நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 3 ஜூலை, 2019

ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை | பகுதி 3

காத்திருப்புக்கு பதில் சொல்லியது மார்ச் 19 நேர்காணல் என வந்த அறிவிப்பு.  நான், நண்பன் சத்தி, அண்ணன் மணிகண்டஹ உட்பட மூவர் சியுடிஎன்-னிலிருந்து தேர்வாகிருந்தோம். இதில் மணிகண்டஹ ஜேஎன்யுவை நிராகரித்ததால் மீதமிருவர் மட்டும் செல்லயிருந்தோம்.  சில நாட்களே இருந்த சூழலில் ஆய்வுச்சுருக்கத்தை முறையாகத் தயாரித்துக் கொண்டுசெல்ல வேண்டும்.

மேலும், இந்திய மாணவர் போராட்டக்களத்தின் ஆதார சுருதியாக விளங்கக்கூடிய ஜேஎன்யுவின் நேர்காணலுக்குச் செல்ல  நன்னடத்தைச் சான்று அவசியமானதாகும். செயற்பாட்டாளர்களாக உருவெடுக்கும் மாணவர்களை முன்பே கணிக்க இது  அவசியமானதென நிர்வாகம் கருதுகிறது போலும்.

தமிழகத்தில் உள்ள கல்லூரி/பல்கலைக்கழகங்களில் என்ன ஆய்வுச்சுருக்கம் கொடுத்துத் தேர்வாகுகிறோமோ., அதையே ஆய்வாகச் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால், ஜேஎன்யுவில் நேர்காணலில் தேர்வாவதற்கான அடிப்படைத் தரவாக மட்டுமே சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கம் அமையும். ஜேஎன்யுவில் சேர்ந்து Coursework முடியும் தருவாயில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுச்சுருக்கமே முதன்மை.

ஆதலால், நேர்காணலுக்காகத் தற்காலிக ஆய்வுச்சுருக்கம் தயாரிக்க முனைந்தோம். ஜேஎன்யு பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு ஒப்பிலக்கிய ஆய்வையே பெரிதும் மேற்கொண்டு வருவதலால் அதனை முன்னிறுத்தும் சுருக்கத்தைத் தயாரிக்க இருந்தோம். பல்கலை. பாடங்கள்/ முதுகலை, முனைவர் பட்ட ஆய்வுகள் என பல்வேறு வேலைகளுக்கிடையே ஆய்வுச்சுருக்கம் எழுத உதவினார்  நண்பர் ஜவகர்.  இதைப்படி, அதைப்படி என எப்போதும் கூறினாலும் நாட்கள் செல்லச்செல்ல ஆய்வுச்சுருக்கத்தைத் தயாரித்து முடியவில்லை. தன்செலவில் மயிலை-சென்னை,  சென்னை-தில்லி என பயணத்தை உறுதிசெய்துகொடுத்தார். பயணம் உறுதியானாலும் ஆய்வுச்சுருக்கம் இறுதியாகவில்லை.

நாளை சென்னை கிளம்பியாக வேண்டும் எனும் நிலையில் இன்றிரவு நண்பர் ஜவகர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். புத்தகங்களுக்கிடையே வீடு கட்டப்பட்டிருந்தது. அதனுள் மூலப்புத்தகத்தைத் தேடி எடுக்க வேண்டும். நண்பர் சத்திக்கு உடன் கிடைத்த வேலையில், முக்கால் மணிநேர போராட்டத்துக்குப்பின் பெரும் புத்தகங்களுக்குள் அடங்கிக்கிடந்த தாவோதேஜிங் சிறுநூலை அடையாளங்காண முடிந்தது. தாவோதேஜிங் முழுதும் படித்துமுடிக்க 00.00 தாண்டியிருந்தது.

