27.07.2020
பொருளாதாரச்
செயல்பாடுகளில் புதுமைகளைக் காண பிரதமர் அழைப்பு
(அகில
இந்திய வானொலியின் செய்தி பகுப்பாய்வாளர் கௌசிக் ராய் எழுதிய ஆங்கில உரையின்
தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)
ஆங்கிலக் கட்டுரை :http://airworldservice.org/english/archives/101866
பிரதமர் நரேந்திர மோடி
அகில இந்திய வானொலியில் மாதாந்தோறும் ஒலிபரப்பாகும் “மனதின்
குரல்” நிகழ்ச்சியில் இந்திய
மக்களுக்கு உரையாற்றினார். ஜூலை 26, மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், 21 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நாளில்தான், கார்கில் போரில் நமது
இராணுவம் வெற்றிக் கொடி ஏற்றியது என்றார். கார்கில் போர் எந்த சூழ்நிலையில்
நடந்தது என்பதை இந்தியாவால் ஒருபோதும் மறக்க முடியாது. தன்நாட்டில் நிலவும்
உள்நாட்டு மோதல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இந்திய மண்ணை அத்துமீறி
ஆக்கிரமிக்கும் தவறான முயற்சியில் இறங்கியது பாகிஸ்தான். பாகிஸ்தானுடனான நல்லுறவை
வளர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தது.
பிரதமர் மோடி கூறுகையில், போர்க்காலங்களில் நாம்
என்ன சொன்னாலும் செய்தாலும் அது, இராணுவத்தினரின் மன
உறுதியிலும் எல்லையில் எப்போதும் விழிப்புடன் இருப்பதிலும், அவர்களுடைய
குடும்பத்தின் மனஉறுதியிலும் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. இதை நாம் ஒருபோதும்
மறந்துவிடக் கூடாது. அதனால்தான் நமது நடத்தை, நமது போக்கு, நமது பேச்சு, நமது நிலைப்பாடு, நமது வரம்புகள், நமது நோக்கங்கள், நாம் செய்பவை சொல்பவை
அனைத்தும் நம் இராணுவத்தினரின் மனஉறுதியையும் மாண்பையும் மேம்படுத்துவதாக இருக்க
வேண்டும்.
கடந்த சில மாதங்களாக, கொரோனாவுக்கு எதிராக
நாடு ஒன்றிணைந்து போராடிய விதம், அச்சத்திற்குரிய
பலவற்றைத் தவறென நிரூபித்துள்ளது. இன்று, மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது நம் நாட்டில் மீட்பு விகிதம் சிறப்பாக உள்ளது; பெரும்பாலான நாடுகளுடன்
ஒப்பிடும்போது,
நம் நாட்டில்
கொரோனாவினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் மிகக் குறைவு. ஓர் உயிரை இழப்பது கூட
வருத்தமளிக்கிறது, எனினும், இந்தியா மில்லியன்
கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், நாம் கூடுதல்
விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இன்றளவும்
ஆபத்தானது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனால்தான் நாம் முழு
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர், காண்டர்பால் நகரைச்
சேர்ந்த ஜைடூனா பேகம் அவர்களின் சேவைகளை திரு. மோடி நினைவு கூர்ந்தார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் தனது ஊராட்சி போராடுவதோடு வருமான வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் அவர் முடிவு செய்துள்ளார். முகமூடிகள் மற்றும் ரேஷன் பொருட்களை
இலவசமாக விநியோகித்துள்ளார்; அதே நேரத்தில் பயிர்
விதைகள் மற்றும் ஆப்பிள் மரக்கன்றுகளையும் விநியோகித்துள்ளார், இதனால், விவசாயம் மற்றும்
தோட்டத் தொழிலில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
இக்கட்டான காலத்தை
வாய்ப்புகளாக மாற்றுவதில் சரியான மற்றும் நேர்மறையான அணுகுமுறை எப்போதும் நீண்ட
தொலைவு செல்லும், இது வளர்ச்சியைத்
தூண்டுகிறது என்று பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில், நம் நாட்டின் இளைஞர்கள்
மற்றும் பெண்கள் தங்கள் தனித்திறமை, செயற்திறன்களின்
அடிப்படையில் புதிய சோதனைகளை எவ்வாறு கொண்டு வந்தனர் என்பதற்கு நாமே சாட்சி.
