நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 31 ஜூலை, 2015

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

உயிர் பிரிந்த கலாமின் உணர்வுகளை மெய்பிப்போம்.

எல்லாரின் பிறப்புகளையும் இறப்புக்குள் அடக்கி விட முடியாது என்ற முன்னோடி கருத்துக்கு அப்துல் கலாமே சான்று. நான் முன்னெடுத்த ஆட்சி, அதிகாரம், பணம், புகழ், செல்வாக்கு, பெருமை, அரசியல் என்ற கோட்பாடுகளில் பலவற்றை தன்னிறைவோடு பெற்ற ஓரே நபர். அதைத் தாண்டி சிலவற்றையும் எனக்கு கற்பிதங்களாக தந்தவர் அப்துல் கலாம் மட்டுமே.

காலத்தின் கட்டாயத்தில் மறைந்திருக்கின்றார் என்றால், கலாமின் கட்டாயத்தில் பல கோடி பேர் நன்மக்களாக உருவாகி இருக்கின்றனர் என்பது மெய். நான் உலகை உணர ஆரம்பித்த நொடியில் எனக்கு அறிமுகப் படுத்தப் பட்ட அணு ஆயுதம், அறிவாயுதம், அப்துல் கலாம். காந்தி, கக்கன், காமராஜர் என நம் முன்னோடி முன்னோர்கள் வாழ்ந்த இறந்தகாலத்தில் வாழ முடியாத சூழலில், நம் நிகழ்காலத்தில் வாழ்ந்த முன்னோடி அப்துல் கலாம்.

இவரைப் போல இவன் உருவாக வேண்டும் என்றே ஆசிரியர்களும், அன்னை தந்தையும் ஆசைப்பட்டனர். ஆனால், நான் நானாகவே பிரசவிக்கப்படேன், நானாகவே தான் உருவானேன். ஆனால், பலரின் தாக்கங்கள் என்னுள் விதைத்துக்கொண்டேன். அந்தத் தாக்கத்தில் இறுதி வரை “இவர் தான் அப்துல் கலாம்” எனும் என்னுடைய வரையறைக்குள் வராது நின்றவர் தான் கலாம்.

தன்னுடைய வாழ்நாளில் எல்லாருக்காகவும் ஓடி உழைத்த பெருமை,
அதன் பலனை இந்தியாவுக்கு கொடுத்த பெருமை
திருமகன் அப்துல் கலாமையே சாரும்.

என்னுடைய வாழ்நாளில் நான் எப்படியும் அப்துல் கலாமோடு நின்று படம் எடுத்துக் கொள்வேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு கலாமின் வாழ்நாள் ஒத்துழைக்க வில்லை. இருப்பினும் அவரை நேரில் பார்க்கும் பேறு கிடைத்தது கவிஞர் வைரமுத்துவினால் தான். கவிஞரின் மணி விழா நிகழ்விற்கு பரிசு வாங்க சென்ற போது அப்துல் கலாமின் உரையையும் அவரது திருஉருவத்தையும் காண முடிந்தது. அந்தக் கணங்கள் தான் நீங்கள் இங்கு பார்க்கும் படங்கள்.

அவர் கூறிய எத்தனையோ குறிக்கோள்கள் நிறைவேறியும், நிறைவேற காத்துக் கொண்டும் இருக்கின்றன. அவரை மதித்த மக்கள் அவருக்காக செய்ய வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அது குறித்து பேசவே மறுக்கும் மக்களால் எப்படி செயல்படுத்த முடியும். நேற்று (29.௦7.2௦15) உள்ளூர் தொலைக்காட்சியில் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாம் பற்றிய கருத்துகளை பகிர்வதற்கு இரண்டு பேர் தான் முன்வந்தனர். ஒரு மணி நேர நிகழ்வில் 2 மட்டுமே பேசுதல் என்பது சாதாரண நடிகன், நீங்கள் கேட்டவை, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றில் நிகழாது ஒன்று.

இது ஒரு உதாரணம். இவை போன்ற குறைபாடுகள் எண்ணற்ற அளவில் பாடுபொருளாக இருக்கின்ற இந்தியாவை தான் 2௦2௦ல் வல்லரசாக்க விரும்பினார் கலாம். அந்த எண்ணத்தை ஈடேற்ற “ ஒவ்வொரு உண்மை இளைஞன் பலருக்கு இணையாக பாடுபட வேண்டி இருக்கும்”.

