நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 22 அக்டோபர், 2020

பிபிசி 100 பெண்கள் - 2019 நிகழ்ச்சி

பிபிசி 100பெண்கள் - 2019 நிகழ்ச்சி

கடந்த ஆண்டு (22.10.2019) பிபிசி 100women நிகழ்வு புதுதில்லி லோதி சாலையிலுள்ள ஆந்திரா பவனின் கோதாவரி அரங்கில் நடைபெற்றது. ஊடகவியலாளர் நியாஸ் அகமது அழைப்பின் பேரில் ஜேஎன்யு சார்பில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. முதல்முறையாக பன்னாட்டு ஊடகத்தின் ஆங்கில நிகழ்வொன்றை நேரடியாகக் கண்ட நாள் அன்றைக்கு.



விடியற்காலை அகில இந்திய வானொலி நிகழ்வு முடித்து அங்கேயே ஓய்வெடுத்தபின், காலை 9மணிக்கெல்லாம் அரங்கிற்குள் வந்தாயிற்று. இந்திய வழக்கமான தாமதத்திலிருந்து அந்நிகழ்வும் தப்பவில்லை. 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வு 10.15க்கு தொடங்கியது. மொத்த அரங்கும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. தேநீர், உணவு, மெய்நிகர் கண்காட்சி, கலந்துரையாடல் வெளி என திட்டமிடப்பட்டமைந்தது சிறப்பாக இருந்தது.

பிபிசி சார்பில் முதன்முறையாக தில்லியில் இந்நிகழ்வு நடைபெற்றது. பிபிசி நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 100 பெண்களுள் ஆரண்யா ஜோஹர், நந்திதா தாஸ் முதலான இந்தியப் பெண்களுடன் பன்னாட்டுப் பெண்களும் பங்கெடுத்தனர். இருக்கை இரண்டும் மின்திரை ஒன்றும் இடம்பெற்ற மேடை ஒட்டுமொத்த அரங்கையும் மாலை வரை அயர்ச்சியுறாது இருக்கவைத்தது.

வெவ்வேறு துறை, பேசும் ஆங்கிலமும் வெவ்வேறு உச்சரிப்பு, வெவ்வேறு பண்பாட்டைப் பின்னணியாகக் கொண்ட பெண்கள் தம் பங்களிப்பு அத்துறையில் பெரிய மாற்றத்தைக் கொடுத்திருந்தது. அதனால், பிபிசி அடையாளப்படுத்தியிருக்கும் என்பதை அப்பெண்களின் off the stage செயல்படுகளால் அறியமுடிந்தது.



கண்முன்னே தாய் எரிந்து தற்கொலை செய்துகொள்ள, இளம்பிராயத்திலே பாலியல் வன்முறைக்கு ஆளாகிய நடாஷா நோயலின் உரை உடலியல் சிந்தனைக்குரியது. பெண்களின் பலம் உடல். அதைத்தான் காலாகாலமாக பலவீனமாகச் சித்திரித்துக் கட்டமைத்திருக்கிறது சமூகம். அச்சமூக உளவியலிலிருந்து விடுபடுவதற்கான உடல் சார்ந்த நேர்மறை எண்ணங்களை அவர் எடுத்துரைத்தார். அரங்கிலேயே சிரசாசனம் (தலைகீழ் நிற்பது) செய்தார். பொத்தம் பொதுவாக எதிர்க்கும் போக்கில் பாஜக அரசு கொண்டுவந்தாதாலேயே யோகா எதிர்ப்பு பரவலாகக் காணப்படுகிறது. இதனைத் தவிர்த்து பெண்ணுடலை வலுவாக்க இவர்தம் (யோகா) பயிற்சி முயற்சிகள் வரவேற்புக்குரியன.  

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன் இன்ஸ்டாகிராம் பதிவில் (https://www.instagram.com/p/B32NcIrlpEH/) ஐந்தாண்டுகளுக்கு முன்பு உடல் பருத்தும் தற்போது உடல் கட்டுக்கோப்பாகவும் இருக்கும் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். பலரும் பாராட்டி பகிர்ந்திருந்தனர். தற்போதைய உலகில் உடலை மூலதனமாக்கி தொழில்புரிவோர் தவிர பிறர் உடலைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதுவே பருமனுக்கும், மேலான வியாதிகளுக்கும் இட்டுச்செல்கிறது. குண்டான உடலுக்கு foodie என்று பெயரிடுகிறோம். மரபு வழி உடல் பருமனைத்தாண்டி உடலைப் பரமாரித்தலின் தேவையை நடாஷா நோயல் சுட்டிக்காட்டினார். மாலை நிகழ்வு முடிந்ததும் குருவி மிட்டாய் சிரிப்பழகன் ஜி.கே.தினேஷ்-ஐ நடாஷாவிடம் அழைத்துக்கொண்டுபோய் அறிவுரைச் சொல்லச் சொன்னேன். அதைக் காதில் கூட ஏற்றிக்கொள்ளவில்லை அவன்.



காலையில் அரங்கேறிய பெண்களில் ஆரண்யா ஜோஹருக்கு அடுத்து, மிகக் கவர்ந்தவர் டேனில் பீலேக். அவரது எண்ணம் மிகப்பெரிய மாற்றத்திற்கான சிறிய விதை. 3டி ஆடை வடிவமைப்பிற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஆடைகள் பெரும்பாலும் மறுசுழற்சிக்கு ஆட்படுவதில்லை. எலைட் மக்கள் அன்புசுவர் போன்ற முறைகளில் தங்களின் பயன்பாடற்ற உடைகளை எளிதாக வெளியேற்றிவிடுகின்றனர். உலகளவில் உற்பத்தியாகும் ஆடைகளோடு ஒப்பிடுகையில் பயன்படுத்தப்பெற்று மறுசுழற்சியாகும் ஆடைகள் மீச்சிறு அளவேயாகும். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக டேனில் பீலேக் முன்வைப்பது 3டி ஆடைகள். ஆடை உலகின் எதிர்காலமாக அவர் இதைக் கருதுகிறார். அவரது உரை விளக்கத்திற்குப் பின்பு இது மெய்யெனவும் நம்ப முடிந்தது.