பீகாரில், மகளிர் சுய
உதவிக்குழுக்கள் மதுபனி கலைநயத்துடன் முகமூடிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன; இவை மிகவும் பிரபலமாக
மாறியது. ஒரு வகையில், மதுபனி முகமூடிகள் ஒரு
பிராந்தியத்தின் மரபைப் பரவச் செய்கின்றன; ஆரோக்கியத்தைப்
பாதுகாப்பதைத் தவிர, அவை வாழ்வாதாரத்திற்கான
வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
மூங்கிலைப் பயன்படுத்தி, திரிபுரா, மணிப்பூர் மற்றும்
அசாமின் கைவினைக் கலைஞர்கள் உயர்தர நீர் பாட்டில்கள் மற்றும் டிஃபன் டப்பாக்களை
வடிவமைக்கத் தொடங்கினர். இது புதிய தயாரிப்பு, மேலும்
சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
திரு. மோடி மக்களை
புதுமையாக சிந்திக்கச் சொன்னார். பீகார் இளைஞர்கள் வழி காட்டியுள்ளனர். முன்னதாக
அவர்கள் வழக்கமான வேலைகளையே செய்து வந்தனர். ஒரு நாள், அவர்கள் முத்துக்களை
சாகுபடி முடிவு செய்தனர். தங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு இது பற்றி அதிகம்
தெரியாது. எனினும், இந்த இளைஞர் குழுவினர், தேவையான அனைத்து
தகவல்களையும் சேகரித்து, பின்னர் ஜெய்ப்பூர்
மற்றும் புவனேஸ்வர் சென்று பயிற்சி எடுத்து, தங்கள் கிராமத்தில்
முத்துக்களை சாகுபடி செய்யத் தொடங்கினர். இன்று, இந்த செயல்பாட்டிலிருந்து சம்பாதிப்பதோடு, பிற மாநிலங்களிலிருந்து
திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முசாபர்பூர், பெகுசராய் மற்றும் பாட்னாவில்
பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர். பலருக்கு, இது தற்சார்பிற்கான
வழிகளைத் திறந்துள்ளது.
ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நாள்.
இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் பல நூற்றாண்டுகளாக வரலாற்றுப்
புகழுடையது. இந்திய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை முடிந்தவரை பயன்படுத்த நாம்
முயற்சி செய்ய வேண்டும், மேலும் இவற்றைப் பற்றி
முடிந்தவரை பலரிடம் எடுத்துரைக்க வேண்டும்.
சுரினாமுடனான
இந்தியாவின் நெருங்கிய உறவை பிரதமர் நினைவு கூர்ந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து
சென்ற மக்கள், அதைத் தங்கள் உறைவிடமாக
மாற்றியுள்ளனர். இன்று, சுரினாமின்
மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்திய வம்சாவளியைச்
சேர்ந்தவர்கள். ‘சர்னாமி’ என்பது அங்குள்ள பொதுவான
மொழிகளில் ஒன்றாகும்; இது போஜ்புரியின்
பேச்சுவழக்கு ஆகும். இந்த பண்பாட்டுப் பிணைப்புகள் குறித்து இந்தியா மிகவும்
பெருமிதம் கொள்கிறது.
சமீபத்தில் சுரினாமின்
அதிபராக திரு சந்திரிகா பராசாத் சந்தோகி தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுதிமொழியேற்பு
விழாவில், திரு. சந்தோகி வேத
பாடல்களை ஓதினார்; அவர் சமஸ்கிருதத்திலும்
பேசினார். திரு சந்திரிகா பிரசாத் சந்தோகிக்கு தன்சார்பாகவும், 130 கோடி இந்தியர்கள்
சார்பாகவும் பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நன்றி : அகில இந்திய
வானொலி, திரைகடல் ஆடிவரும்
தமிழ்நாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக