நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 4 மார்ச், 2023

காவு வாங்கும் சாலைகள் - காவு கொடுக்கும் அரசாங்கம்

#காவு_வாங்கும்_சாலைகள் #காவு_கொடுக்கும்_அரசாங்கம் 

திரு ஸ்டாலின் ஜேக்கப் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தத்திற்குரியது. ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து வாடுவோரின் உடனிற்போம். 

அவரது மறைவையொட்டிய இரங்கற் பதிவுகள் முகநூல் முழுதும் நீண்டிருக்கின்றன. நல்ல வாழ்க்கை வாழ்ந்து நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறார். 

இப்படிப்பட்ட இளவயது மனிதரின் இறப்பின் பின்னணி குறித்து முதல் தகவல் அறிக்கை வந்ததும் தெரியவரும் -  எங்கு தவறு நிகழ்ந்தது, விபத்திற்குக் காரணம் எது என்று. சாலைவிபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முற்போக்காளர்களால் அவருக்கென எழுதப்பட்ட இரங்கற்பதிவுகள் சில அபத்தமாகவும் மரணத்தை 'நார்மலைஸ்' செய்யும் விதத்திலும் அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

"அப்படி என்னய்யா அவசரம்?"
அவர் என்ன வேண்டுமென்றேவா இறந்தார். 

"வாழ்க்கை நிரந்தரமற்றது" யார் வேணும்னாலும் எப்ப வேணாலும் சாவலாம். அது உன்னிடமோ என்னிடமோ இல்லை. எதிரில் வருபவன் முட்டாள் தனமாக வண்டியேற்றி நம்மைக் கொன்றாலும் இதே வசனத்தைப் பேசி இரங்கற்பதிவு போட்டுட்டா வேலை முடிஞ்சிடுச்சு 😤 அதானே

"கலைஞரிடமே சென்றுவிட்டான்" இப்படியான கூற்றுகள் வழி மரணத்தைப் புனிதப்படுத்தி ஆசுவாசம் செய்துகொள்வது. சராசரிக் குடும்பங்களில் வழக்கமாகப் பாட்டிமார்கள் தான் இத்தகைய வேலையைச் செய்வர்.

இதெல்லாம் ஒரு விபத்தின் வீரியத்தை உணர முடியாமல் அதை ஏற்றுக்கொண்டுப் பழகிய மனதின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். ஆம்பள-ன்னா அப்படித்தான்  எனும் ஆணாதிக்கச் சிந்தனை போல, சாலைன்னா முன்ன பின்னதான் இருக்கும் - விபத்து நடக்கும் - நாமதான் கவனமா இருக்கணும் என்று பழக்கப்படுத்திவிட்டார்கள். 

கை கால் முறிவு - இயல்பு வாழ்க்கையையே புரட்டிவிடும். மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாகும். விபத்து குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும்  எல்லாநாளும் இடம்பெற்றிடுகிறது. இது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல; அவமானத்திற்குரியது.

சென்னையின் முதன்மைச் சாலைகள், புறவழிச்சாலைகள் தேவலாம். ஆனால், உள்பக்கச் சாலைகளின் தரம் கேள்விக்குறியே. வடபழனிக்கு உள்பக்கம் மிக மிக மோசமான சாலைகள்.  மாநிலத்தின் எத்தனை ஊர்களில் இதே நிலை எனத் தெரியவில்லை. மோசமான சாலைகளால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன.

எனக்குத் தெரிந்து/த திருவாரூரின் பெரும்பாலான சாலைகள்   மோசமானவை. கடந்த சனவரி மாதத்தில் புழுதிக்காடாக இருந்தது திருவாரூர். திருவாரூரில் கை உடைந்து கால் உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் ஏராளம். சாலை விபத்துகளில் மரணித்த நபர்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகம்.

 திருவாரூரைச் சேர்ந்த செல்வாக்குமிக்க முக்கியமான ஒருவரிடம், ஏன் இந்தச் சாலை இப்படி இருக்கிறது. நல்ல சாலை போட்டால் என்ன? நீங்க சொல்லக்கூடாதா என்று கேட்டதற்கு, "நீங்க வேற தம்பி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரே அவரோட அலுவலகத்துக்கு இந்தச் சாலைல தான் வர்றார். அவருக்குத் தெரியாதா? நா வேற சொல்லணுமா" என்றார்.

அரசாங்கத்தினர், அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வளவு மந்தமாக இயங்குவதும் இதான் தலைவிதி என்று மக்கள் மூக்கைப் பொத்திக் கடந்து செல்வது நார்மலைஸ் ஆக்கப்பட்டுவிட்டது.

