நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 13 ஜூலை, 2017

கலைஞனை அரசியல்வாதி ஆக்கிவிடாதீர்கள் - வைரமுத்து

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் எண்பத்தி ஏழாவது பிறந்த தினமான 2017 ஜூலை 09 ஆம் தேதி அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத்தில் அவருக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைந்த பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், அவரது மகள் புஷ்பா கந்தசாமி, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த்சாய், பிரமிட் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு மூலமாக இருந்து, இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து புகழுரை ஆற்றுகையில்.,

நான் புவியரசனாக இருந்திருந்தால் 80கிலோ தங்கத்தால் சிலை செய்திருப்பேன். ஆனால், கவிராஜனாக இருப்பதால் வெண்கலச் சிலை செய்திருக்கிறேன். எனக்கு அவருக்கு சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததும் நிறைவேற்ற நினைத்தேன். புஷ்பா தான் சொன்னார், இப்போது அப்பா சிலை இருக்கும் இடம் தான் அப்போது திண்ணை. முதன்முதலில் தாத்தாவின் வேட்டியை மறைத்து அப்பா முதன்முதலாக நாடகம் போட்ட இடம் என்று. நான் நெகிழ்ந்து போனேன்.

86 ஆண்டுகளுக்கு முன்பு,

இந்த நட்சத்திரங்கள் அறிந்திருக்காது, தமிழ் சினிமாவுக்கு மாற்று சினிமா பிறந்திருக்கிறது என்று.

உறவினர்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள், தாதா சாகேப் பால்கே விருது பெறப்போகும் இயக்குநர் பிறந்திருக்கிறார் என்று.

தமிழகம் அறிந்திருக்காது, கமல்-ரஜினி எனும் மாபெரும் கலைஞர்களை திரைக்கு அறிமுகம் செய்யப்போகிறார் என்று.

இந்தக் காற்று அறிந்திருக்காது கலையாக வந்தவன் இங்கே சிலையாகப் போகிறான் என்று.

ஆனால், அதெல்லாம் நனவாகிப் போய்விட்டது. பாலச்சந்தர் தனிமனிதன் அல்ல. அவர் ஒரு நிறுவனம். அதனால் இந்தச் சமுதாயம் பல நன்மைகளை பெற்றிருக்கிறது. சாதரணக் குடும்பத்தில் கிராமத்தில் பிறந்த ஒருவன், குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் அளவிற்கு இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறார் என்று சொன்னால், இளைஞர்களே இந்தச் சிலை உங்களை மவுனமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் வெற்றி பெறுவது என்பது புல்லில் நடந்து பூப்பறிப்பது அல்ல., முள்ளில் நடந்து தேனெடுப்பது. நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது. நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது. இயக்குநர்களின் ஆதிக்கம் இருந்தது. இவ்வளவு சுவர்களைத் தாண்டி சினிமாவில் ஒருவன் புகழ்க்கொடி நாட்டி இருக்கிறான் என்று சொன்னால், அவருக்கு மரியாதை செலுத்துவது நிச்சயம். சினிமாவில் அவர் செய்த முக்கிய செயல் மூடநம்பிக்கைகளை உடை., செண்டிமெண்ட்டுகளை தூக்கி எறி.

மூச்சு விட்டாலே உடைந்து விடும் அளவுக்கு உலகத்திலே நிலையில்லாத பொருள் எதுவோ, அதையே தன் படத்திற்கு தலைப்பாக வைத்தார் பாலச்சந்தர்.  “நீர்க்குமிழி” இந்தத் தலைப்பு வைக்கவே மிகவும் துணிச்சல் வேண்டும்.

புன்னகை மன்னன் படத்தில் நான் பாட்டு எழுதி இருப்பேன். “என்ன சத்தம் இந்த நேரம்” பாடலில்,