3டி ஆடைகள் மறுசுழற்சிக்குரியது, உள்ளாடை முதல் பாரம்பரிய ஆடைகள் வரை வடிவத்தை உள்ளீடு செய்தால் இயந்திரம் உடையைத் தந்திடும். துவைக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகமாகும். மறைநீர் பொருளாதாரத்தில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும். காற்று எளிதாக உட்புகுந்து செல்வதால், உடலியல் பிரச்சினைகளும் இருக்காது. பண்பாட்டை நீர்த்துப்போகா வண்ணம் போராடி வரும் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வுடை, பயன்பாட்டிற்கு வர மீப்பெரும் காலம் எடுத்துக்கொள்ளும். புடவை முதலான உடைகளையும் தயாரிக்க முடியுமா என்பது போன்ற கேள்வி வந்தது, சிரிப்பாக இருந்தது. புடவை போன்ற கலைநுட்பம், உருநேர்த்திமிகுந்த பிரதியை 3டி உடையால் ஈடு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. 3டி உடையின் மாதிரி அரங்கத்திற்கு வெளியே இருந்தது. இதில் உடை மடிப்புகளுக்கு வாய்ப்பில்லை.  உடை உடலை மறைக்கவே!


தேநீர் இடைவெளிக்கு வெளியே வந்திருந்த போது, நந்திதாதாஸ் சாதாரண உடையணிந்து தோள்பட்டை பை அணிந்து வளாகத்துள் வந்தார். பேனாவும் பெனோவும் நினைவு தான் வந்தது. நந்திதாதாஸ் மிகச் சரளமாகக் கேள்விகளைக் கையாண்டார். வெள்ளை என்பது அழகல்ல, நிறம் என்பதை நிரூபிக்கும் வகையில் உரை இருந்தது. அரங்கிருந்தவர்களிடமிருந்த கேள்விகள் திரைத்துறையொட்டியே அமைந்தாலும் நிறம் சார்ந்து கருத்துகளே பதில்களாயின. நிறமே சாதனை எனச் சராசரியானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சாதனை புரிபவர்களின் நிறம் எப்போதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

பாலியல் உறவுகள் குறித்துப் பேசிய ப்ரகதி சிங் மற்றும் ஆரண்யா ஜோஹரிடம் எப்படி நீங்க இவ்வளவு வெளிப்படையா பேசறீங்க, இதுக்கான தைரியம் எங்கருந்து வந்தது? வீட்டுல திட்ட மாட்டாங்களா?” போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இருவரும் தந்த பதில், “பெற்றோரின் ஒத்துழைப்பு, பெற்றோரின் வழிகாட்டுதல்இவை தான்.

ஆமாம். பெற்றோர் நினைத்தால் தான் எவ்வளவு மாற்றங்களைக் கொடுக்க முடிகிறது. முற்போக்கான பெற்றோர்கள்கூட பிள்ளைகளின் எதிர்காலத்தை சில முன்முடிவுகளால் மட்டுப்படுத்திவிடுகின்றனர். பிள்ளைகள் தன் சிறகை விரித்துப் பறப்பதற்கு ஆரோக்கியமான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தரலாம். இல்லெனில், அவர்களை சுமந்து பறப்பதற்கும் பிள்ளைகள் தயார். நீ பறக்க வேண்டாம், கூட்டினுள்ளே இரு! என்று பெற்றோர்கள் தடுக்கவேண்டாமே...!



உணவு இடைவெளியில் ஆரண்யா ஜோஹர், விஐபி+பிபிசி நிறுவனத்தாருக்கு ஏற்பாடு செய்திருந்த ரங்கத்தில் உண்டு முடித்துவிட்டு மாணவர்களுக்கான உணவரங்கத்தில் வந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பலரும் அவரோடு படம் எடுத்துக்கொண்டிருக்க ஒரு மாணவி உங்கள ரொம்பப் பிடிக்கும்  ‘ஹக்செய்துக்கவா? என்று கேட்டு, ‘ஹக்செய்துவிட்டு, அவரோடு படம் எடுக்காமலே சென்றார். ஆரண்யாவின் பேச்சு உண்மையிலே அவரிடத்துத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றியது. ஒரு ஆரண்யா தோன்றுவதற்குத் தான் நேரம் எடுக்கும். ஆரண்யாக்கள் தங்கள் நிகழ்கால/எதிர்கால பிரதிகளை எளிதில் உருவாக்கிவிடுகிறார்கள்.

இவர் தான் ஆரண்யா ஜோஹர் என்று தெரியாத நாட்களிலேயே அவரது காணொளிகளைப் பகிர்ந்திருந்ததுண்டு. அவரது அநாயசமான பேச்சும் ஆங்கிலமும் உணர்வுகளைக் கடத்தும் திறனும் ரசிக்கவைத்து சிந்திக்க வைத்தவை. பிபிசியினால் கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்ட ஆரண்யா தன் முழு உரையும் மின்திரை உதவியுடன் கொடுத்தார். தன் கருத்துகளை உணர்வுகளாக அப்படியே கடத்தினார்.  இருமை எதிர்வுகளையும் வளர்க்கும் நவீன ஊடகப் பெருக்கத்தில் முற்போக்கையும் விழிப்புணர்வையும் ஒருசேர வளர்க்கும் இளந்தலைமுறை இன்ஃப்ளுயன்சர்களில் ஆரண்யா ஜோஹரும் ஒருவர்.