சாலைகள் காவு வாங்குகின்றன. சாலை வரி செலுத்தியும் தரமான சாலை அமைக்கமால் காலம்தாழ்த்தும் அரசாங்கத்தால் மக்கள் சாகடிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நடத்தும் மது பானக் கடைகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களால் எதிரில் வருபவர்கள் சாகடிக்கப்படுகின்றனர். முறையான ஓட்டுநர் பயிற்சி அளிக்காமல், உரிய சாலை விதிகளைப் பயிற்றுவிக்காமல்,  தற்காலத்திற்கேற்ப நவீன முறையில் Test ஏதும் வைக்காமல் அரசாங்கம் வழங்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர்களால்  மக்கள் சாகடிக்கப்படுகின்றனர்.

இதை நீட்டித்துக் கொண்டே சென்றால், அந்நியன் படத்தில் அந்தக் குழந்தை  இறப்புக்குக் காரணமாக அத்தனை பேரையும் குற்றஞ்சாட்டியதுபோல் நீளும். உண்மையில் அத்தனை பேரும் குற்றவாளிகள் தான். உரிய சாலைகளை உடனடியாக அமைத்துத்தர இயலாத அரசாங்கத்தைக் கேள்வி கேட்காமல், எப்போதும் துதிபாடி துதிபாடி நம்மைச் சேர்ந்தவர்கள் இறந்தால்கூட இரங்கற்பதிவு எழுதி கடந்து செல்வதே வழக்கமாகிவிட்டது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் மாமனார், மருமகன் ஒரே நேரத்தில் மோசமான சாலையில் அரசுப் பேருந்து நடத்திய விபத்தில் சாகடிக்கப்பட்டனர். அந்த குடும்பம் இன்னும் மீளவில்லை. அந்தச்சாலையும் நான்காண்டுகளாகியும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதுபோல் எத்தனை குடும்பங்கள் சிதைந்துள்ளன. 

இதுவெல்லாமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணங்களாகாதா?

சாலையில் நிகழும் விபத்துகள் யாருடைய குறை/தவறு எங்கே இருக்கிறது.?

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் இல்லாத நாளே, குடிமக்களைக் காக்கும் நல்ல அரசாங்கத்தின் அடையாள நாளாம். இது கனவாக மட்டுமின்றி நனவாக முதலமைச்சர் ஆவண செய்யவேண்டும்.

தக | 04.03.2023

வெள்ளி, 29 ஜூலை, 2022

Tamil Abbreviation

 

AoA

Articles of Association நிறுவனத்தின் சட்ட திட்டங்கள்

CMA

Commissionerate of Municipal Administration நகராட்சி நிர்வாகத்துறை

CMDA

Chennai Metropolitan Development Authority சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

CMWSSB

Chennai Metropolitan Water Supply and Sewerage Board - சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்

CTE

Consent to Establish நிறுவுவதற்கான ஒப்புதல்

CTO

Consent to Operate இயக்குவதற்கான ஒப்புதல்

DIN

Director Identification Number இயக்குநர் அடையாள எண்

DISH

Directorate of Industrial Safety and Health – தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

DSC

DTCP

Digital Signature Certificate – டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்

Directorate of Town and Country Planningநகர் ஊரமைப்பு இயக்ககம்

DTP

Directorate of Town Panchayat – பேரூராட்சிகளின் இயக்ககம்

EC

Encumbrance certificate வில்லங்கச் சான்றிதழ்

GCC

Greater Chennai Corporation – பெருநகர சென்னை மாநகராட்சி

GST IN

Goods & Service Tax Identification Number – ஜிஎஸ்டி எண்

HT

High Tension மிகை அழுத்தம்

LLP

Limited Liability Partnership - வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில் நிறுவனம்

LT

Low Tension குறை அழுத்தம்

LUIS

Land Use Information System - நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு

MoA

Memorandum of Association – அமைப்பின் பதிவுக் குறிப்பு

NOC

No Objection Certificate – தடையில்லாச் சான்று

RDPR

Rural Development and Panchayat Raj – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

SEZ

Special Economic Zone – சிறப்புப் பொருளாதார மண்டலம்

SIDCO

Small Industries Development Corporation Limited – சிட்கோ

SIPCOT

The State Industries Promotion Corporation of Tamil Nadu – சிப்காட்

SPICe

Simplified Proforma for Incorporating a Company Electronically - நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான எளிமைப்படுத்தப்பட் படிவம்

TNEI

Tamil Nadu Electrical Inspectorate - தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை

TNFRS

TNGEDCO

Tamil Nadu Fire and Rescue Services – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

Tamil Nadu Generation and Distribution Corporation Limited – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

TNPCB

Tamil Nadu Pollution Control Board – தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

TWAD

Tamil Nadu Water Supply and Drainage Board – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

 


 

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

2022 காதலர் தின பரிசு!