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சரிந்துவிட்டால் ஆரிரரோ பாடு

இந்த வரிக்கு ஒரு நியாயம் செய்திருப்பார் பாலச்சந்தர். அந்த சீனில் ஃப்ரேமை வலமும் இடமுமாக ஆட்டுவார், அது தாலாட்டு. வரிகளை உயிர்ப்பிக்க எப்படி போராடி இருக்கிறார் இயக்குநர் அது தான் பாலச்சந்தர்.
தண்ணீர் தண்ணீர் படத்தில், பஞ்சத்தின் உச்சத்தை எப்படிக் காட்சிப்படுத்துவது நெஞ்சில் தைக்க வைப்பதாய் இருக்க வேண்டும் படைப்பு. அப்படி ஒரு காட்சி, பத்திரிக்கையாளன் அந்த ஊருக்குள் செல்லுகிறான், கோடாளியால் ஒருவன் கலப்பையை வெட்டிக்கொண்டிருக்கிறான்.! கலப்பையும் ஏர் மாடும் தான் எங்கள் கடவுள். அந்தக் கடவுளையும் உடைத்து அவன் சாப்பிடுகிறான் என்று காட்சிப்படுத்தியிருப்பார்.

பாலுணர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. காதல் இல்லாமல் சினிமா இல்லை.  பாலுணர்ச்சியைக் கதை செய்பவர் தான் நாகரீகமானவர். கதையை பாலுணர்ச்சி செய்ய முடியாது. சிந்துபைரவி படத்தில் ஜேகேபியும் சிந்துவும் இணைவது எவ்வளவு நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருப்பார்.

வேலை வாங்குவது பாலச்சந்தர் தேர்ந்தவர். ஒருவரின் உச்சபட்ச திறமை என்னவோ அதனை வாங்கிவிடுவார். ரஜினியிடம் என்ன இருக்கிறது, கமலிடம் என்ன உள்ளது, எம்எஸ்வி யிடம் உச்சம் தெரியும், வாலியிடம் என்ன உள்ளது தெரியும், வைரமுத்துவின் அதிகபட்சம் என்ன  இருக்கிறது தெரியும் ? ஒவ்வொருவரிடமும் அவரது அதிகபட்சத் திறனை வெளிப்படுத்தும் வரை விடமாட்டார்.

அவரது வேலை வாங்கும் திறன் குறிப்பிட்த்தக்கது.,
பூவில் வண்டு தேனெடுப்பது ஒரு வகை,
கரும்பில் சாறெடுப்பது ஒரு வகை.,
கரும்பில் சாறெடுத்தால் கரும்பின் உருவம் போய்விடும், பூவில் தேனெடுத்தால் பூவிற்கும் நஷ்டமில்லை, வண்டுக்கும் கஷ்டமில்லை. வாலி கூறியிருக்கிறார்.

வாலி பாடல் எழுதித் தரும்போது, வாலி பாடலா, கண்ணதாசன் பாடலான்னு சந்தேகம் வருமளவுக்கு இருக்கு, ஆனா

பல்லவிக்கு இணையா சரணம் இல்லை பார்த்தீரா, என இயக்குநர் சொல்ல
சரணம் மாற்றப்படும். இது தான்ய வாலி என்று பாராட்டிய பின்

இப்ப சரணத்திற்கு இணையா மற்ற வரி இல்லை பார்த்தீரா, என இயக்குநர் சொல்ல மற்றவரி மாற்றப்படும். இப்ப பாருங்களேன் மற்ற வரிகளெல்லாம் அழகா இருக்கு அதுக்குத் தகுந்த பல்லவி மாத்திடுங்களேன்னு சொல்ல,

வாலி சொன்னாராம், ஏங்கானும், மேலே பிள்ளையார் சுழி போட்டிருக்கேனே அதாவது இருக்கட்டுமா, அதையும் மாத்திடவா என்று.  

இவ்வாறு யாரிடம் என்ன வேலை வாங்குவது எனத் தெரிந்த கலைஞன் பாலச்சந்தர். மேகத்தைப் பிழிந்து மழையெடுக்கும் கலைக் கற்றவரவர். கண்ணதாசன் சொல்லுவாராம், பாலுவிற்கு பாட்டெழுதச் செல்லும் போது மட்டும் மூளை சுறுசுறுப்பாக வேலைச் செய்கிறது என்று.

பாலச்சந்தர் படங்கள் வெற்றிப் படங்கள் தோல்விப்படங்கள் என்று எதுவும் இல்லை. புரிந்துகொள்ளப்பட்ட படங்கள், புரிந்துகொள்ளப்படாத படங்கள் என்று தான் வகைப்படுத்த முடியும்.