 Gina Zurlo (religion) எதிர்காலத்தில் மதங்களின் ஆட்சி குறித்து இவரது உரை இருந்தது. சுகி சிவம் தனது பேச்சில் ‘எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், மதங்களைத் தாங்கிப் பிடித்திருக்கும் வேரே பெண்கள் தான். பெண்கள் மதம் எனும் கருத்திலிருந்து நீங்கிவிட்டால், ஆண்கள் தானாகவே வெளியேறிடுவார்கள். எவ்வளவுதான் அடிமைப்படுத்தினாலும் பெண்களே அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு மதம் ஆட்சி செலுத்துவதை அவரது உரையின் சாரம் தெரிவித்தது. சில புள்ளிவிவரங்களை அவர் தெரிவித்தார். அதை இங்கே பதிவு செய்வது தேவையற்றது என்பதால் வெளிப்படுத்தவில்லை. தொழில்நுட்பங்கள் முன்னேறும் அதேவேளையில், பெண்களே நாளைய உலகில் மதத்தைத் தலைமையேற்பார்கள். இன்னும்சொல்லப்போனால், பெண்களுக்கென தனி மதம் உருவாக்கினால் அதுவே உலகை ஆளும் என்றும் உவகை பூத்தார்.

Susmita Mohanty (science and space)

சுஸ்மிதா மோஹந்தி, விண்வெளி அறிவியல் துறை எதிர்காலத் திட்டங்களையும் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான திட்டங்களையும் எடுத்துவைத்தார். குறிப்பிட்ட தொகையில் விண்விமானங்களின் பயணத்தை சராசரி மனிதனுக்கும் அறிமுகப்படுத்தினார். இவர் குறிப்பிட்ட எதுவும் ஏரோபிளேன்குறித்ததன்று. விண்வெளிப் பயணம் குறித்ததே. விமானப் பணிப்பெண்கள் எனும் நிலையிலிருந்து விண்வெளி ஓடத்துக்குப் பொறுப்பேற்கும் சுஸ்மிதா மோஹந்தி நம்பிக்கைத் தளிர்களே.


Marilyn Waring and Subhalakshmi Nandi (unpaid work) நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பெண்களின் வருமானம் பெறாமல் செய்கின்ற வேலைகள் ஏற்படுத்தும் மதிப்பை கலந்துரையாடல்வழி எடுத்துரைத்தனர். இந்த உரையை, சமையலறையே கதியெனக் கிடக்கும் சீரியல்களில் தொலைத்தவர்கள் கேட்டிருக்க வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தின் பன்முகமும் அதில் பெண் உடலுழைப்புக்குக் கிட்டாத ஊதியமும் எவ்வாறு மறைந்துள்ளதென்பது அறிந்துகொள்ள இயலும்.

 


Raya Bidshahri (education)

ராயா பிட்ஷாஹ்ரி கல்விப் புலத்திற்காகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். எதிர்காலக் கல்விமுறையில் பாடங்களற்று, பள்ளிக்கூடங்களற்று எத்தகைய மாற்றங்களைக் கொணர வேண்டும் என்பது அவரது பேச்சின் அடிநாதமாக விளங்கியது.



Sarah Martins da Silva (fertility)

சாராஹ் மார்டின்ஸ் ஆண்களின் மலட்டுத் தன்மை பெண்களை எவ்வாறெல்லாம் பாதிக்கின்து என்பதைச் சுட்டினார். ஆண்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் கடிகாரம் முதற்கொண்டு பல உபகரணங்கள் ஆணின் பாலியல்/உளவியல்/உடலியல் செயல்பாட்டை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதைத் தெளிவுபடுத்தினார். அதற்கான காரணங்களையும் அலசி, அதிலிருந்து விடுபடுதலுக்கான நேர்த்தியான முறைகளையும் சுட்டினார்.

Pragati Singh (sexuality and gender identities) - Beyond sex: The future of love, family and intimacy

Hayfa Sdiri (business and entrepreneurship) - How virtual investment could stop North Africa's brain-drain

Vasu Pirmlani (environment) - One step for (wo)man, a giant step for mankind: A talk on the Precautionary Principle and a history of the world

Paola Villareal (justice and data equality) குறித்தும் உரை நிகழ்த்தினர். மாலை ஆறு மணிக்கு மேல் ஆயிற்று அனைத்தும் முடிய. பின்னரே, கிளம்பி அறை வந்து, அன்றிரவே தமிழகம் திரும்பியாயிற்று. ஒரு நேரத்தில் பல்வேறு பொருள்தளங்களில் இந்த நிகழ்வை கொண்டு சேர்த்த பிபிசிக்கு நன்றி.

-தக | 22.10.2020

புதன், 30 செப்டம்பர், 2020

தமிழ் மொழிபெயர்ப்பு அறிமுகம் | மொழிபெயர்ப்புக் கருவிகள்

அகில இந்திய வானொலிக்காக மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கி, 2020 செப். 23ஆம் நாளோடு ஓராண்டு நிறைவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் NCERT, NPTEL முதலான நிறுவனங்களுக்கும் மொழிபெயர்ப்புக்காகப் பங்காற்றியிருக்கிறேன். இந்த ஓராண்டில் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்பாக நிறைய நுட்பங்கள் கற்றுக்கொண்டுள்ளேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். அவற்றுள் அடிப்படையானவற்றைப் பொதுவில் பகிர்வது ஏனையவர்களுக்கும் பயன்படும் என்பதாலும், மொழிபெயர்ப்புத் துறையில் நுழைய எண்ணுபவர்களுக்கு உதவும் என்பதாலும் இங்கு பகிர்கிறேன். நன்றி.