//பொதுமறை அல்ல
பொதுமுறை என்பதே பொருத்தம்...
திருக்குறள்
மந்திரமும் அல்ல
தந்திரமும் அல்ல.
சொல்லப்போனால் அது
சுதந்திரம்.
"மறை"வாக இருக்கும் எதுவும்
பொதுவாக இருக்காது.
"பொது" வான எதுவும்
"மறை"யாக இருக்காது//
என ஆர்.பாலகிருஷ்ணன் இஆப திருக்குறள் பற்றி விதந்தோதியிருப்பார். ஏற்கெனவே திருக்குறள் நாடாளுமன்றம் வரை அழைத்துச் சென்றிருந்ததும் இளம்வயது முதல் உடன்வரும் திருக்குறளைத் தவிர வேறேதும் இலகுவாக இல்லாத சூழலில் தமிழின் திருக்குறளையும் சீனத்தின் தாவோதேஜிங்கும் ஒப்பீடு செய்ய வாய்ப்பாக அமைந்தது.

தாவோதேஜிங்-கை ஒருமுறை ரோபோ ரீடிங் செய்த நண்பர் ஜவகர் உடன் உதித்த ஒப்பீட்டுத் திருக்குறள்களை அடையாளப்படுத்தினார். //பதினோரு பேரு ரெடி, மேட்ச் ஸ்டார்ட்// என்பதைப்போல ஆய்வுச்சுருக்கத்தின் அச்சாரம் கிடைத்த நிலையில் புத்தக மனிதர்கள் குடியிருந்த வீட்டினுள் பின்னிரவு துயில்கொண்டோம். மறுநாள்  தற்காலிக ஆய்வுச்சுருக்கம் விரைவிலேயே நண்பர் சத்திக்கும் தயாராகிவிட்டது.

மயிலை-சென்னை, சென்னை-புதுதில்லி என பயணங்களின் தொடர்ச்சியில் ஹர்சத் நிசாமுதீன்  வந்திருந்தோம். அங்குதான் மொழிப்பிரச்சினை தொடங்கியது. ஓலாவில் ஜேஎன்யு பயணத்தை உறுதிசெய்தும் ஓட்டுநர் மொழி புரியாமல் தவித்தோம். கேட்1, கேட்2 என குழப்பம் வேறு. பிறகு, ஆங்கே இருந்த Ola booking பிரிவில் பதிவு செய்து அவர்களே வழியனுப்ப ஜேஎன்யு பெரியார் விடுதி வந்தோம்.

இங்கு, பெரியார் என்றதும் உங்களுக்குத் தோன்றுவதைப்போல எங்களுக்கும் வினா எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. வட இந்தியாவில் அமைந்துள்ள  இந்தியாவின் மாபெரும் பல்கலை. யின் விடுதிக்கு பெரியார் பெயர் வைத்துள்ளது வியப்பின் உச்சம். ஆனால், ஜேஎன்யுவின் விடுதிகள் அனைத்தும் இந்திய நதிகளின் பெயர்களால் விளிக்கப்படுவதை அறிந்துகொண்ட பின்னர், முல்லைப் பெரியாறு என்பதன் விளியே பெரியார் விடுதி என்பதைத் தெளிவுபடுத்தினர் சீனியர்கள்.

அச்சமயம் மதியம். ஆய்வு தேடி வந்தவர்கள் உணவுதேடி சென்றோம் தமிழ்ப்பிரிவிற்கு. பத்துநாள் பயிலரங்கின் எட்டாவது நாள். தமிழறிஞர்களின் உரைகளுக்கிடையே உணவும் ஈயப்பட்டது. மாலைக்கு மேல் பெரியாரில் விசய் அசண் அறையில் ஓய்வெடுத்தோம். அன்றிரவு சட்லஜ் விடுதியின் விடுதிநாள் என்றுநினைவு. நன்றாக உண்டுவிட்டு டிஜே ஆடிக்கொண்டிருந்தனர்.  பின்னிரவு தூங்க, அடுத்தநாளும் பத்தாம்நாள் பயிலரங்கில் கழிந்தது. பாரதிபுத்திரன், கோ.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்களின் உரைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தன. அதிலும் மாமல்லபுரம் சிற்பங்களை இலக்கியத்துடன் ஒப்பிட்டு உரைநிகழ்த்திய பாரதிபுத்திரன் இங்கு நினைவுகூறற்குரியவர்.

அன்றைய மாலை மார்ச் 18, நிறைவு விழாவில் அங்குள்ள மாணவ/பேராசிரியர்களின் மேடை உரை வெளிப்படையானதாக  இருந்தது,  புகழுரைகளில் தத்தளிக்கும் தமிழகத்திலிருந்து வந்த எங்களுக்கு வியப்பாக இருந்தது.