அன்புத் தோழிக்கு,

வணக்கம். 
தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை.

தாங்கள் அனுப்பிவைத்த “ Happy Valantien's Day” வாழ்த்து அஞ்சல் கிடைத்தது

தங்கள் பரிசுகளுக்கு நன்றி

எனக்கு kit kat பிடிக்காது. ஆதலின், இனிமேல் இதை அனுப்ப    வேண்டாம்.

அந்த ஜிகினாதாள் ஒட்டப்பட்ட குடுவைக்குள் Ray Ban சன்கிளாஸ் இருந்தது. நல்லது. பெருஞ்செலவு செய்துள்ளீர்கள் போலும். 
ஆனால், என்ன செய்வது! என்னிடம் ஏற்கெனவே இருக்கிறதே. இப்போது இதனை என்ன செய்வது? தேவையின்றி செலவு செய்யாதீர்கள். 

அவசர அவசரமாக பிப்.14ஆம் நாள் விரைவு அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள். பொறுப்புணர்வே இல்லை. பிப். 15தான் எனக்குக் கிடைத்தது. 

ஆமாம்! அது என்ன "Happy Valantien's Day".  இப்படியான எழுத்துப்பிழைகளை இனிமேல் செய்யாதீர்கள். உங்கள் மீதான மதிப்பு குன்றிவிடுகிறது. 

அஞ்சலுறையில் உள்ள விவரங்கள் வாயிலாக உங்களை யாரென்று அறியமுடியவில்லை. அது போலி முகவரி. அதன் உண்மைத்தன்மை குறித்து மெனக்கெட விரும்பவில்லை. 

போலி முகவரியிலிருந்து அனுப்புபவை என்னை ஈர்ப்பதில்லை/ஈர்க்கப் போவதுமில்லை.  இனிமேல் போலி அடையாளங்களுடன் எதையும் அனுப்பாதீர்கள்.

புரிதலுக்கு நன்றி. 

இப்படிக்கு,
தங்களை யாரென்றறியாத
தக | 15.02.2022

பின்குறிப்பு : 
போலி முகவரியிலிருந்து அனுப்பப்பெறும் அஞ்சல்களை இனிமேல் பெறப்போவதில்லை.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தாலிபான்கள் அமைதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சோதிக்கும் அமெரிக்கா.

தாலிபான்கள் அமைதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சோதிக்கும் அமெரிக்கா.

February 7, 2020 Commentary

(தி இந்து பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டாச்சர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் தமிழ் பாரதன்)

அமெரிக்காவும், தாலிபான்களும் சமாதான உடன்படிக்கை குறித்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக, தற்காலிகப்  போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான காலக்கெடுவை  வெவ்வேறு தேதிகளில் அறிவித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்புகள் மிக நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. தாலிபான்களுடன் தொடர்பு கொள்ளும் நுட்பமான பணியை மேற்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சிறப்புப் பிரதிநிதியாக சல்மே கலீல்சாத்தை நியமித்ததிருந்தார். அதிலிருந்து பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த இரு தரப்பினருக்கும் இடையிலான நம்பிக்கையைப் போர் நிறுத்தம் சோதிக்கும். இருப்பினும், ஆப்கானிஸ்தான் பகுதியில் போரில்இரு தரப்பினரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

போர் நிறுத்தம் பத்து நாட்களுக்கு இருக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் தாலிபான்கள் அதற்கு ஏழு நாட்கள் கேட்டனர். இத்தகைய பேரம் பேசுதல், இருதரப்பினருக்கும் இடையேயான பரிவர்த்தனைகளின் ஒரு அங்கமாகும்.

2019 செப்டம்பரில் பேச்சுவார்த்தைகளில் அதிரடியான திருப்பங்கள் கூடிவருகின்ற வேளையில், தாலிபான் அரசியல் குழுவையும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியையும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் டிரம்ப் அவர்கள் அழைப்பு விடுத்தார். எனினும், அமைதிப் பேச்சுவார்த்தையைப்  பொருட்படுத்தாமல், காபூலுக்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது தாலிபான்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்தது.

