அறியப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

வைரஸ் தொற்று பல நாடுகளுக்குப் பரவியதால், இதை WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்திய ஆய்வகங்கள் இணைந்தன.

கோவிட்-19இன் பரவலாக்கத்தால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடுப்பூசி உருவாக்கத்திற்கு மற்றும் மருந்து சோதனைகளைக் கண்காணிக்க அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன் மற்றும் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால் தலைமையில் பல்துறை தேசிய பணிக்குழுவை இந்தியா அமைத்தது.

இந்தப் பணிக்குழுவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), உயிரி தொழில்நுட்பத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, சுகாதார சேவைகள் இயக்குநரக ஜெனரல் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் -இருந்து வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பயனுள்ள மருந்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அணுகுமுறை முப்பரிமாணமானது. முதலாவது தற்போதுள்ள மருந்துகளின் மறுநிலைப்படுத்தல், இரண்டாவது புதிய மருந்துகள் மற்றும் மூலக்கூறுகளை உருவாக்குதல், மூன்றாவது, தாவர சாறுகள் மற்றும் பொதுவான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தல்.

கோவிட்-19க்கான பயனுள்ள தடுப்பூசியைக் கண்டறிவது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தடுப்பூசி உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் சுமார் 160 தடுப்பூசிகள் உள்ளன.

ஃபார்மா மேஜர் ஸைடஸ் காடிலா இந்தியாவில் முதன்முதலில் களத்தில் இறங்கியது, மறுசீரமைப்பு டி.என்.ஏ தொழில்நுட்பம் மற்றும் மறுதலை மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்தில் முன்-மருத்துவ விலங்கு சோதனைகளைத் தொடங்கியது. இப்போது தடுப்பூசி உருவாக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் ஸைடஸ் உட்பட ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் செயலாற்றுகின்றன.

இரண்டாவதாக ஐ.சி.எம்.ஆர்-க்கு கீழ் இயங்கும் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து உருவாக்கிய Covaxinஐ மனித சோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுபாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தார். புதுதில்லியின் அகில் ஐந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ரோஹ்தக் முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட 12 சுகாதார நிறுவனங்களில் கோவாக்சினுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், உலகின் மாபெரும் தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவில் உள்ள சீரம் நிறுவனம்  பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனெகா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட Covishield எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தடுப்பூசி தற்போது பிரேசிலில் 3ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஒப்புதல்கள் கிடைத்தவுடன், சீரம் நிறுவனம் 3 முதல் 4 மில்லியன் டோஸ்களை நிறுவனத்தின்படி உற்பத்தி செய்யும். ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் அளவில் தயாரிக்குமளவுக்கு உற்பத்தித் திறன் இருப்பதாக அது கூறுகிறது.

தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, Covishield நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது, பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது, உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

கோவிட்-19க்கு எதிராக சிறந்த தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாதவகையில் பந்தயம் நடைபெற்று வரும்சூழலில், இந்த நோய் ஏற்கனவே 1.5 கோடி மக்களைப் பாதித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 6.32 லட்சம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது.

இருபெரும் மருந்து உற்பத்தியைத் தவிர, சி.எஸ்.ஐ.ஆர் உட்பட கோவிட்-19 க்கு எதிராக ஒரு பயனுள்ள மருந்தை உருவாக்க பல ஆய்வகங்களும் முயற்சி செய்கின்றன. இந்திய மரபு மருத்துவ முறையின் கீழ் இயங்கும் சில ஆய்வகங்களும் இதில் அடங்கும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சில ஆய்வகங்கள் நிலையான பாதுகாப்புக்கான துணை சிகிச்சையாக நோய்தடுப்பு சோதனைகள் மற்றும் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளைத் தொடங்கும் என்று பல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்குழுவின் தலைவர் டாக்டர் பூஷண் பட்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 80,000 காவல்துறையினரும் நோய்த்தடுப்பு சோதனைகளில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

பல்வேறு பணிக்குழுக்களைத் தவிர, நடைமுறை தாமதங்களை சமாளிக்க ஒவ்வொரு கட்டத்திலும் கோவிட்-19க்கான பயனுள்ள சிகிச்சையின் வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடியே கண்காணித்து வருகிறார். தற்போதைய மனித சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய தொற்றுநோய்க்கான உயிர் காக்கும் தடுப்பூசியை இந்தியா கொண்டுவர முடியும் என்று நம்பலாம்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa/

புதன், 22 ஜூலை, 2020

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கலாம். சிவஞானபோதம் என்னும் நூல், மோகம் என்பது மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்கிறது. கம்பர் மோகமெங்குமுளவாக என்று திகைப்பு என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.