அன்றிரவு ஜீலம் விடுதியின் மூன்றாம் மாடியில் தனபால் அறையில் அருண் பிழைதிருத்த பெரும்பான்மையானோர் கூடியிருந்தனர். பின்னிரவு முடிந்த தற்காலிக ஆய்வுச்சுருக்கத்தின் ஒழுங்கமைப்புப் பணியால் தூங்க நேரமானது.

காலை மார்ச் 19,  இரண்டு இடங்களுக்கான நேர்காணலுக்கு ஐவர் வந்திருந்தோம். தமிழ்ப்பிரிவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில்(2) இடங்கள் இருந்தன. இதே Philosophy துறையில் 16க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.

நான்காவதாக நேர்காணலுக்கு சென்றிருந்தேன். சான்றிதழ் கிடங்கிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ஓரிலக்க சான்றிதழ்களை  மட்டும் காட்சிப்படுத்தினேன். விளம்பரமாக அவை தோன்றியிருக்கலாம். சொல்லப்போனால், கடந்தகாலத்தின் நிகழ்கால விளம்பரங்கள் தான் அவை. இது ஆய்வுக்கெப்படி உதவும் என்றெல்லாம் தோன்றவில்லை. அடையாளப்படுத்தலுக்கு வேண்டுமெனில் உதவுமெனத் தோன்றியது.

எதிர்பார்த்தது போலவே, இயற்பியல் பிறகு செவ்வியல் தமிழ், இப்போது சீனம் "என்ன சம்பந்தமில்லாமலே இருக்கே" என்றார்கள். "செவ்வியல் ஆய்வு தான் செய்வீர்களா? நவீன ஆய்வுகள் தான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்விக்கு "நவீன இலக்கியங்களில் ஆய்வு செய்யமாட்டேன் என்றெல்லாம் இல்லை, ஆனால், செவ்வியலில் சிறப்பாகச் செய்வேன்" எனச் சொல்லுமளவு முதிர்வு அப்போது இல்லை.

2ஆம்வேற்றுமை(உருபு)த் தொடர் ஒன்று சொல்லச் சொன்னார்கள். "உணவைச் சாப்பிட்டான்" என்றேன். அதைத் தொகைப்படுத்தச் சொன்னார்கள். தொகைப்படுத்த என்ற சொல்லுக்கு மிகச்சரியான புரிதல் சட்டென்று வராத சூழலில், சான்று ஒன்றை  கேள்விகேட்டோர் பகர உடன் "உணவு சாப்பிட்டான்"என்றேன்.

குலுக்கல் முறையில் ஒரு தலைப்பு வந்தது தொல்காப்பியம். நேர்காணலில் கேள்விகேட்போரில் துறைசாராத மூன்றாம் நபர் தமிழ் தெரியாதவராக இருந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் தொல்காப்பியம் பற்றி விளம்பினேன். அங்கிருந்த தேநீர்க்கோப்பையைச் சுட்டி இதில் என்னவிசை செயல்படுகின்றதென ஒருகேள்வி வைக்கப்பட்டது. இரண்டாண்டுகட்கு முன்பு நினைவின் செல்லரித்துப்போன இயற்பியலை தூசுதட்டி துரிதமாய் தந்த மூளையை இன்னும் எண்ணி வியக்கிறேன். ஆனால், //இதனுள் இது செயல்படுகிறதென காரல் மார்க்ஸ் இதில் குறிப்பிட்டுள்ளார்// என கொடுக்கப்பட்ட விளக்கங்கள் எதிர்பாராதவை.

உடல் ஒத்துழைக்குமா? இத்தனை சான்றிதழ்களை பார்த்தால் UPSC தேர்வுக்கு தயாராகுபவர் போல் இருக்கிறதே? போன்ற கேள்விகளை பதிலளித்து முடிக்க இருபது நிமிடங்களைக் கடந்துவிட்டது. 24 நிமிடங்களுக்குப்பின் நன்றி சொல்லிவிட்டு வெளிவர தமிழ்தெரியாத மூன்றாம் நபருக்கு தன்யவார் சொல்லி வெளிவந்திருந்தேன்.