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க, பல மாதங்களும் சர்வதேச அளவில்  சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் முயற்சியும் தேவைப்பட்டன. தற்போது, அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும்  நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே  தயாரிக்கப்பட்ட, இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட வரைவு ஒப்பந்தம் தயாராக இருப்பதாக தலிபான் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இரு தரப்பினரும் உத்தரவாதம் அளித்துள்ளதால், ஒப்பந்தத்தில் மாற்றங்கள் எதுவும் தேவை இல்லை என்றும் தாலிபான் கூறியுள்ளது. இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தகுந்த சூழலை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளது.

சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டபின், தாலிபான்கள் உண்மையிலேயே சண்டையை நிறுத்துவார்கள் என்பதற்கான நிரூபண ஆதாரங்களை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அவர்கள் தெரிவித்திருந்தார். முன்னர், ஒரு உடன்படிக்கைக்கு இருதரப்பினரும் நெருங்கி வந்ததாகவும், ஆனால், வன்முறையைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டையோ, திறனையோ  தாலிபான்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும் திரு. போம்பியோ கூறினார்.

தாலிபான்களின் அமைதிக்கான செயல் விளக்கம், அதிபர் கானி அரசாங்கத்துடன் மிகவும் கடினமான பேச்சுவார்த்தையைத்  தொடங்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டைக் குறிக்கும். சமாதான முன்னெடுப்புகளை உறுதி செய்து, பல  பத்தாண்டுகளாக  நிகழும்  ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவர இது இன்றியமையாததாகும்.

தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான செயல் விளக்க நிரூபணத்தை அமெரிக்கா கோருவதற்கு ஒரு காரணம், இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதேயாகும். பெரும்பாலான பாதுகாப்பு நிபுணர்களால் தாலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டு வருகிறது. தோஹாவில் அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், தாலிபான்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதுவரை, ஆப்கானிஸ்தான் அரசாங்கம், அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை எச்சரிக்கையுடனே நோக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அம்ருல்லா சலேஹ் அவர்கள், தாலிபான்களை நம்ப முடியாது என்று திட்டவட்டமாக விமரிசித்துள்ளார். அரசியல் தீர்வுக்கு வன்முறை பலனளிக்கப் போவதில்லை என்பதைத் தாலிபான்கள் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திரு. சலேஹ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், அமெரிக்காவும் தாலிபான்களும் ஒருவித ஒப்பந்தத்தை எட்டினாலும் கூட, ஆப்கானிஸ்தான் அரசின் முக்கியப் பிரமுகர்களின்  இத்தகைய அறிக்கைகள் , அமைதிக்கான பாதை கடினமான சவால்கள் நிறந்தது என்பதை  வெளிப்படுத்துகின்றன.

அதிபர் பதவிநீக்க செயல்முறையிலிருந்து கிட்டத்தட்ட சேதம் ஏதுமின்றித் தப்பியுள்ள அதிபர் டிரம்ப் அவர்கள், தற்போது வலுவான நிலையில் உள்ளார். எனவே, தாலிபான்களால் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கும், அதன் விளைவாகத் தனது வோட்டு வங்கி சீர்குலைக்கப்படுவதற்கும் அவர் அனுமதிக்க மாட்டார். தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான செயல் விளக்க நிரூபணத்தைக் கோருவதன் மூலம், தான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். நடப்பாண்டு ஜனவரி 3 ஆம் தேதியன்று, ஈரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையே ஆடுகளமாக உருவாகியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட இந்நாட்டில், எந்தவொரு சமாதான முன்னெடுப்பும் ஆப்கானிஸ்தான் அரசின் தலைமையிலும், அதன் சொந்தப் பொறுப்பிலும் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.. அமைதியான மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தானைக் காண இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்தியாவுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியதாக இல்லை..

தாலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சந்திப்பு எவ்வாறு முன்னேறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

சுதந்திர தின அன்பளிப்பு... கடிதம்

அன்புத் தோழிக்கு,

வணக்கம். தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை. தாங்கள் அனுப்பிவைத்த “சுதந்திர தின நாள் வாழ்த்து” கிடைத்தது.

தாங்கள் அனுப்பிய இரு புத்தகங்களுக்கும் நன்றி. நீங்கள் புத்தகம் வாங்கி அனுப்புவதற்கு முன்னதாகக் கேட்டிருந்தால் எனக்கு வேண்டியனவற்றைச் சொல்லியிருப்பேன் அல்லவா?. அடுத்தமுறை முன்கூட்டியே கேளுங்கள்.