இந்த ஊரில் சின்ன முனுமுனுப்பு இருக்கிறதாம், பாலச்சந்தர் இந்த ஊருக்கு என்ன செய்தார் என்று ? அதற்கு நான் பதில் கொண்டுவந்திருக்கிறேன். கலைஞன் என்பவன் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்ல. உங்கள் வார்டு கவுன்சிலர் அல்ல. கலைஞன் என்பவன் வானத்தில் இருந்து கொண்டு பிரபஞ்சத்திற்கே வேலை செய்து கொண்டிருக்கிறான். ஊருக்காகப் பெய்கிற மழை அவன், உங்கள் வீட்டு குழாய்களில் அவன் வடிய மாட்டான். ஊருக்கெல்லம் மழை பெய்தால் உங்கள் வீட்டுக்கும் தண்ணீர் வரும். அவரது தாக்கத்தால் இந்த மண்ணில் இருந்து நூறு இளையவர்கள் உருவாகிறார்களே அது தான் பெருமை. கலைஞனை அரசியல்வாதி ஆக்கிவிடாதீர்கள்.

அவரது பாத்திரங்கள், படைப்புகள், காட்சிகள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சொத்து. சொல்லப்போனால், நல்லமாங்குடியின் சொத்து தேச உடைமையாக்கப்பட்டுள்ளது என்பது பெருமை.

அவரது முதல் படம் நீர்க்குமிழி, கடைசி படம் பொய். நீ வாழ்ந்த உடல் அழிந்துவிடும் நீர்க்குமிழி போல், அதிலிருந்து நிலைத்த அழியாப் புகழ் கொண்டவன் கலைஞன். இந்த வாழ்க்கை என்பது பொய், அதில் மெய் செய்பவன் கலைஞன். பாலச்சந்தர் கலைஞர்., வாழ்க அவரது புகழ் எனப் பேச்சை முடித்தார்.

த.க.தமிழ்பாரதன்
(09.07.2017 அன்று நன்னிலத்தில் கே.பாலச்சந்தர் சிலையைத் திறந்து வைத்து பேசியது)

திங்கள், 10 ஜூலை, 2017

நெகிழ்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்.,

தமிழ்சினிமாவிற்கு மாற்று முகத்தை விதைத்த இயக்குநர் பாலச்சந்தருக்கு அவர் பிறந்த ஊரில் சிலை நிறுவப்பட்டது. தமிழ்த் திரையுலகின் தவிர்க்க இயலாத அடையாளங்களுள் ஒருவர் இயக்குநர் பாலச்சந்தர். தயாரிப்பு நிறுவனங்களும், திரை நட்சத்திரங்களும் கோலோச்சிய காலத்தில் இயக்குநராய் களம் கண்டு தன்னையும் தன் படங்களையும் நிலைநிறுத்தியவர் கே.பாலச்சந்தர். 

தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கித் தந்தவர் என்கிற சிறப்பு அவருக்குண்டு. இதற்கெல்லாம் மணிமகுடமாக 2010ஆம் ஆண்டு பாலச்சந்தருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014 டிசம்பர் 23ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மண்ணுலகில் இருந்து மறைந்தார்.

On Stage Director Maniratnam Speech
இந்நிலையில் அவரது எண்பத்தி ஏழாவது பிறந்த தினமான 2017 ஜூலை 09 ஆம் தேதி அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத்தில் அவருக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைந்த பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், அவரது மகள் புஷ்பா கந்தசாமி, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த்சாய், பிரமிட் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது,

சின்ன பிள்ளையிலே என்னை ஹாஸ்டலில் சேத்துட்டாங்க. அதனால் சினிமா பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.  ஒரு முறை  அப்பா  சினிமா பார்க்க 5ரூபாய் கொடுத்திருந்தார்.  அன்று நான் பார்த்த படம் இரு கோடுகள். அதுவரை நடிகர்கள் தான் முக்கியம் என்றிருந்த என் பிம்பத்தில் இயக்குநர் புதிய தேடல் தந்திருந்தார் கேபி சார். 

பிற்காலத்தில், அவருடனே பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன.  கவிதாலயாவில் ரோஜா படத்தின் கதையைச் சொல்லிமுடித்தேன். டைட்டில் என்னன்னு கேட்டார் ? ”ரோஜா” என்று சொன்னேன்.