உலக மொழிபெயர்ப்பு நாள் வாழ்த்துகள்.

..தமிழ்பாரதன் | 30.09.2020

தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றின் தொடக்கம்

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 

என்றார் பாரதி. பிறமொழியில் அறிவைத் தமிழுக்குக் கொண்டுவருதல் வாயிலாகத் தமிழ் மக்கள் பிறமொழி அறிவைப் பெறுதல் எளிதாகிவிடும். இதற்கு மொழிபெயர்த்தல் அடிப்படையானதாகும். தற்காலத்தில் கணினியில் ஒரு மொழியை உள்ளீடு கொடுத்தால், அது இன்னொரு மொழியில் பெயர்க்கப்பட்டுவிடுகிறது. இது எந்திர மொழிபெயர்ப்பு.  மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும்.

தமிழின் மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலத்திலேயே இதற்கான விதிமுறைகள் இருந்திருக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த நெடிய மரபில் தற்கால எச்சம் நாம் என்பதை எண்ணிக்கொண்டுச் செயல்படுதல் தமிழுக்கு வளமை அளிக்கும்.

    வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியலில் 5ஆவதாக இடம்பெறும் இந்த நூற்பா மொழிபெயர்ப்புக்கான வரையறைகளைக் கொடுக்கின்றது. தற்காலத்தில்தான் ஆங்கிலம்-தமிழ் பயன்பாடு அதிகம் உள்ளது. அக்காலத்தில் வடமொழிகளுடனே அதிகப் பயன்பாடு தமிழுக்கு இருந்தது. வடமொழியில் உள்ள ஒரு சொல்லைத் தமிழில் தர வேண்டுமானால், தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்ற வேண்டும். இங்கு, கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு.

1.         தற்சமம் – ஒலி மாறுபாடின்றி வழங்குவது – कमल (kamal) – கமலம் (தாமரை)

2.         தற்பவம் – ஒலி மாறுபாட்டு அமைவதுతెలుగు (telugu) – தெலுங்கு (ங் சேர்க்கப்பட்டுள்ளது)

இதன்வழி ஒன்றை அறிந்துகொள்ளவியலும். பிறமொழியில் உள்ள உச்சரிப்பே தமிழில் உச்சரிக்க வேண்டியதில்லை. அதாவது, Hariharan என்ற உச்சரிப்பைத் தமிழில் தர ஹரிஹரன் என்று எழுதவேண்டியதில்லை. தமிழ் மொழிக்கு ஏற்ப அரிகரன் என்று வழங்குவதே உரியது. கம்பரின் காலம் வரை தமிழுக்கு ஏற்ப ஒலி வடிவத்தை மாற்றியமைக்கும் வழக்கு இருந்திருக்கிறது. விபீஷணன் என்பதை வீடணன் என்றும் ராமன் என்பதை இராமன் என்றும் சீதா என்பதை சீதை என்றே தமிழுக்கு ஏற்ப மாற்றி வழங்கினார்.

 பிற்காலத்தில், மணிப்பிரவாளநடை தோன்றியபோது, கிரந்த எழுத்துப் பயன்பாடு தலைதூக்கியது. தனித்தமிழ் இயக்கம் அதனைப் பாடுபட்டு ஒழித்தாலும் இன்றளவும் கிரந்த எழுத்துகளின் ஆதிக்கம் தமிழ்ப் பொதுமக்களிடையே தவிர்க்க இயலாததாக உள்ளது. தமிழ்+ஆங்கில கலப்பு நடையான தமிங்கிலம் மொழிப்பயன்பாட்டில் புரையோடிவிட்டது. இதுவும் ஒழிக்கப்படவேண்டியதே. (தமிழில்/தமிழாக்கத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்து வாசிக்க…)

சான்றாகச் சொல்லவேண்டுமானால், Translation என்பதையே எடுத்துக்கொள்ளுங்களேன். இதனுடைய நேரடிப் பொருள்வேறிடம் எடுத்துச் செல்லல்என்பதே. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்பு என்கிறோம். Translation என்பதில் Language என்றசொல் இடம்பெறாத போதும், அதன் பொருள் தமிழில்மொழிபெயர்ப்புஎன்பதே.

ஆதலால், ஒரு மொழியிலிருந்து சொற்றொடர் ஒன்றைத் தமிழில் கொண்டுவர சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்தல் கூடாது. அதன் பொருளை உள்வாங்கிக்கொண்டு தமிழுக்குத் தகுந்தாற்போல மொழிபெயர்ப்பு செய்தல் அடிப்படையானதாகும். waterfalls என்பதை நீர்வீழ்ச்சி என்று மொழிபெயர்த்தல் கூடாது. அதற்குத் தமிழில் அருவி என்ற சொல் இருக்கிறது, அதனைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்.

ஏற்கெனவே மொழியில் இருந்த/இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்தும்போது தமிழின் சொல்வளம் பாதுகாக்கப்படுகிறது. புதிய சொற்களைத் தேவையின் அடிப்படையில் உருவாக்குவது கலைச்சொல்லாக்கம் எனப்படுகிறது. “nano” என்ற தொழில்நுட்பம் வருகையில், இதனை “நுணம்” என்று மொழிபெயர்த்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த தமிழார்வலர் திருவளவன். இதன்படி, nano technology என்பது நுணவ நுட்பவியல், இதில் எந்தச் சிக்கலும் இல்லையே.