இருபுத்தகங்களுக்கும் நடுவே நீங்கள் வைத்திருந்த cadbury dairymilk “Family Pack” என்னை வியப்பில் ஆழ்த்தியது. 90களின் குழந்தையாக வளர்ந்த நான், இந்த டைரிமில்க் சாக்லேட்டை விடுதலை நாளுக்கான பரிசாகவே எடுத்துக் கொள்கிறேன்.




இவற்றை அதிக செலவு செய்து விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். என்னிடம் முகவரி கேட்டிருந்தால், தெளிவாகச்  சொல்லியிருப்பேனே. நீங்கள் குறிப்பிட்டிருந்த தெருபெயர் தவறு. அஞ்சலகர் நன்கறிமுகமானவர் என்பதால், பெயரையும் ஊரையும் உறுதி செய்து என்னிடம் கொடுத்துச் சென்றார்.

அஞ்சலுறையில் உள்ள விவரங்கள் வாயிலாக உங்களை யாரென்று அறியமுடியவில்லை. அதன் உண்மைத்தன்மை குறித்தும் மெனக்கெட விரும்பவில்லை. விரைவில் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கிருந்தாவது இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதியுள்ளேன்.

இப்படிக்கு,

தங்களை யாரென்றறியாத

தக | 15.08.2021

பின்குறிப்பு : அன்பின் பொருட்டு, நூல்கள் அனுப்பும் தோழிகள் முன்கூட்டியே, எனக்குத் தேவைப்படும் நூல்களின் விவரங்களைக் கேட்டறியலாம். முகவரியை அனுப்பி வைக்கிறேன். விபிபி முறையில் அனுப்பப்படும் நூல்கள் ஏற்கப்படமாட்டாது. 

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

yuva scheme - காயம்பட்ட முயற்சிகளும் பதில்களற்ற கேள்விகளும்

#yuva #scheme #காயம்பட்ட_முயற்சிகளும் #பதில்களற்ற_கேள்விகளும்

குடிமைப்பணிகள் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களும் என் வளர்ச்சியில் அக்கறை உள்ளோரும் யுவா திட்டம் அறிவிக்கப்பெற்ற சில நாட்களிலேயே அதன் விவரங்களை அனுப்பி வைத்தனர். தவிர, பேசியில் இருந்த mygov செயலியும் யுவா திட்டம் குறித்த அறிவிப்பை வழங்கியது.



https://innovateindia.mygov.in/yuva/ என்ற இணையப் பக்கத்தில் யுவா திட்டம் குறித்த விவரங்கள் இடம்பெற்றன. யுவா திட்டத்தின் பொருண்மை: விடுதலைப் போராட்டம். திட்டம் குறித்து, முதலில் சிறுவிளக்கமே இடம்பெற்ற போதிலும், காலப்போக்கில் விரிவான அறிமுகம் தரப்பெற்றது. சூன் மாதம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வில் முழுமையாக ஈடுபட்டமையால், இத்திட்டத்தில் பங்கெடுப்பது குறித்துச் சிந்திக்க இயலவில்லை.

சூலை மாதத் தொடக்கத்தில், யுவா திட்டத்திற்கு எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. நான் வளர்ந்த நிலப்பரப்பான கீழத்தஞ்சையில் நிகழ்வுற்ற விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்வோம் என்று முடிவெடுத்தேன். கீழத்தஞ்சையில் நிகழ்ந்த விடுதலைக்கான போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று 1930இல் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகம். இந்த உப்பு சத்தியாகிரகம் குறித்துத் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மேடையிலும் தனி உரையாடலிலும் பேசக் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. 1930 ஏப்ரம்13 அன்று திருச்சியில் நடைபயணத்தைத் தொடங்கிய போராட்டக் குழுவினர், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வாயிலாக 1930 ஏப்ரல் 28 அன்று வேதாரண்யத்தை வந்தடைந்தனர். இடைப்பட்ட நாட்களில் போராட்டக் குழுவினர் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆங்கிலேயர்கள் விதித்த மிகுந்த கட்டுப்பாடுகளைத் தாண்டி, இந்த உப்பு சத்தியாகிரகம் நிகழ்வதற்கு எளிய மக்களின் பங்கு அளப்பரியது. 1930 ஏப்ரல் 30ஆம் நாள் ஆங்கிலேயர்களின் பார்வையிலிருந்து தப்பித்து, சக போராட்டக்காரர்கள் இராஜாஜியை அழைத்துச் சென்று உப்பு எடுக்க வைத்து உப்பு சத்தியாகிரகத்தை வெற்றிபெறச் செய்ததெல்லாம் சுவாரசியமான திரைப்படத்தின் இறுதிக்காட்சியாக வைக்கத்தக்கது. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் வேதரத்தினம்.