இவையெல்லாம் “நிச்சயம் ஒரு நாள் விடியும்., அது நம்மால் மட்டுமே முடியும்”, என்கின்ற எண்ணத்தில் களத்தில் இறங்கத் தயாராகி விட்டோம். எதைப் பாடுபொருளாகக் கொண்டு என்னை சீர்படுத்துவது என்றிருந்தேன். அந்த முயற்சிக்கு ஒரு உடனடி பாதையை தற்போதைய சூழ்நிலைகள் உருவாக்கி இருக்கின்றன. உருவாக வைத்திருக்கின்றன.

அவரைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அவர் விட்டுச் சென்ற செயல்களுக்கு உயிர் வடிவம் கொடுப்பதும் நமக்கு கடைமையாக இருக்கிறது. அவரது கனவோடு சேர்த்து நமது கனவும் மெய்ப்படட்டும்.

சராசரியும் சாதனை ஆகின்றது, அதன் சரித்திரப் பின்னணியில்.....

த.க.தமிழ் பாரதன்

வார்த்தெடுக்க வந்த கேசி



வார்த்தெடுக்க வந்த கேசி. 



திருவாரூர் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பிரபலாமன பெயர் கே.சந்திரசேகரன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர். இதனால் பரவாலாக அறிவொளி சந்திரசேகர் என அறியப்பட்டிருந்தார். எங்களால் சுருக்கமாக கேசி சார் என்று அழைக்கப்பட்டிருந்தார்அப்துல் கலாம் தன் கடைசி மூச்சு வரை எப்படி மாணவர்களுக்காக உழைத்தாரோ அதுபோல தன்னுடைய இறுதி நாள் வரை மாணவர்களுக்கு கல்வி போதித்து மாரடைப்பால் மறைந்திருகிறார்.

பல்வேறு சமூக தன்னார்வ அமைப்புகளிலும் இருந்த கே.சி குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அறிவியல் இயக்கத்தின் முன்னணி தலைவராக வாழ்ந்திருக்கிறார். இவர் அன்றாடம் VAO பணி முடிந்த நேரம் போக மிச்ச நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊட்டியிந்ததை நானறிவேன். ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா நிகழ்ச்சி நடத்தி காட்டியவர். இவரிடம் பரிசு வாங்குவதற்காக சிறு பிள்ளை காலத்தில் நிறைய அறிந்து கொண்டிருக்கிறேன். சில வினாடி வினாக்களில் தோற்றதால் என்னுடைய பள்ளிப் படிப்பின் கடைசி நான்காண்டுகள் தொடர்ந்து மாநிலப் போட்டி வரை முன்னேறிய பெருமை முழுமையும் கேசியின் ஈடுபாட்டிற்கே சென்று சேரும்.

எளிய அறிவியல் பரிசோதனை பல்லாயிரம் மாணவர்களுக்கு நிகழ்த்தியவர், தொழில்நுட்பம் என்னா தான் வளர்ந்தாலும் இன்னும் அவரது அறிவியல் பரிசோதனைகள் கிராமத்து மாணவர்களுக்கு அதிசயங்களாகவே திகழ்கின்றன. வருடத்திற்கு பல்லாயிரம் மாணவர்களுக்கும் அதிகமாக அறிவியல் திறன் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். குழந்தைகள் பலர் அவரை செல்லமாக தாத்தா என்றே அழைக்கும் (சில நேரங்களில் நாங்களும் கூட). அந்தளவுக்கு அவருக்கும் குழந்தைகளை பிடிக்கும்.

திருவாரூர் பகுதியில் அரசு தேர்வுக்கு பல மாணவர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இதற்காக எந்த பயிற்சி கட்டணமும் இவர் வாங்க வில்லை என்பதற்கு இவரிடம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையே சாட்சி. இந்த இலவச பயிற்சி மூலம் இது வரை 9௦க்கும் மேற்பட்டவர்களை அரசுப் பணிக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராமங்கலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர்.

கடைசியாக நடைபெற்ற SI தேர்வில் கூட இவரிடம் பயின்ற பரணிஎன்ற பெண்மணி தேர்வாகி இருக்கிறார். அறிவு சார்ந்த புத்தகங்களை தன் பையில் சுமந்து கொண்டே தான் செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகங்களை தரக்கூடிய பண்புடையவர். தன்னுடைய VAOபணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இன்னும் அவர் சுறுசுறுப்பானார்.