Biology என்பதை முன்னமே உயிரியல் என்று மொழிபெயர்த்து புழக்கத்தில் இருப்பதால் நமக்குப் பெரிய மாறுபாடு தெரிவதில்லை. தற்காலத்தில் புதிய சொற்களை உருவாக்கும்போது ஐயோ புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்! புண்படுத்திட்டான்!! என்று கத்துவது அபத்தமானது. பரிதாபத்திற்குரியது.


Translation       - மொழிபெயர்ப்பு (சான்று : flower – மலர், soil - மண்)

Transcreation     - மொழியாக்கம் (ஒன்றை உள்வாங்கிக் கொண்டு தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தல். சான்றாக Munnaa Bhai M.B.B.S என்ற படத்தைத் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்று உருவாக்கும் போது, தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப வசனங்களை நபர்களை மாற்றம் செய்துகொள்ளுதல். ‘ஆழ்வார் பேட்டை ஆண்டவா….’ வரிகளை இந்திப் படத்தில் தேடினால் கிடைக்காது. இதுவே இலக்கியப் பனுவலுக்கும் பொருந்தும்)

Transliteration    - ஒலிபெயர்ப்பு (பிறமொழி உச்சரிப்புகளைத் தமிழில் எழுதுதல். அதாவது, twitter – ட்விட்டர், whatsapp – வாட்சப். பெரும்பாலும் இது பெயர்ச்சொற்களுக்கே உதவும்)

 செய்யப்படும் மொழிபெயர்ப்பு யாரைச் சென்றடையப் போகிறது என்ற கேள்வி தலையாயது. தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகள் ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் அப்படியே மொழிபெயர்க்க மாட்டார்கள். தேவையானதைத் தேவையான அளவு தமிழில் தருவார்கள். மொழிபெயர்ப்புத் தூய்மை அங்கு தேவைப்படாது. ஆனால், ஒரு கவிதையோ, கட்டுரையோ தரம் மாறாமல் அப்படியே இன்னொரு மொழிக்குப் பெயர்க்கப்படுகையில் அங்கு கூடுதல் கவனம் தேவை. ஒரு பனுவலில் “மொழிபெயர்ப்பு” என்று குறிப்பிடப்படும் அனைத்துமே செறிவாகப் பொருள்தளம் மாறாமல் பெயர்க்கப்பட்டிருத்தல் அவசியம்.

மொழிபெயர்ப்புக் கலை - மொழிபெயர்ப்பு செய்வது குறித்து ஏராளமான நூல்கள் தமிழில் எழுந்துள்ளன. அவற்றைப் படித்துத் தெளிவு பெறலாம். எனினும், தொடர்சியாகச் செய்துபார்த்தலின்வழியே மொழிபெயர்ப்பில் மேன்மையடைய முடியும் என்பது அறிஞர் கருத்து.

மொழிபெயர்ப்புக் கருவிகள்:

1.         அனைத்தையும் மனிதனே மொழிபெயர்ப்பது நல்லதுதான். சில நேரங்களில் நெடிய சொற்றொடர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பின் உதவியை நாடலாம்.

2.         இயந்திர மொழிபெயர்ப்பு உதவியை நாடுவது அறிவுடைமையாகும். இருக்கின்ற இயந்திர மொழிபெயர்ப்புகளிலேயே https://translate.google.com/ என்பது ஓரளவு நன்றாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்யவேண்டியதை இதில் உள்ளீடு செய்து தமிழ் பெயர்ப்பைப் பெறலாம். இயந்திர மொழிபெயர்ப்புக்குப் பின், அதனை திருத்தம் செய்து, செம்மையாக்கம் செய்வது அவசியமானதாகும்.

3.         தமிழ் அகரமுதலி https://www.xn--vkc6a6bybjo5gn.com/ இந்தத் தளத்தில் உள்ளது. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒத்த பொருண்மையுடைய தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நம்பிக்கையான அகராதி. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழின் அனைத்து அர்த்தங்களையும் இங்குக் காணலாம். இதனால், தமிழின் சொல்வளம், சூழலுக்குத் தக்க அர்த்தம் தரும் சொற்களைப் பெறலாம்.

4.         மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி http://218.248.16.22/etytamildict/TamilDemo.aspx என்ற தளத்தில் உள்ளது. தமிழ்ச் சொல்லுக்கு இணையான வேறு சொற்களைப் பெற இதனைப் பயன்படுத்தலாம். 

5.         இதிலும் விளக்கம் கிட்டவில்லையெனில், https://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil என்ற தளத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, வின்சுலோ தொகுத்த அகராதி, சென்னைப் பல்கலை.யின் தமிழ் அகராதி முதலானவை உள்ளன. தேவைப்படும் சொல்லை உள்ளீடு செய்து தேடலாம். 

6.         நிறைவான மொழிபெயர்ப்பை http://vaani.neechalkaran.com/ என்ற தளத்தில் கட்டுரையை உள்ளீடு செய்து பிழைகளை நீக்கிக்கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தனங்களைத் தாண்டி மொழிபெயர்ப்புச் செய்யவுள்ள பனுவல் மீதான அறிவு, புரிதல், தெளிவு, தமிழ்ச்சூழல்-பண்பாடு, யார் பயனாளர்கள் என்ற அணுகுதலோடு செய்யப்பெறும் மொழிபெயர்ப்புகளே தனித்து நிற்கின்றன.


கிரந்த எழுத்துகள் தேவையில்லை!

 கிரந்த எழுத்துகள் தேவையா? தேவையில்லை

தமிழில் வடமொழி ஒலிகளை எழுத உருவாக்கப்பட்டவையே கிரந்த எழுத்துகள். ஜ ஷ ஸ ஹ ஸ்ரீ முதலானவை கிரந்த எழுத்துகளே. இந்த எழுத்துகளை எழுதி வடமொழிக்காரர்களிடம் காட்டினால், அவர்களால் படிப்பது இயலாது.  ஏனெனில், இது தமிழுக்காக உருவாக்கப்பட்டவையே.