என்ன இது “பாக்குத் தூள்” மாதிரி இருக்கு.? என்றவர் அடுத்த நாள் அதுவே இருக்கட்டும் என்றார். அவரிடம் வசனம் எழுதுங்க சார் என்றேன். அது சரியா இருக்காது என் வசனம் எனக்குத் தான் சரியா இருக்கும் என்றார் கேபி. அது இப்போது தான் புரிந்தது, ஆசிரியரிடம் மாணவனே என் விடைத்தாளில் நீங்களே விடையெழுதுங்கள் என்பது போன்றது.

With my lovely director Maniratnam 
வைரமுத்து மணிவிழா கோவையில் நடந்தது. அதற்கு சென்னையிலிருந்து கோவை சென்றோம். விமானம் கிளம்பிய பின், அவர் எடுக்க இருந்த அடுத்த கதையை கூறினார். கேபி சார் இருந்திருந்தால் அந்தப் படம் வந்திருக்கும்., முதலில் அவரிடம் நான் கதை கூறினேன். இப்போது அவர் கதை கூறுகிறார். அந்த நாளில் அவர் கடந்து வந்த பாதை, அவரைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  அந்த ஒருநாள் முழுவதும் அவருடன் இருந்தேன். கடைசியாய் என் தோளில் அவர் தட்டிய நாள் அது. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கான காரணம் அவர்தான்.

என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் மணிரத்னம்.


த.க.தமிழ்பாரதன்
(நன்றி : விகடனிலும் பெரிய கட்டுரையாக வெளிவந்துள்ளது)

சனி, 8 ஜூலை, 2017

மருதக்குடியும் மகாலெட்சுமி என்கிற எருமையும்... ஒரு பார்வை

மருதக்குடியும் மகாலட்சுமி என்கிற எருமையும்.., இந்தக் கால கட்டத்தின்  வேளாண் சூழலை வெளிக்காட்ட விவாசயப் பண்ணையில் விளைந்த விடியலாக பல படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் இந்தப் படைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 

இப்படைப்பு வருதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே இது குறித்த முன்னோட்டத்தைக் (ட்ரெய்லர்) கண்டிருந்தேன்.  அது அசாத்திய வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு மலைப் பிரதேசத்தில் அதுவும் விவசாயத்தை விரும்புகிற மேலும் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய முயற்சியை விதைத்திருந்தது.  



அந்த ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சி அமைப்புகளும் நெஞ்சில் தைப்பதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார் அந்தக் காட்சிகளை ஆவணப்படுத்த எவ்வளவு உழைத்திருப்பார் என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்திருந்தது. ட்ரெய்லரின் இறுதியில் அந்த விவசாயி தன் உழவு கருவியோடு செல்ல அவரது மனைவியின் அதிகபட்ச ஆக்ரோச ஒலிக்க அந்த ட்ரெய்லர் முடிந்த விதம்  ஒரு வெள்ளித்திரைக்கு இணையான ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது ஜேக்கப்பின் படத்தொகுப்பு. 

அந்த ட்ரெய்லர் பார்த்த பின்பு எனக்கு எழுந்த ஒரு வினா அப்படியே இருந்தது. காட்சிப்படுத்தப்பட்ட விவசாயி வெள்ளை நிறத்தோனாக இருப்பானா என்று ?  இதற்கு புதுதில்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயி ஐயாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கலாமா ? என்கிற கேள்வியை எழுப்பிய போது, ஏன் விவசாயி வைத்திருக்கக் கூடாதா? அவனுக்கு முன்னேற்றம் இருக்கக் கூடாதா ?  அவனது பொருளாதாரம் என்பதை எப்போதும் அடுத்தாரிடம் கேட்டுப் பெறும் அளவிற்கு வறுமைக்கோட்டுக் கீழுள்ளதாகத் தான் இருக்க வேண்டுமா ?  என்பது போன்ற எதிர் கேள்விகளிடத்திலிருந்து எனக்கு விடை கிடைத்தது. 