சென்னையில் உள்ள மகன் வீட்டில் எல்லாரும் குடியேற சென்னை வாழ்க்கை தன் ஆரோக்கிய பயணத்தை தடை செய்வதை உணர்ந்து முழு நேரமாக மாணவர்களை உருவாக்கினார். திங்கள் முதல் வெள்ளி வரை சென்னை வாசமும், சனி ஞாயிறில் திருவாருரும் அவருக்கு இடம் கொடுத்தது. இது இல்லாமல் அறிவியல் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்வதும் பழக்கம்.

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற குருப் 2 தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்ய திருவாரூர் வந்தவர், முடிந்த உடனே ஞாயிறு சென்னை செல்ல வேண்டியவர். செல்லாமல், மாணவர்களை வீட்டிற்கே வரச் சொல்லி ஒரு வார காலம் பயிற்சி கொடுக்க நினைத்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையாலே உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார் கேசி. காலை வகுப்பின் போது அப்துல் கலாம் பற்றிய முழு தகவலையும் அளித்தவர் , இன்னும் பத்தாண்டு காலம் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று சொன்னவர் இப்பொது இல்லையே என்று வருத்தப்படுகிறார் சிவா அண்ணன். குருப் 1 தேர்வுக்காக பயிற்சி பெறும் மாணவரான இவர் காலை பயிற்சி முடித்து தன்னுடைய வீட்டிற்குள் நுழையும் போது நான் கேசி இறந்த செய்தியை நான் எப்படி நம்ப முடியாமல் தவித்தேனோ அப்படியே தவித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

இனி திருவாரூரில் இது போல் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப் போவதுமில்லை, நடத்துவதற்கு இவரைப் போன்ற ஆளும் இல்லை என்பது சிவா அண்ணனின் தனிப் பட்ட கருத்து என்றாலும் கூட. இது போல் நடத்தினாலும் இவர் போல் பழக ஆளில்லை என்பது மெய். அரசுத் துறை நிகழ்ச்சி பலவற்றில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இவருக்கு தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அழைப்பு வரும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் கேசி தான் திருவாரூர் மாவட்ட செயலாளர். அந்தப் பதவி மீது அவருக்கு ஏகப்பட்ட விருப்பம். யாருக்காகவும் அதை தர மாட்டார். இந்த வருடத்தில் அடுத்தவருக்கு வாய்ப்பு தர முடிவுகள் எடுக்கப்படலாம் என பேச்சுகள் அடிபட்டன. எது நடந்தாலும் தன்னுடைய எண்ணத்தில் நிலைத்து நின்றார். அவனுங்க கடக்குரானுங்க., எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்என்று சொன்னவர், கடைசி வரை தான் இருந்த அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பதவியோடே ஓய்வு பெற்றிருப்பதும் ஒரு ஆளுமையே. நான் திருவாரூர் ஒன்றிய செயலாளராக இருக்கட்டுமா? என்று கேட்க, இரு ! நான் உனக்கு நிறைய சொல்றேன். அவனுங்க மாதிரி இருக்காதே. அறிவியலை ஆராய்ந்து முதலில் கற்றுக் கொள். நீ முதலில் முழுமையானால் தான் மற்றவருக்கு அறிவுறுத்த தகுதியானவன் ஆவாய், என்றார். தற்போது நான் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் கேசி எங்கே ?

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு செய்தித் தாள்களை படித்து அவற்றின் முக்கிய குறிப்புகளை சேகரித்து பைண்டிங் செய்து வைத்திருக்கும் இவர் இதுவரை சேகரித்த புத்தகங்கள் பல்லாயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
தான் இறந்தாலும் தானம் செய்ய வேண்டி கண் தானம் செய்திருக்கிறார். சென்னையில் இருந்து உறவினர்கள் வருவதற்குள் திருவாரூர் சமூக ஆர்வலர்கள் கேசி-யின் இல்லத்தை சூழ்ந்தனர் என்பது அவரது ஓட்டத்திற்கு கிடைத்த ஊதியம்.