ஆக, கிரந்த எழுத்துகள் என்பவை தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வடமொழி ஒலிப்புடைய எழுத்து.  பிறமொழி (ஒலி)உச்சரிப்புக்கு ஏற்பத் தமிழில் ஏன் புதிய எழுத்துகளை உருவாக்க வேண்டும். தமிழின் ழ எழுத்தை வடமொழியில் ல என்றே விளிப்பார்கள். அதன் உச்சரிப்புக்கு ஏற்ப புதிய எழுத்துகளை உருவாக்கவில்லையே. Thamizh அல்லது tamil எப்படி எழுதி வாசத்தாலும் தமிழ் என்ற ஒலிப்பு வருவதில்லையே. அதனால், ஆங்கிலத்தில் ழ ஒலிப்புக்கு இணையாக ஓர் எழுத்தை உருவாக்கினார்களா. இல்லையே. பிறகு, ஏன் தமிழில் மட்டும்.

சரி, உருவாக்கி விட்டார்கள், சில தலைமுறை பயன்படுத்திவிட்டது. இனி, அவற்றை மறுத்துத் தற்சார்புத் தமிழை மீட்டுருவாக்குவதே சரியானதாக இருக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் தமிழாக்கம் செய்து எழுதப்பட்ட ‘ஒலி’கள். பிற்காலத்தில் அவ்வொலிகளுக்கு ஏற்ப எழுத்துகளை உருவாக்கும் அளவுக்கு நிலைமாறிப்போனது. தனித்தமிழியக்க வளர்ச்சியினால், தற்சார்புத் தமிழில் மீட்டுருவாக்கத்திலும் இந்த கிரந்த எழுத்துப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.

1.   தற்போது கிரந்த எழுத்துப் பயன்பாடு பெயர்ச்சொற்களில்தான் இடம்பெறுகிறது. பெயர்ச்சொற்களிலிருந்து முதலில் கிரந்த எழுத்தை நீக்கல் வேண்டும்.

2.   அடிமை மனோபாவத்தை ஒழித்தல். தன் பிள்ளைக்கு வடமொழி ஒலிப்பில் பெயர் வைத்தால் (சான்று : மோனிஷ், மஹிஷா) பெரிய மேதமை போன்ற போலிப் புகழ் உணர்வு அடையும் பெற்றோர்கள் தங்கள் மனப்பிறழ்வைச் சரிசெய்துகொள்ளுதல் வேண்டும்.

3.   இது எதிர்காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு உருவாகாமல் இருக்க உதவும். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் தற்போது சீனிவாசன் என்று தமிழில் பெருவழக்காக மாறியிருக்கிறது அல்லவா.   

4.   இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் அனைத்தும் கணினிமயம் ஆதலால், உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் ஒருங்குறியிலிருந்து ஸ, ஸ்ரீ, ஹ, ஜ, ஷ எழுத்துக்களை நீக்கம் செய்துவிட்டால்,  அவற்றைப் பயன்படுத்த இயலாமல், மக்கள் இயல்பாகவே தனித்தமிழுக்கு வந்துவிடுவார்கள்.



இப்போது, தமிழில் மொழிபெயர்க்கும்போது, அந்நியப் பெயர்களை எவ்வாறு உச்சரிப்பது என்ற ஐயம் வரும்.  அமெரிக்க மேனாள் அதிபர் George Walker Bush என்பதை ஜார்ஜ் வால்க்கர் புஷ் என்று எழுதுவதற்குப் பதிலாக சார்ச் வால்க்கர் புச் என்று எழுதலாம். இதைப் படிக்கும்போது, George Walker Bush என்ற ஒலிப்பில் சொல்ல வேண்டியதான்.

ஜார்ஜ் வால்கர் புஷ்பொதுமக்கள் மனநிலை

சார்ச்சு வால்க்கர் புசுதனித்தமிழ் பெயர்ப்பு

சார்ச் வால்கர் புச்தேவையான பெயர்ப்பாக கருதுவது.

நாவலாசிரியர், எழுத்தாளர், மெய்யியலாளர் Dostoevsky பெயரைத் தமிழில் தாஸ்தோவ்ஸ்கி /தஸ்தாயெவ்ஸ்கி என்று சொல்வார்கள். இது ஆங்கில உச்சரிப்போடு நெருக்கமாக இருக்கிறாதா என்ன? இல்லையே. பிறகு, தச்தோவ்ச்கி என்று எழுதி படிக்கும் போது, Dostoevsky என்ற ஒலிப்பில் சொன்னால் என்ன? இன்னும் சொல்லப்போனால், அவர் இரசிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பெயரை அதன் மூலமொழியின் ஒலிப்புக்கு இணையாகத்தானே உச்சரிக்க வேண்டும்.

சரி, கிரந்த எழுத்துகளுக்கு தமிழில் உச்சரிக்கத்தக்க ஒலி இல்லை என்று கருதுகின்றீர்களா!   

Ja

மஞ்சள் – இதில் உள்ள ச எழுத்து ஜ என்றே உச்சரிக்கப்படுகிறது.

Sha

பக்‌ஷி – பட்சி இதில் உள்ள ட்+ச் என்பது ஷ என்றே கொள்ளலாம்.

Sa

சக்கரம் – இதில் உள்ள ச எழுத்து ஸ என்றே உச்சரிக்கப்படுகிறது

Ha

பகல் – இதில் உள்ள க என்ற எழுத்து ஹ என்றே உச்சரிக்கப்படுகிறது

ஸ்ரீ

sri

திரு. (தமிழின் திரு = வடமொழியின் ஸ்ரீ)

ஆதலால், எழுத்துகளில் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதுவதும் ஒலிப்பில் உரியனவற்றை உச்சரிப்பதும் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க உதவும்.  