உப்பு சத்தியாகிரகத்துக்கு இராஜாஜி தலைமையேற்றமை-அதனையொட்டிய அரசியல், உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தூத்துக்குடியை விட்டுவிட்டு, வேதாரண்யத்தைத் தேர்வு செய்தது-அதன்பின்னணி, காவிரி டெல்டா நிலப்பரப்பு-கீழத்தஞ்சை வாழ்வியல், உழவியல்-உப்பளவியல், அக்காலத்திய கல்விமுறை, பண்பாடு, போக்குவரத்து இவற்றை அடியொற்றி வரலாற்றுப் புனைவு-புதினமாகப் படைப்பை அளிக்க எண்ணினேன்.

திருவாரூர் கடைத்தெருவில் உள்ள சக்தி மணிப்பொறியகத்தின் உரிமையாளர் சக்தி செல்வகணபதி அவர்கள் ஆண்டுதோறும் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் பயணம் மேற்கொள்வார். அவரிடம் முதற்கட்டமாகத் தரவுகள் திரட்டினேன்.

அடுத்தகட்டமாக, 13.07.2021 அன்று வேதாரண்யம் சென்றேன். வேதாரண்யத்தில் தெரிந்தவர் ஒருவரின் உதவியோடு களப்பயணம் மேற்கொண்டேன். உப்பளங்களில் உப்பு எடுக்கும் செயல்முறையையும் உப்பளர்களின் வாழ்வியலையும் நேரடியாகக் கண்ணுற முடிந்தது. மாலைக்குப் பிறகு, 1930களில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் நினைவுத்தூண் பகுதிக்குச் செல்ல விரும்பினேன். உள்ளூர் வாசிகள் அங்கு செல்ல வேண்டாம். சாலை மிக மோசமாக இருக்கிறது என்று கூறினர். இவ்வளவு தொலைவு வந்துவிட்டு, வரலாற்று நிகழ்வு நடந்த ஓரிடத்தைப் பார்க்காமல் போக மனமில்லை. உதவிக்கு உடனிருந்தவரோ, மோசமாகத்தான் இருக்கிறது எனினும் சென்று வரலாம் என நம்பிக்கை அளித்தார்.

மிகமோசமான அந்தச் சாலையில் பயணித்து, வழிமாறிச் சென்று, ஒருவழியாக உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் உள்ள பகுதியை அடைந்தோம். 1950ஆம் ஆண்டு இந்த நினைவுத்தூண் நிறுவப்பெற்றுள்ளது. நினைவுத்தூணுக்கு எதிர்ப்புறம், கான்கிரீட் கூரை வேயப்பட்ட ஒரு கூடம் உள்ளது, நினைவுத்தூணுக்குப் பின்புறம் பாதி-கட்டப்பட்டு முடிக்கப்பெறாத கட்டிடம் ஒன்றுள்ளது. அங்கு ஒளிப்படங்கள் எடுத்தபிறகு திரும்புகையில், மாலை வந்துவிட்டது.


திரும்பி வருகையில், அந்த மோசமான பாதை எங்களையும் விட்டுவைக்கவில்லை. மோட்டார் வாகனத்தில் பொறுமையாகச் சென்ற போதினும் கண்ணிமைக்கும் நேரத்தில் சறுக்கி, ஒரு பக்கமாக விழுந்தோம். வண்டியை இயக்கியவருக்குக் கை, கால்களின் வெவ்வேறு இடங்களில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது. எனக்கு வலதுகாலில் அடிப்பட்டது. (வண்டியை இயக்கியவர் வேட்டி அணிந்திருந்ததால் காயம் பலமாக ஏற்பட்டது. நானோ கடல்நீரில் கால்நனைத்தபோது, ஈரம் ஏறிய ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததால் பலத்த காயத்திலிருந்து தப்பித்தேன்.)

அந்த மோட்டார் வாகனம் கோட்டம் விழுந்துவிட்டது. அவரைக் காரில் ஏற்றி வீடு சேர்ந்தோம். முதலுதவிக்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். என் அழைப்பின்பேரில் வந்து அவருக்குக் காயம் ஏற்பட்டு விட்டதென்று நானும், எனக்கு அடிபட்டுவிட்டதென்று அவரும் வருத்தமுற்றோம். இன்னமும் என் வலது கணுக்காலில் வலி இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாளில் (10.08.2021) அவரிடம் விசாரித்தபோது, சர்க்கரை நோய் பாதிப்பால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாக ஆறவில்லை என்பதைத் தெரிவித்தார்.