இவருக்கு நான் முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டுகள் அதிகம், அதை விட ரத்து செய்த சீட்டுகள் அதிகம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை, சில நாட்களில் அதற்கும் அதிகமுறை அலைபேசி அழைத்து பேசிவிடுவார். எதற்காக செய்தார் ? நான் நினைத்துக் கொள்வேன் யாரிடமாவது பேசினால் ஏதேனும் மானுட தைரியம் வரும் என்று., ஆனால் இனிமேல் யார் அழைப்பார்கள் தன்னைப் பற்றி என்னைப் பற்றி விவரிக்க. இவரது பயிற்சி மையத்திற்கு ஆள் சேர்க்கும் பொறுப்பு என்னிடம் தந்தார். எல்லா கல்லூரிகளிலும், என் கல்லூரி வகுப்புகள் பலவற்றிலும், அரசு வேலை தேடி செல்பவர்களிடத்திலும் நான் அறிமுகப்படுத்தியதுண்டு கேசி முகவரியை. தானே இல்லை என்றாலும் தன் வீட்டில் வகுப்பு நடக்கும் அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு பயணம் சென்றிருக்கிறார். அந்த பயணங்கள் முடிந்து திரும்பி வந்தவர், தன் பயணத்தை நீண்ட நெடியதாக மாற்றி இருக்கிறார்.

சிறுவயதில் போலியோ சொட்டு மருந்து பெற்ற நான், ஒரு குழந்தைக்காவது போலியோ மருந்து இட வேண்டும் என நினைத்த எண்ணத்தை மெய்ப்படாக்கி காட்டியவர் கேசி மட்டுமே. அதற்காக என்னை அரை மணி நேரம் தயார் செய்தார், தயாரானேன். அந்தப் படம் தான் நானும் அவரும் ஒருங்கே இருந்து என்னிடம் இருக்கும் ஒரே படம்.

பத்திரிக்கையாளர் ஆன பின் நான் பகலில் தூங்கியே பல மாதங்கள் சென்றிருக்கின்றன. 12.7.215 அன்று ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கேசி வீட்டில் நடந்த பயிற்சி வகுப்பில் ஊஞ்சலில் உட்கார்ந்தே தூங்கியது தான் நினைவுக்கு வருகின்றன. இதுவரை நான் கூறிய அலட்சிய பதில்களை அலட்சியம் செய்த ஒரே நபர் கேசி இவர் மட்டுமே. இதனை எல்லாம் உடனே பதிவேற்ற நேரம் சரிவர வில்லை. இதற்கு முன்னர் மறைந்த அப்துல் கலாம்க்கு இன்னும் நான் பதிவுகள் செய்யவில்லை முகநூலில். என்னுடன் வினாடி வினாவுக்கு சென்ற அண்ணன் சுதர்சனின் வேண்டுகோளினாலும் என்னுடைய நீண்ட நீங்காத நினைவுகளாலும் இதனை தற்போது உங்கள் மத்தியில் வைத்திருக்கின்றேன்.

கேசி போல் எத்தனை பேர் எல்லா இடங்களிலும் சாத்தியம் ?

பலன் எதுவென்று அறியாது பதவி முடிகிறது,
அந்தப் பலன் வெகு நாளைக்குப் பின்,
உணர்வுகளால் பெறப்படுகின்றது.
உயிர் பிறந்த பின்னரும்..... 

த.க.தமிழ் பாரதன்

செவ்வாய், 28 ஜூலை, 2015

இராஷ்ட்ரபதி பவனை தமிழன் ஆண்ட வரலாறு

இராஷ்ட்ரபதி பவனை தமிழன் ஆண்ட வரலாறு
இன்னொரு அப்துல்கலாமை
தமிழகத்தின் எந்த ஒரு 
ஆங்கிலப் வழி பள்ளியாலும்
உருவாக்கி விட முடியாது.

இராமேஸ்வரத்தில் பிறந்த படகோட்டி மகன்,
இராஷ்ட்ரபதி பவனை ஆண்ட வரலாறு

சராசரி என்று யாருமில்லை.

சராசரி என்று யாருமில்லை.....
நாம் சராசரி அல்ல, 
என்பதை சரமாரியாக 
மாறும் போது உணர்கிறோம்.

வாழ்விக்க வந்த வள்ளலார்

வாழ்விக்க வந்த வள்ளலார்
12.07.2015 நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நெம்மேலி வள்ளலார் தெருவில் அமைத்திருக்கக் கூடிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு வாழ்விக்க வந்த வள்ளலார் எனும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவு உரை

நீ சிந்துகிற ஒவ்வொரு சாதத்திலும் எழுதப்பட்ட உன் பெயரை அழித்துக் கொள்கிறாய்....

உன் பெயரை அழித்துக் கொள்கிறாய்....

விவசாயத்தை குழந்தைகளுக்கு விதையுங்கள்..
இல்லை சிந்தாமல் உண்ணவாவது சொல்லித் தாருங்கள் பெற்றோர்களே...