காவிரி டெல்டா தமிழகத்தின் தன்னிகரில்லாத விவசாயப் பகுதி. அதில் மீத்தேன், ஷெல் கேஸ், என அடுக்கடுக்காக மக்களை வெளியேற்றி மண்ணை மலடாக்கும் திட்டத்தை ஒருபுறம் அரசாங்கம் நிகழ்த்தி வர, ஏற்கெனவே கர்நாடகத்தால் தமிழகத்தில் கைவிரிக்கப்பட்ட காவிரி  புணர்வாழ்வின்றி தவிக்க, கண் இருந்தும் குருடாய் ஆவியாக்கப்பட்ட மண்ணீரை எல்லாம் மழைநீராய் தரமறுத்த ஆகாயத்தை எதிர்த்து நீதிகேட்க நாதியற்ற சூழலில் பயிர் விளையும் நிலங்கள் யாவும் விவசாயி கொலை புரியும் நிலமாகி வருவதை எதார்த்தத்துடன் வெளிப்படுத்துகிறது கதைப்போக்கு. 

வானொலியின் காந்தக் குரலால் கதிர்வெடித்துப் பிழம்பு விழும் கண்ணியக் குரல் வளம்கொண்ட சரோஜ் நாராயண சுவாமியின் செவியின்பம் கொணரும் குரலை ஆவணப்படுத்தியிருப்பதற்கே இயக்குநருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.  வானலைகளில் வானொலியின் செய்திகள் வானவில்லாய் மறைந்திட அதனூடே ஒளி(லி)பரப்பிய அவரது குரலொலியை அடுத்தத் தலைமுறையும் உய்த்துணர்வதற்கான வெளியை இந்தப் படைப்பு நிலைநிறுத்தியிருக்கிறது.

பெரும்பாலும் மலைவாழ் பிரதேச வாழ்க்கை என்பதைக் காதல் காட்சிகளுக்காய் சாசனம் செய்துகொடுத்த தமிழ்த் திரை பிம்பத்தை உடைத்து அம்மக்களின் விவசாயக் கூறுகளைக் கருவிகளை சூழல்களை ஆவணப்படுத்தி அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிவண்ணன். உண்மையில் சமவெளிப்பகுதிகள் மட்டுமே கட்புலனான மக்களுக்கு மலைப் பிரதேசத்தின் விவசாயத் தன்மைகளையும் விலங்குகளையும் கட்டிட அமைப்பு போன்றவை புதிய புதினமாகவே இருக்கும்.  

குறிஞ்சி நிலத்தின்  மருதக்குடிகளுக்கு உயிர் முக்கியத்துவம் வாய்ந்து  பொருளாதார முக்கியத்துவமிழந்த விவசாயம் என்பது எவ்வளவு எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கியிருக்கிறது என்பதை  உலகமயமாக்கலுக்கு உரமாகிப் போன விவசாயியின் மனைவி பகரும் வடிகட்டப்பட்ட வார்த்தைகளை நோக்குகையில் உணரலாம். 

 உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று சொன்னது மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற விரக்தி விவசாயியை காப்பாற்றி யிருக்கும் அந்த மகாலட்சுமியைத் தெய்வமாகப் பார்க்கும் கடைக்கண் பார்வை உச்சபட்சம். அடுத்த நாள்  வேலை பார்க்கச் செல்லும் போது, தன் சகவிவசாயியின் உள்ளத்தை அப்படியே அகக்கண் கொண்டு ஆராய்ந்து தற்கொலையைத் தடுத்திருக்கும் விவசாய மனம் மகாலட்சுமியின் மனிதநேய நீட்சி. 

இறுதியில் ஒரு உயிர் செல்வதறிந்து அதனை படைத்தவன் சோகம் கொள்வான். காக்க முயல்வான்.  நித்தமும் நிலத்தின் உயிர்வளர்க்கும் விவசாயி பயிர் கருகுவதையே நாடான். உயிர் போவதையா பார்த்திருப்பான். ஓடி வந்து அந்த மற்றொரு விவசாயியின் உயிரைக் காவந்து செய்வது மனித மனத்தின் ஆட்சி. கடைசி வரை உழைப்போம் என்றந்த ஈற்று வரியின் இறுதி இசை 

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.

என்ற வள்ளுவனின் வரிகளை நினைவுபடுத்திச் சென்றது.  யாரால் உலகம் வாழ்கிறதோ, அவர்களாலே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்தச் சூழலில் நம்மை நாம் தகவமைத்துத்  தற்காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது  அவசியமானது.