மனது வைத்தால் முடியாதது ஏதேனும் உண்டா?

இதன்பின்னரும் பிறமொழி எழுத்துகளை/அதன் உச்சரிப்பிலேயே தமிழில் ஒலிக்க கிரந்த எழுத்துகளை ஆதரிக்கும் நபர்கள் இருப்பின் ஒரு வேண்டுகோள்.

ல/ழ/ள, ண/ந/ன, ர/ற, ங/ஞ உச்சரிப்புகளை வேறுபடுத்த பிறமொழிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் அம்மொழிகளில் தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துகள் குறித்தும் தெரியப்படுத்துங்கள். தமிழில் கிரந்த எழுத்துகள் இருக்கலாமா என்பது குறித்து அதன்பின்னர் விவாதிப்போம்.

த.க.தமிழ் பாரதன் | 30.09.2020

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

புது வெள்ளை மழையும் ஆகாய கங்கையும் எம்.ஜி. வல்லபனும்

கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் என்ன நடக்குமோ என்று அறியாத பதட்டம் எல்லாருக்கும் இருந்தது.

மார்ச் 18 புதன்கிழமை காலை அகில இந்திய வானொலியில் பணி. காலை 4 மணிக்கே தயாராயாச்சு. சிலநாள் முன்பு வாங்கிய டெட்டால் சுத்திகரிப்பானைப் பையில் எடுத்து வைத்திருந்தேன். முன்னிரவு தயாரித்துவைத்த சிற்றுணவு எடுத்துக்கொண்டு, வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலி வாகனம் அனுப்பும். அந்த வாகனத்தில் Location பார்க்கும் வசதி கிடையாது. வாகன ஓட்டிக்கு இந்திதான் தெரியும். அவருக்குப் புரியும் இந்தியில் பேசி, எனது இருப்பிடத்திற்கு வரவைத்துவிட்டால் வெற்றிபெற்ற உணர்வு இருக்கும். நல்லவேளை, அன்றைக்கு வாகனஓட்டி சொன்னதைப் புரிந்து வந்துவிட்டார்.

ஒருவார காலமாக வெளியே செல்லாமல் தப்பித்த எனக்கு, அன்றைக்குப் பணிக்குச் சென்றே ஆகவேண்டும். பெரும்பாலும் தில்லி வீதிகள் காலை 4 மணியளவில் வெறிச்சோடி இருக்கும். இப்போது, கொரோனா தொல்லை வேறு.  சிலபத்து நிமிடங்களில் ஆகாசவாணி பவன் வந்துவிட்டது. அங்கே, சானிடைசர் சுத்தம் செய்து அனுப்பினார்கள். ஒலிபரப்பு அறைக்குள் செல்லும்வரை அப்பாடா என்றிருந்தது.

இப்போது ஏன் இதெல்லாம் சொல்கிறேன் எனக் குழம்புவதைவிட பத்துப் பங்கு அதிகக் குழப்பங்களைக் கொரோனா ஏற்படுத்தியிருந்தது. கொரோனா நோய்தொற்று என்ற புரிதலெல்லாம் இல்லை. தொற்றுநோய் என்றே அஞ்சிக்கொண்டு மூளையைக் குழப்பும் செய்திகள்-பகிர்வுகள் நடந்துகொண்டிருந்தன. எல்லாமே அந்த அறைக்குள் போகும்வரை. எதுவும் ஒலிபரப்பைப் பாதிக்கக்கூடாதென உறுதிஎடுத்தாலும், சிலதடங்கல் வந்திருந்தது. இனி, இந்த அறைக்கு வருவோமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். உண்மைதான். ஆறுமாதம் ஆகிவிட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் ஒலிபரப்பு இன்னும் தொடங்கியதாயில்லை.

05.30 – 06.15 வரையிலான நிகழ்ச்சியை அடுக்கி வைக்க வேண்டும். 05.50 வரை உரிய அனைத்தும் இடம்பெற்றுவிட்டது. 05.50 க்கு வாசிக்க வேண்டிய ஆங்கில உரையின் தமிழாக்கம் தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய A Regional Response To COVID-19 Challenge ஆங்கில உரையின் தமிழாக்கம் கையில் இருந்தது. இதற்கடுத்து புதன்கிழமைக்கு என்றே ஒலிபரப்பாகும் ‘சந்திப்பில் இன்று’ நிகழ்வு 05.55 அளவில் தொடங்கும். அதில் அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களை கவிஞர் இரவி சுப்பிரமணியன் அவர்கள் கண்டிருந்த பேட்டியின் நிறைவுப் பகுதி இடம்பெற்றது. 06.06க்குப் பிறகு இரண்டு பாடல்களே இடம்பெற நேரமிருந்தது.

முதல்நாளே நேய(ர்!) விருப்பமாக, ஏஆர் ரகுமான் பாடல் கேட்டிருந்ததால் “புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது”  பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாகிவிட்டது.  அடுத்து, ஒரு பாடல் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்று பெருங்குழப்பம் நிரம்பியிருந்தது. இந்தக் குழப்பமான சூழலில் உற்சாகமான ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தேடினேன் தேடினேன் தேடினேன். இளையராஜா பாடல்களில் உற்சாகமான, காதலான, வானொலியில் ஒலிபரப்பத்தக்க, காலையில் கேட்கத்தக்க, கணினியில் இருப்பில் உள்ள பாடல்களில் தேடித் தெளிந்து ஒரு பாடல் எடுத்தேன். “ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி… பொன்மான் விழி தேடி…”.  புது வெள்ளை மழைக்கும் ஆகாய கங்கைக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றியது. ஒலிபரப்புக்குத் தயாரானேன்.