மோகம் பழைய வார்த்தை.மெள்ள மெள்ள இந்தச் சொல் மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி திணறுமளவுக்கு மனதை ஆக்கிரமிக்கும் உணர்ச்சிக்கு, ஆங்கிலத்தில் Obsession என்று சொல்கிறார்களே… அதற்கு ஈடாகப் பயன்படும் வார்த்தையாகி விட்டது. இந்தக் கோணத்தில் தான் நாம் வெளிநாட்டு மோகத்தைப் பார்க்கப் போகிறோம்.

வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

ஒன்று - வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் (மேட்ச்பாக்ஸ்கூட ஃபாரின்தாங்க எங்க வீட்ல…). 
இரண்டு -வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகித்து, அதைக் குருட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பது. (ராதாவுக்கு கோக் இல்லைன்னா உயிர் வாழமுடியாது). 
மூன்றாவது - இடது கையை வெட்டிக் கொடுத்தாவது வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம் (சியாட்டில்ல எப்ப மழை பெய்யும்னு சொல்ல முடியாது…).

வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் இருப்பதில் ஓரளவுக்குத் தவறில்லை… வெளிநாட்டில் தயாராகும் சில விற்பனைப் பொருட்கள், அந்த நாடுகளின் நுகர்வோர் கலாசாரத்தின் கடும் போட்டியால் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.

உதாரணமாக, அமெரிக்காவில் தயாராகும் ஷேவர்கள் நன்றாக சவரம் செய்யும். ஜப்பான், கொரிய நாட்டு கம்ப்யூட்டர்,வி.சி.ஆர்., எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.இவற்றைப் பாராட்டுவதிலோ, பயன்படுத்துவதிலோ - ஏதும் தயக்கமில்லை.ஆனால், அந்தப் பொருட்கள் நமக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். ஒரு லாப்-டாப்போ, ஒரு மாக்கின்டோஷோ, ஒரு சின்தசைஸரோ, கீ-போர்டோ இல்லாமல் நம்மில் பலரால் உயிர் வாழ முடியும். பர்மாபஜாரில் கிடைக்கிறது என்று சின்தசைஸர்களைக் காசைக் கொட்டி வாங்கி, அதில் ஒரே ஒரு பாட்டை மட்டும் வாசித்துக்கொண் டிருப்பது வீண். அதற்கு உள்நாட்டு ஆர்மோனியம் போதும்.

அதேபோல, நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக - இருந்தால் மாக்கின்டோஷ்- கணிப்பொறி வாங்கலாம். அதை வாங்கி வைத்து, லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் பயன்படுத்துவது முட்டாள்தனம். நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளிநாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவையிருக்கும் போது வாங்கலாம். வெளிநாடு என்கிற ஒரே காரணத்துக்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.

சுதேசிக் கொள்கை, இந்த உலகப் பொதுச் சந்தை காலகட்டத்தில் அர்த்தமற்றது. மேலும், உள்நாட்டிலேயே தயாராகும் எல்லாப் பொருட்களிலும் வெளிநாட்டுத்தொழில் நுட்பமோ, மூலப் பொருளோ இருந்தே தீர்கிறது. வெளிநாட்டுப் பொருளே கூடாது என்று பிடிவாதமாக இருந்தால், வாழை இலையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, ஜப்பானிய நேஷனல் கம்பெனியின் ரைஸ் குக்கர் உலகப் பிரசித்திப் பெற்றது. அதை நிச்சயம் வோல்டேஜ் பார்த்து வாங்கலாம். பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டில் சமைக்கும் இளம் கணவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம். அதேபோல, டோஸ்ட்டர் போன்ற பொருட்கள் நம் அவசரங்களுக்குப் பயனுள்ளவை. ஆனால், வெளிநாட்டு முத்திரை இருக்கிறது என்பதால் ஷ¨க்கள், செருப்புகள், சிகரெட்டுகள், வாசனை ஷாம்புகள், சோப்புகள் போன்ற கண்டா முண்டா சாமான்களையெல்லாம் வாங்கிப் போடுவதில் அர்த்தமில்லை.