நிற்க, 13.07.2021 அன்று வேதாரண்யத்திலிருந்து திரும்புகையில் கருப்பம்புலம் கடைத்தெருவில் ஆசிரியர் பாலாஜி அவர்கள், தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களை அளித்து உதவினார்.

இதற்கு அடுத்த கட்டமாக, திருவாரூர் கழகப்பள்ளியில் பயின்ற 80, 85+, 90+ அகவையுடையவர்களின் இளமைக்கால (இந்திய விடுதலைக்கு முற்பட்ட) வாழ்வனுபவங்களைத் திரட்டினேன்.

இவ்வாறு திரட்டிய அனைத்துத் தரவுகளையும் தொகுத்தபிறகு, முக்கியக் கதாப்பாத்திரங்களையும் கதை செல்லும் போக்கையும் கட்டமைத்தேன். யுவா திட்டத்திற்குப் படைப்பின் முன்மொழிவு அனுப்ப வேண்டும். ஆய்விற்கான முன்மொழிவு அறிவேன். படைப்பிற்கான முன்மொழிவு குறித்த அனுபவமின்மையால், மூத்தவர்கள் சிலரின் அறிவுரை பெற்றேன். அதனடிப்படையில் முன்மொழிவு தயாரித்தேன். இவையாவற்றையும் செய்துமுடிக்க சூலை 31 வந்தது.

யுவா தளத்திற்குள் சிலநாட்களுக்கு முன்பே சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொண்டேன். எளிய வழிதான், வயதுக்கான சான்றிதழ் + படைப்பின் முன்மொழிவு அளித்தால் submit ஆகிவிடும். சூலை 31 இரவு பதிவேற்றத் தொடங்கினேன். mygov தளத்துடன் இணைந்திருக்கும் எனது மின்னஞ்சல் முகவரி, பேசி எண் அனைத்தும் default ஆக இத்தளத்தில் இடம்பெற்றது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்றி submit என்பதைச் சொடுக்கினால், பேசி எண்ணை மாற்றச் சொன்னது.

பேசி எண்ணில் 91 என்ற முன்னொட்டு இருக்கிறது. பத்து எண்ணுருக்களைத்தான் யுவா தளம் ஏற்றுக்கொள்ளுமாம். (யுவா திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒருவர் பத்து எண்ணுருக்கள் கொடுத்துதான், பதிவு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்தபிறகே இதனை எழுதுகிறேன். 91 என்ற முன்னொட்டுடன் யாரேனும் பதிவு செய்திருப்பின் தெரியப்படுத்துங்கள்). சரி, என் பேசி எண்ணின் முன்னொட்டாக இருக்கும் 91 ஐ நீக்கலாம் என்றால் யுவா திட்டத்தின் https://innovateindia.mygov.in/yuva/ தளம் பேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ திருத்தும் வாய்ப்பைத் தரவில்லை. மீண்டும் mygov தளம் சென்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும். வேறொரு நாட்டுக்குச் சென்றுள்ளேன் என்று நாட்டிற்குரிய பேசிஎண் குறியீட்டை மாற்றலாம். ஆனால், முன்னொட்டை எப்படி நீக்க முடியும் என்ற ஐயம் எழுந்தது. இதில் இப்போது கை வைத்தால், வெவ்வேறு சிக்கல்களுக்குக் கொண்டுசெல்லும் என்று தோன்றியது. அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. (mygov இல் முன்னொட்டை நீக்க முடியவில்லை)

நண்பர்களின் பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுத்து otp வைத்து கணக்குத் தொடங்கி உள்நுழைந்து பதிவு செய்யலாம். ஆனால், யாரிடமாவது இப்போது கேட்டால், முதலில் போலி அழைப்பு என்றே கருதுமளவு ஏமாற்றுப்பேர்வழிகள் (fake profile, fraud, spam calls) பெருகிவிட்டனர். வீடியோகால் செய்து, ஆதி முதல் அந்தம் வரை விளக்கிப் பேசியாக வேண்டும். உண்மையை விளம்பி, நண்பரை நம்பச் செய்யலாம் அல்லது முன்மொழிவை அவர்களுக்கனுப்பி, அவர்களையே பதிவேற்றச் செய்யலாம். மனம் ஒப்பவில்லை. எனினும், கேட்கையில் “நெட் இல்லை, பயணத்தில் இருக்கிறேன், கணினி இல்லை, இதெல்லாம் தெரியாது, காலையில் செய்யட்டுமா” போன்ற பதில்களே கிட்டின.