வானொலியில் ஒலிபரப்பு செய்யும் அனைத்துக்கும் சான்று/எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும். Que sheet என்று சொல்வார்கள். எக்காலத்திலோ பாடல் வெளியாகிருந்தாலும் இன்றைக்கு ஒலிபரப்பினாலும், பாடல் வெளியிட்ட நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட சதவீதத் தொகை ராயல்டியாகச் செல்லும்/செல்லவேண்டும் என்பது  வழக்கு. அப்படிக் குறிக்கும்போது வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் தவிர, பாடல் குறித்த இன்னபிற தகவல்களையும் அளிக்க வேண்டும்.

எந்தப் படம், யாருடைய குரல், யாருடைய இசை, என்பதுதான் அவை. இதோடு அது யாருடைய வரிகள் என்பதும் அத்தியாவசியம். பெரும்பாலும், இசைத் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் பெயர் விடுபட்டுப் போய்விடும். அறிந்தவரை, வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்தான், பாடாலாசிரியர் பெயர் தவறாமல் இடம்பெறும். வரிகள் இல்லையென்றால், அப்பாடல் வெறும் இசைக்கோவையாகத்தான் இருக்கும். வரிகளை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிடுதல் அடிப்படையானது. இணையத்தில் தேடினாலும், பாடலாசிரியரின் பெயரை பெரும்பாலான இணையதளங்கள் விட்டுவிடுகின்றன. தற்போது வெளியாகும் புதுப்படப் பாடல்களில் lyrics : என்று பாடலாசிரியர் பெயர் இடம்பெற்றாலும், பழைய பாடல்களில் இத்தெளிவு இருப்பதேயில்லை.

சரி விசயம் இதுதான். அன்றைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு பாடல்களும் வைரமுத்து எழுதியது என்று எண்ணியிருந்தேன். ஆனால், ஆகாய கங்கை பாடல் எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். பாடலாசிரியர் பெயர் அறிமுகமே இல்லை. அத்தனைமுறை இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட இவர் பெயரைச் சொன்னதாயில்லை. எம்.ஜி. வல்லபன் குறித்த நிகழ்வு முடிந்து தேடுவோம் என்று முடிதாயிற்று.

நோய்த்தொற்று சூழ் சூழலில் பாடல் ஒலிபரப்பும்முன் சொல்லும் பாடல் விளக்க/அறிமுகத்தில் கொஞ்சம் உற்சாகமான வரிகளை அள்ளித்தெளித்து எழுதிமுடிக்கையில் 05.30 வந்துவிட்டது.

·         வந்தேமாதரம், திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் தொடங்கி 

·         மங்கல இசை

·         தமிழ்ச்செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பு

·         நிகழ்ச்சிக் குறிப்புகள்

·         பக்தி இசை

·         குறளமுதம்

·         ஆய்வுரை

·         சந்திப்பில் இன்று முடித்து

பாடலுக்கு வந்தாயிற்று. பாடலை அறிமுகம் செய்து “ஆகாய கங்கை” ஒலிபரப்பாகையில் முழுதும் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருந்தன. ஆகாய – இந்த எழுத்துகளில் ஆ-3 அசையும் கா-2 அசையும் கொடுத்து பாடியிருப்பார் காந்தக்குரலோன் மலேசியா வாசுதேவன். எளிய சொற்சேர்க்கை கொண்ட அற்புதமான வரிகள், ஹம்மிங் சேர்த்து இளையராஜா அசத்தி இருப்பார். “பாடுதே மங்களம் – நாடுதே சங்கமம்”, “சீதா புகழ் ராமன்” சொற்களைச் சுருக்கி பொருண்மையைப் பெருக்கியிருந்தார் எம்.ஜி. வல்லபன்.

அடுத்த பாடல், நேய(ர்!) விருப்பமான புதுவெள்ளை மழை பாடல் சொல்லவே வேண்டாம். தற்காலத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயமான பாட்டு. முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த நாளில்,  நான்கைந்து வரிகள் அள்ளித்தெளித்து அந்தப் பாட்டை ஒலிபரப்பினேன். அதுதான் கடைசியாக ஒலிபரப்பிய பாட்டு. நிறைவான பாட்டு. அன்றைய ஒலிபரப்பை 06.15க்கு நிறைவு செய்ததோடு, வெளியே வந்து தமிழகத்திற்கு விமானச்சீட்டு பதிவு செய்தாயிற்று. ஆறுமாதம் ஓடியும் விட்டது.

*

இளையராஜாவோடு பல பாடல்கள் உருவாக்கியிருக்கும் எம்.ஜி.வல்லபன்,  “மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”, “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” முதலான வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். கேரள மாநிலத்தின் திருச்சூரில் பிறந்த எம்.ஜி. வல்லபன் பின்னாளில் தமிழ்த்திரையுலகில் காலடி வைக்கிறார். தமிழ் இதழியல் பயின்ற அவர், ஃபிலிமாலாயா இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்றறிய முடிகிறது. வெள்ளித்திரையில் பாடலாசிரியராக மட்டுமின்றி, கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். தைப்பொங்கல் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுபோல் எத்தனையோ கலைஞர்கள் மகத்தான பங்களிப்பு செய்திருந்தும், அவர்களது படைப்புகள் வெற்றியடைந்திருந்தும் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரை அடையாளப்படுத்தாமல் போவது வருதத்திற்குரியதே. பண்பலை ஒலிபரப்பிலும், இசைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

- தக | 18.09.2020