இதனால் விவசாயம் பெருகிடுமா, இணையத்தில் விவசாயம் சார்ந்த இத்தனைக் கட்டுரைகள் வந்துள்ளதால் வேளாண் உற்பத்தி அதிகரித்து விட்டதா ? அதனால் மறுமலர்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா ? என்பது அர்த்தமற்ற விவாதத்திற்கு வழிவகுக்கும். படைப்பு ஒன்றை ஆவணப்படுத்தும். அடுத்த தலைமுறை ஒருவேளை உணவின்றி உயிர்வாழ்தலுக்கான சூழலைக்கூடப் பெறலாம். ஆனால், உலகிற்கு உணவு கொடுத்த ஒரு குடி தன் உயிர் வாழ்விற்கே கடினப்பட்டது என்பதை அந்தக் காலக் கட்டத்தினூடே பதிவு செய்தல் அவசியமானது அந்த வகையில் இந்த மருதக்குடியும் மகாலட்சுமி என்கிற எருமையும் காலத்தின் பெட்டகத்தில் முக்கியத்துவமானது.

இன்னும் சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியிட நிழலி காட்சிக் களத்திற்கு வாழ்த்துகள்.

- த.க.தமிழ்பாரதன்
08.07.2017
(மருதக்குடியும் மகாலெட்சுமி என்கிற எருமையும் குறும்படத்தின் முன்னோட்டம் பார்த்த ஆர்வத்தில் அக்குறும்படம் பார்த்ததன் பொருட்டு எழுதியது)




வியாழன், 6 ஜூலை, 2017

நித்தம் ஒரு முத்தம்

                                                                            நித்தம் 


காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில் 
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது அவள் சொன்னால் 
சி  அசிங்கம்  என்று 

கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக 
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னாள் 
எப்ப பார்த்தாலும் இது தானா என்று 

இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும்  கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன் 
அப்போது அவள்  
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு 
என்றாள் 

சில காலத்திற்கு பிறகு 
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது 
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா 
என்றாள் அவள் 

கடைசியாக அவளை என் வீட்டு 
முற்றத்தில் 
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டுஉடுத்தி 
படுக்கையில் கிடந்தவளை  முத்தமிட்டேன் 
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால் 
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல் 

இறுதிவரை நேசியுங்கள் 
அவள் வழித் துணையாக வந்தவள் அல்ல 
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்

- இப்படிக்கு ஆற்றாது எழுதிய ஒருவன்

செவ்வாய், 4 ஜூலை, 2017

இடையன் எறிந்த மரம் - அப்டினா என்ன ! உ. வே.சா கட்டுரை


'இடையன் எறிந்த மரம்'



உ.வே. சாமிநாதையர்



'இடையன் எறிந்த மரம்' தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் எழுதிய கட்டுரை.

 திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ஆம்வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அநுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் செல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவித மான சௌகரியங்களும் கிடைப்பதுபற்றி நன்றி யறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத் துரைத்தான்.

கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட் டினான். அவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளை வித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப் பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறிய வற்றையெல்லாம் மனத்திற் பதித்துக் கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளை களையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன். அவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அநுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தகாக்க் கேட்டுவந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.

"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும் போது, 'நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற' என்று வாழ்த்துவார்கள்" என்றான் அவன். எருமை கிடாரிக் கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாய்க் குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும். அந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான். இடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயித் துக் காட்டினான்; "ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டு வோம். நாங்கள் வெட்டும்போது கிளை முதுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழை களைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்" என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.

அவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும் போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும்! என் உள்ளத்திலோ வேறு விதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்கக் என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்யத்தொடங்கியது. 'இடையர்கள் ஆடு மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.

நம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளாகப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்து விட்டோம்; நம்முடைய அளவை நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாகி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். "முடியாது" என்று கடைசியில் சொல்வது நியாமாக தோன்றவில்லை . இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம் 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம். உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை. இந்த விஷயத்தையே பதினேண்கீழ்கணக்கு நூலுக்குள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.


அடையப் பயின்றாசொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின்-படைபெற்
றடைய அமாத்தகட் பைந்தொடி அகஃதால்
இடை னெரிந்த மரம்."