இதற்குமேல் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. (வீட்டில் உள்ளோர் ஏற்கெனவே mygov பயன்படுத்துவதால், அவர்களது கணக்கின்வழி உள்நுழைந்தாலும் இச்சிக்கலுக்குத் தீர்வு கிட்டாது). இதற்கிடையிலும் யுவா தளத்தில் பதிவேற்றும் முயற்சியில் இருந்தேன். கடைசி முயற்சியும் தோல்வியடையும் வண்ணம் submission closed என்று வந்தது.

உடனடியாக, NICஇன் சேவை மையத்திற்கு 1800111555 அழைப்பு விடுத்து, என்னுடைய சிக்கலை விளக்கமாகச் சொன்னேன். மிகப்பொறுமையாகக் கேட்ட எதிர்முனையில் இருந்தவர் புகாரைப் பதிவு செய்து அதற்கான டிக்கெட் எண்ணை மின்னஞ்சல்வழி அனுப்பினார். அவரது கனிவான பேச்சும் உடனடிச் செயல்பாடுகளும் விடியலில் தீர்வு கிடைத்திடும் என்றிருந்தது. ஆனால், அடுத்தநாள் மாலைவரை எந்தத் தகவலும் இல்லை. இரவு 8 மணியளவில் உங்களுடைய குறை தீர்க்கப்பட்டுவிட்டது. அதனால், உங்கள் டிக்கெட்டை மூடுகிறோம். நாங்கள் அளித்த தீர்வில் நீங்கள் திருப்தி அடையவில்லையென்றால், மீண்டும் உங்களுடைய டிக்கெட்டைத் திறக்கலாம் என்று மின்னஞ்சல் வந்தது.

சேவை மையத்திற்கு மீண்டும் பேசியபோது, அது தானியங்கி மின்னஞ்சல் என்றும் உங்களது கோரிக்கை உரிய குழுவுக்கு அனுப்பப்பெற்றுள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்தினர். எனினும், உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக அளித்து, என்னுடைய டிக்கெட்டை மீண்டும் திறந்தேன்.

அடுத்தடுத்த நாட்களில் இரவு 8 மணியளவில் உங்களுடைய டிக்கெட் மூடப்பட்டுவிட்டது என்று மின்னஞ்சல் வரும். அவர்கள் ஒருமுறை கூட தீர்வை அளிக்கவில்லை. என் அதிருப்தியை எழுத்துப்பூர்வமாக அளித்தும், அதனை மேற்பார்வையாளர் forward செய்தும் எப்பயனும் இல்லை. “இந்த முயற்சி எடுத்துள்ளோம்/முடியும்/முடியாது,” என்று சொல்லிவிட்டால், தேவலாம். இதோ அதோ என்று அவர்கள் கடைசி வரை ஒரு தீர்வுமே அளிக்கவில்லை. இந்த அர்த்தமற்ற செயலைச் செய்வதற்கு வெறுப்பாக இருந்தது. ஆகஸ்ட் 7ஆம் நாள் உங்கள் டிக்கெட் மூடப்பட்டு விட்டதென வந்த மின்னஞ்சலைத் திறந்துகூடப் பார்க்கவில்லை.

இதற்கிடையில், போட்டியை ஒருங்கிணைக்கும் NBTஇன் தலைமை அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு செல்லவேயில்லை. மண்டல அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு எடுக்கப்பெறவே இல்லை.

யுவா விற்கு முயற்சித்த பலருக்கும் இதுபோன்ற சிக்கல் இருப்பதாகவும் அறியமுடிந்தது. இதுகுறித்த முறையான வழிகாட்டலை யுவா தளமோ NBT அமைப்போ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே செய்யவில்லை. முறையாகப் புகாரளித்தும் அதுகுறித்து NIC எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுத்த நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

இப்பதிவின் நோக்கம் :  எவ்வளவு முயற்சித்தும் படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துவதே. 

போட்டியிட்டுத் தோற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். எல்லா முயற்சிகள் எடுத்தும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்காமல் தோற்கடிக்கப்படுவதை வெறுக்கிறேன்.

முதல்முறையாகச் சிறுகதை எழுத முயன்றேன் 2013இல். எனது சிறுகதையொன்று முதல்முறையாகப் பிரசுரமானதோ 2020இல் அதுவும் ஒரு இலட்சம் உருபா வெற்றியுடன்.

முதல்முறையாகப் புதினம் எழுத முயன்றிருக்கிறேன் 2021இல்…

-தக | 10.08.2021