மதியம் வரை காத்திருக்க வேண்டாம், இல்லம் செல்லுங்கள் முடிவுகள் உரிய பொழுதில் இணையத்தில் அறிவிக்கப்படும் என்று கூற கலைந்தோம். மதிய உணவுண்டு மாலை புதுதில்லிக்கு விடைகொடுக்க இந்திராகாந்தி விமானநிலையத்தில் பயணம் உறுதியானது. அடுத்தநாள் மாலை சியுடிஎன் இல் நிகழவுள்ள ஆரம்ப்பா-18 நிகழ்விற்காக பறக்கத் தயாராயிருந்தேன். மொக்கைக் கவிதைகள் எழுதி முன்னிரவில் சென்னை மீனம்பாக்கம் வர, சாலையில் குடந்தை நோக்கிவந்த விரைவுப் பேருந்திலேறி கண்ணயர விடிந்திருந்தது.

-தக

வியாழன், 13 ஜூன், 2019

“கைத்தறி”க்கான விழிப்புணர்வு வாசகங்கள்


Our Handloom
Our Pride

Wearing Handloom
Looking Handsome

Buying Handloom Dresses
Deeloping Handloom workers

Producting Handloom
Protecting Culture

Buy the Handloom
For the Nation

Lets Wear Handloom
Its our Headline

மேல் அணிய இனியது
காலணியத்திற்கு எதிரது

காந்தி தந்த ராட்டை
பலப்படுத்தும் நாட்டை

கைத்தறி துணிகள்
வளம்தரு துறைகள்

கைத்தறி பயன்படுத்து
பண்பாட்டை பலப்படுத்து

கைத்தறி உற்பத்தி அதிகரிப்பு
உள்நாட்டுப் பொருளாதார மேம்பாடு

கைத்தறி வாங்கிடுவோம்
தேசத்தை மேம்படுத்திடுவோம்.

04.08.2017 | தேசிய கைத்தறி தினத்திற்காக எழுதப்பெற்றது.

சனி, 8 ஜூன், 2019

தேசிய நெல் திருவிழா - 2019



13ஆம் ஆண்டு தேசிய நெல்திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல்திருவிழா இந்த ஆண்டு (2019) ஜூன் 8, ஜூன் 9  நாட்களில் நடைபெறுகிறது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு வாயிலாக 2006ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது நெல் திருவிழா. அது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நெல் திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் நெல் ஜெயராமன். தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் 6ஆம் நாள் மறைந்தார். அவர் இல்லாது நடக்கக்கூடிய முதலாவது நெல் திருவிழாவாகும் இது.

நம்மாழ்வாரும் நெல்ஜெயரமானும் இயற்கை வேளாண்மையை தமிழக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த இருபெரும் ஆளுமைகள். வேளாண்மை அழிந்து வருகிறது, செயற்கை உரங்களால் மண் மலடாகி வருகிறது, இது தவிர்த்து, காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றால் இயற்கை வளமே இல்லாத போகும் சூழல் ஒருபக்கம். இவற்றுக்கிடையே இவையாவற்றையும் தாண்டி விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றி, இயற்கை சார்ந்து பயிரிட்டு சாதிக்கலாம் என்பதை மற்ற விவசாயிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்து செயல்படுத்திக் காட்டியவர் நெல் ஜெயராமன்.

அவர் இல்லாத நடக்கும் முதல் நெல் திருவிழா இதுவாகும்.  தேசிய நெல்திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை காலை உழவர்களின் பேரணி, கண்காட்சித் திறப்பு, மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் படத்திறப்பு விழாவும், புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, விழாப் பேருரையாற்றுகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சுகதீப்சிங் பேடி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரம், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளான் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

நெல்திருவிழாவில் இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பாரம்பரிய நெல்ரகங்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், சான்றிதழ் பெறுவதில் விவசாயிகளின் கூட்டு முயற்சிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், நுகர்வோர் பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதை மீதான உழவர்களின் உரிமையும் அரசின் நெருக்கடிகளும், அழிவின் விளிம்பிலுள்ள நாட்டுரக கால்நடை இனங்கள், வறட்சியை எதிர்கொள்ள சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய நீர்மேலாண்மை யுக்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