பயின்றா - பழகினவா
ஆற்றுவரா - செய்வாராக
ஒட்டின - சம் மதித்தால்
 பைந்தொடி : விளி
எறிந்த - வெட்டிய

இடையன் விரித்துரைத்த காட்சியும் பழ மொழி செய்யுளும் ஒருங்கே என் மனதில் ஓடின. அவ்வாறு வெட்டும் போது கிளை அடியோடி விழும்படி வெட்டினால் என்ன ?" என்று நான் கேட்டேன். "அப்படி வெட்டினால் அந்த கிளை அப்பால் உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ, மரத்தோடு ஒட்டிக்கொண் டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்." 'இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது.

அதனைத் தொடர்ந்தவாறே,
"இடைமகன் கொன்றவின்னா மரத்தினேன்"(1914) என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது. சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையை, "நான் என் தந்தை மரணமடையப் பின் பிறந்தேன்; அன்றியும் நீ துன்பத்தில் தங்கவும் நட்புடையவர்கள் மனம் வருந்தவும் இடைமகன் கொன்ற இன்னா மரம் போல இருந்தேன்" என்னும் சொற்களால் விளக்குகிறான். நச்சினார்க்கினியர் அந்த உவமையை விரித்து, 'உயிருடன் இருந் தேனாய்ப் பகையை வென்றேனுமல்லேன், உயிரை நீத்தேனுமல்லேனென்று கருதி மரத்தினேனென் றான்' என்று விசேஷவுரை எழுதுகின்றார். அவ் வுரை இடையன் கொன்ற மரத்தின் தன்மையை நன்கு விளக்குகிறது. அந்த இடையன் சொல்லிவந்த செய்திகள் இலக்கியப்பொருளைத் தெளிவாக விளக்கின.
இலக்கியங்களில் இடையர்களைப்பற்றி வருணிக்கும் இடங் களில், 'ஒடியெறிதல்' என ஒரு தொடர் வரும். 'ஒடிய எறிதல்' என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறிவார்களே அன்றி அற்றுவிடும்பட எறியார் என்பதை அத்தொடர் குறிப்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்தேன். "அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டுவது கஷ்டமல்லவா?"என்று நான் கேட்டேன். "அது கைப்பழக்கம். இல்லாவிட்டால் பழ மொழி வருமா?" என்றான் அவன். "பழமொழியா? என்ன அது?" என்று ஆவ லுடன் வினவினேன். "'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற பழமொழியைத்தான் சொல்லுகிறேன்.

எங்கள் கைப்பழக்கத்தை அந்தப் பழமொழி தெரிவிக்கிறதே." நான் ஸ்தம்பித்துவிட்டேன் என்ன அது? சொல்"நான் மறுபடியும் கேட்டேன். 'இடையன் வெட்டு அறாவெட்டு' என் பதை மறுபடியும் அவ‌ன் சொன்னான். அது காறும் அந்தப் பழமொழியை நான் கேட்டதே இல்லை. ஆதலின் அதைக் கேட்டபோது எனக்குப் பெரிய சந்தோஷம் உண்டாயிற்று. இலக்கியங் களிலே 'இடையன் எறிந்த மரம்'என்பதைப் படித்தவுடனே கருத்து விளங்காது. அதற்கு விசேஷ உரை சொல்லி விளக்கினால்தான் தெரிய வரும். ஆனால் அவன் கூறிய அந்தப் பழமொழி இலக்கியத்திற் கண்ட தொடர்மொழியாகிய பூட் டைத் திறக்கும் திறவுகோலாக விளங்குகிறது.

'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற பழ மொழி எவ்வளவு சுலபமாகவும் சுருக்கமாகவும் இடையனது கைத்திறமையையும், மற்றவர்கள் வெட்டும் வெட்டிற்கும் அவனது வெட்டிற்கும் உள்ள வேற்றுமையையும் தெரிவிக்கின்றது!

படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற ன‌ருளே" (பெரிய திருமொழி)


என்ற பாசுரத்தில் ஆழ்வார் கடவுளது திரு வ‌ருளைப் பெறவில்லையே என்ற ஏக்கத்தால் மன மழிந்தும் பெறுவோமென்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் நிற்கும் நிலையை 'இடையன் எறிந்த மரத்தை' உவமையாக்கிப் புலப்படுத்து கின்றார். அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதை விட 'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற சூத் திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினாலே போதும். 'சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளை'ச் செறித்து இனிது விளக்கும் அப்பழமொழியைச் சூத்திரமென்று சொல்வதில் என்ன பிழை?