நான் சென்ற ஒரு வீட்டில் கக்கூஸ் காகிதம்கூட ஹாலந்திலிருந்தோ, நியூஸிலாந்திலிருந்தோ கொண்டுவந்தது என்று - பெருமைப்பட்டுக் கொண்டார்கள். முதலில் பேப்பரே எதற்கு என்பது என் கேள்வி. ஃபாரின் விஸ்கிதான் மயக்கம் வராது. ஃபாரின் சிகரெட்டுதான் கான்சர் வராது என்னும் மனப்பான்மை தீங்கானது.

நான் பணிபுரிந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு, லண்டனில் கிடைக்கும் - எரின்மூர் என்னும் புகையிலைதான் பைப்பில் அடைத்துப் பிடிக்க வேண்டும். அதனால், வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இன்ஜினீயரையும் ஒரு டப்பா வாங்கிவரச் சொல்வார். அதனாலேயே அவர் சில சமயங்களில் நடுநிலைமையை இழக்கவேண்டி இருந்தது.

மும்பை விமானநிலையத்தில் ஒரு முறை திரும்பியபோது, கஸ்டம்ஸ் அதிகாரியிடம் ஓர் இளைஞர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து சைக்கிள் ஒன்று கொண்டுவந்திருந்தார் (பபுலுவுக்கு விளையாட!). அப்புறம் ஒரு பெட்டி நிறைய சாக்லெட். கஸ்டம்ஸ் அதிகாரி இன்னும் லஞ்சம் வாங்கத் துவங்காத இளைஞர். ஏன் சார், நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்காக சைக்கிள் ஏற்றுமதி செய்கிறோம். நீங்கள் சைக்கிளை இம்போர்ட் செய்கிறீர்களே… உங்களை என்ன சொல்வது..? என்றார். நீ என்ன அதைக் கேட்பது..? அதற்கான டூட்டி கொடுக்கிறேன். சைக்கிள் என்ன, அண்டர்வேர்கூட என்னுடையது ஃபாரின்தான்… பார்க்கிறாயா..? என்றார் இளைஞர். அதிகாரி பதட்டப்படாமல், ஏறக்குறைய ஒரு மோட்டார் சைக்கிள் விலைக்கு டூட்டி தீட்டினார்! ஒரு ஃபேமிலிக்கு இத்தனை சாக்லெட் அதிகம். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை… என்று கடுப்பில் தடுத்துவிட்டார். அந்த இளைஞர், தன் குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து, அங்கேயே அத்தனை சாக்லெட்டையும் சாப்பிட்டு முடித்தார்! இம்மாதிரியான பகுத்தறிவை மயக்கும் அபத்தங்கள் கொண்ட மோகத்தைத்தான் நான் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

அடுத்து,வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகம். இது நமக்கு ஊடகங்களிலிருந்து வருகிறது. ஊடகம் என்ற வார்த்தை சினிமா, டி.வி., செய்தித்தாள் போன்றவற்றுக்குப் பொதுவான, மீடியம் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே… அதற்குத் தமிழ். குறிப்பாக, நம் நகர்ப்புற இளைஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.மூத்திரம் போவதற்குக்கூட, ஆங்கிலம் பேசிக்கொள்ளும் ஐ டோண்ட் நோ டமில் யார் வகை. இது ஒரு அபாயகரமான கலாசாரத் தாக்கம்.

அவர்கள் பலரும் சூயிங்கம் மெல்வது, ஜீன்ஸ் அணிவது, இலக்கில்லாமல் சுற்றுவது, மோட்டார் சைக்கிளில் கையில் தோல் பெல்ட், கண்ணில் ரேபான், பின்ஸீட்டில் பெண் அணிந்து டிஸ்கோக்களுக்குப் போவது, அங்கே ஸ்பைஸ் கர்ள்ஸ், மடோனா, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் போன்ற மேற்கே காலாவதியான பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவது, டமில் ஃபிலிம்ஸ் யார் பார்ப்பார்கள்? கர்னாடிக் மியூஸிக் போர் யார், சுத்திஃபை கடிச்சுஃபை, போன்ற தமிழாங்கில அசிங்கங்களைப் பயன்படுத்துவது.