நெல் ஜெயராமன் நினைவாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை முகாம் சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர் மல்லிகா தலைமையில் நடக்கவிருக்கிறது. பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டியும், மரபார்ந்த விளையாட்டுகள் போட்டியும் நடத்தப்படவுள்ளன. பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உணவுத்திருவிழா என திருத்துறைப்பூண்டி ஏஆர்வி தனலெட்சுமி திருமண அரங்கில் நடைபெறவுள்ள உணவுத்திருவிழா-2019 களைகட்ட இருக்கிறது.

நெல் திருவிழாவின் முதன்மையான நோக்கமே விதை நெல் தான். கடந்தாண்டு இயற்கை விதை நெல் வாங்கிச் சென்ற விவசாயிகள் அதனை இரட்டிப்பாக திரும்பித்தர வேண்டும். இந்தாண்டு புதியதாக விதை நெல்வாங்கிச் செல்லும் விவசாயிகள் அடுத்த ஆண்டு இரட்டிப்பாக அவற்றைத் தர வேண்டும். அறாத்தொடர்ச்சியாக நிகழும் இது பல்கிப் பெருகி இயற்கை வேளாண்மையை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் முறையாகும். தனிமனிதரின் பிடியில் துறைசார்ந்த யாவற்றையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் பல்கிப்பெருகி வரும் உலகமயமாக்கல் சூழலில்,  அடையாளங்கண்ட இயற்கை பயிர்களையெல்லாம் விதை நெல்லாக பிறருக்கும் கொடுத்து வேளாண்மையை பொதுவுடைமையாக்கிய பெருமை நெல் திருவிழாவையே சேரும்.

நெல் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

-    த.க.தமிழ்பாரதன்
-   படங்கள் க.சதீஷ்குமார்

புதன், 5 ஜூன், 2019

இலையில் தங்கிய துளிகள் | வைரமுத்து கவிதை


இலையில் தங்கிய துளிகள்

காலப் பெருவெளியில்
சிலப்பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும்கண்டுசெல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராம்ம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்ட்தாகவும்
நீளப் பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்.

பட்டுப் பாவடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடை ஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என் மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம்-
தெருவெல்லாம் கார்த்திகைதான்!
மனசெல்லாம் மார்கழிதான்!

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்?

இன்றேனும் பேசு பெண்ணே!

“வாங்க”

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீ மட்டும் நீயில்லை

வீதிஎயல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம்தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருக்சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேநீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இஞ்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான் :
”நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்”

உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்.

-    வைரமுத்து | கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பிலிருந்து.


#தக 05.06.2019

செவ்வாய், 28 மே, 2019

பாரதியாரின் சில சங்கற்பங்கள்

சில சங்கற்பங்கள் !



இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஜ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.

பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பாதலும் தூய்மையுறச் செய்வேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.

மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

இடையறாத தொழில்புரிந்து இவ்வுலப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றோடிப்ருப்பேன்.  ஓம்.


(16.05.2019 அன்று புதுச்சேரி பாரதியார் நினைவில்லத்திற்கு சென்றிருந்தபோது படியெடுத்தது. இஃது ஒளிப்படமாக இருக்கிறது,  நினைவில்லத்தின் உட்புறம் நுழைந்ததும் இடப்புறமுள்ள அறையில் பாரதியாரின் கையெழுத்தால் எழுதப்பட்ட இச்சங்கற்பத்தின் ஒருபகுதி காகிதத்தில் கனன்று கொண்டிருக்கிறது)

#தக | 16.05.2019

செவ்வாய், 21 மே, 2019

மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901

ஓம் 
ஸ்ரீகாசி
ஹநுமந்த கட்டம்

          எனதருமை காதலி செல்லாம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன். 

உனதன்பன்,
சி. சுப்ரமணிய பாரதி


மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901


(16.05.2019 அன்று புதுச்சேரி பாரதியார் நினைவில்லத்திற்கு சென்றிருந்தபோது படியெடுத்தது) 

#தக