இம்மாதிரியான மேம்போக்கான பழக்கங்களின் அடித்தளத்தில் சில அபாயங்கள் உள்ளன. பெற்றோரை, பெரியவர்களை மதிக்காமல் ஊர் சுற்றுவது, போதைப் பொருட்களுடன் முதல் பரிச்சயம், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது, தம் இயலாமைகளுக்குப் பெற்றோரைக் குற்றம் சொல்வது போன்ற அபாயங்கள். சுவாமி சுகபோதானந்தா நமக்கு நவரசங்களில் பயரசமும் வேண்டும் என்கிறார். ஆரோக்கியமான பயம், healthy fear… குறிப்பாக, மேல்நாட்டுப் பழக்கங்களின்மேல் வேண்டும். இவை நகர்ப்புறப் பழக்கங்கள். சிறு நகரங்களும் கிராமங்களும் அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. இருந்தும் விரைவிலேயே மேல்நாட்டுப் பழக்கங்கள் அனைத்தும் சாட்டிலைட் மூலம் கிராமப்புறங்களிலும் பரவிவிடும் அபாயம் உண்டு. இதற்குப் பயப்படுங்கள்.

இவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அந்த நாடுகளின் சமூக அமைப்பும் - கலாசாரமும் சந்தர்ப்பங்களும் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் சின்ன வயசிலேயே பெற்றோரைப் புறக்கணித்துவிடுவார்கள். சொந்தமாக சம்பாதிப்பார்கள். பதினாலு வயசுக்குள் புணர்ச்சி அனுபவம். இல்லையேல் அது அப்நார்மல். ஒரு குறிப்பிட்ட வயசு வரை திரிந்துவிட்டு சட்டென்று ஒரு நாள் காதுக் கடுக்கனை கழற்றிவிட்டு முடி வெட்டிக்கொண்டு சூட் அணிந்து கொண்டு கம்ப்யூட்டர் படிக்கப் போய்விடுவார்கள். அப்படி நம் நாட்டிலும் இருந்தால் இந்தப் பழக்க வழக்கங்களை ஒரு தற்காலிக உபத்திரவமாக சகித்துக்கொள்ளலாம். அது நம் நாட்டில் நடப்பதில்லை. பெற்றோர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்கள். அவர்கள் ஓவர் டைம் பண்ணி, பி.எஃப். லோன் எடுத்து சம்பாதித்த காசில் நீங்கள் திரிகிறீர்கள்.

அங்கே வேலைக்குப் போக கல்லூரி படிப்பு தேவையில்லை. ஓரளவு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அங்கு ஏராளம். அதனால் அந்தப் பழக்க வழக்கங்களுக்கான பொறுப்பையும் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். தாமே ஒரு கட்டத்தில் தெளிந்துவிடுகிறார்கள். நம் நாட்டில் இந்தப் பழக்க வழக்கங்கள் அப்பா அம்மா சம்பாதிக்கும் காசில் நடக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு.

இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஒரு ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறது. இளம் பெண்கள் காலேஜுக்கு கட் அடித்து விட்டு அலைவதைப் பார்க்கிறேன். மார்பு குலுங்க பனியன் போட்டுக் கொண்டு, தொடை தெரிய டிராயர் அணிந்துக்கொண்டு, உடம்பைக் காட்டும் பழக்கம் மனதை பாதிக்காமல் இருக்க நம் சமூகம் அத்தனை பக்குவம் இல்லாதது. மேலும் ஏழை, பணக்கார வேறுபாடுகள் நம்மிடம் மிக அதிகம். இதனால் ஈவ் டீசிங், பெண் பலாத்காரம் போன்ற வன்முறைகள் ஏற்படுகின்றன.

ஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம். தேவைதான், அதை வருஷத்துக்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் முரட்டு சௌகரியம் இருக்கிறது என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், லீ ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள். ரிஷிமூலம் பார்த்து விசாரித்தால் அந்த ஜீன்ஸ் பங்களாதேஷிலோ அல்லது வியட்நாமிலோ செய்யப்பட்டு அமெரிக்கா போய்விட்டு இந்தியா வந்திருக்கும்.

இனி, வெளிநாடு செல்லும் மோகம்.

பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

===================================

விகடனில் அன்புடன் பகுதியில் வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளிநாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.

நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளிநாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள்.

என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. 
 
அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்.

- சுஜாதா

Shared from fb